சமூக இடைவெளி கரோனாவைத் தடுப்பது நிஜமா?

By முகமது ஹுசைன்

கோவிட்-19 - நவீன கால வரலாற்றில் ஏற்பட்ட தொற்றுநோய்களில் மிகவும் கொடியது, வீரியமிக்கது. இந்த நோயின் பாதிப்பும் அதனால் நேரும் மரணங்களும் நாளுக்கு நாள் அபாயகரமான அளவில் அதிகரித்துவருகின்றன. ஓர் அசாதாரணச் சூழலில் சிக்கி உலகமே முடங்கிவிட்டது. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் சமூக விலகலை இன்றைக்குக் கட்டாயமாக்கி உள்ளன. நம் நாட்டிலும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய சமூக இடைவெளி நம்முடைய வாழ்நாளில் பார்த்திராத ஒன்று. சமூக விலங்கான மனிதர்களால், நீண்ட காலத்துக்குச் சமூகத்திலிருந்து விலகியிருப்பது எளிதல்ல. ஏற்கெனவே கோவிட்-19 குறித்த அச்சத்தில் சிக்கியிருந்தவர்கள், இந்தச் சமூக விலகலால் கூடுதல் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இது ஏற்படுத்தும் மனச் சோர்வால் மக்கள் தளர்ந்து, தடுமாறுகிறார்கள். இருந்தாலும், சிலர் நிலைமையின் விபரீதத்தைப் புரிந்துகொள்ளவில்லை. வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்ற அசட்டுத் தைரியத்தில் அவர்கள் வெளியில் உலவுகிறார்கள்.

சமூக இடைவெளி ஏன் அவசியம்?

கண்ணுக்குத் தெரியாத ஓர் எதிரியுடன் இன்று உலகம் போராடிக் கொண்டிருக்கிறது. ஒருவரிடமிருந்து பரவத் தொடங்கிய இந்தத் தொற்று, இன்று பத்து லட்சத்தை நெருங்கி உள்ளது. 50,000க்கும் மேலான மக்களைக் காவு வாங்கி உள்ளது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. விரைவாக அதைக் கண்டுபிடிப்பதற் கான சாத்தியமும் குறைவாகவே உள்ளதால், பாதிப்பின் எண்ணிக்கையும் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பதற்குச் சாத்தியம் உண்டு. தொற்று ஏற்படும் வழியை அடைப்பதே தொற்றிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு நம்முன் இருக்கும் ஒரே வழி. சமூக இடைவெளியின் நோக்கமும் அதுவே.

சமூக இடைவெளி, உங்களுடைய பாதுகாப்பை மட்டுமல்லாமல்; மற்றவர்களுடைய பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதை ஒருவர் மீறினாலும், சமூக இடைவெளி யின் ஒட்டுமொத்த நோக்கமும் சிதைந்துவிடும். இதனால்தான் சமூக இடைவெளி என்பது வெறும் கோரிக்கையாக அல்லாமல், உத்தர வாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைக் கட்டாயமாகக் கடைப்பிடிப்பது நமது கடமை. இதை மீறுவது சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல; மனிதாபிமானத்துக்கு எதிரானதும்கூட.

நமக்குப் பாதிப்பு இல்லை என்று நினைக்கலாமா?

எங்கோ எவருக்கோ தானே இந்தப் பாதிப்பு உள்ளது, நமக்கோ நம் வீட்டிலோ நமது ஊரிலோ இந்தப் பாதிப்பு இல்லையே என்று அசட்டையாக இருக்க வேண்டாம். சீனாவின் வூகான் நகரவாசிகள், கோவிட்-19 வைரஸின் தீவிரத் தாக்குதலுக்கு உள்ளாகி, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது, உலக நாடுகள் அதை அலட்சியமாக வேடிக்கை பார்த்தன. அமெரிக்காவோ ஒருபடி மேலே சென்று, தனது மருத்துவச் செயல்திறனுக்கு முன்னால், இதெல்லாம் ஒரு அச்சுறுத்தலே இல்லை என்று பேசும் அளவுக்கு அறியாமையில் மூழ்கியிருந்தது. அறியாமை, அலட்சியம் உள்ளிட்ட காரணத்தால், உடனடி நடவடிக்கையில் இறங்காத இத்தாலியும் அமெரிக்காவும் இன்று தீவிர பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

வட கொரியாவில் ஒரு சீனப் பயணியின் மூலம் மட்டும் 1,300 பேருக்கு தொற்று ஏற்பட்டதற்கும் இந்த அலட்சியமே காரணம். பெரும் தொற்றுக் கடத்துநர் (Super spreader) என்ற பதம் அதன் பின்னரே உல கெங்கும் பரவலானது. அதேவேளை, தீவிரமான கட்டுப்பாட்டையும் அடக்குமுறை யையும் சீனா நடைமுறைப்படுத்திய காரணத்தால் தான், நோய்ப்பரவலின் தீவிரம் வூகான் நகருக்குள்ளே பெருமளவு சுருக்கப்பட்டது. சீனத் தலைநகரமான பெய்ஜிங்கிலும், உலகிலேயே மக்கள் அடர்த்தி அதிகம் கொண்ட நகரமான ஷங்காய் நகரிலும் கரோனாவால் பாதிப்புக்கு உள்ளா னோரின் எண்ணிக்கை ஐந்நூறைத் தாண்ட வில்லை. அதாவது, அங்கே ஏற்பட்ட பாதிப்பு நம் சென்னையைவிடக் குறைவு.

வீட்டுக்கு ஒருவர்

கண்ணிமைக்கும் நேரத்தில் பரவி விடும் வல்லமை இந்தத் தொற்றுக்கு உண்டு. எனவே, இந்த வைரஸின் தாக்குதலும் பரவலும் எந்த அளவு தீவிரமானதாக உள்ளதோ, அதைவிடத் தீவிரமானதாக நம்முடைய சமூக இடைவெளி இருக்க வேண்டும். கடவுள், மதம், நம்பிக்கை, நட்பு, குடும்பம் போன்ற அனைத்தையும்விட முக்கியமானது நம்முடைய உயிர்.

எனவே, எதன் பொருட்டும் சமூக விலகலை மீறாமல் இருப்பது அவசியம். வேலை நிமித்தமாக இன்று வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லாதோர், அத்தியாவசியத் தேவை நிமித்தமாகத் தவிர்க்க இயலாத சூழலில் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும், தகுந்த முகச் கவசம் அணிந்து, தேவைக்கு ஏற்ப வெளியே சென்றுவருவது நல்லது. வீட்டில் இருக்கும்போது, வீட்டு வேலைகளை மனைவியுடன் சரிபாதி பிரித்துக்கொண்டால் பொழுதும் போகும், வீண் சச்சரவும் நீங்கும்.

அரசின் தலையாய பணி

அன்றாடங்காய்ச்சிகளான சாலை யோர வியாபாரிகள், நரிக்குறவர்கள், கூலித் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் போன்றோர் வயிற்றுப் பாட்டுக்காக வெளியே உலவும் சூழல் நிலவுகிறது. அவர்களைப் பொறுத்தவரை, தொழில்நுட்பங்கள் எல்லாம் இன்றும் ஆடம்பரமே. போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால், பிழைக்க வந்த இடத்திலிருந்து, உறவையும் பாதுகாப்பையும் நாடி, பல நூறு கி.மீ. அவர்கள் நடந்தே செல்லும் அவலத்துக்கு மௌன சாட்சியாக மட்டுமே நாம் இருக்கிறோம். அவர்களுக்கு உதவும் நோக்கில், மத்திய, மாநில அரசுகள் பல உதவித் திட்டங்களை அறிவித்துள்ளன. ஆனால், அந்தத் திட்டங்களின் அளவு, யானைப் பசிக்கு சோளப்பொரி என்ற அளவிலேயே உள்ளது.

இது ஒருபுறம் என்றால், மற்றொரு புறம், இந்தியா போன்ற மக்கள்தொகை மிகுந்த நாட்டில், எந்தத் திட்டத்தையும் கடைநிலைக்குக்கொண்டு செல்வதற்கு நீண்ட காலம் எடுக்கும். அதுவும் போக்குவரத்து முடங்கி, நாட்டின் அனைத்து பகுதிகளும் தனித்தனித் தீவுகளாக மாறிவிட்டிருக்கும் இன்றைய சூழலில், அரசின் திட்டங்களைக் கடைமட்டத்தில் இருப்பவர்களிடம் எடுத்து செல்வது என்பது இமாலயப் பணியே. உதவி திட்டத்தின் அளவையும் அதை நடைமுறைப்படுத்தும் வேகத்தையும் அதிகரிப்பது அரசின் தலையாய பணியாக இருக்க வேண்டும்.

கைகொடுக்கும் தொழில்நுட்பம்

ஐந்து கோடிக்கும் அதிகமான மக்களைக் காவு வாங்கிய ஸ்பானிஷ் ஃபுளு பரவிய 1918 உடன் ஒப்பிடும்போது, நாம் இன்று வலுவான நிலையிலேயே இருக்கிறோம். எப்போதும், எதையும் எதிர்கொள்ளும் தயார் நிலையை நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி இன்றைக்கு நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தனித்து இருப்பதன் சவாலை இன்றைய தொழில்நுட்பம் பெருமளவு நீர்த்துப்போகச் செய்துவிட்டது. அலுவலகங்களின் வேலையை வீட்டிலிருந்தே செய்யும் வசதியையும் அவை நமக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.

வீட்டினுள் முடங்கியிருக்கும்போதும், உலகில் எங்கோ ஒரு மூலையிலிருக்கும் நெருங்கிய உறவினரை நம்மால் தொடர்புகொள்ள முடிகிறது. வீட்டிலிருந்தபடியே நண்பர்கள் குழுவுடனும் வெளியிலிருக்கும் குடும்ப உறுப்பினர்களுடன் பேச முடிகிறது. ஏன், வீடியோ கால் மூலம் அனைவரையும் பார்த்துப் பேசவும்கூட முடிகிறது. இதையெல்லாம் மீறியே, நிலைமையின் விபரீதத்தை அறியாமல் சமூக இடைவெளியை சிலர் மீறுகின்றனர்.

மெத்தனம் வேண்டாம்

பழக்கவழக்கங்களின் உந்துதலின் அடிப்படையில் வாழ்வை முன்னெடுத்துச் செல்லும் இயல்பு கொண்டவனே மனிதன். என்றும் இல்லாத விதமாக, சமூக இடைவெளி எனும் ஒரு புது விதியைத் திடீரென்று அவன் மீது திணிக்கும்போது, அதை ஏற்றுக்கொள்ள அவன் மறுப்பதில் வியப்பு ஏதுமில்லை. அந்த விதியை முழுமையாகக் கடைப்பிடிக்க மறுப்பதன் காரணமும் அதுவே. அதேநேரம், குழு மனப்பான்மை உடையவனாக மனிதன் இருப்பதால், மக்களில் பெரும்பாலோர் இந்தச் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் போது, அதை மீறும் சிலரும் தாமாகவே சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கத் தொடங்குவார்கள்.

எனவே, சமூக இடைவெளியை குழு மனப்பான்மையாக மாற்றும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. கண்ணுக்குத் தெரியாத இந்தத் தொற்று எங்கு, எப்போது, எப்படி, யாரிடமிருந்து பரவும் என்று நமக்குத் தெரியாது. பாதிக்கப்பட்டவர்களும் தொடக்கத்தில் பெரும்பாலும் அறிகுறியற்றே இருப்பார்கள். எனவே, அலட்சியத்தைப் புறந்தள்ளி, 100 சதவீத எச்சரிக்கையுடன் இருந்தே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. சமூகத்துடன் இப்போது இடைவெளியைப் பராமரிப்பது, உங்களை மட்டுமல்லாமல் சக மனிதர்களையும் சேர்த்தே காக்கும்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE