தமிழகத்தில் மனித உரிமைக்காவும் சுற்றுச்சூழலுக்காகவும் ஓங்கிக் குரல் கொடுத்த முன்னோடிகளில் ஒருவரை ஆகஸ்ட் 20 அன்று இழந்துவிட்டோம். பால் பாஸ்கர் என்ற அந்த ஆளுமை, பல பசுமை ஆளுமைகளுக்கு ஆணிவேராக இருந்தவர்.
1959-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ம் நாள், இப்போதைய திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முள்ளிப்பாடி என்ற சிறு கிராமத்தில் பிறந்தவர் பால் பாஸ்கர். பள்ளிப் படிப்பைத் திண்டுக்கல்லில் முடிந்து லயோலா கல்லூரியில் பட்டப் படிப்பை முடிந்தார். பின்னர் ஆசிரியப் பணியில் இணைந்தார். இதற்கிடையில் முதுகலை, முனைவர் பட்டம் என்று கல்வியில் தனது தகுதியையும் உயர்த்திக்கொண்டார்.
கல்லூரிக் காலங்களில் 'அய்க்கஃப்' எனப்படும் அனைத்திந்திய கத்தோலிக்க பல்கலைக்கழகக் கூட்டமைப்பில் இளம் மாணவராக இணைந்து பணியாற்றினார். 'பி.யு.சி.எல்.' எனப்படும் மக்கள் குடியுரிமைக் கழகத்தில் இணைந்து மனித உரிமைப் பணிகள் சார்ந்து பணியாற்றினார். குறிப்பாக 'சோக்கோ' பாட்சா, ஹென்றி டிபேன் போன்ற ஆளுமைகளுடன் இணைந்து தொடக்க காலப் பணிகளில் முன்னோடியாகச் செயல்பட்டார்.
குழந்தைகள், சுற்றுச்சூழல் அக்கறை
மனித உரிமைகளில் ஒன்றான குழந்தைகள் உரிமை என்ற துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். ஆசிரியர் என்பதால் குழந்தைகள் மீது அவருக்குக் கூடுதல் அக்கறை இருந்தது. இதற்கென்று 1984-ம் ஆண்டு ஓர் அறக்கட்டளையைத் தொடங்கினார். 'அமைதி அறக்கட்டளை' என்ற அந்த அமைப்பு, குழந்தைத் தொழிலாளர் குறித்துத் தமிழகத்தில் முதன்முதலில் பேசிய அமைப்புகளில் ஒன்று.
சிவகாசிப் பகுதிகளில் அப்போது குழந்தைத் தொழிலாளர் முறை அதிகமாக இருந்தது. அதற்கு எதிராகப் போராடிய யு.ஜி. நாராயணசாமி என்ற கம்யூனிசத் தலைவரும், வித்யாசகர் என்ற ஆராய்ச்சி அறிஞரும் இந்தக் கொடுமையை பத்திரிகை மூலமாக உலகுக்கு வெளிக்கொண்டு வந்தார்கள். இவர்களுடைய நட்பு பால் பாஸ்கரையும் குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றும் போராட்டத்திற்கு உந்தித் தள்ளியது.
'அமைதி அறக்கட்டளை' திண்டுக்கல் பகுதியில் தனது பணியைத் தொடங்கினாலும் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாது இந்திய அளவிலும், ஐ.நா. மன்ற அளவிலும் இதற்காக அரும்பாடுபட்டுள்ளது. நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்தியார்த்தி இவரது நண்பர், அவரை அழைத்துவந்து தமிழகம் முழுவதும் நடைப்பயணங்களை நடத்தினார். பல தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, இதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பை உருவாக்கிய நெடுஞ்செழியனின் தொடர்பு 1990-களில் பால் பாஸ்கருக்கு ஏற்பட்டது. 'அம்னஸ்டி இன்டர்நேசனல்' என்ற மனித உரிமை அமைப்பின் தலைவராக இருந்த நெடுஞ்செழியனுக்கும் இவருக்குமான நட்பு வலுப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் மனித உரிமை என்ற தளத்தில் இருந்து நெடுஞ்செழியன் சுற்றுச்சூழல் தளத்திற்கு வந்தார். அப்படியாகப் பால்பாஸ்கரும் சுற்றுச்சூழல் களச் செயல்பாடுகளுக்கு வந்தார். 1992-ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் - மேம்பாடு பற்றிய ஐ.நா. ஏற்பாடு செய்த 'உலகப் புவி உச்சி மாநாடு' பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோவில் நடைபெற்றது. இன்றைய பெரும்பாலான சூழலியல் செயல்பாடுகளுக்கான அடித்தளம் அதுவே. அதில் கலந்துகொண்ட உலகளாவிய செயல்பாட்டாளர்களில் ஒருவர் பால்பாஸ்கர்.
பின்னர் சுற்றுச்சூழல் துறைக்கென்றே தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். மாசுபாடு நெருக்கடிகளைக் கண்டறிவது, அதை ஆவணப்படுத்துவது, அதை அறிக்கையாக மாற்றி செய்தி நிறுவனங்களுக்கு அனுப்புவது, முடிந்தவரை வழக்குகளைத் தொடுத்து தீர்ப்பு வாங்க முயல்வது என்று அறிவியல்பூர்வமாக செயல்பட்டார். அதற்குரிய வல்லுநர்களை மிகத் திறம்பட வேலை வாங்குவார். அவருடன் பணியாற்றியபோது, இதை நான் நேரடியாகக் கண்டுள்ளேன்.
அதேவேளை உடன் பணியாற்றுபவர்களை மிகச் சுதந்திரமாக பணியாற்ற விடுவார். பணிகளில் அவசியமில்லாமல் தலையிடவே மாட்டார். உச்ச நீதிமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்புகளை வழங்கிவந்த 'பசுமை நீதியரசர்' என்ற பெயர் பெற்ற பி.என். பகவதி பெயரில், 'பகவதி சுற்றுச்சூழல் அறக்கட்டளை'யை உருவாக்கிச் செயல்படுத்தினார். அப்போது பசுமை வழக்காடல்களில் புகழ்பெற்ற உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எம்.சி. மேத்தாவை அழைத்துவந்து, திருச்சியில் ஒரு கருத்தரங்கை ஏற்பாடுசெய்தார். அதன்மூலம் தமிழகத்தில் பசுமை வழக்கறிஞர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது பால் பாஸ்கரின் விருப்பம். அது நடைபெறாமல் போய்விட்டது.
ஆக்கபூர்வச் செயல்பாடு
சுந்தர்லால் பகுகுணாவை வைத்து சர்வோதய இயக்கத்துடன் இணைந்து ஒரு மாநாட்டை சென்னையில் நடத்தினார். திண்டுக்கல் வாணியம்பாடி தோல் ஆலை மாசுபாடு, நொய்யல் ஆற்று மாசுபாடு, இறால் பண்ணை எதிர்ப்பு, தூத்துக்குடி பவளத்திட்டு பாதுகாப்பு, அலையாத்திக் காடுகள் பாதுகாப்பு, கடலூர் சிப்காட் மாசுபாடு, கொல்லிமலை சுரங்கத் தொழில் ஆபத்து, கூடங்குளம் அணுவுலை போராட்டப் பங்கேற்பு என்று தமிழகத்தின் ஒவ்வொரு சூழலியல் செயல்பாட்டிலும் அவருடைய பங்களிப்பு இருக்கும்.
வெறும் குறை கூறுவதும், எதிர்ப்பதும் மட்டுமல்ல அவரது பணி, சூழலை மேம்படுத்துவதிலும் அவரது பணி மகத்தானது. வேடச்சந்தூர் பகுதியில் நீர் மேலாண்மைக்காக மிகப் பெரிய திட்டம் ஒன்றை அரசு, செர்மானிய நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்தினார். அதற்காகக் கென்னடி என்ற சூழலியல் அறிவியல் கற்ற வல்லுநரை அமர்த்தி, அந்தப் பணியை மேற்கொண்டார். அதன்மூலம் அப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்ததுடன், இயற்கை வேளாண்மையும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சூழலியல் பிரச்சினைகள் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாகப் பயணித்துள்ளார் என்று சொல்வதைவிட, பலரும் சேர்ந்து பயணித்துள்ளோம் என்றே சொல்ல வேண்டும். இப்போது மிகச் சிறந்த சூழலியல் ஆளுமையாகத் திகழும் மருத்துவர் ஜீவானந்தம் உட்பட அனைவரும் அவருடைய நெருக்கமான நண்பர்கள்.
எழுத்தும் புத்தகங்களும்
'புதிய கல்வி' என்ற தமிழகத்தின் முதல் சூழலியல் இதழ் பால் பாஸ்கரால் தொடங்கப்பட்டது. முதலில் கல்வி இதழாக இருந்து, பின்னர் சூழலியல் இதழாக இருந்தது. அதில் நான் பொறுப்பாசிரியாக இருந்தேன். தலையங்கம் மட்டும் அவர் எழுதிவந்தார். பின்னர் எனது எழுத்தின் சாரத்தைப் புரிந்துகொண்டு என்னையே எழுதச் சொல்லிவிட்டார்.
பால் பாஸ்கர் சிறந்த நூலாசியரியரும்கூட. அவரது 'புகழ்மிக்க விசாரணைகள்' என்ற நூல் முக்கியமானது. அப்போது சூழலியல் பற்றிய நூல்களை யாரும் வெளியிடுவது வழக்கமாக இல்லை. 'பூவுலகின் நண்பர்கள்' மட்டுமே சூழலியல் நூல்களைப் பொதுவெளியில் வெளியிட்டு வந்தோம். அந்தக் குறையைப் போக்க பால் பாஸ்கரே ஒரு நூல் வெளியீட்டு நிறுவனத்தை உருவாக்கினார். அதிலிருந்து பல சூழலியல் நூல்கள் வெளியாகின.
மிகச் சிறந்த நூல்நிலையம் ஒன்றை அவர் உருவாக்கினார். தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலுக்கு என்று யாரும், எது பற்றிக் கேட்டாலும் நாம் செய்தி கொடுக்க வேண்டும் என்பார். தில்லியில் உள்ள 'டவுன் டூ எர்த்' என்ற அமைப்புபோல் செயல்பட வேண்டும் என்பார். 'அமைதி அறக்கட்டளை'யில் இதற்கென்று பெரிய கட்டிடம் ஒன்றைக் கட்டி, தனிப் பணியாளர் ஒருவரோடு நூலகத்தை நிறுவினார். தமிழ்நாட்டில் எங்கும் கிடைக்காத சூழலியல் பற்றிய ஆவணங்கள், அந்த நேரத்தில் அங்கு கிடைத்தன.
ஆராய்ச்சி மாணவர்கள் பலர் வந்து குறிப்பு எடுத்துச்செல்வார்கள். நான் ஏதாவது ஒரு நூல் வேண்டும் என்று கேட்டால், அது எங்கிருந்தாலும் வரவழைத்துத் தந்துவிடுவார். அது மட்டுமல்ல, அவர் சென்று வந்த உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணங்களின்போது நான் கூறிய நூல்களை வாங்க வேண்டுமென்று மெனக்கிட்டு அலைந்து திரிந்து வாங்கி வந்ததும் உண்டு. பெரும்பாலும் அவர் பயணம் முடிந்து வரும்போது, புத்தகச் சுமையோடுதான் வருவார். புத்தகங்கள் மீது அவருக்கு அவ்வளவு காதல்.
புதுமை முயற்சிகள்
சூழலியல் விழிப்புணர்வுக்கு என்று பாடல் ஒலிநாடா ஒன்றை க.ப.அறவாணனை வைத்து வெளியிட்டார். அதில் பெரும்பாலான பாடல்களை நான் எழுதியிருந்தேன். 'நீங்கள் பாடலும் எழுதுவீர்களா?' என்ற நகைச்சுவையாக அப்போது அவர் என்னிடம் கேட்டது, இன்னும் மனதில் நிழலாடுகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று பசுமை வானொலி, பசுமை இணையத் தொலைக்காட்சி என்று விரிவடைந்துள்ளது. பணிகளுக்காகச் செலவிடுவதற்கு அஞ்சவே மாட்டார். கடன் வாங்கியாவது, குறிப்பிட்ட வேலையை முடித்துவிடுவார்.
அவரது உழைப்பு வியப்புத் தரும். காரில் எப்போதும் ஒரு கணிணியும் பிரிண்டரும் இருக்கும். அந்த இரண்டையும் வைத்துக்கொண்டு ஒரு சிறப்பான அலுவலகத்தை நடத்திவிடுவார். பல நாள்களில் சென்னை தியாகராய நகரில் செயல்பட்டுவந்த அவருடைய அறையில், இரவு ஒரு மணிக்கெல்லாம் வேலை முடித்து, அப்படியே தரையிலேயே படுத்துக்கிடப்போம். கைலி அணிந்துகொண்டு அவரும் எங்களுடன் படுத்துவிடுவார்.
காலை எங்களுக்கு முன்பே எழுந்து ஐந்தாறு செய்தித்தாள்களோடு அறைக்கு வருவார். நாங்கள் அனைவரும், செய்தித்தாளில் எங்கெல்லாம் சூழலியல் செய்திகள் வந்துள்ளனவோ, அவற்றைக் கோடிட்டு வெட்டியெடுத்துக் கோப்பில் போட வேண்டும். இணைய வசதி இல்லாத அந்த நாள்களில் உருவான அந்தப் பசுமைக் கோப்புகள் தமிழகத்தின் பசுமை வரலாற்றைப் பறைசாற்றும். விரித்தால் அதுவே ஒரு நூலாகவும் மாறிவிடும்.
கடைசிவரை குழந்தைகளுக்காவும் சுற்றுச்சூழலுக்காகவும் பாடுபட்ட அந்த மாமனிதரின் மறைவு தமிழகத்துக்குப் பேரிழப்பு, அவரின் வாழ்வு நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டி நூலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
- பாமயன், கட்டுரையாளர் தொடர்புக்கு: pamayanmadal@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago