ரஷ்யாவுக்கும் துருக்கிப் பேரரசுக்கும் போர் நடந்துகொண்டிருந்த காலகட்டம் அது. பெரும் பொருளாதார இழப்பில் இருந்து மீள்வதற்காக கனிம வளங்களைக் கண்டறியும் ஆய்வுப் பயணத்துக்கு ஹம்போல்டை ரஷ்ய அரசு அழைத்தது. இதற்காக 1829-1831 வரையிலான இரண்டாண்டுகள் மத்திய ஆசியா, தெற்காசிய எல்லையான சீனா வரை ஹம்போல்ட் பயணம் மேற்கொண்டார்.
ஸ்டெப்பி புல்வெளியின் பரந்த நிலப்பரப்பின் மீது உருவாகியிருந்த பல்லுயிர்களும், தமது முந்தைய பயணங்களில் கண்டுணர்ந்த பல்லுயிர்களும் வேறுபடுவதற்கான காரணங்களை ஹம்போல்ட் ஆராய்ந்தார். சீனா, மங்கோலியா, ரஷ்யாவை இணைக்கின்ற அட்லாய் மலைத்தொடரில் உறைபனிக் குளிரில் ஆய்வு மேற்கொண்டார். அந்தக் காலத்தில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவத் தொடங்கியிருந்த ஆபத்தான ஆந்த்ராக்ஸ் நோயிடமிருந்து தப்பிப் பிழைத்து ஆய்வை அவர் தொடர்ந்தார்.
லெனினின் தாத்தா
ரஷ்யாவின் மியாஸ் எனும் கிராமத்தில் தனது 60-வது பிறந்த நாளை 1829 செப்.14-ல், உள்ளூர் இயற்கை ஆர்வலர் ஒருவருடன் இணைந்து ஹம்போல்ட் கொண்டாடினார். அந்த உள்ளூர் இயற்கை ஆர்வலரின் பேரன் வேறு யாரும் அல்ல; பின்னாளில் ரஷ்யாவின் புரட்சிகரத் தலைவராக, அனைவராலும் கொண்டாடப்பட்ட லெனின்தான். இதே காலத்தில் துருக்கியுடனான போரில் ரஷ்யா வெற்றி பெற்றுவிட, காஸ்பியன் கடலை ஆய்வு செய்யும் வாய்ப்பும் ஹம்போல்டுக்குக் கிடைத்தது.
» மகத்தான அறிஞர் ஹம்போல்ட்: இயற்கை அறிவியலின் தீராத ஊற்று
» மகத்தான அறிஞர் ஹம்போல்ட்: 2- தென் அமெரிக்க விடுதலைக்கு வித்திட்டவர்
காஸ்பியன் கடல் நீரின் மாறுபட்ட தன்மையைக் கொண்டே, காலநிலை மாற்றமே இதற்குக் காரணம் என்றும், காலநிலை மாற்றத்துக்கு முதலாளித்துவக் கோட்பாடுகள் அடிப்படையில் சூழலின்மேல் மனிதர்கள் செலுத்திய அளவுகடந்த ஆதிக்கமே காரணம் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் காலநிலை மாற்றம் குறித்து முதல் குரல் எழுப்பியவரும் ஹம்போல்ட்தான். இந்த ஆய்வுப் பயணத்துக்காகத் தனக்குக் கிடைத்த பணத்தில் பாதியை, மீண்டும் இது போன்ற ஆய்வுகளை மேற்கொள்ள வரும் புதிய இளைஞர்களுக்குக் கொடுத்து ஊக்குவிக்குமாறு வழங்கிவிட்டார்.
டார்வினும் ஹம்போல்டும்
1831-ல் டார்வின் ஹெச்.எம்.எஸ். பீகிள் கடற்பயணத்தைத் தொடங்கினார். அப்போது அவர் எடுத்துச் சென்ற இரண்டு நூல்களில் ஒன்று ஹம்போல்டின் ‘Personal Narrative of Travels to the Equinoctial Regions of America’ எனும் நூலின் 7 தொகுதிகளும் அடக்கம். ஹம்போல்ட் ஏறி இறங்கிய எரிமலையான டெனெரிஃப் தீவின் பிகோ டெல் டெய்தே எரிமலையில் டார்வினும் ஏறி இறங்கினார்.
“அவரைப் படித்துப் புரிந்துகொள்வதற்கு, எனக்கு இந்தப் பயணம் உதவியது. நான் இதுவரை அறிந்து கொண்டவற்றின் மீது புதிய ஒளி பாய்ச்சுகிற இன்னொரு சூரியனாக ஹம்போல்ட் தெரிகிறார்” எனத் தனது நாள்குறிப்பில் டார்வின் எழுதியிருக்கிறார். இதே நூலில் ஹம்போல்ட் கேட்டிருந்த பின்வரும் கேள்வி டார்வினுக்குள் இன்னுமொரு சாளரத்தைத் திறந்துவிட்டது.
அந்தக் கேள்வி:
“தென் அமெரிக்காவைவிட இந்தியாவில் இருக்கும் பறவை வகைகளில் வண்ணங்கள் ஏன் குறைவாக இருக்கின்றன? புலிகள் ஏன் ஆசியாவில் மட்டும் காணப்படுகின்றன? ஒரினாகோ ஆற்றுப்படுகையில் அதன் தாழ்வான பகுதியில் காணப்படும் முதலைகள், ஏன் உயரமான பகுதியில் காணப்படுவதில்லை?”
இந்த எடுத்துக்காட்டுக் கேள்விகள் டார்வினுடைய சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டே இருந்தன என்பதைத் தனது நாட்குறிப்பில் டார்வின் பதிவு செய்துள்ளார்.
டார்வினுக்கு உத்வேகம்
டார்வினின் பரிணாமக் கொள்கையின் ஆதாரப் புள்ளியான ‘உயிரினப் பரவலை’ வரையறுக்க ஹம்போல்டின் ஓக் மரப் பதிவு உறுதுணை புரிந்தது. பிகோ டெல் டெய்தே எரிமலைச் சரிவில் வளர்ந்திருக்கும் ஓக் மரங்களுக்கும், திபெத்தின் ஓக் மரங்களுக்கும் இடையேயான ஒற்றுமை என்னவாக இருக்கும்? எப்படி உலகின் அநேக இடங்களிலும் ஒரே வகையான உயிரினங்கள் தோன்றியிருக்கக் கூடும் என்ற கேள்வியை ஹம்போல்ட் முன்வைத்திருந்தார்.
அதற்கான பதிலை ‘சிதறல்கள்’ என்று அவர் குறிப்பிடுகிறார். பின்னாளில் இவை அனைத்தையும் ‘இயற்கைத் தேர்வு’ எனும் ஒற்றைத் தலைப்புக்குள்ளேயே டார்வின் பொருத்திவிட்டார். அத்துடன் இந்த அணுகுமுறை உயிரினங்களின் தோற்றுவாயைக் காலரீதியாக ஒன்றோடொன்று தொடர்புபடுத்திக் கொள்வதற்கு உதவியாக அமைந்தது.
உலக சிந்தனைப் போக்கைப் புரட்டிப் போட்ட நூல்களுள் ஒன்றான, ‘Origin of the Species’ நூலின் இறுதி அத்தியாயம்கூட, ஹம்போல்டின் ‘Personal Narrative’ முன்வைத்த கருத்துகளின் பிரதிபலிப்பே என்பதை டார்வின் தனது முதல் கையெழுத்துப் பிரதியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
“It is interesting to contemplate an entangled bank, clothed with many plants of many kinds, with birds singing on the bushes, with various insects flitting about, and with worms crawling through the damp earth, and to reflect that these elaborately constructed forms, so different from each other, and dependent upon each other, and dependent upon each other in so complex a manner, have all been produced by laws acting around us.”
இப்படியாக வரலாற்றின் மாபெரும் அறிவியல் அறிஞரான டார்வின், உயர்ந்து நிற்பதற்குத் தோள் கொடுப்பவராக ஹம்போல்ட் இருந்திருக்கிறார்.
(தொடரும்)
- செ.கா., கட்டுரையாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்க செயற்பாட்டாளர்
தொடர்புக்கு : erodetnsf@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago