கரோனாவுக்கு தடுப்பூசி தயாராவது எப்படி?

By செய்திப்பிரிவு

டாக்டர் கு. கணேசன்

இன்றைய தேதியில் உலகம் முழுவதும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் ஒரு பொருள் கரோனா தடுப்பூசி. இதைத் தயாரிப்பதற்கான முயற்சியில் பல நாடுகள் இறங்கியுள்ளன. சில நாடுகள் தடுப்பூசியைக் கண்டுபிடித்துவிட்டதாகவும் அறிவித்துள்ளன. ‘நேற்று வந்த கரோனாவுக்கு அதற்குள் எப்படி தடுப்பூசி கண்டுபிடிக்க முடியும்?’ - என்று ஆச்சரியக் கேள்விகளும் எழுகின்றன. இந்த நேரத்தில் தடுப்பூசி பற்றிய சில அறிவியல் விளக்கங்கள் கைகொடுக்கும்!

தடுப்பூசி என்பது என்ன?

தடுப்பூசி என்பது உடலில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பாற்றலைத் தூண்டுகிற அல்லது அதிகரிக்கிற ஒரு மருத்துவப் பொருள். பிறவியிலேயே உடலில் இருப்பது இயற்கை யான எதிர்ப்பாற்றல் (Innate immunity). தடுப்பூசிகள் மூலம் நாம் பெறுவது செயற்கை எதிர்ப்பாற்றல் (Artificial immunity). பொதுவாக, தடுப்பூசிகள் தொற்றுநோய்களைத் தடுக்க உதவுகின்றன. பெரியம்மை, போலியோ போன்ற பெருந்தொற்றுகள் தடுப்பூசிகள் மூலமாகத்தான் ஒழிக்கப்பட்டன.

‘தடுப்பாற்றல் மண்டலம்’ என்றால் என்ன?

நம் உடலுக்குள் புகுந்து நோய்களை உண்டாக்க நம்மைச் சுற்றி கோடிக்கணக்கான கிருமிகள் எந்நேரமும் உலாவருகின்றன. உடலுக்குள்ளும் நுழைகின்றன. அப்போதெல்லாம் அவற்றை எதிர்த்துப் போராடி, விரட்டுவதற்கு ஒரு தற்காப்பு படை நம் உடலுக்குள் உள்ளது. அதுதான் தடுப்பாற்றல் மண்டலம் (Immune system). நாம் உறங்கினாலும் ஓய்வாக இருந்தாலும் இதற்கு மட்டும் ‘லாக் டவுன்’ இல்லை; எந்நேரமும் வேலைதான். இது சரியாக அமைந்தால் நோய்கள் அண்டாது. இது சரியில்லாதபோது நோய்களுக்குக் கொண்டாட்டம் கூடிவிடும். ஆகவேதான், தற்காப்பு மண்டலத்தை சரியாக வைத்துக்கொள்வதற்கு ஆரோக்கிய வாழ்க்கைமுறை முக்கியம்.

தடுப்பூசியின் தத்துவம் என்ன?

ஒரு நோய்க் கிருமியை அழிப்பதற்கு உடலில் எதிர்ப்பாற்றல் கிடைக்க வேண்டுமானால், அந்தக் கிருமியைக் குறைந்த அளவில் உடலுக்குள் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால், அந்தக் கிருமிகளுக்கு எதிராக ரத்தத்தில் எதிரணுக்கள் (ஆன்டிபாடீஸ்) உருவாகும். இவை அந்தக் கிருமிகளை அடையாளம் கண்டு, குறிப்பிட்ட காலத்துக்குத் தம் நினைவிலும் வைத்திருக்கும். மற்றொரு வேளையில் இதே கிருமிகள் நம் உடலைத் தொற்றும்போது இந்த எதிரணுக்கள் அந்தக் கிருமிகளை நினைவுக்குக் கொண்டுவந்து, எதிரியாக பாவித்து அவற்றை அழித்துவிடும்.

இதன் பலனாக, அந்தக் கிருமி ஏற்படுத்தும் நோய் நம்மை அண்டாது. உதாரணமாக, அம்மை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அவர்களுடைய எதிரணுக்கள் அந்தக் கிருமியை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்துக்கொள்வதால் மறுபடியும் அம்மை ஒருவரைத் தாக்குவதில்லை. இதுதான் தடுப்பூசியின் அடிப்படை தத்துவம்.

கிருமிகளை உடலுக்குள் எப்படி செலுத்துகி றார்கள்? அப்படி செலுத்தினால் ஆபத்தில்லையா?

உயிருள்ள கிருமிகளை உடலுக்குள் செலுத்துவது ஒரு வழி. அதாவது, கிருமிகளை ஆய்வுக்கூடத்தில் வளர்த்து, அவற்றின் வீரியத்தை சில வேதிப்பொருள்களால் குறைத்து, தடுப்பூசி தயாரித்து உடலுக்குள் அனுப்புவார்கள். பி.சி.ஜி. தடுப்பூசி (Live attenuated BCG vaccine) இந்த வழியில்தான் கொடுக்கப்படுகிறது. இன்னொரு வழி இது: சில கிருமிகளின் வீரியத்தை முழுவதுமாகவே அழித்துவிடுவார்கள். கொல்லப்பட்ட கிருமிகள் என்று இவற்றை சொல்லலாம்.

இவற்றையும் தடுப்பூசியாகப் பயன்படுத்துவார்கள். இதற்கு உதாரணம் போலியோ தடுப்பூசி (Inactivated polio vaccine). இப்படி இன்னும் பல வழிகளில் தடுப்பூசி களைத் தயாரித்துப் பயன்படுத்துகிறார்கள். எந்த வழியில் இந்தக் கிருமிகள் உடலுக்குள் நுழைந்தாலும் அவற்றுக்கு உடலில் நோயை ஏற்படுத்தும் அளவுக்கு ஆற்றல் இருக்காது. நோயை ஏற்படுத்தாது.

கரோனாவுக்கு எங்கே, எப்படி தடுப்பூசி தயாரிக்கிறார்கள்?

கரோனாவுக்கு தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியை சுமார் 45 மருந்து நிறுவனங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் முன்னெடுத்துள்ளன. இவற்றில் சீனா தயாரித்துள்ள ‘சினோவேக்’ (Sinovac) எனும் தடுப்பூசி, போலியோ தடுப்பூசி போன்றது. கரோனா கிருமிகளை சுத்தப்படுத்தி, ஃபார்மால்டிஹைடு திரவத்தில் கலந்து, அந்தக் கிருமிகளைச் சாகடித்து தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. இது சோதனைக் கட்டத்தில் உள்ளது. சீனாவின் ராணுவ மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரியும் ஸென் வெய் (55) இதை உருவாக்கி இருக்கிறார்.

‘டி.என்.ஏ. மறுஇணைப்பு’ (DNA Recombinant Technology) எனும் நவீனத் தொழில்நுட்பத்தில் இந்தத் தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பத்துக்கு கிருமிதான் தேவை என்பதில்லை. கிருமியின் மேலுறையில் காணப் படும் புரதம் அல்லது அதன் மரபணு வரிசை (Genome) இருந்தாலே போதும். சீனாவில் கரோனா பரவிய சில வாரங்களி லேயே இந்தக் கிருமியின் மரபணு வரிசையை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உலகத்துக்குத் தெரிவித்துவிட்டனர். எனவே, சனோஃபி எனும் பிரெஞ்சு நிறுவனம் இந்த முறைப்படி ஒரு புதிய தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது.

‘டி.என்.ஏ. மறு இணைப்பு’ என்றால் என்ன?

கரோனாவில் உள்ளது RNA வைரஸ். நம் சுவாசப்பாதை செல்களில் ACE2 எனும் புரதம் இருக்கிறது. இதனுடன் RNA வைரஸ் இணைந்து உடலுக்குள் புகுந்துவிடுகிறது. இந்த இணைப்பைத் தடுப்பதற்கு ஒரு தடுப்பூசி வேண்டும். அதுதான் சனோஃபி கண்டுபிடித்துள்ள புதிய தடுப்பூசி. கரோனாவிலிருந்து RNA-வைப் பிரித்துக்கொள்கிறார்கள். அடுத்து ‘பிளாஸ்மிட்’ எனும் கடத்துயிரியின் DNA-வில் சிறு பகுதியைக் கழற்றி விட்டு, அந்த இடத்தில் ‘RNA’வை இணைத்து விடுகிறார்கள். இப்படி கழற்றுவதற்கும் இணைப்பதற்கும் சில என்சைம்கள் உதவுகின்றன.

இப்படி மறுஇணைப்பில் புதிய வடிவெடுத்துள்ள RNA-வைப் பிரித்தெடுத்து இ.கோலி எனும் பாக்டீரியாவுக்குள் செலுத்துகிறார்கள். அந்த பாக்டீரியா தன்னுடைய வளர்ச்சியின்போது ‘RNA’வை கோடிக்கணக்கில் நகல் எடுத்துக்கொடுக்கிறது. பின்பு அவற்றை பிரித்தெடுத்துத் தடுப்பூசி மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். இதுதான் ‘டி.என்.ஏ. மறுஇணைப்’பின் செயல்முறை. இந்த வழியில் கரோனா தடுப்பூசிக்குத் தேவையான ‘RNA’ புரதங்களை எளிதாகவும் வேகமாகவும் மிக அதிக அளவிலும் தயாரிக்க முடிவது இந்தத் தொழில்நுட்பத்தால் கிடைக்கும் பெரும் பலன்.

இந்தியாவில் பூனாவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் அமெரிக்காவின் கோடா ஜெனிக்ஸ் (Codagenix) நிறுவனத்துடன் இணைந்தும், ஜெர்மனியின் க்யூர்வேக் நிறு வனம் தனியாகவும் ஏறக்குறைய இதேபோன்று தலா ஒரு தடுப்பூசியைத் தயாரித்துள்ளன.

‘mRNA-1273’ தடுப்பூசி செய்தி ஊடகங்களில் வைரலாகி உள்ளது. அது என்ன?

அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசிக்கு ‘mRNA-1273’ என்று பெயர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தேர்தலுக்கு முன்பு இந்தத் தடுப்பூசியைக் கொண்டுவந்துவிட வேண்டும் எனும் முனைப்பில் இருப்பதுதான் இது வைரல் ஆனதுக்குக் காரணம்.

இந்தப் புதிய தடுப்பூசியில் ‘mRNA’ பயன்படுத்தப்படுகிறது. ‘mRNA’ என்பது வைரஸ் சைட்டோபிளாஸத்தில் உள்ள ‘RNA’ பிரதி. இது DNAவுக்காக தூது செல்லும் பிரதிநிதி. இதிலும் வைரஸின் அதே மரபணு வரிசைதான் இருக்கும். இதை பிரித்தெடுத்து அது மாதிரியே செயற்கை முறையில் தயாரித்து, நானோதுகள் கொழுப்புப் பந்துகளுக்குள் செலுத்துகிறார்கள். இவற்றைத் தடுப்பூசியாகப் பயன்படுத்துகிறார்கள். இது மிக எளிதான செயல்முறை. அதனால்தான் சீனா கரோனாவின் மரபணு வரிசையை அறிவித்த 42-ம் நாளில் இதைத் தயாரித்து விட்டனர். 63-ம் நாளில் அதை சோதிக்கத் தொடங்கி உலக நாடுகளை வியக்க வைத்தனர்.

‘mRNA-1273’ தடுப்பூசி எப்படி வேலை செய்கிறது?

‘mRNA’ நகலானது கரோனா வைரஸின் மரபணு வரிசையைப் பெற்றிருப்பதால், நமது உடலுக்குள் இதைச் செலுத்தும்போது, நம் தடுப்பாற்றல் மண்டலத்தில் உள்ள எதிரணுக்கள் இதை கரோனா வைரஸாகப் பாவித்துக்கொள்கிறது. அடுத்த முறை கரோனா தாக்கினால், அதை அடையாளம் கண்டு உடல் செல்களுக்குள் நுழைவதைத் தடுத்துவிடுகிறது. இப்படியாக கரோனாவுக்கு இது முடிவு கட்டிவிடுகிறது.

இந்தியாவிலேயே கரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?

இந்தியாவில் பாரத் பயோடெக் இண்டர் நேஷனல் நிறுவனம் ‘கோரோஃபுளூ’ (CoroFlu) என்ற பெயரில் தடுப்பூசியை உரு வாக்கி யிருக்கிறது. ஏற்கெனவே ஃபுளூ காய்ச்சலுக்கு ‘ஃபுளூஜென்’ எனும் தடுப்பு மருந்தை அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. இந்த மருந்தில் கரோனா மரபணு வரிசையையும் கூடுதலாகச் செலுத்தி சோதித்துப் பார்த்து பாரத் பயோடெக் இண்டர் நேஷனல் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. இந்த தடுப்பூசி ஃபுளூ நோயையும் தடுக்கும்; கரோனாவை யும் தடுக்கும். இது தசை வழியாகக் குத்தப்படும் ஊசியில்லை; மூக்கு வழியாக உறிஞ்சப்படும் தடுப்பு மருந்து.

இந்தத் தடுப்பூசிகள் எல்லாமே எப்போது மக்களுக்குக் கிடைக்கும்?

ஒரு புதிய தடுப்பூசி சந்தைக்கு வர ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் ஆகும். காரணம், அது பல நடைமுறைகளைத் தாண்டி வர வேண்டும். முதலில் அதை விலங்குகளுக்குக் கொடுத்துப் பார்க்கப்படும். ஆபத்தான விளைவுகள் இல்லை என்று தெரிந்த பிறகு, குறிப்பிட்ட வயதுள்ளவர்களில் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்குக் கொடுத்துப் பார்க்கப்படும். இதற்கு கரோனா அதிகம் பரவும் பகுதிகளில் வசிக்கும் தன்னார்வலர்கள் தேவைப்படுவார்கள்.

ஓராண்டு காலத்துக்கு அவர்கள் உடலில் ஏதாவது பக்கவிளைவு ஏற்படுகிறதா என்று தொடர்ந்து பரிசோதிக்கப்படும். பக்கவிளைவு இல்லை என்றால் மட்டுமே, அதை வணிக ரீதியில் தயாரிக்க அரசின் அனுமதியைப் பெற முடியும். மருந்தை மொத்தமாகத் தயாரிக்கும்போது அதன் பாதுகாப்புத்தன்மையையும் சம்பந்தப்பட்ட நிறுவனம் நிரூபித்தாக வேண்டும். இவ்வளவு நடைமுறைகளுக்குப் பிறகுதான் அது மக்கள் பயன்பாட்டுக்கு வரமுடியும். அதுவரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும். இப்போதைக்கு கரோனாவைத் தடுக்க நம்மிடம் உள்ள ‘தடுப்பூசி’கள் மூன்று: விழித்திரு! விலகியிரு! வீட்டில் இரு! இவற்றைப் பயன்படுத்தி கரோனாவை முறியடிப்போம்!

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

தொடர்புக்கு: gganesan95@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்