முகங்கள்: மறைக்க வேண்டியதல்ல மாதவிடாய்

வி.சீனிவாசன்

காலம் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்க பெண்கள் சார்ந்த பல விஷங்களில் நாம் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். அவற்றில் முக்கியமானது மாதவிடாய். யாருக்கும் தெரியாமல் மறைக்கப்பட வேண்டியதாகத்தான் பலரும் மாதவிடாயை நினைக்கின்றனர். அந்தச் சிந்தனை பிற்போக்குத்தனமானது என்று உணர்த்துவதுடன் மாதவிடாயை எப்படி ஆரோக்கியமாக எதிர்கொள்வது என்று பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கிவருகிறார் சேலத்தைச் சேர்ந்த திவ்யபாரதி.

“ஆண்டாண்டு காலமாய் மாதவிடாய் பிரச்சினையை மூடுமந்திரமாகக் கையாண்டு, அசௌகரியத்துடன் அந்த நாட்களைக் கடக்கின்றனர் பெண்கள். அந்த நாட்களின் அசௌகரியத்தைக் காரணம்காட்டி சமைக்க மறந்தோ, துணி துவைக்க மறுத்தோ வீட்டு வேலைகளில் இருந்து அம்மா விலக்குப் பெறுவதில்லை என்பதை மகள்களால் மட்டுமே உணர முடியும். அவ்வாறான மகள்களில் ஒருத்தியாக, ஒட்டுமொத்தப் பெண்களின் மனத்தாங்கலின் வெளிப்பாடாகத்தான் நான் எதிரொலித்துக் கொண்டிருக்கிறேன்” என்கிறார் திவ்யபாரதி.

ஆரோக்கிய ஆலோசனை

சேலம் அம்மாபேட்டை காமராஜர் நகர் காலனியைச் சேர்ந்த திவ்யபாரதி, எம்.பி.ஏ., பட்டதாரி. பள்ளி, ஏரி, குளங்கள் ஆகியவற்றில் மரக்கன்று நடுவதில் தொடங்கிய இவரது பொதுநல ஆர்வம், ஆதரவற்றோருக்கு உணவளிப்பது, பள்ளி, கல்லூரி மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபடுவது என வளர்ந்து நிற்கிறது. அதுதான் கலாம் லட்சிய விருது, சுயசக்தி விருது, வுமன் என்பவர்மென்ட் அவார்டு, பசுமை அறக்கட்டளை விருது எனப் பல அங்கீகாரங்களை அவருக்குப் பெற்றுத்தந்திருக்கிறது.

‘‘சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுடன் உரையாடி யிருக்கிறேன். சுயசுத்தம், பாலியல் தொல்லைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளுதல், மாதவிடாய்ப் பிரச்சினை உள்ளிட்டவைதான் என் பேசுபொருள். இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையைப் பெண்கள் கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டால், பெருவாரியான பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். வளரிளம் பெண்கள் முதல் மெனோபாஸ் வயதுடைய பெண்கள்வரை மாதம்தோறும் சந்திக்கும் மாதவிடாய்ப் பிரச்சினையால் அவதியுற்று வருகின்றனர்.

ரசாயனப் பொருட்கள் கலந்த சானிட்டரி நாப்கின் பயன்பாட்டால் பலருக்கும் அரிப்பு, ஒவ்வாமை, கிருமித் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆனால், இந்தப் பிரச்சினைகளைப் பற்றிப் பெண்கள் யாரிடமும் சொல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டில் உள்ளவர்களிடமும் பணியிடத்திலும் இயல்பாக இருக்க முடிவதில்லை” என்று சொல்லும் திவ்யபாரதி, இதற்குத் தீர்வு காண வேண்டும் என்ற தேடலில், மூலிகை நாப்கின் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

அந்தப் பரிசோதனைக்குத் தன்னையே உட்படுத்திக்கொண்டார். மூலிகை நாப்கின் பயன்பாட்டால் மாதவிடாய் நாட்களின் பிரச்சினைகள் குறைவதை உணர்ந்தவர், அதை அனைவருக்கும் பரவலாக்கும் பொருட்டுத் தன் வீட்டில் உள்ளவர்களின் உதவியுடன், மூலிகை நாப்கின் தயாரிப்பதுடன் அதன் பயன்பாடு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகிறார்.

“வயிற்றுவலியால் அவதியுறும் பெண்களிடம் கருஞ்சீரகம், எள்ளுருண்டை, ஓமம் என வீட்டில் உள்ள பொருட்களைச் சாப்பிடச் சொல்கிறேன். ஆவாரம்பூ, திப்பிலி, சுக்கு, மிளகு கலவையிலான தேநீர் குடிக்கலாம்” என்கிறார் திவ்யாபாரதி. மூலிகைக் குளியல் சோப்பு, குளியல் பொடி, சிறுதானிய சத்துமாவு எனப் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இயற்கை முறையிலான பொருட்களைத் தயாரித்து வருகிறார். பெண்கள் சுய தொழில் செய்து முன்னேற்றம் காணும் வகையில் பயிற்சி அளித்துவருகிறார். பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பதற்கான பரப்புரையிலும் இவர் ஈடுபட்டுவருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE