கரோனா வைரஸும் சுற்றுச்சூழலும்: இன்னொரு கொள்ளைநோய் உருவாகாமல் தடுப்பது எப்படி?

By செய்திப்பிரிவு

நாராயணி சுப்ரமணியன்

‘இயற்கைக்கு எதிராக நாம் போர்த்தொடுப்பது என்பது, நமக்கு எதிராக நாமே செயல்படுவதைப் போன்றது'

- ரேச்சல் கார்சன்

சமகால மனித வரலாற்றின் முக்கியமான ஒரு தருணத்தில் நின்றுகொண்டிருக்கிறோம். கோவிட்-19 பாதிப்பால் உலகம் உறைந்துபோய்க் கிடக்கிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்பு, நோய்நிலை, பொருளாதார பாதிப்பு, நீண்டகாலப் பின்விளைவுகள் ஆகிய அனைத்தும் வருங்காலத்தை மாற்றியமைக்கக் கூடியவை.

நோய்த்தொற்று உலக அளவில் பரவாமல் இருக்கவும் கொள்ளைநோய் ஏற்பட்டால் தயார் நிலையில் இருக்கவும் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. மருத்துவ ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகமான நிதி ஒதுக்கீடு செய்வது, மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை உலகெங்கிலும் மேம்படுத்துவது ஆகியவை உடனடி கவனம்கோருபவை. இவை எல்லாவற்றையும்விட முக்கியமாக, அடுத்த கொள்ளைநோய் வராமலேயே தடுப்பது சாத்தியமா?

'கோவிட்-19 என்பது திடீரென்று எதிர்பாராமல் ஏற்பட்ட ஒரு வைரஸ் நோய்த்தொற்று' என்றொரு பிம்பம் நிலவுகிறது. ஆனால், பல ஆண்டுகளாக அறிவியலாளர்கள் இதுபோன்றதொரு கொள்ளைநோய் வரலாம் என்று ஏற்கெனவே எச்சரித்து வந்திருக்கிறார்கள். நம்மைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து கணித்ததன் மூலம் அவர்கள் முன்வைத்த கணிப்பு இது.

ஹெச்.ஐ.வி., லாசா, சார்ஸ், மெர்ஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், ஹென்ட்ரா, நிபா, மேற்கு நைல், ஹண்டா, கோவிட்-19 என்று சமீப காலத்தில் மனிதர்களிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்திய பல நோய்கள் விலங்கின நோய் (Zoonotic diseases) வகையைச் சேர்ந்தவை. விலங்கின நோய்க்கு ஆளாகி முதன்முதலில் நோய்த்தொற்றைக் கண்டவர் முதல் நோயாளி (Patient Zero) எனப்படுகிறார். ஒரு கொள்ளைநோய் ஏற்பட்டவுடன், அந்த முதல் நோயாளியைத் தேடிக் கண்டுபிடிப்பதன்மூலம், நோய் எங்கிருந்து பரவத் தொடங்கியது என்பதைக் கண்டறியலாம்.

மனிதர்களுக்குப் புதிதாகவரும் நோய் த்தொற்றுகளில் 60 சதவீதம் விலங்கின நோய்கள்தாம் என்கின்றன மருத்துவ ஆய்வுகள். இன்னும் வெளியே பரவத் தொடங்காமல், பாலூட்டிகளுக்குள் மட்டும் பல்லாயிரம் நோய்தொற்றுக் கிருமிகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன எனவும், அவற்றுள் 10,000 கிருமிகள் விலங்கின நோயாக மனிதர்களிடையே பரவலாம் என்றும் எச்சரிக்கிறார் இது தொடர்பாக ஆராய்ந்துவரும் காலின் கார்ல்சன்.

சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கும் இந்தப் கொள்ளை நோய்களின் பரவலுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகள் துலக்கமானவை. அவற்றைப் புரிந்துகொண்டால் நோய்தொற்றைத் தடுக்க முடியும். இவ்வளவு காலம் அந்தத் தொடர்புகளை அறிந்திருந்தும்கூட மனித சமூகம் அவற்றைத் தடுக்காமல் இருந்ததே, தற்போதைய மோசமான நிலைக்கு அடிப்படைக் காரணம். அந்தக் காரணங் களில் முக்கியமானவற்றை மட்டும் சற்றே விரிவாகப் பார்ப்போம்.

விலங்கு இறைச்சிச் சந்தை

தற்போது பரவிவரும் நாவல் கரோனா வைரஸ் உட்பட பல்வேறு கொள்ளைநோய்கள் விலங்கு இறைச்சிச் சந்தைகளிலிருந்து பரவத் தொடங்கி யவையே. அதிலும் குறிப்பாக, இறைச்சிக்காகக் காட்டுயிர்களைப் பிடித்து, சிறு கூண்டுகளில் அடைத்து விற்கும் சந்தைகளே இதுபோன்ற நோய்த் தொற்றுக்களின் ஊற்றுக்கண்ணாக மாறியுள்ளன.

இந்தச் சந்தைகளில் வெவ்வேறு காட்டு யிர்கள், வளர்ப்பு உயிரினங்களுடன் அடுத்த டுத்து அடைத்துவைக்கப்படுகின்றன. புது இடம், மனிதர்களால் கையாளப்படுவது, கூண்டில் அடைக்கப் படுவது போன்ற எல்லாமே காட்டுயிர்களுக்கு அச்சத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். அப்போது அவை மலம், சிறுநீர் கழிக்கக்கூடும். அத்துடன் அவற்றின் எச்சில், சளி போன்றவை மற்ற உயிரினங்களின் மீது எளிதில் படக்கூடும். அவற்றின் உடலில் இயற்கையாக இருக்கும் வைரஸ் வகைகள், பெரும்பாலும் அவற்றுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

அதேநேரம் மேற்கண்ட சூழ்நிலையின்போது ஒரு காட்டுயிரின் உடலில் இருக்கும் வைரஸ் நோய்த்தொற்று திடீர் மாற்றத்துக்கு ஆளாகி, மற்ற வளர்ப்பு உயிரினங்களுக்குப் பரவுவதற்கான சாத்தியம் அதிகரிக்கிறது. இதன்மூலம் மனிதர்களையும் அந்த வைரஸ் நோய்த்தொற்றுகள் வந்தடைகின்றன. இது சிதறுப்பரவல் (Spillover effect) எனப்படுகிறது.

நாவல் கரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு, இதுபோன்ற விலங்கு இறைச்சிச் சந்தைகள் மீது உலகளாவிய தடை விதிப்பது குறித்து விவாதங்கள் எழுந்தன. தடை விதிக்கப்பட்ட இடங்களிலும், கள்ள இறைச்சிச் சந்தைகள் செயல்பட்டுக்கொண்டுதான் உள்ளன. மற்றொருபுறம் சட்டத்துக்கு உட்பட்டே பல காட்டுயிர்கள் மேற்கத்திய நாடுகளில் வளர்ப்பு உயிரினங்களாக வளர்க்கப்படுகின்றன. ஆனால் அவற்றின் ஏற்றுமதி/இறக்குமதியின்போது சம்பந்தப் பட்ட காட்டுயிர்களுக்கு நோய்த்தொற்று இருக்கிறதா என்பது முறையாகப் பரிசோதிக்கப்படுவதில்லை.

காட்டுயிர்களின் வாழிடம் காடு. எனவே, அவற்றைக் காட்டுக்குள்ளேயே வாழவிடுவதுதான் சரியானது. காட்டுயிர்களின் சட்டவிரோதமான விற்பனை/கடத்தல், அனுமதிக்கப்பட்ட விலங்கு இறைச்சிச் சந்தைகளில் பின்பற்றப்படும் நெறிமுறைகள், விலங்கு இறைச்சிச் சந்தைகள் பராமரிக்கப்படும் விதம், இதுபோன்ற விலங்கு இறைச்சிச் சந்தைகள் உருவாகக் காரணமாகவுள்ள சமூகப் பொருளாதாரக் காரணிகள் ஆகிய எல்லாவற்றையும் தீவிர விவாதத்துக்கும் உரிய விதிமுறைகளுக்குக்கும் உட்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இவற்றைத் தவறவிட்டால், மேலும் பல வைரஸ்கள் வெளியில் வரலாம்.

காடழிப்பு

மனிதர்கள் நிலத்தைப் பயன்படுத்தும் விதம் மாறிக்கொண்டே இருக்கிறது. வேளாண்மை, குடியிருப்புகள், வணிகத் தேவைகள் எனப் பல்வேறு காரணங்களுக்காகக் காடுகள் அழிக்கப்படுகின்றன. மரங்கள் வெட்டப்படுகின்றன, கனிம வளங்களை வெட்டியெடுப்பதற்காகக் காடுகள் துவம்சம் செய்யப்படுகின்றன. இவற்றால் காட்டுயிர்களின் வாழிடம் பெருமளவு அழிக்கப்படுகிறது. வாழிடத்தை இழந்த காட்டுயிர்கள் உணவு, புகலிடம் தேடி வருவதால் மனிதர்களுக்கும் காட்டுயிர்களுக்கும் இடையிலான இடைவெளி குறைகிறது. சிதறிப்பரவும் தொற்றுக்களால் கிருமிகள், மனிதர்கள் மீது தொற்றவும் இது ஒரு காரணமாக அமைகிறது.

1990-களில் மலேசியாவில் பெருமளவு்க் காடுகள் அழிக்கப்பட்டதால் பன்றிப் பண்ணைகளுக்கு அருகில் காட்டு வௌவால்கள் வரத்தொடங்கின. வௌவால்களுடைய எச்சத்தின்மூலம், பன்றிகளுக்குப் பரவிய நிபா வைரஸ் பிறகு மனிதர் களுக்கும் தொற்றியது. எபோலா, லாஸா போன்ற வைரஸ் பரவல்களுக்கும் காடழிப்பே முதன்மைக் காரணம்.

வாழிடம் அழிவதால் காட்டுயிர்களுக்கு உணவு, தண்ணீர், தங்குமிடம் உள்ளிட்டவை குறைந்து, மன அழுத்தம் அதிகரிக்கிறது. அதனால் கிருமிகள் பரவுகின்றன. அது மட்டுமல்லாமல் வாழிடம் அழிக்கப்படுவதால் பெருவிலங்குகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டேவருகிறது. எளிதில் இனப்பெருக்கம் செய்து வாழக்கூடிய, அதிகக் கிருமிகளைக் கொண்ட சிறு பாலூட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அவை மனிதர்கள் வாழும் பகுதிகளிலும் வாழும் திறன் கொண்டவை, அல்லது வந்து செல்லக்கூடியவை என்பதால் மனிதர்களுக்கு நோய் எளிதில் தொற்றுவதற்கான சாத்தியம் அதிகரிக்கிறது. இதற்கு அந்த உயிரினங்கள் எந்த வகையிலும் பங்களிக்கவில்லை. மனிதர்களே முதன்மைக் காரணம்.

காலநிலை மாற்றம்

காலநிலை மாற்றத்துக்கும் நோய்த்தொற்று களுக்கும் இடையிலான தொடர்பு பன்முகத்தன்மை கொண்டது. பருவநிலை மாறுபடுவதால் காட்டுயிர்கள் பாதிக்கப்படுகின்றன. அவை நோயுறு வதற்கும், அந்த நோய்க்கிருமிகள் மனிதர்களுக்குப் பரவுவதற்கும் சாத்தியம் அதிகம். 1999-ல் ஹண்டா வைரஸ் தொற்று பனாமாவில் பரவியதற்குப் பருவநிலை மாற்றம் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

 காலநிலை மாற்றத்தால் பருவநிலையில் ஏற்படும் மாற்றங்களை எளிதில் யூகிக்கமுடியாது. வெப்பநிலை, மழை, காற்றின் ஈரப்பதம் ஆகியவை மாறிக்கொண்டே இருக்கும். இதுபோன்ற தொடர் மாற்றங்கள் மனிதர்களின் நோய்த் தடுப்பாற்றலை பாதிக்கும் என்றொரு கருதுகோள் இருக்கிறது.

 காலநிலை மாற்றத்தால் பல நூறு ஆண்டுகளாக உறைந்திருந்த பனிப்பாறைகள் உருகத் தொடங்கியிருக்கின்றன. அவற்றுக்குள் உறைநிலையில் இருந்த பண்டைய தொற்றுக்கிருமிகள் விழித்தெழலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

 எதிர்பாராத பருவநிலை நிகழ்வுகள், அதிகரிக் கும் வெப்பநிலை ஆகியவற்றால் கடத்துயிரிகளால் ஏற்படும் நோய்கள் (Insect vector diseases) அதிகரிக்கலாம். 1999-ல் ஏற்பட்ட மேற்கு நைல் தொற்று நோய் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

 காலநிலை மாற்றத்தால் பல காட்டுயிர்கள் நீண்ட வலசையைத் தொடங்கியுள்ளன. இது காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட வலசை (Climate induced animal migration) எனப்படுகிறது. காட்டுயிர்கள் இப்படி இடம்பெயர்வதாலும் நோய்த்தொற்று பரவலாம்.

உலகின் பல நாடுகளில் சராசரி வெப்ப நிலை அதிகரித்துவருகிறது. ஆகவே, வெப்பமண்டலங் களில் மட்டும் பொதுவாக இருக்கும் நோய்கள் வேறு இடங்களுக்கும் பரவுவதற்கு சாத்தியம் உண்டு. வெப்ப மண்டலங்களில் வசிப்பவர்களுக்கு இயல்பாகக் காணப்படும் நோய்த் தடுப்பாற்றல், குளிர் நாடுகளில் இருப்பவர்களுக்குக் கிடையாது. ஆகவே, தீவிர நோய்த்தொற்றுகள் அதிகரிக்கலாம்.

காலநிலை மாற்றம் என்பது ஒரு பெரும் நெருக்கடி நிலையாக மாறிவிட்டது. ‘இருபத்தியோராம் நூற்றாண்டில் மனிதர்களின் நல்வாழ்வுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கப்போவது காலநிலை மாற்றம்தான்' என்கிறது மதிப்புமிக்க ‘லான்செட்' மருத்துவ இதழின் அறிக்கை ஒன்று. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கியமான முடிவுகளை எடுப்பதாலும், அதை கட்டுக்குள் வைப்பதாலும் இதுபோன்ற நோய் த்தொற்றுக்களைப் பெருமளவில் குறைக்கலாம்.

என்ன வழி?

நாவல் கரோனா வைரஸ் போன்ற கொள்ளை நோய்கள் மேற்கண்ட விலங்கு இறைச்சி சந்தை, காடழிப்பு, காலநிலை மாற்றம் போன்ற காரணங் களால் தீவிரமடைகின்றன. இயற்கையைப் பொறுத்த வரை எல்லாமே எல்லாவற்றோடும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. இதில் எந்தக் கண்ணியை நாம் அறுத்துவிட்டாலும் மொத்த வலைப்பின்னலும் அறுந்துவிழுந்துவிடும் அபாயம் இருக்கிறது. இயற்கை பிணைப்புகளையும் சுழற்சிகளையும் தடையுறாமல் பாதுகாப்பது, காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது, காடுகளை அழிக்காமல் இயற்கையோடு இயைந்து வாழ்வது ஆகியவற்றை அறிவியல்பூர்வமாக செயல்படுத்தினால் கொள்ளைநோய்த் தொற்றுக்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

கட்டுரையாளர், கடல் உயிரின ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: nans.mythila@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்