வழக்கறிஞராக வேண்டும் என்பது சந்திரனின் ஆசை. ஐந்து வயதில் அவனுக்கு இந்த ஆசை வந்தது. கோட் போட்டுக்கொண்டு நிற்கும் வழக்கறிஞர் ஒருவரின் படத்தைப் பார்த்தான். அந்த கோட் அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவ்வளவுதான் காரணம்.
சில ஆண்டுகள் கழித்து, தனது ஆங்கில ஆசிரியரைப் பார்த்து, தானும் ஆசிரியராக வேண்டுமென்று சந்திரன் விரும்பினான். அதுவும் கொஞ்ச நாள்தான். துப்பறியும் நாவல்கள் படித்த பாதிப்பில் சி.ஐ.டி.யாக வேண்டும் என்று விரும்பினான். லாரன்ஸ், டேவிட் போல கோட்டுக்குள் துப்பாக்கியை வைத்துக்கொண்டு புலனாய்வு செய்யப் போவதுபோலக் கற்பனை செய்துகொள்வான். கண்டிப்பாக புல்லட் புரூப் கோட் வாங்கிப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
இவை எல்லாம் 13 வயதுக்குள். 15 வயதில்? பிளஸ் 2-வில் என்ன பாடம் எடுப்பது என்று தீர்மானிக்க வேண்டிய வயதில்?
குழப்பம்தான் இருந்தது. வழக்கறிஞர், ஆசிரியர், சி.ஐ.டி. என்று எதுவும் மனதில் நிற்கவில்லை. ஒழுங்காகப் படித்துத் தேறினால் போதும் என்று இருந்தது. பத்தாம் வகுப்பில் அவன் எடுத்த மதிப்பெண் குறைவு. அறிவியல் பிரிவு கிடைக்காது. தொழிற்கல்வியில் விருப்பம் இல்லை. அவன் படித்தபோது கணினியியல் கிடையாது.
சந்திரன் வணிகவியலை எடுத்தான். விரும்பி அல்ல. கிட்டத்தட்ட வேறு வழி இல்லாமல். அதே சமயம், பலராலும் விரும்பப்படும் படிப்பாக இருந்ததால் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் உருவானது.
ஆனால், கணக்குப் பதிவியலில் அவனுக்கு மனம் செல்லவில்லை. டெபிட், கிரெடிட் எல்லாம் பெரிய வில்லன்களாகத் தெரிந்தன. எவ்வளவு முயன்றும் சுமாரான மதிப்பெண்கள்தான் பெற முடிந்தது. தட்டுத் தடுமாறி பிளஸ் 2 முடித்தான். பி.காம் சேர வேண்டும் என்று கல்லூரிகளின் கதவுகளைத் தட்டியபோது அனுதாபமான பார்வையே பதிலாகக் கிடைத்தது.
சந்திரன் மொழிப் பாடங்களில் நல்ல மதிப்பெண் வாங்கியிருந்தான். “உனக்கு பி.காம் தர முடியாது. ஆங்கிலம் அல்லது தமிழ் இலக்கியம் எடுத்துப் படிக்கிறாயா?” என்று ஒரு கல்லூரியின் முதல்வர் கேட்டார். இலக்கியம் படித்து என்ன செய்ய என்று நினைத்த சந்திரன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தபால் மூலம் பி.காம் படித்தான். பிளஸ் 2-வில் இருந்ததைப் போலவேதான் இப்போதும். சுத்தமாகப் பாடத்தில் மனம் செல்லவில்லை. எப்படியோ பட்டம் வாங்கிவிட்டான். மிகச் சுமாரான மதிப்பெண்களுடன்தான் அவனால் தேற முடிந்தது.
படித்து முடித்த உடன் வேலை கிடைக்கவில்லை. விற்பனைப் பிரதிநிதி முதலான சில வேலைகளில் சில ஆண்டுகள் கழித்தான். கணக்குப் பதிவியல் பேரேடுகளையும் கட்டிக்கொண்டு அழுதான். பற்று, வரவு என்று கணக்குப் பதிவுகள் அவனைப் பாடாய்படுத்தின. வேலை நேரம் போக மீதி நேரமெல்லாம் கதைப் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் படித்துக்கொண்டிருப்பான். அது ஒன்றுதான் அவனுக்குப் பெரிய ஆறுதல். வேலை என்பது தவிர்க்க முடியாத அன்றாடத் தலைவலி என்பதாக நாட்கள் கழிந்துகொண்டிருந்தன.
ஏதோ ஒரு புள்ளியில் யாரோ சொன்ன யோசனையின் பேரில் பத்திரிகை அலுவலகம் ஒன்றின் கதவைத் தட்டினான். அதன் கதவு சிறியதாகத் திறந்தது. உள்ளே நுழைந்தான். அங்கு வீசிய காற்று அவன் மனதுக்கு இதமாக இருந்தது. தன்னுடைய நுரையீரல் இந்தக் காற்றுக்காகத்தான் இத்தனை நாள் ஏங்கிக்கொண்டிருந்தது என்பதை உணர்ந்தான். புதிதாகப் பிறவி எடுத்ததுபோல உணர்ந்தான்.
வளர்த்துவானேன்? இன்று சந்திரனுக்குத் தொழில் எழுத்து. மகிழ்ச்சியான வேலை. நல்ல வருமானம்.
சிறு வயதிலிருந்தே அவனுக்கு வாசிப்பு, எழுத்து ஆகியவற்றில் ஆர்வம் இருந்தது. ஆனால், எழுத்தே தொழிலாக இருக்க முடியும் என்று அவனுக்கு அப்போது தெரியவில்லை. அவன் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கூடத் தெரியவில்லை. யாருமே அவனிடம் அதை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அவன் இயல்பு, திறமை ஆகியவற்றைக் கண்டறிந்து யாரும் வழிகாட்டவில்லை.
அப்படி யாராவது வழிகாட்டி யிருந்தால் இளம் வயதில் ஐந்து ஆண்டுகள் தனக்குப் பொருந்தாதப் பாடங்களைப் புழுக்கத்துடன் படித்துக்கொண்டிருந்திருக்க மாட்டான். தன் இயல்புக்கு பொருந்தாத வேலைகளைத் தேடிக் காலத்தை வீணாக்கியிருக்க மாட்டான்.
எங்கே எப்போது தவறு நடந்தது? தனக்கு ஏற்ற துறை எது, அதற்கு ஏற்ற படிப்பு எது என்ற தெளிவு 15 வயதில் இல்லை. அதுதான் பிரச்சினை. 17 வயதிலாவது வந்திருக்கலாம். அதுவும் வரவில்லை.
தெளிவு பெற என்ன வழி?
நமக்கு எதில் ஆழ்ந்த ஆர்வம் இருக்கிறது? எதில் இயல்பான திறமை இருக்கிறது என்பதைச் சின்ன வயதிலேயே தெரிந்துகொள்ள வேண்டும். இவை இரண்டையும் அடிப்படையாக வைத்து நமது பாதையை அவ்வப்போது பரிசீலனை செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்படிச் செய்தால் சந்திரனைப் போலப் பல ஆண்டுகளை வீணடிக்க வேண்டிய அவசியம் இருக்காது. சந்திரனுக்கு அந்தத் தெளிவு வர மிகவும் தாமதமாகியது. உங்களுக்கு எப்படி? உங்கள் ஆர்வம் எது? உங்கள் இயல்பான திறமை எது? உங்களுக்குத் தெரியுமா? அதில்தான் நீங்கள் பயணிக்கிறீர்களா? இதுவரை இதைப் பற்றி யோசித்ததே இல்லை என்றால் இப்போது யோசித்துப் பாருங்களேன்.
உங்கள் ஆர்வம் எது? உங்கள் இயல்பான திறமை எது? உங்களுக்குத் தெரியுமா? அதில்தான் நீங்கள் பயணிக்கிறீர்களா?
“பெரியவனானதும் நீ யாராக ஆக விரும்புகிறாய்?”
இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாத சிறுவனோ சிறுமியோ இருந்திருக்க முடியாது.
ஐந்து - ஆறு வயதில் அப்போது மனதுக்குப் பிடித்த எதை வேண்டுமானாலும் சொல்லலாம். டாக்டர், இன்ஜினீயர், ஓவியர், போலீஸ்காரர், ராணுவ வீரர், ஆசிரியர், சர்க்கஸ் ரிங் மாஸ்டர், நடனக்காரர், நடிகர்... சொல்பவர்களோ கேட்பவர்களோ அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை.
ஆனால், பதினைந்து வயதில் இந்தக் கேள்வி எழுந்தால் அதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. பதினேழு வயதில் இன்னும் கஷ்டம்.
இருபது வயதில்?
இருபது வயதில் இந்தக் கேள்வி எழுந்தால் சிக்கல்தான். அதற்குள் இந்தக் கேள்விக்கான விடையை ஒருவர் கண்டுபிடித்திருக்க வேண்டும்.
உலகம் மிகவும் பெரியது. பரந்து விரிந்தது. எப்போதும் பல்வேறு பாதைகள் நம் முன்னால் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் 10-ம் வகுப்பு படிக்கும்போது நம் முன் இருக்கும் பாதைகள் அதிகபட்சமானவை. பிளஸ் 2-வில் கணினியியல் படித்த மாணவரால் மருத்துவப் படிப்பில் சேர முடியாது. மருத்துவம் படித்தவரால் நிர்வாகவியல் துறையில் நுழைய முடியாது.
எந்தத் துறையிலும் வாய்ப்புகள் உள்ளன. அதோடு தொடர்புள்ள பிற துறைகளிலும் எக்கச்சக்கமான வாய்ப்புகள் உள்ளன. எல்லோருக்குமான பொதுவான சில துறைகளும் இருக்கின்றன. என்றாலும் படிப்பில் மேலே போகப் போக வாய்ப்புகளின் பாதைகள் குறுகிக்கொண்டே செல்லும்.
எனவே 15, 16 வயதிலேயே நாம் நமது வருங்காலம் குறித்த பெரிய முடிவை எடுக்கும் நிலையில் இருக்கிறோம். அந்த முடிவை எப்படி எடுப்பது? முடிவை எடுப்பதில் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?
பலர் இந்த வயதில் தவறான முடிவை எடுத்துவிடுகிறார்கள். சந்திரனைப் போல.
நீங்கள் எப்படி முடிவெடுக்கப் போகிறீர்கள்?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago