என்னைச் செதுக்கிய மாணவர்கள்: மறதியைத் தோற்கடித்த பெரியசாமி

By ஆயிஷா இரா.நடராசன்

நமது கல்விமுறை நெகிழ்ச்சியில்லாமல் இறுக்கமான தன்மையோடு இருப்பதால், மாற்றங்களைக் கொண்டுவர அது பெருந்தடையாய் உள்ளது.

- இந்தியாவின் தேசிய கல்வித் திட்ட வடிவமைப்பு 2005.

ரயிலில் ஏறியதும் “டிக்கெட்டை வீட்டில் வைத்துவிட்டேனே” என்று பதறுபவர்கள், போலீஸாரிடம் பிடிபட்டபின் “லைசன்ஸ் கொண்டு வரல” என்று கையைப் பிசைபவர்கள். குடையிலிருந்து ஹெல்மட் வரை எதை எதையோ மறப்பவர்கள் இந்த நாட்டில் இல்லையா?

அவர்களைப் போலவே வகுப்பறைகளின் வாசலில் எப்போதுமே ஒரு கூட்டம் இருக்கும். புத்தகம் எடுத்துவரவில்லை. பேனா கொண்டுவரவில்லை. வீட்டுப்பாடம் எழுதி வீட்டிலேயே வைத்துவிட்டார். அடையாள அட்டை இல்லை, எங்கோ வைத்து மறந்துவிட்டேன். பென்சில் இருக்கு. அழிக்கும் ரப்பர் இல்லை. பேனா இருக்கு. அதில் மை போடவில்லை என்று பலவிதமான மறதிகளைப் பேசிக்கொண்டே அந்தக்கூட்டம் நிற்கும்.

மறதி மனிதனோடு உடன் பிறந்தது. ஆனால், குழந்தைகளுக்கு மட்டும் ஏன் தண்டனையும் வசவும் வகுப்பறைக்கு வெளியே நிற்கவைக்கும் அவமதிப்பும்? இதற்கு மாற்று இருக்கிறது என்று எனக்குப் புரியவைத்த மாணவர்தான் பெரியசாமி.

எனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியர் கறார் பேர்வழி. தனது வகுப்பில் பாடப் புத்தகம் கொண்டுவராதவர்களை வெளியே நிற்கவைத்து விடுவார். ஆனால், முதல் வரிசை மாணவர்களில் ஒருவரின் புத்தகத்தை (இரவல்) வாங்கி புத்தகத்தைத் திறந்தபடியே ‘‘போன வகுப்பில் எங்கே… விட்டோம்’’ என மாணவர்களேயே கேட்பார். அவர் ஏன் தன் புத்தகத்தை கொண்டுவரவில்லை என்று மாணவர்கள் கேட்பது கிடையாது. நமது கல்வி முறையில் அவருக்கு ‘இம்சை அரசன்’ காலத்து அதிகாரம் உள்ளது.

இந்த மாதிரியான கல்விமுறையை ‘வங்கி’ முறைக் கல்வி என்று பிரேசில் நாட்டில் பிறந்த மாற்றுக் கல்விச் சிந்தனையாளர் பாவ்லோ பிரையரே வர்ணித்தார். இந்தக் கல்வியில் ஆசிரியர், மாணவர், பாடப்பொருள் எனும் மூன்று பகுதிகள் உள்ளன. ஆசிரியர் அனைத்து அதிகாரமும் பெற்றவர். மாணவர் அடிபணிந்து போகவேண்டியவர். மாணவரின் தலையைத் திறந்து பாடப்பொருளை வங்கியில் பணம்போடுவதுபோல் நிரப்புவதே கல்வியாக இருக்கிறது. இதில் பேனா, புத்தகம், நோட்டு என்பதெல்லாம், வங்கிக்கு ‘உங்கள் பாஸ்புக்கை’ எடுத்துச்செல்லவேண்டும் என்பதுபோல முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தக் கணினி காலத்திலும் அதில் எதுவும் மாறவில்லை.

வன்முறையின் காரணி

பெரும்பாலும் ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிக்க இந்த சின்ன சின்ன மறதிகளே காரணங்களாக சொல்லப்படுகிறது. படிப்பதில் உள்ள ஈடுபாடு, தேர்வு மதிப்பெண்கள் உள்ளிட்ட கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காகத் தண்டனை அளிப்பதைவிட பள்ளிக்கு ஏதாவது ஒன்றை எடுத்துவர மறந்ததுக்காக தண்டனைகள் அளிக்கப்படுவதே அதிகம் என்பார் ரஷ்ய கல்வியாளர் ஜேம்ஸ் பாஸ்டர் னாக்.

மிக அதிகமான மாணவர்கள் பள்ளிக்கு எடுத்து வராமல் மறப்பது பேனாவையோ அல்லது பென்சிலையோதான். சிலர் எளிதில் தொலைத்துவிடுவதும் அதைத்தான். இன்று பள்ளி அமைப்புக்கு வெளியே அதிகம் பயன்படாத ஒன்றாக பேனா மாறிவிட்டது. மின்னஞ்சலும் குறுஞ்செய்தியுமாக எல்லாம் இணைய மயமாய் ஆகியும் பள்ளிக்கல்வி இறுகிப்போய் பிடிவாதமாக இருக்கிறது.

விநோதமான பட்டப் பெயர்

நான் முன்பு பணிசெய்த அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் இருந்தார் பெரியசாமி. பேனா பெரியசாமி என்றால்தான் தெரியும். இப்படி ஒரு பட்டப் பெயர் அவருக்கு எப்படி வந்தது என ஆச்சரியப்பட்டேன். பேனா பெரியசாமி என்பது பட்டப் பெயர் அல்ல. காரணப்பெயர்தான் என்று தெரியவந்ததும் திகைத்துப் போனேன்.

ஒரு நாள் வகுப்பறையில் நுழையும்போது பேனா பெரியசாமி தனது வகுப்பு சகாக்களில் பலருக்கும் பேனா சப்ளை செய்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். பெரியசாமிக்கு பேனா சேர்ப்பது ஒரு ஹாபியாம். விதவிதமாக சேர்த்து வைத்திருந்தார். அதற்காகவே இரண்டு டப்பாக்கள் வகுப்பில் இருந்தன. யார் பேனா கொண்டுவரவில்லை என்றாலும் உடனே இரவல் தருவார்.

ஆனால், பள்ளி முடிந்ததும் அவற்றைத் திரும்பப் பெறுவதிலும் கறார் பேர்வழி. சில சமயம் மற்ற வகுப்புகளிலிருந்து வந்து அவரிடம் பேனா வாங்குபவர்களும் உண்டு. பழைய பேனாக்கள்தான். சிலவற்றில் வேறு வண்ணங்களில் மூடிகளும் இருக்கும். சில ஒழுகுவதும் உண்டு. ஆனால், வகுப்பில் அது இல்லை என்றால் வாங்கும் தண்டனையைவிட, இது உடனடி நிவாரணம் அல்லவா? பெரியசாமி இருக்கும் வகுப்பறை அமைதியாக நடப்பதை உணர்ந்தேன்.

நம் நாட்டின் கல்வி முறைமையை வடிவமைக்கும் ‘கல்வித் திட்ட வடிவமைப்பு 2005’ ‘மாணவர்களின் பள்ளி அனுபவங்களால் உணரப்பட்டு உள்வாங்கி கல்வி கட்டமைக்கப்படுகிறது’ எனக் கூறுகிறது. ‘பள்ளியில் நடக்கும் அனைத்துமே கல்விதான். பாடப் புத்தகத்தைக் கடந்து வெளிப்பட்டு தோன்றும் அறிவின் அனைத்து அம்சங்களுமே போற்றிப் பாதுகாக்கப்படவேண்டும்’ என நம்மை அது தூண்டுகிறது.

ஒரு பேனா கொண்டுவரவில்லை என்பதற்காக அந்தப் பாடவேளை முழுவதையும் ஒரு மாணவரை நிற்கவைத்து அவருக்கு பாடம் புகட்ட கூச்சலிட வேண்டுமா? அதைவிட அந்த ஆசிரியரே ஒரு ‘பேனா’ பெரியசாமி ஆகி, ஒன்றிரண்டு பேனாக்களை (இப்போதெல்லாம் இரண்டு ரூபாய்க்கும் கிடைக்கிறது) கூடுதலாய் வைத்திருந்து பேனா எடுத்து வராதவர்களுக்கு கொடுக்கலாமே? பிரச்சினையில்லாமல் கற்றல் தடைபடாமல் தொடரலாமே? எனும் புதிய சிந்தனையை அவர் எனக்கு போதனை செய்துவிட்டார்.

கடைசியாக அவரை நான் பார்த்தபோது ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணம் பெறும் கவுண்டரில் காசாளராக இருந்தார். ‘‘சலான் நிரப்பிட்டீங்களா … பேனா இருக்கா” என்று ஒரு முகவரிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்