“எப்பவும் கம்மியா பெய்ற மழை திடீர்னு அதிகமாகக் கொட்டித் தீர்த்தா யாரு என்னங்க பண்ணமுடியும்?”
“சென்னையில் முன்னாடி தண்ணி தேங்கி நின்ன இடங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக ஆயிருச்சு. மனுஷன் எவ்வளவுதான் செய்யமுடியும்? எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்குங்க. சுனாமியை என்ன செய்யமுடியும்? பூகம்பத்தை என்ன செய்யமுடியும்?”
இப்படிப்பட்ட விவாதங்கள் நம்மைச் சுற்றலாம்.
மழலை விவாதம்
ஒவ்வொரு அழிவுக்குப் பிறகும் இப்படிப்பட்ட கருத்துகள் மோதும். அந்தக் கேள்விகளின் பாற்கடல் கடையப்பட்டுத்தான் அறிவு எனும் அமுதம் பிறக்கிறது.
மனித இனத்தின் சுமார் 2 லட்சம் வருட வரலாற்றில் எவ்வளவோ பேரழிவுகள் நடந்துள்ளன. ஆனாலும் அவற்றில் பல வரலாற்றில் பதிவாகவில்லை. பேரழிவுகளைப் பற்றிய விவாதமேகூட ஒரு பச்சிளம் குழந்தைதான். அவற்றைப் பற்றிய உலகளாவிய விவாதமே கடந்த 25 வருடங்களாகத்தான் நடக்கிறது.
வெள்ளமும் பூகம்பமும் சுனாமியும் போல பலவிதப் பேரழிவுகள் இயற்கையால் ஏற்படலாம். மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டது போல சில வகையான பேரழிவுகள் மனிதனால் ஏற்படுத்தப்படலாம். சில வகையான பேரழிவுகள் தற்செயல் விபத்துகள் போலவும் ஏற்படலாம்.
அத்தகைய நிகழ்வுகளின்போது நாம் கைகட்டித்தான் நிற்க வேண்டுமா? எல்லாம் நடந்து முடிந்தபிறகு நிவாரண உதவிகளும் மறுவாழ்வுப் பணிகளும்தான் செய்ய வேண்டுமா? அவை வருவதற்கு முன்னால் அறியமுடியாதா? வராமலே தடுக்கமுடியாதா? அப்படியே வந்தே தீரும் என்றாலும் எதிர்பாராதமுறையில் அழிவுகளைச் சந்திப்பதற்குப் பதிலாகத் திட்டமிட்டமுறையில் அவற்றை எதிர்கொள்ளமுடியாதா, ஒரு விரிவான அர்த்தத்தில் முன்தயாரிப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை எப்படி எப்படி எல்லாம் செய்யமுடியும் என்ற விவாதமும் சிந்தனையும் அதிகாரபூர்வமான முறையில் உலகளவில் 1990-களில் தான் உருவாகியது.
இயற்கைப் பேரழிவுகளைச் சந்திப்பதற்கான ஒருங்கிணைந்த, முழுமையான செயல்பாட்டுமுறையை உருவாக்க வேண்டும் என்ற முயற்சிகளும் அப்போது எழுந்தன.
பாதிப்புகளின் பாரபட்சம்
இதன் விளைவாக, ஐக்கியநாடுகள் சபை ‘இயற்கைப் பேரழிவுகளைக் குறைப்பதற்கான பத்தாண்டாக’ 1990 முதல் 2000 வரையிலான பத்தாண்டுகளை அறிவித்தது. அப்போதுதான் இந்த விவாதம் உலகளாவிய அளவில் பல நாடுகளுக்கு இடையிலானதாக விரிந்தது. இந்தக் காலகட்டத்தில் ஜப்பானில் 1994-ல் ஒரு சர்வதேச மாநாட்டை ஐநா நடத்தியது.
இத்தகைய விவாதங்களின் தொடர்ச்சியாக, 2005 முதல் 2015 வரைக்குமான ஒரு உலகளாவிய செயல்திட்டமும் உருவாக்கப்பட்டது. பல நாடுகள் அதனை எவ்வாறு அமலாக்கியுள்ளன என்ற பரிசீலனை அறிக்கையையும் 2011-ல் ஐநா சபை உருவாக்கியுள்ளது.
அந்த அறிக்கையின்படி, சமீப ஆண்டுகளாகத் தங்களின் கொள்கை களை 130-க்கும் மேற்பட்ட நாடுகள் மேம்படுத்தியிருக்கின்றன. அவற்றுள் இந்தியா உள்ளிட்ட 48 நாடுகள் பேரழிவு மேலாண்மைக்கு எனத் தனியான சட்டங்களை இயற்றிவிட்டன. அவற்றைச் செயல்படுத்துவதற்கான தேசிய அமைப்புகளையும் உருவாக்கியுள்ளன.
இத்தகைய விவாதம் தீவிரமடைந்த காலகட்டத்தில் 2010-ல் ஹைதி எனும் நாட்டில் பூகம்பத்தால் நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் உள்பட அனைத்தும் மண்மேடாகிவிட்டது. அதேபோல பாகிஸ்தானிலும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டது. இத்தகைய பேரழிவுகள் மேலாண்மை செய்யப்பட்ட அனுபவங்கள் ஆராயப்பட்டன.
வறுமையிலிருப்பவர்கள் பேரழிவு களில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பேரழிவுகள் எல்லோரையும் சமமாகப் பாதிப்பதில்லை என்பது இந்த ஆய்வுகளில் அதிகாரபூர்வமாக உணரப்பட்டது.
வறுமையிலிருக்கும் நாடுகள் மட்டுமல்ல, வளர்ந்த நாடான ஆஸ்திரேலி யாவும் 2011-ல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. நியூஸிலாந்தில் பூகம்பம் ஏற்பட்டது. இந்தியா உள்ளிட்ட வளரும் ஆசிய நாடுகளை மட்டுமல்ல, ஜப்பான் போன்ற வளர்ந்த ஆசிய நாட்டையும் சுனாமி பாதித்தது. வளர்ச்சியடைந்த நாடுகளும் பேரழிவுகளிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை இவை புரியவைத்தன.
அனுபவம் தரும் பாடம்
இத்தகைய பேரழிவுகளைச் சம்பந்தப்பட்ட நாடுகள் மேலாண்மை செய்தவிதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தடுப்பு நடவடிக்கைகளாக இருந்தாலும் நிவாரண நடவடிக்கைகளாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர் ஆணா பெண்ணா என்பதையும் கணக்கில் கொண்டு அனைத்தும் திட்டமிடப்படவேண்டும் என்கிறது ஐநா. பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் வாழும் மக்களின் பண்பாட்டு பன்முகத்தன்மையும் பார்க்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ளோரின் வயதும், ‘சமூகத்தில் காலங்காலமாக நலிவடைந்த சமூகக் குழுக்கள்’ பேரழிவால் பாதிக்கப்பட்ட இடத்தில் இருக்கின்றனவா? அவற்றுக்கான தனியான, சிறப்பான கவனம் செலுத்தித் திட்டங்களை உருவாக்கியிருக்கிறோமா? என்பதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டதாகப் பேரழிவு மேலாண்மை நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் அவையில் குவிந்துள்ள அனுபவம் காட்டுகிறது.
பேரழிவு மேலாண்மை என்பது வருமுன் காப்பதுதான். வேறு வழியே இல்லையென்றால் வருகிற அழிவைத் திட்டமிட்டுச் சந்திப்பதுதான். அப்படிச் சந்திக்கும்போது அழிவின் பாதிப்பு குறைவாக இருப்பதை அனுபவம் காட்டுகிறது. வந்தபின் செய்கிற நிவாரணத்துக்குச் செலவாகிற ஆற்றலும் நிதியும் வருமுன் காக்கும்போது குறைவாகச் செலவழிகிறது என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.
இத்தகைய முயற்சிகளின் விளை வாக, 20 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததைவிட சூறாவளியாலும் வெள்ளத்தாலும் மனிதர்கள் கொல்லப்படுகிற அபாயம் சற்றுக் குறைந்துள்ளது. ஆனாலும் இது வளர்ந்த பணக்கார நாடுகளில் மட்டும்தான். ஏழை நாடுகளிலும் பலவீனமான அரசு நிர்வாகம் இருக்கிற நாடுகளிலும் பேரழிவுக் காலங்களில் மக்களுக்கு ஏற்படுகிற அபாயம் மாற்றமில்லாமல் அப்படியேதான் இருக்கிறது.
இந்தப் பேரழிவுகளால் ஏற்படும் சொத்துகளின் பாதிப்பு அதிகரிக்கத்தான் செய்கிறது. ஏழை நாடுகளில் சொத்து களின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
பேரழிவு பற்றிய விவாதம் பெரிய அளவில் நடந்தாலும் அதை அமலாக்குகிற அரசாங்கங்கள் மட்டத்தில் மிகவும் குறைவான முன்னேற்றமே உள்ளது என்பதுதான் இன்றைய உலகச் சூழலாக இருக்கிறது. ஆனாலும் மனித அறிவில் கருத்துரீதியான ஒரு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது நம்பிக்கை அளிக்கும் விஷயமே.
பூமியின் மீது வேறு ஒரு கிரகம் மோதி ஏற்படுத்திய பேரழிவால்தான் நிலவு உருவானது என்கிறது விஞ்ஞானம். அத்தகைய ஒரு பேரழிவே கூட மீண்டும் பூமியை நோக்கி வந்தாலும் அதனையும் சந்தித்து ஜெயித்துவிடலாம் என்ற தன்னம்பிக்கையில்தான் இன்றைய விஞ்ஞான உலகம் இருக்கிறது.
அதனால் “எவ்வளவு மழை பெஞ்சாலும் சமாளிச்சிரலாங்க” என்று உங்கள் நண்பரை நம்பிக்கையாக இருக்கச் சொல்லுங்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago