புதிய தொழிலாளர் சட்டங்களால் யாருக்கு லாபம்?

By முகம்மது ரியாஸ்

முகம்மது ரியாஸ்,
riyas.ma@hindutamil.co.in

தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாடாக இந்தியாவை மாற்றும் நோக்கில் தொழில் துறையினருக்கு நெருக்கடியாக இருக்கும் பல கட்டுப்பாடுகளை தொடர்ச்சியாக தளர்த்தி வரும் மத்திய அரசு தற்போது அனைத்திலும் உச்சமாக தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தம் கொண்டுவந்துள்ளது. உலகமயமாக்கலுக்குப் பிறகு பொருளாதாரச் சூழல் மாற்றமடைந்ததைத் தொடர்ந்து, இந்தியத் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கைகள் தீவிரமாக முன்வைக்கப்பட்டுவந்தன. தற்போது உலகமயமாக்கல் போன்றொரு புதிய பொருளாதாரக் கட்டமைப்பு உருவாகிக்கொண்டிருக்கும் சூழலில் அப்படியான சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவந்திருக்கிறது.

‘தொழில்துறை உறவுகள் சட்டம் 2020’, ‘சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020’,‘பணியிட பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நெறிமுறைகள் சட்டம் 2020’ஆகிய மூன்று சட்ட மசோதாக்களை மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ளது. தொழிலாளர் விதிகள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகின்றன. 100-க்கும் மேற்பட்ட சட்டங்கள் மாநில அரசுகள் சார்பாகவும், 40-க்கும் மேற்பட்ட சட்டங்கள் மத்திய அரசு சார்பாகவும் நடைமுறையில் இருக்கின்றன. இந்தச் சட்டங்கள் சற்று முரண்பாடுகள் கொண்டதாகவும், சிக்கல்கள் நிறைந்தாக இருப்பதாகவும் கூறப்பட்டுவந்த நிலையில், அவற்றை எளிமைப்படுத்தும் நோக்கில் தற்போது 29 மத்தியச் சட்டங்கள் நான்கு சட்டத் தொகுப்புகளின் கீழ் கொண்டுவரப்
பட்டுள்ளன.

அதன்படி, ஊதியம் வழங்குதல், குறைந்தபட்ச ஊதியம், போனஸ், சம ஊதியம் தொடர்புடைய சட்டங்கள் ‘ஊதியச் சட்ட’த்தின் கீழும், தொழிற் சங்கங்கள், வேலை நீக்கம், நியமனம் தொடர்பான சட்டங்கள் ‘தொழில் துறை உறவுகள் சட்ட’த்தின் கீழும், வருங்கால வைப்பு நிதி, காப்பீடு, இழப்பீடு உள்ளிட்டவை ‘சமூக பாதுகாப்புச் சட்ட’த்தின் கீழும், பணிச் சூழல் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் ‘பணியிட பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நெறிமுறைகள் சட்ட'த்தின் கீழும் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் ஊதியச் சட்ட மசோதா கடந்த ஆண்டே நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் மற்ற மூன்று மசோதாக்களும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்தச் சட்ட மசோதாக்கள் தொழில்துறையினரிடம் வரவேற்பையும், தொழிலாளர்களிடம் எதிர்ப்பையும் ஏற்படுத்தியிருப்பதைக் காண முடிகிறது. ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது, வேலையிலிருந்து நீக்குவது தொடர்பான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக 100-க்கு மேல் ஊழியர்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் முறையான அறிவிப்பின்றி ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடியாது. தற்போது அந்த வரம்பு 300-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 300-க்கு கீழ் ஊழியர்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் இனி நினைத்த நேரத்தில் ஊழியர்களை வேலையில் இருந்து
நீக்கலாம்.

அதேபோல் முன்னதாக 100-க்கு கீழ் ஊழியர்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் ஊழியர்களின் வேலையின் தன்மைகள் குறித்த விவரங்களை வரையறுக்க வேண்டியது கட்டாயமில்லை. தற்போது அந்த வரம்பு 300-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர்கள் நிறுவனத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுவது கடினமாக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பான வரம்பு உயர்த்தப்பட்டிருக்கிறது.

இந்தப் புதிய தொழிலாளர் சட்டங்களால் வேலைவாய்ப்புகள் உயரும், முதலீடுகள் அதிகரிக்கும் என்று இச்சீர்த்திருத்தங்களை ஆதரிப்பவர்கள் வாதிடுகின்றனர். ஆனால் கள எதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது. தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் பல சட்டங்களை குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைப்படுத்திவிட்டன. அங்கு பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. மாறாக வேலையின்மையும், உழைப்புச் சுரண்டலும் அதிகரித்து இருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இந்திய வேலைவாய்ப்புக் கட்டமைப்பில் முறைசாரா துறைகள் 90 சதவீதம் பங்கு வகிக்கின்றன. 10 சதவீதத்துக்கும் குறைவான அளவே அமைப்புசார் வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்தச் சூழலில் இந்தப் புதிய சட்டங்கள் அமைப்புசார் வேலைவாய்ப்புகளை முறைசாரா தன்மைக்கு மாற்றக்கூடியதாகவே அமையும். அது உழைப்புச் சுரண்டலை இன்னும் தீவிரப்படுத்தும்.ஏற்கெனவே இந்திய நிறுவனங்களில் பெரும்பான்மையானவை, முறையான தொழிலாளர் விதிகளை கடைபிடிப்பதில்லை. தொழிலாளர் நலச் சட்டங்கள் பலவும் பெயரளவுக்கே இருக்கின்றன. இந்தப் புதியச் சட்டங்கள் மூலம் அந்தப் பெயரளவுக்கான உரிமைகளும் பறிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்