ஆங்கிலம் அறிவோமே -84: என்னே ஒரு முரண்பாடு!

By ஜி.எஸ்.சுப்ரமணியன்

என் நண்பர் “Palindrome என்பது என்ன? ஒரு வார்த்தையின் தொடக்க எழுத்தும், கடைசி எழுத்தும் ஒன்றாகவே இருந்தால் அதுதான் Palindrome’’ என்கிறார். இது சரிதானா?

Palindrome எனப்படும் வார்த்தையில் முதல் எழுத்தும், கடைசி எழுத்தும் ஒன்றாக இருக்கும் என்கிற அளவில் நண்பர் கூறுவது சரி. Eye, Radar என்பதைப் போல. ஆனால் Palindrome குறித்த வேறு இரு தன்மைகளையும்கூட நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

Palindrome என்பதை வலமிருந்து இடமாகவோ, இடமிருந்து வலமாகவோ எப்படிப் படித்தாலும் அதே போலத்தான் ஒலிக்கும். அதாவது அவை அப்போதும் கூட அதே வரிசையில் அமைந்த எழுத்துகள்தான். மேலே குறிப்பிட்ட Eye, Radar போன்றவை இந்த விவரிப்புக்குப் பொருத்தமாக இருக்கின்றன. எனவே, அவை Palindromes.

ஆனால், Stars என்ற வார்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள். இதன் தொடக்க எழுத்தும், கடைசி எழுத்தும் ஒன்றுதான். ஆனால் இடவலமாக எழுதும்போதும் (S-T-A-R-S), வலஇடமாக எழுதும்போதும் (S-R-A-T-S) எழுத்து வரிசைகள் மாறுபடுகின்றன. எனவே, இது Palindrome அல்ல.

தவிர Palindrome என்பது ஒரே வார்த்தையாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. Madam I’m Adam என்பதுகூட Palindrome-தான்.

எந்தக் கண்டத்தின் பெயராவது Palindrome - ஆக இருக்க வாய்ப்பு உண்டா? இல்லை. ஆனால், மனதில் பட்டியலிட்டபோது வியப்பாக இருந்தது. Asia, Europe, Africa, Australia, Antactica இவை எல்லாவற்றின் முதல் எழுத்தும், கடைசி எழுத்தும் ஒன்றுதான்.

இந்த சுவாரசியத்தை ஒரு நண்பரிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்று பேச்சை இப்படித் தொடங்கினேன். “உனக்குத் தெரிந்த ஒரு கண்டத்தின் பெயரைச் சொல். அதன் ஆங்கில முதல் எழுத்தும், கடைசி எழுத்தும் ஒன்றாகவே இருக்க வேண்டும்” என்றேன். அவரிடமிருந்து எதிர்பாராத பதில் வந்தது. அதைக் கேட்டுக்கொண்டிருந்த அவர் மனைவி ANITHA கோபத்துடன் கொடுத்த காபியைக் குடித்துவிட்டுக் கிளம்பிவிட்டேன்.

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு அவற்றுக்கான ஆங்கில வார்த்தைகளைக் கண்டுபிடியுங்கள். எல்லா விடைகளுமே ஒரே எழுத்தில் தொடங்கி ஒரே எழுத்தில் முடிகின்றன. முதல் ஐந்தும் Palindromes.

1. ஒரு நாளின் நடுப்பகுதி

2. செவிலியர்கள் ஓடுகின்றனர்

3. ஒரு செயல்

4. ஒரு தென்னிந்திய மொழி

5. அதீத வியப்பையோ பாராட்டையோ வெளிப்படுத்த அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தை.

6. நம்பிக்கை

7. கணவனை இழந்தவர்

8. நறுமணம்

9. அழித்தல்

10. இதயம் தொடர்பானது

மேலே உள்ள புகைப்படங்களிலுள்ள நரேன் கார்த்திகேயன், அஜீத் ஆகியவர்களுக்குப் பிடித்த Palindrome வார்த்தை எது என்பதைக் கண்டுபிடிப்பவர்களுக்கு Race car ஒன்று பரிசு என்று யாராவது கூறினால் நம்பிவிடாதீர்கள்.

Tautogram என்பதும் சுவாரசியமானதுதான். இதில் ஒரு வாக்கியத்திலுள்ள எல்லா வார்த்தைகளும் ஒரே எழுத்தில் தொடங்குகின்றன. Truly Tautograms Triumph என்பது ஓர் உதாரணம். Big Bully Beats Baby Boy என்பது மற்றொரு உதாரணம்.

(அன்பும், அழகும், அறிவும் அமைந்த அமராவதியை அம்பிகாபதி அவசரத்துடன் அண்டினான். இது ஒரு தமிழ் Tautogram).

நீங்களும்கூட சுவாரசியமான (ஆங்கில) Tautogram-களை உருவாக்கி அனுப்பலாமே.

Alliteration என்பதும் Tautogram போலத்தான். ஆனால், ஒரு சின்ன வித்தியாசம் உண்டு. அந்த வாக்கியத்தில் உள்ள வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. ஒவ்வொரு எழுத்தின் ஒலியும் ஒன்றாக இருந்தால் போதும். எடுத்துக் காட்டாக:- Kamakshi caught என்பதில் தொடக்க எழுத்துகள் மாறுபட்டாலும் அவை ஒரே ஒலியைக் கொண்டன. எனவே Alliteration. அதேபோல் Not Knotty என்பது Alliteration-ல் அடங்கும். ஆனால், Secret Chase என்பது அடங்காது (‘ஸீ’ என்பதும் ‘சே’ என்பதும் வெவ்வேறு ஒலிகள் கொண்டவை).

Tautogram என்பது ‘ஒரே எழுத்து’ என்ற பொருள் கொண்ட கிரேக்க வார்த்தைகளான Tauto Gramma என்பதிலிருந்து வந்தது.

Alliteration. என்பது ‘Litira’ என்ற லத்தீன் வார்த்தையை அடிப்படையாகக் கொண்டது. Litra என்றால் எழுத்துகள் என்று அர்த்தம்.

Tautology என்றால் ஒரே விஷயத்தை விதவிதமான வார்த்தைகளில் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்துக் கூறுவது (இந்த வாக்கியமே கூட tautology-க்கு ஓர் உதாரணம்தான்). They arrived one after the other in succession. கொஞ்சம் எதிர்மறையான (சலிப்பு ஏற்படுத்துபவை) அர்த்தத்தில்தான் tautology என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

மற்றபடி மேலே கேட்டிருந்த கேள்விகளுக்கான விடைகள் இவைதான்.

1) Noon 2) Nurses Run 3) Deed 4) Malayalam 5) Wow

6) Trust 7) Widow 8) Aroma 9) Erase 10) Cardiac

IRONY

மது பாட்டிலைக் கையில் எடுக்கிறீர்கள் (கற்பனையில்தான்!). அதைப் பார்க்கிறீர்கள். பாட்டில் லேபிளின் மேல் ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்ற வார்த்தைகள். ‘What an irony!’ என்கிறீர்களா?

அப்பா அப்படி ஒரு புத்திசாலி. பிள்ளையோ படு முட்டாள். “What an irony!” என்று சொல்லத் தோன்றுகிறதா?

இரண்டு சூழல்களிலுமே அப்படிச் சொல்லாதீர்கள். அது அவ்வளவு பொருத்தமானது அல்ல. Irony என்பதன் நேரடி அர்த்தம் முரண் அல்லது வேடிக்கை என்பதல்ல. எதிர்பார்ப்பதற்கு நேர்மாறாக ஒரு நிகழ்ச்சி நடக்கும்போது அதை irony என்பார்கள்.

நகைச்சுவைக்காகவோ ஒன்றை வலியுறுத்தவோ தான் கூற நினைப்பதற்கு நேரெதிரான வார்த்தைகளை ஒருவர் பயன்படுத்துவதையும் ironical என்பதுண்டு.

கிரேக்க இலக்கியத்தில் irony என்பது வேறு விதத்தில் பயன்படுத்தப்பட்டது. ஒரு பாத்திரத்தின் வார்த்தைகளோ செயல்களோ பார்வையாளர்களுக்குத் தெளிவாக ஒன்றை உணர்த்துகிறது. அதே சமயம் அந்தப் பாத்திரத்துக்கு அது புரிந்திருக்காது. இது Irony.

ALL RIGHT ALRIGHT ALL TOGETHER - ALTOGETHER

All right என்பது ஒரு phrase. இதன் பொருள் ‘எல்லாமே சரியாக அல்லது ஒழுங்காக உள்ள’ என்பதாகும். Is all right there? என்றால் அங்கு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பொருள்.

Alright என்பது ஒரு தனி வார்த்தை. ‘ஓகே’ என்று இதற்குப் பொருள். Is everything alright there?

“எனக்கு உன் வண்டி வேண்டும். நீ இன்று நடந்து போவாயா?’’ என்ற கேள்விக்குப் பதிலாக நீங்கள் “Alright’’ என்று பதில் கூறலாம். All right என்று கூற முடியாது.

All together என்பதற்கும் Altogether என்பதற்கும்கூட வேறுபாடு உண்டு. பல மனிதர்களையோ, பொருள்களையோ ஒன்றாக இணைத்துக் குறிப்பிடும்போது அது All together என்போம். We always had a good time when we were all together.

Altogether என்பது adverb ஆக (verb-ஐ விளக்கும் வார்த்தையாக) பயன்படுகிறது. இதற்குப் பொருள் ‘ஒட்டுமொத்தமான’ என்பதாகும். It was an altogether new experience.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்