காந்தி 151: செயல்வழிக் கல்வியைக் கொண்டாடிய தேசத் தந்தை

By செய்திப்பிரிவு

ம.சுசித்ரா

அரசியல் பிதாமகனாகவும் அகிம்சை வழியில் இந்திய விடுதலையைச் சாத்தியப்படுத்திய மகானாகவும் காந்தியடிகள் பரவலாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறார். அதேநேரத்தில் சமூகச் சீர்திருத்தத் தையும் முன்னேற்றத்தையும் தன்னுடைய வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டவர் அவர். அதன்பொருட்டே அரசியலுக்குள் கால்பதித்தார். சமூக மாற்றத்துக்கான கருவியாகக் கல்வியை அவர் கருதினார்.

கல்வி எனும்போது எழுத்தறி வித்தலை மட்டும் கல்வியாக அவர் கருத வில்லை. “எழுத்தறிவு என்பது கல்வியின் முடிவல்ல. அதைத் தொடக்கம் என்றுகூடச் சொல்வதற்கில்லை. ஆணும் பெண்ணும் கல்வி பெறுவதற்கான ஒரு வழியாக மட்டுமே எழுத்தறிவைக் கருதலாம்” என்றார். உடல், மனம், ஆன்மா ஒருங்கிணைந்து அடைய வேண்டிய உயரத்தைக் கல்வி என்று அழைத்தார். அது மட்டுமின்றி அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான, சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தக்கூடிய கல்விச் சிந்தனைகளை முன்மொழிந்தார். காந்தியின் கல்விச் சிந்தனைகள், அவர் முன்னிறுத்திய கல்விக் கொள்கைகள் ஒரு பார்வை:

இலவசக் கட்டாயக் கல்வி

தொடக்கக் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தார் காந்தி. 7 முதல் 14 வயதுவரை உள்ள அனைத்துச் சிறுவர், சிறுமியருக்கு இலவசக் கட்டாயக் கல்வி வழங்க அறிவுறுத்தினார். குறிப்பாகக் கிராமப்புறங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குக் கட்டாயம் கல்வி சென்றடைய உரிய நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தினார்.

தாய்மொழியில் கல்வி

கருவிலிருந்தே தாயின் மொழியைக் கேட்டு வளர்ந்த குழந்தைக்குக் கல்வி என்ற பெயரில் அந்நிய மொழியில் பயிற்றுவிப்பதை இயற்கைக்கு எதிரானதாகக் கருதினார் காந்தி. குழந்தை யின் புரிதல் திறனை மேம்படுத்தவும் புதிய கருத்துகளை உள்வாங்கிக்கொள்ளவும் தாய்மொழியே சிறந்த வழி. ஆகவே, துளிர் பருவத் தினருக்குத் தாய்மொழிக் கல்வியை மட்டுமே கற்பிக்க வலியுறுத்தினார்.

உழைப்பின் மகிமை

இந்தியாவின் ஆன்மா கிராமங்கள்தாம். என்றாலும் தங்களுடைய குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்குக்கூட அனுப்ப முடியாத நிலையில்தான் காலங்காலமாகப் பெருவாரியான விவசாயிகள் இருக்கின்றனர். அன்றைய நிலையும் இதுவே. இதைக் கண்டு வருந்தினார் காந்தி. போதாததற்கு அவர்களைப் போன்றே அவர்களுடைய குழந்தைகளும் விவசாயக் கூலிகளாக வயலில் வாட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டி ருப்பதைத் தடுக்க முடிவெடுத்தார்.

இதற்குத் தீர்வு காணும்பொருட்டு குழந்தைக் கல்வியில் புதிய திட்டத்தை முன்வைத்தார். அதற்காகக் கிராமங்களை விட்டு நகரங்களைத் தேடி விவசாயிகளும் அவர்களுடைய சந்ததியினரும் இடம்பெயர வேண்டும் என்று அவர் யோசிக்கவில்லை. விவசாயிகளின் உழைப்புக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும், அதேநேரத்தில் அவர்களுடைய குழந்தைகளுக்குப் பள்ளிகளில் கைத்தொழில், கைவினைக் கல்வி அளிக்க முடிவெடுத்தார்.

கைவினைக் கல்வி

காந்தியடிகளின் கல்விக் கொள்கையின் மையப் புள்ளி கைவினைக் கல்வியே. “நம்முடைய கல்விமுறையைப் புரட்டிப்போட வேண்டும். அதற்குக் கை வழியாக மூளைக்குக் கல்வி கற்பிக்க வேண்டும்” என்று ஹரிஜன் பத்திரிகையில் எழுதினார் காந்தி. கைவினைப் பொருட்களை வடிவமைக்கக் கற்றுத் தரும் வகுப்புகளை அனைத்துப் பள்ளிகளிலும் உருவாக்கச் சொன்னார். ஏனென்றால், அதை வெறுமனே ஒரு கைத்தொழிலாக மட்டும் அவர் கருதவில்லை.

நுண்ணறிவை வளர்த்தெடுக்கக்கூடிய வழிமுறையாகக் கைவினையைப் பாவித்தார். இயந்திரமயமாக அல்லாமல் அறிவியல்பூர்வமாகக் கைவினையைப் பயிற்றுவிக்கச் சொன்னார். இதன்மூலம் ஒவ்வொரு மாணவரையும் தற்சார்புடையவராக மாற்ற முடியும். சுயதொழில் மூலம் நம் கிராமங்கள் சிறக்க இதுவே சிறந்த வழி என்றார். அதேநேரம் வெறுமனே புத்தகப் புழுவாக மாறிப்போய்விடாமல், மாணவர்கள் சுதந்திரமாகச் செயல்படக் கைவினை வகுப்புகள் உதவும் என்றார்.

அகிம்சைவழிக் கல்வி

கல்வியின் மகத்துவம் நீதிநெறிகளைப் போதிப்பதில் இருப்பதாக நம்பினார் காந்தி. சிறந்த குடிமக்களை உருவாக்க அகிம்சை என்ற கல்வித் தத்துவத்தைப் பயிற்றுவிக்கப் பரிந்துரைத்தார். தனிமனிதக் குணநலனுக்கும் சமூக ஒற்றுமைக்கும் உண்மை, அகிம்சை யின் மீது நம்பிக்கை அவசியம் என்றார். உண்மை, அகிம்சையின் அடிப்படைகள் போதிக்கப்பட்டால் மட்டுமே வர்க்கம், சாதி, மதப் பேதங்களை அடிப்படையாக வைத்துச் சமூகத்தில் தூண்டிவிடப்படும் வன்மத்தை அகற்ற முடியும். குறிப்பாகக் கல்வியில் போலிகளுக்கும் வன்முறைக்கும் இடம் கிடையாது என்று திட்டவட்டமாக வாதாடினார்.

செயல்வழிக் கல்வி

ஏட்டுச் சுரைக்காய்க் கறிக்கு உதவாது என்று நெடுங்காலமாகச் சொன்னாலும் செயல்வழிக் கல்வியின் முக்கியத்துவம் அண்மை காலமாகத்தான் நமது கல்வி நிலையங்களில் உணரப்பட்டிருக்கிறது. ஆனால், 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே செயல்வழிக் கல்வியைக் கொண்டாடியவர் காந்தி. மாணவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு அவசியமானவற்றை, அவர்கள் வாழும் சமூகத்துக்குப் பயனளிக்கக்கூடியவற்றை கற்பிப்பதே கல்வி. அத்தகைய கல்விதான் வேலையில்லா திண்டாட்டத்துக்குத் தீர்வு காணக் கைகொடுக்கும் என்றார்.

சமூக விழிப்புணர்வும் சேவையும்

“கல்வி முடியும் இடம் சேவையாகத் தான் இருக்க வேண்டும்” என்றார் காந்தி. தேசப் பக்தி என்பது சமூகச் சேவையில் குடியிருப்பதாக நம்பினார். சமூகநலத் திட்டங்களில் ஈடுபடுவதன் மூலமாகச் சமூக விழிப்புணர்வையும் பொறுப்புணர்வையும் மாணவச் சமூகத்துக்கு ஊட்டலாம் என்றார்.
உடல் உழைப்பையும் அறிவாற்றலையும் சமமாக மதிக்கும் கல்விக் கொள்கையை முன்வைத்தவர் காந்தி. படித்தோம், முடித்தோம், வேலைக்குச் சென்று சம்பாதித்தோம். என்றில்லாமல் பணிவாழ்க்கைத் திறன்கள்கூட மனிதாபிமானம் மிக்கதாகவும், மனிதர்களின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக உய்விக்கக்கூடியதாகவும் மாறச் செயலாற்றிய செயல்வீரர் அவர்.

இனி செவ்வாய்தோறும்...
வருகிறது புத்தம் புதிய இணைப்பிதழ்!

‘இந்து தமிழ்’ நாளிதழின் வெற்றிகரமான இணைப்பிதழ்களில் ஒன்று ‘வெற்றிக்கொடி’. கல்வித் துறை சார்ந்த பல்வேறு அம்சங்களைத் திரட்டி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் வழங்கிவரும் பணியை ‘வெற்றிக்கொடி' செய்துவருகிறது. ஆசிரியர்களையே செதுக்கிய எண்ணற்ற மாணவர்களைப் பற்றியும் சிறந்த ஆசான்கள் ஆற்றிவரும் சேவைகளையும் உலகுக்கு எடுத்துக்காட்டி வருகிறது. அத்துடன் சாதனை புரியும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மகுடம் சூட்டிக்கொண்டிருக்கிறது. இப்படிக் கடந்த ஆறு ஆண்டுகளாக பன்முகத்தன்மையுடன் கல்வியை அணுகிவரும் ‘வெற்றிக்கொடி', அடுத்த கட்டத்தில் கால்பதிக்க இருக்கிறது.

இதுவரை வாரம் ஒரு முறை மட்டுமே வெளிவந்த ‘வெற்றிக்கொடி' இணைப்பிதழ், இனி திங்கள் முதல் வெள்ளிவரை தனி இதழாக உருவெடுத்து, மாணவர்களைத் தேடி அவர்களுடைய பள்ளிக் கூடங்களுக்கே செல்லவிருக்கிறது.
அதேநேரம், ‘வெற்றிக்கொடி’க்கு இணையாக இளைஞர் உலகத்தைக் கவர்ந்து, அவர்களுக்கு உற்சாகமான பல வழிகாட்டுதல்களை அளிக்கும் வகையில், ‘இந்து தமிழ்' நாளிதழுடன் இனி செவ்வாய்க்கிழமைதோறும் மாறுபட்ட அம்சங்களோடு புதியதோர் இணைப்பிதழ் வெளியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

- ஆசிரியர்

கட்டுரையாளர்,
தொடர்புக்கு:
susithra.m@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்