ஆங்கிலம் அறிவோமே -82: மாட்டிக்கிட்டு முழிக்கிறீங்களா?

By ஜி.எஸ்.சுப்ரமணியன்

திருச்சியில் உள்ள ஒரு பள்ளியின் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கச் சென்றிருந்தேன். அதில் ஓர் ஆசிரியர் Mexican standoff - பற்றிப் பேசினார்.

அதென்ன Mexican standoff?

சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தங்கள் தீர்மானத்தில் (அல்லது செயல்பாட்டில்) முன்னேறவும் முடியாது. பின்வாங்கவும் முடியாது. அப்படி ஒரு சங்கடமான நிலைமை.

மூன்று பேர் முக்கோண வடிவில் நின்றுகொண்டு ஒவ்வொருவரும் அடுத்தவரின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்துக் குறிபார்க்கும் காட்சியை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

முதல் நபர் இரண்டாவது நபரைச் சுட்டால் அந்த நேரத்தில் மூன்றாவது நபர் முதல் நபரை சுட்டுவிடுவார். இதன் காரணமாக அந்த மூவரில் யாருமே முதலில் சுட முன்வர மாட்டார்கள். அதேசமயம் தன் துப்பாக்கியை நீக்கிக்கொள்ளவும் மாட்டார்கள். மூன்று பேரைக் கொண்டு சுலபமாக விளக்க முடிகிறது என்பதால் இந்த உதாரணம். நடைமுறையில் சமமான இரு எதிரிகளின் நிலையைக் குறிக்க Mexican Standoff பயன்படுகிறது. முன்பு சோவியத் யூனியனும் அமெரிக்காவும் கடும் பகைவர்களாக இருந்தபோது இந்த நிலை நிலவியது. இதில் எந்த நாடும் மற்ற நாட்டின்மீது அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தத் தயங்கும்.

ஆக Mexican standoff நிலை தொடர்ந்து நீடிக்கத்தான் செய்யும். எந்த முன்னேற்றமும் இருக்காது. ஏனென்றால் ஒருவருடைய எந்தச் செயல்பாடும் அவருக்கே அழிவையோ பின்னடைவையோ கொண்டு வரக்கூடும். ஏதாவது வெளியிலிருந்து எதிர்பாராத தீர்வு வந்தால்தான் உண்டு.

எதனால் மெக்ஸிகோவை இதனுடன் சம்பந்தப்படுத்த வேண்டும்? அந்த நாட்டின் ஒரு நாடோடிக் கதையைக் குறிப்பிடுகிறார்கள். மிகவும் குறுகலான ஒரு சந்தில் இரண்டு குதிரை வண்டிகள் எதிரெதிராகச் சந்தித்தன. ஏதாவது ஒரு குதிரை வண்டி பின்வாங்கினால்தான் இன்னொரு குதிரை வண்டியால் பயணிக்க முடியும். ஆனால், இரண்டு வண்டியோட்டிகளுமே “நான் பின்வாங்க மாட்டேன். நீ பின்னால் போ’’ என்று அடம் பிடித்தபடி நின்று கொண்டேயிருந்தார்களாம். இப்படிப் பல நாட்கள் ஆனதாம். உணவுக்கும் மற்ற தேவைகளுக்கும் மற்றவர்களின் உதவிகளைப் பயன்படுத்தினார்களாம். கடைசியில் ஒருவழியாகக் காவல் அதிகாரிகள் வந்து அவர்களை விரட்டி விட்டார்களாம்.

இந்த நிலையை Deadlock என்றும் சொல்வதுண்டு. நிர்வாகம் - தொழிலாளர் பேச்சுவார்த்தை பாதியில் நின்றது என்பது இதுபோன்ற நிலையைத்தான் குறிக்கிறது. Deadlock என்பதை deadly embrace என்றும் குறிப்பிடுவார்கள்.

சிலர் 40 என்பதை fourty என்று எழுதுகிறார்கள். 4 என்பது four. அப்படி என்றால் 40 என்பது fourtyதானே என்கிற லாஜிக்! அதுவும் காசோலைகளை நிரப்பும்போது இந்தப் போக்கைக் கொஞ்சம் அதிகமாகவே பார்க்க முடிகிறது.

ஆனால் நண்பர்களே, சில சமயங்களில் இதுபோன்ற தர்க்கங்கள் எடுபடுவதில்லை. (தமிழில் கூட - எண்ணூறு என்பது 800. தொண்ணூறு என்று சொல்லாமல் தொள்ளாயிரம் (900) என்றுதானே சொல்கிறோம், 80 என்பது எண்பது என்றால் 90 என்பது தொண்பதாகத்தானே இருக்கவேண்டும்?)

ஆக 40 என்பதன் spelling சந்தேகமில்லாமல் fortyதான். என்றாலும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய நூல்களில் fourty என்பதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். fortieth என்ற வார்த்தையில் கூட ‘u’ இல்லை என்பதைப் பாருங்கள்.

‘நண்பன்’ என்ற திரைப்படத்தில் All is well என்ற வாக்கியம் அடிக்கடி இடம் பெறுகிறது. all என்ற பன்மை வார்த்தைக்குப் பிறகு is எப்படி வரும் என்று கேட்கிறார் ஒரு வாசகர்.

ஆங்கில நாடகத்தின் பிதாமகன் ஷேக்ஸ்பியரே All is well என்கிறார். All’s well that ends well என்பது அவரது ஒரு நாடகத்தின் பெயர்.

அப்படியானால் All are well என்பது தவறா? அப்படியில்லை. ஒரு சூழலைப் பற்றிக் கூறும்போது All is பயன்படுத்துகிறோம். There was a storm yesterday, but all is well now. We had lot of confusion, but all is well now.

All are என்பது கூட்டம் (அனைவரும் என்பதுபோல்) என்பதைக் குறிப்பிடும்போது பயன்படுத்தப்படுகிறது. I went to check on the neighbours after the storm, and all are well. All are welcome.

இதை வைத்துப் பார்க்கும்போது ‘எல்லாம்’ என்பதை உணர்த்துவது all is என்றும், ‘எல்லோரும்’ என்பதை உணர்த்துவது all are என்றும் வைத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

சென்ற இதழில் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்ட வரிகளுக்கான தமிழ்த் திரைப்படப் பாடல்கள் இதோ.

1. வான் மேகம் பூப்பூவாத் தூவும்.

2. சங்கீத மேகம் தேன்சிந்தும் நேரம்.

3. மேகமே மேகமே பால் நிலா தேடுதே

4. மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு.

5. மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது.

6. வெண்மேகம் பெண்ணாக உருவானதோ!

SUPERVISOR - SUPERINTENDENT

Supervisor என்பவர் யார்? Superintendent என்பவர் யார்? இப்படி ஒரு நுட்பமான கேள்வியை எழுப்பியிருக்கிறார் ஒரு வாசகர். இதுதான் வேறுபாடு என்று தெளிவாகக் கோடு கிழித்துவிட முடியாது. ஆனால் நடைமுறையில் அதை விளக்க முடியும். Supervisor என்பவர் பிற ஊழியர்களின் செயல்களை மேற்பார்வை இடுபவர். Superintendent என்பவர் நிர்வாகத்தில் கொஞ்சம் உயர்ந்த பதவியில் இருப்பவர். மனிதர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக ஒரு வேலையை நிர்வகிப்பவர். பொதுவாக ஒரு Superintendent என்பவர் Supervisor-ஐவிட உயர்பதவியில் இருப்பவர்.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்