எப்போதும் குழந்தைகளையே நாம் கேள்வி கேட்கும்படியான வகுப்பறைகளை மட்டுமே உருவாக்கிவிட்டோம். ஆனால், அறிவான கேள்விகளைக் கேட்பதற்குக் குழந்தைகளைப் பயிற்றுவிக்கும் வகுப்பறைதான் நமக்குத் தேவை.
- ஜே. கிருஷ்ணமூர்த்தி
ஒரு குழந்தை தனக்குப் பேச்சு வந்த நாளிலிருந்தே தனது கேள்வியைத் தொடங்கிவிடுகிறது. கேள்வி மேல் கேள்வி கேட்டுத் தன்னைச் சுற்றி இருப்பவர்களை துளைத்தெடுப்பதே குழந்தையின் இயல்பு. பள்ளிக்கூடங்களிலோ நாம் பதில்களுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறோம். விடைகளை விரட்டியபடியே நமது கல்விமுறை இயங்குகிறது.
‘ரெடிமேடு’ பதில்கள்
குழந்தைகள் தங்களது தேடலைப் புதிய புதிய கேள்விகளுடன் தொடர்ந்து நடத்தி வகுப்பறையில் அதற்கு விடைகளைப் பெறமுடியுமென்றால் அதுவே கல்வி. அதற்காகவே பள்ளி. ஆனால் நடைமுறையில் அப்படி அல்ல. ஆசிரியர் தமக்குத் தரப்பட்ட பாடத்தின் பொருளைத் தனக்குத் தெரிந்த முறையில் விளக்குவார். அதன் மீது கவனம் செலுத்த வேண்டும்.
பிறகு அதன்மீது கேள்விகள் கேட்கப்படும். குழந்தை பதிலோடு தயாராக இருக்க வேண்டும். எல்லாமே முன்பே தயாரிக்கப்பட்ட கேள்விகள். முன்பே தயாரிக்கப்பட்ட பதில்கள் . குழந்தைகளைத் திறந்த மனதோடு கேள்வி கேட்க அனுமதித்தால் ஆசிரியரும் கற்றுக்கொள்ளலாம் என்பதை எனக்குக் காட்டியவர்தான் தேன்மொழி.
கேள்விகளின் வகுப்பறை
ஆசிரியர்கள் மட்டுமே எப்போதும் பேசிக்கொண்டிருக்கும் வகுப்பறை. இரண்டு மதிப்பெண்கள், ஐந்து மதிப்பெண்கள் என விடைகளாகக் கூறு போடப்பட்ட ‘அறிவு’ என்று நம்பப்படும் தகவல்கள். அது குழந்தையின் மூளையில் ஏறிவிட்டதா எனப் பரிசோதிப்பதற்குத் தேர்வுகள். பாடத்தைவிட கேள்வி பதில் பகுதியும், குழந்தையைவிட தேர்வுகளும் முக்கியமானதாகிப் போகும் அவலம். இதுதானே நமது கல்வியின் சூழல்!
104 டிகிரி அளவுக்குக் கொதிக்கும் காய்ச்சல் என்றாலும் தேர்வு என்றால் ‘‘போய்த்தான் ஆக வேண்டும்’’ எனும் எழுதப்படாத சட்டத்தை யார் கொண்டு வந்தது? இதைவிட பெரிய வன்முறை இந்த உலகத்தில் இருக்க முடியுமா என்ன? ஆனால் மாணவர்களைக் கேள்வி கேட்க வைக்கும் வகுப்பறைகளை, அவர்களது குரல்களைப் பதிவுசெய்யும் கல்விமுறையை முன்மொழிந்தவர் மின்னோசெட்டா பல்கலைக்கழகத்தில் கல்வியியல் அறிஞராக இருந்த நெட் ஏ.ஃபிளான்டர்ஸ் (Ned. A. Flanders). கேள்விகளை எழுப்பி தன்னைப் பாடத்தின் பொருளோடு தொடர்பு படுத்தி, அதை விமர்சித்து விவாதித்து ஏற்கும் கல்விமுறை அவருடையது.
‘ஆறாவது’ கேள்வி
ஃபிளான்டர்ஸ் வகுப்பறையில் நடப்பது உரையாடல்(Interaction) என அறிவித்தார். உரையும் (Lecture) உரையாடலும் வேறுவேறானவை. குழந்தைகளுக்கான வகுப்பறையில் உரையாற்றுவது கல்வியின் நோக்கத்தை முற்றிலும் சிதைக்கும் என்பது அவரது ஆய்வு முடிவு. ஃபிராய்டிய உளவியலாளரான ஃபிளான்டர்ஸ் பள்ளி வகுப்பறைகளில் ஆசிரியரின் கேள்விகளைவிட குழந்தைகள் எழுப்பும் கேள்விகளுக்கு முக்கியத்துவம் தந்தவர்.
வகுப்பறையில் கலந்துரையாடலின் பகுப்பாய்வு (Flander’s Interaction Analysis) எனும் ஆசிரியர் மதிப்பீட்டு முறையை அறிமுகம் செய்தார் அவர். வகுப்பறையை ஆசிரியர் பேச்சு, மாணவர் பேச்சு, அமைதி அல்லது குழப்பம் என ஃபிளான்டர்ஸ் பிரித்தார். மாணவர் பேச்சுக்கு அதிக முக்கியத்துவம் தரும் ஆசிரியர்களை இனம் கண்டு பாராட்டினார். அத்தகையவர்களின வகுப்பறை முறையைத் தனித்தெடுத்து அறிவித்தார்.
பொதுவாக, கேள்விகள் ஐந்து வகை. ஏன், எதற்கு, எப்போது, யார், எப்படி என அவற்றை வரிசைப்படுத்தலாம். ஆனால், குழந்தைகளோ ஆறாம் வகையான கேள்விகளைக் கேட்டு நம்மை அசத்திவிடுகிறார்கள். அந்த, அப்படியானால், எனும் வகையிலான கேள்விகளை முன்வைப்பதில் குழந்தைகளே புத்திசாலிகள். எதையுமே கேள்வி கேட்டுவிடக் கூடாது என நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்து அதிகாரத்துக்கு வளைந்து கொடுக்கும் குடிமக்களை உருவாக்கிட ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது நம் கல்விமுறை.
இதில் ‘அந்த, அப்படியானால்’ எனும் வகையிலான கேள்விகளுக்கு இடமில்லை. ஆனால், இந்த வகையான கேள்விகளை நமது வகுப்பறையில் அனுமதித்துப் பாருங்களேன்! அப்போது நூற்றாண்டுகளாக நாம் மவுனமாக எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொண்ட பல பொய்களைக் குழந்தைகள் எப்படி உடைத்தெறிகிறார்கள் என்பதை எனக்குக் காட்டியவர்தான் தேன்மொழி.
‘சிப்பாய்’ கலகக்காரி
ஒன்பதாம் வகுப்பு மாணவியாக எனக்கு அறிமுகமானவர் தேன்மொழி. கலகலப்பானவர். அவருக்கு ஆசிரியர்கள் ‘வாயாடி’,‘முந்திரி கொட்டை’, ‘கொடுக்கு’ என பல பட்டங்கள் வைத்திருந்தனர். ஆங்கில வகுப்பில் Where the mind is without fear என்று தாகூரின் கவிதையைப் பற்றி பேசும்போது Mind என்றால் என்ன என்பார். கணித வகுப்பில் ஆயுள் காப்பீட்டில் உங்கள் வயதைக் கணிக்கப் பயன்படுத்தும் கணித சமன்பாடு எது சார் என ஆசிரியரிடம் கேட்பார். கேள்விகளால் அவர் பிரபலம்.
ஆனால், என் வகுப்பில் அவர் எழுப்பிய ஒரு கேள்வி எனக்கு எத்தனையோ அரசியல், வரலாற்று உண்மைகளைப் புரிய வைத்தது. நமது பாடப் புத்தகங்களில் இருக்கும் பல பாடங்கள் ஆண்டாண்டுகளாக திரும்பத் திரும்ப இடம்பெறுவதை பார்க்கிறோம். ஓம்ஸ் விதி படிக்காத தலைமுறை இல்லை. அதே போலதான் சிப்பாய் கலகம். முதல் இந்திய சுதந்திர போர் என நம் வரலாற்றாளர்கள் அழைக்கும் அந்தப் போராட்டத்தை நம் பாடப்புத்தகங்கள் ஆங்கிலேயர் அழைத்த அதே வார்த்தைகளைப் போட்டு சிப்பாய் கலகம் என்றே இன்றும் அழைக்கின்றன.
சிப்பாய் கலகத்துக்கானக் காரணங்கள் (5மதிப்பெண்கள்?) அந்தக் காலத்திலிருந்தே படிப்பதுதானே. வகுப்பில் அதை நான் முன் வைத்த அந்த நாளில் தேன்மொழி ஒரு ‘அப்படியானால்’ வகை கேள்வி கேட்டார். எனது இத்தனை ஆண்டுகால ஆசிரியப் பணியில் நான் எதிர்கொண்ட ஆகச் சிறந்த கேள்வி அதுதான்.
சிப்பாய் கலகம் நடந்ததுக்கான காரணங்களை நான் வரிசைப்படுத்தி னேன். எனக்கு அவை மனப்பாடமான வரிகள். ‘‘சிப்பாய்களுக்கு ராணுவத்தில் வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளில் பசுவின் கொழுப்பு பூசப்பட்டிருந்தது. துப்பாக்கிக் குண்டுகள் பன்றித்தோல் பைகளில் தரப்பட்டிருந்தன. வாயால் பையைக் கடித்துப் பிரித்து குண்டுகளை எடுக்க வேண்டும். இந்துக்கள் பசுவைப் புனிதமாய் கருதினர்.
இசுலாமியர் பன்றியை வெறுத்தனர். இதனால் சிப்பாய்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டது” என்று மடமடவென நான் எனது மனப்பாட அறிவை ஒப்பித்தேன். அப்போது தேன்மொழி எழுந்து நின்றார். “சார், அப்படியானால் அந்த சிப்பாய் கலகத்தின்போது சிப்பாய்கள் போர் புரிய எந்தத் துப்பாக்கியைப் பயன்படுத்தினார்கள்? பல ஆங்கிலேய அதிகாரிகள் இறந்ததாகவும் சொல்கிறீர்கள். சிப்பாய்களுக்குத் துப்பாக்கிகள் வானத்திலிருந்தா வந்தன? என்று கேட்டார்.
ஏவுகணை விஞ்ஞானியாக
நான் 10-ம் வகுப்பில் இதையே படித்துத் தேர்வு எழுதியபோது இதைப் பற்றி எந்த கேள்வியும் எழுப்பவில்லை. ஏன் நம்மில் பெரும்பாலும் எல்லாரும் பாடப்புத்தகத்தில் அச்சான எல்லாமே உண்மை என்றல்லவா கருதுகிறோம்!
இன்றுவரை தொடரும் பசு வதை அரசியலின் விஷ விதை எங்கே தூவப்பட்டது என்பதைத் தேன்மொழி எழுப்பிய இந்த கேள்வி விளக்கிவிடுகிறது அல்லவா? அன்று வகுப்பில் அவருக்கு விளக்குவதற்கு என்னிடம் பதில் இல்லை. குழந்தைகள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் தர வேண்டுமென்ற அவசியம் ஆசிரியர்களுக்கு இல்லை. குழந்தைகளின் சில கேள்விகள் நாமும் சேர்ந்தே விடைதேட வேண்டிய அளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என எனக்குக் காட்டினார் தேன்மொழி. அவர் வானூர்தி இயல் கற்றார். இப்போது மத்திய அரசின் நிறுவனத்தில் (DRDA) ஏவுகணை விஞ்ஞானிகளில் ஒருவராக அப்துல்கலாமின் வழியில் பணிபுரிந்து வருகிறார்.
தொடர்புக்கு: eranatarasan@yahoo.com
ஓவியம்: வெங்கி
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago