கடவுளின் கருணையால் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சிலரைக் குறிப்பிடுவார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், பல நூறு அறிவியல் அறிஞர்களின், மருத்துவ அறிஞர்களின் கண்டுபிடிப்புகளால்தான் நம்முடைய வாழ்க்கை இன்றைக்கு நகர்ந்துகொண்டிருக்கிறது.
கரோனா காலத்தில் அறிவியல் பார்வை, அறிவியல்பூர்வ செயல்பாடுகள், அறிவியல் கண்ணோட்டம் போன்றவை மீண்டும் வலுப்பெற்றுள்ளன. எல்லோரும் முகக்கவசம் அணிவதில்லை என்றாலும், முகக்கவசம் அணியாமல் இருப்பதால் நேரும் ஆபத்துகளை அறிவியல்பூர்வமாக உணர்ந்தவர்களும், உயிர் பயம் இருப்பவர்களும் அணிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். அதேபோல் சமூக இடைவெளி, கைகழுவுதல் போன்ற சுகாதாரப் பழக்கங்களையும் சொல்லலாம். இந்த முகக்கவசம், கைகழுவுதல், சமூக இடைவெளி போன்றவற்றையெல்லாம் ஆய்வு மேற்கொண்டு கண்டறிந்தவர்கள் அறிவியல் அறிஞர்களும் மருத்துவ அறிஞர்களுமே.
வைரஸ், பாக்டீரியா போன்ற வெறுங் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிரிகள் இயற்கையாகவே தாம் பெற்றுள்ள ஆற்றலால், மரபணு மாற்றத்தால் புதுப்புது வடிவம் எடுக்கின்றன, புதிய புதிய வகையில் தொற்றத் தொடங்குகின்றன. அவை இப்படிக் கட்டுமீறிப் பரவுவதை, பெருகுவதை அறிவியல் அறிஞர்களின் துணைகொண்டே மனிதக்குலம் முறியடித்தோ முடக்கியோ வந்திருக்கிறது. அந்த அறிவியல் அறிஞர்களின் பட்டியல் நீளமானது. அதில் ஆண்டனி வான் லெய்வன்ஹுக், எட்வர்டு ஜென்னர், லூயி பஸ்தேர், ஜோசப் லிஸ்டர், அலெக்சாண்டர் பிளெம்மிங் ஆகியோர் முதல் வரிசையில் இடம்பெறுவார்கள்.
இவர்களில் நேரடி மருத்துவராக இல்லாமல் மருத்துவத் துறைக்கும், நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் முதன்மைப் பங்களித்தவர் பிரெஞ்சு அறிஞர் லூயி பஸ்தேர் (பாஸ்டர் என்றுதான் இதுவரை அறிந்திருப்போம். அவருடைய தாய்மொழியான பிரெஞ்சில் பஸ்தேர் என்கிற உச்சரிப்பே சரியானது). பிரெஞ்சில் எரிக் ஒர்சேனா எழுதிய அவரது வாழ்க்கை வரலாற்று நூல், ‘வாழ்வு இறப்பு வாழ்வு’ என்ற பெயரில் தமிழில் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது (தடாகம் வெளியீடு).
அறிவியல் புதிர்களுக்கு விடை
பஸ்தேர் வாழ்ந்த 19-ம் நூற்றாண்டில் கால்நடைகளையும் மனிதக் குலத்தையும் நோய்கள் பிடித்தாட்டின. பஸ்தேரே தன்னுடைய மூன்றுமகள்களை டைபாய்டு நோய்க்குப் பலிகொடுத்துள் ளார். இந்தப் பின்னணியில்தான் அவருடைய கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
அவருடைய தாய்நாடான பிரான்சில் வேளாண்மைத் துறை சந்தித்த பெரும் இக்கட்டுகளை பஸ்தேர்தான் களைந்தார். ஒயினை நொதிக்க வைக்கும்போது சீர்கெட்டுப் போவதற்கான காரணம், பட்டுப் புழு வளர்ப்பைப் பாதித்த பெப்ரீன் நோயிலிருந்து மீட்பு போன்றவை மட்டுமில்லாமல் கோழிகளைத் தாக்கிய காலரா நோய், கால்நடைகளைத் தாக்கிய ஆந்த்ராக்ஸ் நோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைக் கண்டறிந்ததற்காக பஸ்தேர் கொண்டாடப்படுகிறார்.
அறிவியல் ஆய்வுகளை ஆய்வகங்களுக்கு உள்ளேயே அடைபட்டுக் கிடந்து அவர் கண்டறியவில்லை. ஒவ்வொரு புதிய அறிவியல் சவால் அவரை அழைத்தபோதும், நேரடியாகக் களத்துக்குச் சென்றார். உரிய புரிதலைப் பெறுவதற்காக, அது சார்ந்து அனுபவம் பெற்றவர்களை நேரில் சந்தித்தார். நேரடி கள ஆய்வு அவருடைய ஆராய்ச்சியின் அடிப்படை அம்சமாக இருந்தது.
அத்துடன் தீவிரமான ஆராய்ச்சி, தொடர் உழைப்பு, துணிச்சலான முடிவெடுக்கும் திறன் ஆகியவை அவரது ஆராய்ச்சிகளின் அடித்தளமாக அமைந்துள்ளன. மற்றவர்களால் அவிழ்க்க முடியாத அறிவியல் புதிர்களுக்கு, தன் சிந்தனைத் திறனால் பஸ்தேர் விடை கண்டறிந்துள்ளார். அறிவியல் ஆய்வு ஒன்றையே முதன்மையாகக்கொண்டு வாழ்நாளெல்லாம் இயங்கியுள்ளார். அதேநேரம் அவருடைய வெற்றி என்பது தனிநபரின் சாதனையல்ல. அவருக்குத் துணையாக அக்கறையான மனைவி, செயலுறுதி வாய்ந்த உதவியாளர்கள் திறம்படச் செயலாற்றி இருக்கிறார்கள்.
மகத்தான பங்களிப்பு
மது தயாரிப்பில் சில நுண்ணுயிரிகள் ஏற்படுத்தும் விளைவுகளைத் தடுக்க, தயாரிப்பு நடைமுறையின்போது மதுவை வெப்பப்படுத்துதல், பிறகு நுண்ணுயிரிகள் வளர்வதற்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் செய்தல் ஆகிய நடைமுறைகளை அறிவியல்பூர்வமாகப் பரிசோதித்து பஸ்தேர் கண்டறிந்தார். இந்த முறை பலனளித்தது. இதுவே பிற்காலத்தில் பாஸ்டராக்கம் (Pasteurization) என்றழைக்கப்பட்டது.
பால் போன்ற கால்நடை உற்பத்திப் பொருள்களிலும் நுண்ணுயிரிகள் எளிதில் பெருகுகின்றன. அவற்றைத் தடைசெய்வதற்கான பதப்படுத்தும் நடைமுறையே பாஸ்டராக்கம். அந்த வகையில் பஸ்தேர் இல்லாமல் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் பல செயல்பாடுகள் நகர்வதில்லை. அதேநேரம், மனிதக்குலத்துக்கு அவருடைய மிகப் பெரிய பங்களிப்பு வெறிநாய்க் கடிக்கான சிகிச்சை ஊசியைக் கண்டறிந்ததுதான். பஸ்தேரின் ஆராய்ச்சிக் குழு இதைக் கண்டறிவதற்கு முன்னர்வரை, வெறிநாய்க் கடிக்கு ஆளானவர்கள் இறப்பதற்கான சாத்தியம் அதிகமாக இருந்தது.
தன்னுடைய ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக பஸ்தேர் உருவாக்கிய புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனமான பஸ்தேர் இன்ஸ்டிடியூட், இன்றைக்கு உலகெங்கும் கிளை பரப்பி இருக்கிறது. உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அவரது வழிவந்தவர்கள் மருத்துவத் துறையிலும், அறிவியல் ஆராய்ச்சித் துறையிலும் இன்றைக்கும் பெரும் பங்களித்துவருகின்றனர். அவரது வழிவந்தவர்களில் பத்துக்கும் மேற்பட்டோர் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.
மனிதர்கள்தானே!
மகத்தான அறிவியல் வெற்றிகளைப் பெற்ற பஸ்தேர், இளம் வயதில் பிரகாசமான மாணவராக இருந்ததில்லை. கல்லூரிப் படிப்புக்குப் பிறகே பரிமளிக்கத் தொடங்கியுள்ளார். இளம் வயதில் ஓவியத்தில் ஆர்வம்கொண்டிருந்த அவர், தோல் பதனிடும் சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்.
மத நம்பிக்கை கொண்ட பழமை வாதியாக இருந்த அதேநேரம், தன் அறிவியல் ஆராய்ச்சிகளில் அதை மிகக் குறைந்த அளவுகூட அவர் கலக்கவில்லை. அறிவிய லின் செயல்முறைகள் மீது பெருமதிப்பும், தீவிர பிடிப்பும் கொண்டவராகவே இருந்தி ருக்கிறார். எடுத்துக்காட்டுக்குக் கைகுலுக்குவதைச் சொல்லலாம். மேற்கத்திய நடைமுறைப்படி இருவர் சந்தித்துக் கொள்ளும்போதும் விடைபெறும்போதும் சம்பிரதாயமாகக் கைகுலுக்கிக்கொள்வது வழக்கம். நுண்ணுயிரி களைப் பற்றி அதிகம் அறிந்திருந்த பஸ்தேர், மற்றவர்களிடம் கைகுலுக்குவதை விரும்பாதவர்.
அதேபோல் ஒழுக்கம், நடைமுறைகள் மீது தீவிர பிடிப்பு கொண்டவர். சிறந்த அறிவியல் அறிஞராக இருந்தபோதும், நிர்வாகச் செயல்பாடுகளில் கூடுதல் கடுமை காட்டியதால், நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கவும்பட்டுள்ளார். இந்த வாழ்க்கை வரலாற்று நூல் அவரைப் போற்றுவது மட்டுமில்லாமல், அவருடைய பலவீனங்களையும்குறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளது. மேதைகள் என்றாலும், அவர்களும் மனிதர்கள்தானே.
ஆச்சரிய நூல்
நவீன மொழியாகக் கருதப்படும் பிரெஞ்சில், இந்த நூல் மாறுபட்ட வகையில் எழுதப்பட்டுள்ளது. சுருக்கமான அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் லூயி பஸ்தேரின் வாழ்க்கைக் காட்சிகளின் படப்பிடிப்புபோல் அமைந்துள்ளன. அதேநேரம் இந்த நூல் பஸ்தேரை முழுமையாகச் சித்தரிப்பதற்குப் பெரிதும் மெனக்கெட்டுள்ளது. எடுத்துக்காட்டுக்கு, தோல் பதனிடுதல் நடைமுறையில் அடங்கியுள்ள பல்வேறு அம்சங்கள் விலாவாரியாக விவரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், பஸ்தேரின் வாழ்க்கை முழுக்கத் துணையாக இருந்த நுண்ணோக்கிகளின் வரலாறு பற்றியும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இப்படியாக, நூலின் நாயகனைப் பற்றி மட்டுமில்லாமல், துணைக் கதாபாத்திரங்களையும் இந்த நூல் சிறப்புறக் காட்சிப்படுத்தியுள்ளது.
இந்த நூலை எழுதிய எரிக் ஒர்சேனா பொருளாதார நிபுணர், எழுத்தாளர். இந்த நூலைத் தமிழில் மொழிபெயர்த்த வெங்கட சுப்புராய நாயகர் பிரெஞ்சு பேராசிரியர். நேரடியாக அறிவியலுக்குத் தொடர்பில்லாத இவர்கள் இருவருடைய முயற்சியில், ஓர் அறிவியல் அறிஞரின் வாழ்க்கை வரலாற்று நூல் மேம்பட்ட வகையில் உருப்பெற்றுள்ளது. அறிவியல் துறையில் அனுபவமற்றவர்களும், இந்த நூலை எளிதாக வாசிக்க முடியும்.
ஏற்கெனவே மிக்கேயில் ஃபெரியேவின் ‘ஃபுக்குஷிமா: ஒரு பேரழிவின் கதை’ என்ற குறிப்பிடத்தக்கச் சுற்றுச்சூழல் நூலை பிரெஞ்சிலிருந்து நாயகர் மொழிபெயர்த்தி ருந்தார். தற்போது முக்கியத்துவம் வாய்ந்த இந்த நூலை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்ச் சூழலில் இலக்கிய மொழிபெயர்ப்புகள் சற்று கவனம் பெறுகின்றன. இந்த நூலைப் போன்று காலத்துக்கு அவசியமான சுற்றுச்சூழல், அறிவியல் நூல்கள் பரவலான கவனிப்பைப் பெறுவதில்லை. இலக்கிய நூல்களுக்கு இணையாக, அறிவியல் ஆக்கங்களும் கொண்டாடப்படுவதற்கு இந்த நூல் சாலப் பொருத்தமானது.
கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago