பாம்பே வெல்வட் 01: மௌனம் பேசியதே...

இந்திய சினிமா என்றாலே இந்தி சினிமா’ என்பதான பார்வை இந்தியாவுக்கு வெளியே வெகுகாலமாக நிலவி வந்தது. உண்மையில் கல்கத்தா, மதராஸ் என பிராந்தியத் தளங்களின் வரிசையில் இந்துஸ்தானியை அடிப்படையாக கொண்டே பம்பாயின் திரைக்களமும் முகிழ்த்தது. இந்தியாவின் முதல் பேசும் படமான ‘ஆலம் ஆரா’, இந்தியில் அல்ல; இந்துஸ்தானியிலே உருவானது. பின்னரே இந்தித் திரையுலகமாக அது கிளைத்துச் செழித்தது. அது வளர்ந்த கதைகள் அனைத்திலும் வணிக பாலிவுட் படம் ஒன்றுக்கு ஈடான சுவாரசியங்கள் நிறைந்திருக்கின்றன.

எழுபதுகளில் ‘பாலிவுட்’ என்ற பெயரைச் சூடுவதற்கு முன்பிருந்தே, தேசத்தின் அனைத்துத் திசைகளில் இருந்தும் திறமைகளை பம்பாய் படவுலகம் சுவீகரித்து வந்தது. வைஜெயந்திமாலா முதல் ஸ்ரீதேவிவரை ஏராளமான திரைத் தாரகைகளை வாரி வழங்கியதும் திரைக்குப் பின்னே எஸ்.எஸ்.வாசன் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை ஏராளமான ஆளுமைகளைத் தந்ததுமாக பாலிவுட் சினிமாவை வளர்த்ததில் தமிழக மண்ணுக்குத் தனிப்பெருமை உண்டு. அந்த வகையிலும் பாலிவுட் திரையுலகம் கடந்துவந்த வெல்வெட் தடத்தைத் தமிழில் முழுமையாகப் பதிவுசெய்வதும் அவசியமாகிறது.

இந்திய சினிமாவின் தந்தை

இந்திய சினிமாவின் பூப்பாதம் 1896-ல் தொடங்கி பலவிதமான பரிசோதனை முயற்சிகளில் அடியெடுத்து வைத்திருந்தது. என்றபோதும், 1913-ல் வெளியான ‘ராஜா ஹரிஸ்சந்திரா’வே நாட்டின் முதல் முழுநீள சினிமா. இந்தப்படத்தை உருவாக்கிய தாதாசாகேப் பால்கே, இந்திய சினிமாவின் தந்தையானார். பால்கேவின் முதல் படைப்பின் அடிப்படையிலே இந்திய சினிமாவின் நூற்றாண்டும் கொண்டாடப்பட்டது. இந்திய சினிமாவின் வாழ்நாள் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் உயரிய விருதும், பால்கே பெயரிலேயே ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

துண்டிராஜ் கோவிந்த் பால்கே, அன்றைய பம்பாய் மாகாணத்தின் நாசிக் அருகே பிறந்தவர். ஓவியம், அச்சுக்கலை, ஒளிப்படம், மேஜிக் என மேடை நிகழ்வுகளில் அதீத ஆர்வம் கொண்டவர், அதையொட்டியே தனது தொழிலையும் வாழ்க்கையையும் அமைத்துக்கொண்டார். ஒளிப்படம் எடுத்தால் வாழ்நாள் குறைந்துபோகும் என்ற மூட நம்பிக்கையால் அவரது ஒளிப்படத் தொழில் படுத்தபோதுதான், தன்னம்பிக்கையுடன் முழுநீளத் திரைப்படம் எடுப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கியிருந்தார்.

1910-ல் பால்கே ரசித்த ‘தி லைஃப் ஆஃப் கிறைஸ்ட்’ என்ற பிரெஞ்சுத் திரைப்படம் அவரை பெரிதும் பாதித்தது. அதே பாணியில் தனக்குப் பிரியமான கிருஷ்ணரை வைத்து ஒரு சினிமாவை எடுக்கத் தீர்மானித்தார். கிருஷ்ணன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு அதுநாள் வரையிலான தனது தொழில்களைத் தலைமுழுகினார்.

பன்முகச் சாதனைகள்

திரைத்துறையில் முழுமூச்சாக இறங்கியதும், அதற்கென லண்டன் சென்று படக்கருவிகளை வாங்கி வந்தார். படச் செலவுக்காகத் தனது இன்சூரன்ஸ் பாலிசியை குறைந்த விலைக்கு சரண்டர் செய்ததில் தொடங்கி, நண்பர்களிடம் கடன் பெறுவதுவரை தனக்குத் தெரிந்த அனைத்துவழிகளிலும் பணத்தைப் புரட்டினார். பற்றாக்குறை வரவே பிரத்யேகக் குறும்படம் ஒன்றை எடுத்து அதைப் போட்டுக்காட்டி, செல்வந்தர்களிடம் நிதியுதவி பெற்றார்.

படப்பிடிப்புக்கான நாள் நெருங்கும் தருணத்தில் பால்கே பார்த்த அரிச்சந்திரா நாடகம், அவரது முதல் சினிமாவின் கதையை மாற்றக் காரணமானது. கிருஷ்ணரைக் காத்திருப்பில் வைத்துவிட்டு ‘ராஜா ஹரிஸ்சந்திரா’வைக் கையிலெடுத்தார். ஆனால், அரிச்சந்திரனின் மனைவியாக நடிக்க அக்காலத்தில் பெண்கள் எவரும் முன்வரவில்லை. உணவகம் ஒன்றில் பரிமாறியவரின் நீண்ட அழகான விரல்களைப் பார்த்ததும் பால்கே தனது கதாநாயகியை முடிவு செய்தார். தேசத்தின் முதல் முழுநீளப் படத்தின் நாயகியாக ஓர் ஆண் நடிகரே ஒப்பந்தமானார்.

மௌனப்படமாக வெளியான ‘ராஜா ஹரிஸ்சந்திரா’ பெரும் வெற்றியடைந்தது. படத்தின் ஒரே பிரதி தீக்கிரையான போதும் 1917-ல் மீண்டும் ஒருமுறை அரிச்சந்திராவைப் படச்சுருளில் பதிந்து, அதன் வெற்றிப் பயணத்தைத் தொடரச் செய்தார். இந்த வகையில் நாட்டின் முதல் மறு ஆக்கப் பதிப்பிலும் பால்கேவின் தடம் தானாகப் பதிந்தது.

முதல் படம் வெளியான ஆண்டிலேயே அடுத்து உருவாக்கிய ‘மோகினி பஸ்மாசுர்’ படத்தின் மூலம் நாட்டின் முதல் நடிகையராக, தாய்-மகளான கமலா பாய் கோகலே, துர்காபாய் காமத் ஆகியோரை அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் ஆசைப்பட்ட முதல்படக் கதையை 1918-ல் ‘ கிருஷ்ண ஜென்மா’ என்ற தலைப்பில் உருவாக்கினார். ‘லங்கா தகன்’ படத்தில் ராமன், சீதை என இரு வேடங்களில் ஒரே ஆணை நடிக்க வைத்து முதல் இரட்டை வேட சாதனைக்கும் காரணமானார். திரைப்பட நிறுவனம் ஒன்றை உருவாக்கியதுடன், சினிமா குறித்துத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தார். புதியவர்களுக்கு வழிகாட்டுவதற்காக ‘திரைப்படங்கள் எப்படி உருவாகின்றன?’ என்பதை அக்காலத்திலேயே ஓர் ஆவணப் படமாகவும் எடுத்தார்.

தொடர்ந்து ‘சத்யவான் சாவித்ரி’, ‘பக்த பிரகலாத்’, ‘நளதமயந்தி’ என அடுத்த 15 ஆண்டுகளில் புகழ்பெற்ற திரைப்படங்களை உருவாக்கினார். பெரும்பாலான படங்களில் அவரே அஷ்டாவதானியாகப் பங்களித்திருப்பார். ஆனால், ‘ஆலம் ஆரா’வில் தொடங்கிய பேசும் திரைப்படங்களின் எழுச்சி, பால்கேவின் கடைசிக் கால மௌனப் படங்களைத் தோல்வியடையச் செய்தது.

‘ஆலம் ஆரா’வும் ரயில் பாதையும்

பால்கேவுக்கு ஒரு பிரெஞ்சுப் படம்போல, அர்தேஷிர் ஈரானி வாழ்க்கையை ஒரு ஹாலிவுட் படம் புரட்டிப்போட்டது. மௌனப் படங்களின் மத்தியில் இசையும் பாடலுமாக வசீகரித்த ‘ஷோ போட்’ படத்தில் ஈரானி கிறங்கிப் போனார். படத் தயாரிப்புக்காக ‘இம்பீரியல் ஃபிலிம்’ கம்பெனியை நிறுவிய ஈரானி, கதைக்காக அதிகம் மெனக்கெடவில்லை. அப்போது பிரபலமாக இருந்த ‘ஆலம் ஆரா’ என்ற பார்சி நாடகத்தை அப்படியே திரைப் படமாக்கினார். படத் தயாரிப்பின் பெரும் சவாலாக ஒலிப்பதிவு பயமுறுத்தியது. வில்ஃபோர்ட் டெமிங் என்பவரிடமிருந்து ஒலிப்பதிவுக்கான நுட்பங்களை பிரத்யேகமாகக் கற்றிருந்தாலும், நடைமுறைச் சிக்கல்கள் ஆலம் ஆராவை அலைக்கழித்தன.

ஈரானியின் ஸ்டுடியோவை ஒட்டியே ரயில் பாதை சென்றதால், ரயில் சத்தம் எழாத அதிகாலை 1 முதல் 4 மணிக்குள் தினசரி படப்பிடிப்பை நடத்துவார்கள். பேசும் படம் என்றாலும், படம் நெடுக அக்காலத்திய நாடக பாணியில் நீண்ட பாடல்களும் கிடைக்கும் இடைவெளியில் சொற்பமான உரையாடலும் விரவியிருக்கும். இதற்காகப் படப்பிடிப்பின் மறைவிடங்களில் இசைக் கருவிகளுடன் எப்போதும் ஓர் நாடக இசைக் குழு காத்திருக்கும்.

மௌனப்பட உலகின் முன்னணி நாயகியான சுலோச்சனா என்பவரே ‘ஆலம் ஆரா’வுக்கும் ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், அவருக்கு உருதுவோ இந்துஸ்தானியோ தெரியாது. எனவே, பட வாய்ப்பு சுபைதா என்பவருக்குப் போனது. ஹீரோவுக்குச் சண்டைப் பயிற்சி அடிப்படை என்பதால், அதில் பிரபலமான மாஸ்டர் விட்டல் என்பவரை ஈரானி ஒப்பந்தம் செய்தார். முதல் பேசும் படம் என்பதால் விட்டலும், சாரதா ஸ்டுடியோவுடனான தனது ஒப்பந்தத்தை உடைத்துக் கொண்டு ஈரானி பக்கம் தாவினார்.

சாரதா தரப்பினர் நீதிமன்றம் போகவே, ஈரானிக்கும் விட்டலுக்கும் கவலையேற்பட்டது. இருவரையும் துடிப்பான வழக்கறிஞர் ஒருவர் தேற்றினார். தனது வாதத் திறமையால் முந்தைய ஒப்பந்தத்திலிருந்து விட்டலுக்கு விடுதலை வாங்கித் தந்தார். அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த அந்த வழக்கறிஞர் பெயர் முகமது அலி ஜின்னா!

பிரிவினையை அடுத்து முகமது அலி ஜின்னா பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் ஆனார். ஆனால், அந்தப் பிரிவினை தாய் நிலத்தை மட்டுமல்ல; வளர்ந்துவந்த திரைப்படக் கலையையும் கூறு போட்டது.

மைல்கல்

பாலிவுட் வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையில் இங்கிலாந்து நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட படம் ‘லகான்’. இது 2001-ம் ஆண்டு அமீர் கான் நடிப்பில் வெளியானது.

(வெல்வெட் வாழ்க்கை வளரும்)
- எஸ்.எஸ்.லெனின், தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE