கதை: புலி வருது... புலி வருது...

By செய்திப்பிரிவு

மலையடிவார வனத்தில் ஆதிவாசிச் சிறுவன் நீலனுடன் மணி சென்றுகொண்டிருந்தான். நீலன் அரைக்கால் சட்டை அணிந்து, துண்டால் தலைப்பாகைக் கட்டியிருந்தான். இடுப்பில் சின்ன அரிவாளும் ஒரு தீப்பெட்டியும் வைத்திருந்தான்.
மரக்கிளைகளில் குரங்குகள் ‘கும்க்... கும்க்...’ என்று சத்தமிட்டுக்கொண்டிருந்தன. மரப்பட்டைகளுக்கு உள்ளிருந்த சில்வண்டுகள் ‘கிய்ய்ய்’ என்று ஓசை எழுப்பிக்கொண்டிருந்தன.

“நீலா, இன்னிக்கி எங்க கூட்டிட்டுப் போகப் போறே?” என்று மணி ஆர்வத்துடன் கேட்டான்.

“நீதான் புதுசா எங்கேயாவது கூட்டிட்டுப் போகச் சொன்னியே. அதான் வேங்கைப் பாறைக்குக் கூட்டிட்டுப் போறேன்” என்றான் நீலன்.

“வேங்கைப் பாறையா? எனக்குப் பயமா இருக்கு நீலா.”

“நான் இருக்கும்போது உனக்கு என்ன பயம்? தைரியமா வாப்பா.”

ஒரு பெரிய மரத்தின் பட்டையை உரித்து, மனித முகம் போல் செதுக்கினான் நீலன்.

“என்னப்பா, முகமூடி செஞ்சிட்டிருக்கே? இங்கே என்ன விளையாடவா போறோம்?”

“மணி, புலி எப்பவும் முன்னாடி பாயாது. அவசர காலத்துக்கும் குட்டிக்கு ஆபத்து ஏற்படும்போதும்தான் அப்படிப் பாயும். பொதுவா ஆட்களைப் போகவிட்டு, மறைவில் இருந்துதான் பின்னாடி வந்து கொல்லும். இந்த முகமூடியை மாட்டிக்கிட்டால், நாம் பார்ப்பதாக நினைச்சிட்டுப் புலி நம் மேல பாயாதுப்பா” என்று சொல்லிவிட்டு, மணிக்கு ஒரு முகமூடியைப் பின்பக்கமாக மாட்டிவிட்டான் நீலன்.

“எனக்கு என்னவோ திக்குதிக்குனு அடிக்குது நீலா.”

“யானைக்குப் புலி பயப்படும். புலிக்கு யானை பயப்படும்னு போன தடவை வந்தபோதே சொன்னேன், நினைவில்லையா?”

“ஆமாம். புலி முன்னாடி வந்தால் யானை தும்பிக்கையாலேயே தூக்கி வீசிடும். அதனால யானைக்குப் பின்னால போய்தான் புலி பாயும்னு சொன்னே.”

“ஆமாம் மணி. அதனால யானை இடத்துக்குப் புலியும் புலி இடத்துக்கு யானையும் போகாது. புலிகிட்ட ஒரு ஒழுங்கு இருக்கும். கொன்ற விலங்கைத் தின்று முடித்த பிறகே அடுத்த விலங்கைக் கொல்லும். பசி இல்லாமல் எந்த விலங்கையும் வேட்டையாடாது. குறுக்கே விலங்கு வந்தாலும் கண்டுக்காமல் போயிரும்.”

“அங்கே பாரு நீலா. புலிக்குட்டி ஒண்ணு விளையாடிட்டு இருக்கு. தூக்கட்டுமா?”

“ஐயோ... தாய்ப்புலி பக்கத்தில்தான் இருக்கும். குட்டியை நெருங்கினால் நம்மள சும்மா விடாது. பேசாமல் வா மணி.”

“ஐயோ, காட்டில் நீ சொல்வதைத்தான் கேட்கணும். இல்லைன்னா ஆபத்துதான்” என்றான் மணி.

இருவரும் சற்றுத் தூரம் நடந்தனர்.

“நீலா, எனக்குப் புலியைப் பார்க்கிற ஆர்வத்தைவிட பயம் அதிகமா இருக்கு. பேசாமல் திரும்பிப் போயிடலாமா?” என்று மெல்லியக் குரலில் கேட்டான் மணி.

“உஷ். நான் சொல்ற வரைக்கும் பேசாதே. அந்தப் பாறை பின்னாலே போய் நின்னுக்க. எனக்கு ஒரு வேலை வந்திருச்சு” என்றான் நீலன்.

“என்ன சொல்றே? என்ன செய்யப் போறே?”

“கொஞ்ச நேரம் பேசாமல் இரு. பதில் சொல்ல எனக்கு நேரம் இல்லை” என்ற நீலன், பாறைக்குப் பின்னால் இருந்து மெதுவாக எட்டிப் பார்த்தான். நீலனுக்குப் பின்னாலிருந்து மணியும் எட்டிப் பார்த்தான்.

துப்பாக்கியுடன் ஒரு மனிதர் வந்துகொண்டிருந்தார். புலி வேட்டைக்கு வந்திருக்கிறார் என்பதை மணி புரிந்துகொண்டான். ஒரு குகையை நோக்கித் துப்பாக்கியுடன் அவர் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவர் பின்னாலிருந்து ஒரு பெரிய புலி பதுங்கிப் பதுங்கி வந்துகொண்டிருந்தது. அவரோ அதைக் கவனிக்கவே இல்லை. புலி அவர் மீது பாய்வதற்குத் தயாராக இருந்தது.

“ஏங்க, சட்டுனு குனிங்க” என்று கத்தினான் நீலன். அந்த ஆள் குனிய, பாய்ந்த புலி நிலைகுலைந்து விழுந்தது. வலியில் கத்தியது.

நீலன் வித்தியாசமாகக் குரல் எழுப்பினான். உடனே புலி அங்கிருந்து ஓடிவிட்டது.

நீலனும் மணியும் அந்த மனிதரிடம் சென்றார்கள். பயத்தில் அவருக்குப் பேச்சே வரவில்லை.

“தம்பி, சரியான நேரத்தில் என் உயிரைக் காப்பாத்திட்டே. நீதான் என் தெய்வம்” என்று கை எடுத்துக் கும்பிட்டார் அந்த மனிதர்.

“புலியைக் கொல்லலாமா? புலி வேட்டை சட்டப்படி குற்றம். வேட்டைக்காரர்களைப் பார்த்தால் நான் வன அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கணும்” என்றான் நீலன்.

“புலி வேட்டைக்கு வந்தது தவறுதான். அதுக்காக உயிரைக் காப்பாத்திட்டு, ஜெயிலுக்கு அனுப்பறது நியாயமா?”

“இதைப் புலி வேட்டைக்குக் கிளம்பறதுக்கு முன்னால யோசிச்சிருக்கணும்.”

“இந்தப் பணத்தை வச்சுக்கோப்பா.”

“இது ரொம்பத் தவறான விஷயம்ங்க. நாங்க இயற்கையைப் பாதுகாக்கறவங்க. பணத்தை வாங்கிட்டுக் கெடுதல் நினைக்க மாட்டோம்.”

“இனிமேல் வேட்டை என்ற எண்ணமே என் மனதில் வராது. இந்த ஒரு முறை மன்னிச்சிடுப்பா.”

“சரி, துப்பாக்கியை உடைச்சுப் போடுங்க.”

அவர் துப்பாக்கியைப் பாறையில் போட்டு அடித்து உடைத்தார்.

“நன்றிப்பா. நான் வரேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தார்.

“நீ ரொம்ப உயர்ந்தவன் நீலா. உன்னோட நண்பனா இருக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்” என்றான் மணி.

“அந்தப் புலி திரும்பி வருவதற்குள் கிளம்பிடலாம்” என்று சொல்லிவிட்டு, வந்த வழியே திரும்பி நடந்தான் நீலன். மணியும் பின்தொடர்ந்தான்.

- கொ.மா.கோதண்டம் | ஓவியம்: கிரிஜா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்