இந்தியாவுக்காகக் காத்திருக்கும் வரலாறு

By த.நீதிராஜன்

உலக எழுத்தறிவு நாள்: செப் 8

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு. - திருவள்ளுவர்

மனிதரின் மொழியைப் போன்ற ஒன்று தேவையேபடாத உயிரினங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்ளத்தான் செய்கின்றன. அவையும் தமது அனுபவத்தைத் தங்களின் வாரிசுகளுக்குக் கடத்தவே செய்கின்றன. ஆனாலும், மொழியின் வழியாகப் படித்தும் எழுதியும் மனிதன் தனது சிந்தனையையும் அறிவையும் கடத்துவதற்கு இணையாக அவை இல்லை.

நவீன மனிதர்கள் சுமார் 2 லட்சம் வருடங்களாகத்தான் வாழ்ந்துவருகிறார்கள். ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்னால் மொழியின் விதை மனித மூளையில் தோன்றியிருக்கலாம் என்கிறார் உலகப்புகழ்பெற்ற மொழியியலாளர் நோம் சாம்ஸ்கி.

எழுத்தறிவுப் பிரகடனம்

உடலின் மிக முக்கியமான உறுப்பு கண். அதற்குச் சமமானதாக எழுத்தையும் எண்ணையும் திருவள்ளுவர் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே சொல்கிறார் என்றால் மனிதரின் ஆளுமை வளர்ச்சியில் மொழியின் பங்குதான் எத்தனை மகத்தானது! வள்ளுவர் சொன்னதுபோல எண்ணும் எழுத்தும் பின்னிப் பிணைந்துள்ள இன்றைய நவீன மொழியை மனிதர்கள் அதிகபட்சம் 10 ஆயிரம் ஆண்டுகளாகத்தான் பேசிப் பழகி வளர்த்துவருகிறார்கள். ஆயிரக்கணக்கான மொழிகளின் வழியாக மனித இனத்தில் மிகப் பரந்த அளவில் எழுத்தறிவு பரவிக்கொண்டிருக்கிற ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.

மனித இனம் முழுமையான முறையில் எழுத்தறிவு பெற்றுவிட்டது என்பது எவ்வளவு உணர்ச்சிபூர்வமான அறிவிப்பு! அத்தகைய ஒரு வரலாற்று முக்கியத்துவம் உள்ள பிரகடனத்தைக் கேட்கும் வாய்ப்பு ஒரு வேளை இந்தத் தலைமுறைக்குக் கிடைக்கலாம். அதற்கு இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகள் ஆகலாம். அதற்கான எல்லாச் சாத்தியக்கூறுகளும் உள்ளன.

எழுத்தறிவின் ஏற்ற இறக்கம்

மனிதருக்குப் பெரும் ஆற்றலைப் பரம்பரையாக வழங்கிக் கொண்டிருக்கும் மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியை எழுதவோ படிக்கவோ தெரியாமல் இன்னமும் உலகில் சுமார் 77 கோடிப் பேர் உள்ளனர். உலகில் உள்ள இளைஞர்களில் ஐந்தில் ஒருவர் எழுதப் படிக்கத் தெரியாதவர். அவர்களில் மூன்றில் இருவர் பெண்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமாகச் செயல்படுவது யுனெஸ்கோ நிறுவனம். கல்விக்கு முக்கியத்துவம் அளித்து அது செயல்படுகிறது. 2013-ல் அது எடுத்துள்ள கணக்கெடுப்பின்படி உலக அளவில் உள்ள வயதுவந்தோரில் எழுத்தறிவு பெற்றோர் 84.1 சதவீதம் உள்ளனர் இதில் ஆண்கள் 88.6 சதவீதம். பெண்கள் ஆண்களைவிட குறைவாக 79.9 சதவீதம் என்ற அளவில் உள்ளனர்.

உலக அளவில்இன்னமும் எழுதப் படிக்கத் தெரியாமல் இருக்கிற வயது வந்தோர்களில் பெண்களின் சதவீதம் 63.8 சதவீதம். அதாவது பெண்கள்தான் இதில் பெரும்பான்மையினர்.

உலகில் தென்னாசியாவிலும் மேற்கு ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பொதுவாக அதிகமானோர் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக உள்ளனர். வறுமையும் பெண்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியும் பொதுவாக எழுத்தறிவு இல்லாமலிருப்பதான முக்கியமான காரணங்கள் என்கிறது யுனெஸ்கோ.

ஆசியா கண்டத்தின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் உள்ள நாடுகளில் உலகில் உள்ள மொத்த எழுத்தறிவு இல்லாத மனிதர்களின் எண்ணிக்கையில் 53 சதவீதமானோர் வாழ்கின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில் இத்தகையோர் 24 சதவீதம் பேர் உள்ளனர். கிழக்கு ஆசியாவின் பகுதிகளிலும் பசிபிக் பிரதேச நாடுகளிலும் 12 சதவீதம் பேரும் அரபு நாடுகளில் 6.2 சதவீதத்தினரும் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் பகுதி நாடுகளில் 4.6 சதவீதத்தினரும் உள்ளனர். மிச்சமுள்ள சுமார் 2 சதவீதம் பேர் உலகின் பல பகுதிகளில் பரவிக்கிடக்கிறார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய உலகின் பகுதிகளில் உள்ள நாடுகளில் நாட்டின் மக்கள் தொகையில் எழுத்தறிவு 50 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பவை என்று சில நாடுகள் அறியப்பட்டுள்ளன. அவை பெனின், பர்கினா பஸோ, சாத், எத்தியோப்பியா,கினியா, ஹைதி, லைபீரியா, மாலி, நைஜீர், செனகல், சையீரா லியோன், எனும் குட்டி நாடுகளாகும்.

சமீப எழுச்சி

1990 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் தெற்கு மற்றும் மேற்கு ஆசியாவில் எழுத்தறிவு பரவுவதில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரபு நாடுகளிலும் 55 சதவீதமாக இருந்த எழுத்தறிவு 77 சதவீதம்வரை உயர்ந்துள்ளது.

இந்தியாவுக்குள்ளே எழுத்தறிவு பரவிவரும் விதத்தைப் பார்ப்போம். இந்திய மாநிலங்களில் கேரளா சாதனையாளராக முதலிடத்தில் உள்ளது. அங்கே 93 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றுவிட்டனர். தமிழகம் 14 வது இடத்திலும் புதுச்சேரி 7வது இடத்திலும் இடம் பெற்றுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் வேகமான முன்னேற்றம் கண்டு யுனெஸ்கோவிடம் விருது வாங்கியிருந்தாலும் பிஹார் இந்திய மாநிலங்களில் கடைசியில் இருக்கிறது. 63 சதவீதம் பேர்தான் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.

சுதந்திரம் அடைந்த பிறகு நமது நாட்டில் எழுத்தறிவு ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த சில பத்தாண்டுகளாகப் பல விதமான சாதனைகள் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் அதிகம் மக்கள் தொகை உள்ள பெரிய நாடு என்பதால் எண்ணிக்கை அடிப்படையில் உலகில் எழுத்தறிவு இல்லாதவர்கள் அதிகம் வாழும் நாடாக நாமே இருப்போம்.

தற்போதைய வேகத்தில் நாம் எழுத்தறிவைப் பரப்பினால் முழுமையான எழுத்தறிவு பெற்ற நாடாக மாறுவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டி வரலாம்.

நமக்காக..

பொதுவாக உலகம் முழுவதும் எழுத்தறிவு வேகமாகப் பரவி வருகிறது. இதனை வேகப்படுத்தும் வகையில் 1966-ம் வருடம் முதல் சர்வதேச எழுத்தறிவு நாளை ஒவ்வொரு செப்டம்பர் 8-ந்தேதியன்றும் யுனெஸ்கோ நிறுவனம் கடைப்பிடித்துவருகிறது.

அதனால் 2015 ம் ஆண்டுக்குள் உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக மாறிவிட வேண்டும் என்னும் இலக்கை யுனெஸ்கோ நிறுவனம் முன்னதாக உலக நாடுகளுக்கு அளித்திருந்தது. இந்த இலக்கு நிறைவேற வில்லை. நிறைவேறியிருந்தால் இந்த ஆண்டிலேயே உலக அளவிலான பிரகடனம் இன்று அறிவிக்கப்பட்டிருக்கும்.

நமக்காக வரலாறு காத்திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்