ஆங்கிலம் அறிவோமே 77: தொபுக்கடீர் என்பது எந்த வகை வார்த்தை?

By ஜி.எஸ்.சுப்ரமணியன்

ஒரு நண்பர் Onomatopoeia (அனமாடபியா) என்ற வகையிலான வார்த்தைகளை விளக்க முடியுமா என்கிறார். விளக்குவது கஷ்டம். புரிய வைக்கலாம்.

ஓர் இயல்பான ஒலியை நகல் எடுப்பது போன்ற வார்த்தைகள் இவை. Cuckoo, meow போன்ற வார்த்தைகள் இவை.

அவன் கதவைப் படார் என்று சாத்தினான் என்ற வார்த்தையில் படார் என்பதை மட்டும் கொடுத்தால், அர்த்தம் கூறுவது கஷ்டம்தானே. அறைந்து மூடும்போது எழும் சப்தம் எனலாம்.

உங்கள் கன்னத்தில் ஒருவர் அறைந் தால் அதை எப்படி விவரிப்பீர்கள்? ‘பளார்’ என்று அறைந்தான் என்றுதான் சொல்வீர்கள். படார் என்பதில்லை.

தட்தட் என்று இதயம் அடித்துக்கொண்டது என்கிறோம். இதய ஒலியை மருத்துவர்கள் லப்டப் என்கிறார்கள்.

‘ஆ’ என்று அலறினான். ‘ஓ’ என்று கூக்குரலிட்டான். ‘வீல்’ என்று கத்தினான். இது போன்ற வார்த்தைகளை ஆங்கிலத்தில் Onomatopoeia என்பார்கள்.

பட்டிமன்றங்களில் அடிக்கடி “அமெரிக்கப் பசு மட்டும் மம்மி என்றா குரல் கொடுக்கும்? அம்மா என்றுதானே?’’ என்ற கேள்வி இடம் பெறும். இந்த தர்க்கத்தின்படி பார்த்தால் Onomatopoeia வார்த்தைகள் எல்லா மொழிகளிலும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், ஏனோ அப்படி இருப்பதில்லை. கடிகாரத்தின் ஒலியை நாம் டிக் டிக் என்கிறோம். ஆங்கிலத்தில் Tik Tak என்கிறார்கள். சில கடிகாரக் கடைகளில் ‘Tik Taks are sold here’ என்றே அறிவிப்புப் பலகைகளைக் காண முடியும்.

காரின் ஹாரன் ஒலியை நாம் ‘பாம் பாம்’ என்போம். ஜப்பானிய மொழியில் ‘பூ பூ’ என்பார்கள். வியட்நாமிய மொழியில் அது ‘பிம் பிம்’. கொரிய மொழியில் ‘பாங் பாங்’.

அமெரிக்காவில் ஒரு பிரபலமான கோரஸ் பாடல் உண்டு. அது இதுபோன்ற வார்த்தைகளைக் கொண்டே வடிவமைக்கப்பட்டது.

“Bang! went the pistol.

Crash! went the window.

Ouch! went the son of a gun.

Onomatopoeia, I don't wanna see ya ’’

க்வாக் (Quack) என்பது வாத்தொலி (வாழ்த்தொலி அல்ல). இங்கே ‘குவாகுவா’ என்பார்கள். Baa Baa என்பது ஆட்டின் ஒலி - அதனால்தான் Baa baa black sheep.

Zip என்பதுகூட அது எழுப்பும் ஒலியைக் கொண்டு உருவான வார்த்தைதான். வேண்டுமானால் demo செய்து பாருங்கள். Twitter என்றால் நீங்கள் நினைப்பது அல்ல. அது பறவைகள் எழுப்பும் ஒலி.

Buzz, Hiss போன்ற ஒலிகளைக்கூட இந்த வகையில் அடக்கிவிடலாம்.

இதுபோன்ற வார்த்தைகள் சிலவற்றை கவனித்துவிட்டு ‘பொருத்தமாக இல்லையே’ என்று நீங்கள் கூற வாய்ப்பு உண்டு. அது ஆங்கிலேயர்களுக்குப் பொருத்தம்! (தொபுக்கடீர் என்று குதித்தான் என்கிறோமே, தொபுக்கடீர் என்ற வார்த்தை ரொம்பப் பொருத்தமோ?)

அது இருக்கட்டும், எதற்காக Onomatopoeia என்ற கரடுமுரடான வார்த்தை? கிரேக்க மொழியில் இதற்கு “நான் பெயர்களை உருவாக்குகிறேன்’’ என்று பொருள்.

இத்தகைய வார்த்தைகளைத் தண்ணீர் தொடர்பான சில வார்த்தைகளோடு பொருத்திப் பார்ப்பவர்களும் உண்டு. Splash என்றால் தண்ணீரில் குதிக்கும்போது எழும்பும் ஒலி.

Spray என்றால் வாசனைத் திரவியத்தை அடித்துக்கொள்ளும்போது எழும்பும் ஒலி. அதாவது, காற்றின் மூலம் ஒரு திரவத்தை வெளியேற்றும்போது எழும்பும் ஒலி. Drizzle என்றால் தூறல் ஒலி. (பல Onomatopoeia வார்த்தைகள் பெயர்ச் சொற்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன).

குரல் தொடர்பான இதுபோன்ற வார்த்தைகளும் உண்டு.

Giggle என்றால் அது சிரிப்பொலிதான். ஆனால், கிண்டலாக லேசான கனைப்புடன் கூடிய சிரிப்பு. ஒருவரை வெறுப்பேற்றுவதற்காகக் கொஞ்சம் பண்புக் குறைவாகச் சிரிப்பது.

Grunt என்றால்? உங்களிடம் எதற்கோ ஒப்புதல் கேட்கிறார்கள். வேண்டாவெறுப்பாக நீங்கள் அதை ஒப்புக் கொள்வதுபோல் ‘ம்ம்’ என்று அடித்தொண்டையிலிருந்து ஒரு ஒலியை எழுப்புகிறீர்கள். அது grunt.

Chatter என்றால் தொணதொணப்பது. Murmur என்றால் முணுமுணுப்பது. Mumble என்பதும் கிட்டத்தட்ட அப்படித்தான். தெளிவில்லாமல் முணுமுணுப்பது.

STAND

‘‘Stand ஆடுது பார். மேலே விழுந்திடப்போவுது, ஜாக்கிரதை’’ என்பதுபோல் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருப்போம். அதை verb ஆகப் பயன்படுத்துகையில் ‘நில்’ என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தியிருப்போம்.

ஆனால், ஒவ்வொருவித preposition-ஐ stand என்ற வார்த்தையுடன் சேர்க்கும்போது அது ஒவ்வொருவிதமான அர்த்தத்தைத் தரும்.

Stand by என்றால் support என்று அர்த்தம். We will be unbeatable if we stand by one another.

Stand out என்றால் இறுதிவரை வளைந்து கொடுக்காமல் இருப்பது. It is difficult but I think you can stand it out. தனித்துத் தெரிவதையும் stand out என்பதுண்டு.

Stand over என்பது தள்ளிப் போடுதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. Let this matter stand over for the present.

Stand up என்றால் உறுதியாக இருப்பது என்ற அர்த்தம். We must have the courage to stand up.

LIMIT LIMITATIONS

சிலர் Limit என்ற வார்த்தையையும், Limitation என்ற வார்த்தையையும் மாற்றிப் பயன்படுத்துகிறார்கள். Limit என்றால் எல்லை. This is the limit. இந்த இடத்தில் இது noun ஆகப் பயன்படுத்தப்படுகிறது.

Limit என்பதை verb ஆகப் பயன்படுத்தும்போது ஒரு எல்லையோடு நிறுத்திக்கொள்வது அல்லது கட்டுப்படுத்துவது என்று அதற்கு அர்த்தம்.

The lift limits the number of users to ten at a time.

Limitation என்பது சில கோணங்களில் Limit போலவே பயன்படுத்தப்படலாம் என்பது உண்மை. குறைபாடு என்ற அர்த்தத்தையும் இது தருகிறது. I am not good at public speech. This is my limitation.

இப்படியும் வைத்துக் கொள்ளலாம். I have my limits என்று நீங்கள் சொன்னால் அதில் உங்கள் விருப்பம் கலந்துள்ளது. அதாவது, சிலவற்றைத்தான் நான் ஏற்றுக் கொள்வேன் என்பது போல.

ஆனால் I have my limitations என்றால் அது உங்கள் விருப்பம் தொடர்பானது அல்ல. உங்கள் இயலாமையைக் குறிக்கும் சொல் அது.

Limitation என்று ஒரு சட்டம் உண்டு. அதற்கான அர்த்தம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் வழக்கு தொடுக்கவில்லையென்றால் உங்களுக்குச் சட்டம் உதவிக்கு வராது என்பதுதான். மிகவும் காலம் கடந்த வழக்குகளை ஏற்றுக் கொண்டால் சம்பந்தப்பட்டவர்கள் இறந்திருக்கவும் வாய்ப்பு உண்டு. எனவேதான் இந்த Law of Limitation.

எளிமையாகச் சொல்வதென்றால் நீங்கள் ஒருவருக்குப் பணத்தைக் கடன் கொடுத்துவிட்டு அதற்கான பிராமிஸரி நோட்டில் அவரது கையெழுத்தையும் வாங்கி வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் பிராமிஸரி நோட்டில் கையெழுத்து போட்ட தேதியிலிருந்து மூன்று வருடத்துக்குள் வழக்கு தொடுக்க வேண்டும்.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்