இனி எல்லாம் நலமே 22: மாதவிடாய் தள்ளிப்போனாலே கர்ப்பமா?

By செய்திப்பிரிவு

திருமணமான புதிதில் மாதவிடாய் தள்ளிப் போனால் கர்ப்பமாக இருக்குமோ என சிலருக்குத் தோன்றலாம்.
மாதவிடாய் தள்ளிப்போனதுமே குழந்தை வந்துவிட்டது என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. அப்படியென்றால், கர்ப்பம் தரித்திருப்பதை எப்படி உறுதிசெய்வது?

கர்ப்பத்தை உறுதிசெய்யும் பரிசோதனை உபகரணம் மருந்தகங்களில் கிடைக்கும். அதன்மூலம் வீட்டிலேயே உறுதிசெய்துகொள்ளலாம். இது எளிய செயல்முறைதான். நம் சிறுநீரைக் கொஞ்சம் சேகரித்து, ஒரு சொட்டுச் சிறுநீரை அந்த உபகரணத்தில் அதற்கெனக் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் விட வேண்டும். இரண்டு கோடுகள் (ll மாதிரி) வந்தால் கருவுற்றிருப்பதாகப் பொருள். ஒரே கோடு வந்தால், அது கர்ப்பம் இல்லை எனத் தெரிந்துகொள்ளலாம்.

மாதவிடாய் 35 நாட்கள்வரை வரவில்லை என்றால் (இது சீரான சுழற்சி உள்ளவர்களுக்கே பொருந்தும்) இந்தப் பரிசோதனையைச் செய்து பார்க்கலாம். ஆனால், இதுதான் இறுதியானது எனச் சொல்லிவிட முடியாது. காரணம் சில நேரம் ஒரு கோடு வந்தால்கூடக் கருவுற்றிருக்கலாம். நாம் ஓரளவுக்குத் தெளிவுபெறத்தான் இந்தப் பரிசோதனை. மற்றபடி மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்து, அதில் கிடைப்பதுதான் இறுதியான முடிவு.

ரத்தப் பரிசோதனையில் சீரம் எச்.சி.ஜி. (Human chorionic gonadotropin) என்ற ஹார்மோனைப் பற்றி ஆராய்கிறோம். இந்த ஹார்மோன் இருப்பதாக வந்தால், கர்ப்பம் 100 சதவீதம் உறுதிசெய்யப்படும். காரணம், இந்தக் குறிப்பிட்ட ஹார்மோன் கர்ப்ப காலத்தில்தான் சுரக்கும். ரத்தப் பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்தால் கருவுறுதல் நிகழவில்லை எனப் பொருள்.

ஏன் ஸ்கேன் செய்ய வேண்டும்?

ஒரு பெண்ணுக்கு, கர்ப்பம் காரணமாக அல்லாமல் வேறு காரணங்களாலும் மாதவிடாய் தள்ளிப்போகலாம். தைராய்டு, சினைமுட்டைப் பிரச்சினை, மோசமான ரத்தசோகை, அதிகப்படியான மன அழுத்தம் என எந்தக் காரணமாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆகவே, தள்ளிப்போன மாதவிடாய் அனைத்தும் கர்ப்பமாகி விடாது.

கர்ப்பம் என்று தெரிந்தால் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். “கர்ப்பம் என்பதுதான் உறுதியாகிவிட்டதே; உடனே ஏன் ஸ்கேன் செய்ய வேண்டும்? நாலு மாசம் ஆகட்டுமே” எனப் பலர் சொல்வார்கள். இது தவறு. கரு, கருப்பைக்கு வந்துவிட்டதா, இதயத் துடிப்பு ஆரம்பித்துவிட்டதா என்று பார்ப்பதற்காகத்தான் ஸ்கேன் செய்யச் சொல்கிறோம். 45 நாளிலிருந்து 55 நாளுக்குள் பார்க்கும்போது இது தெரியவரும். மாதவிடாய்ச் சுழற்சித் தேதியைத் தவறாகச் சொல்லியிருந்தால் சிலருக்கு இந்த நாள் கணக்கு அதிகமாகலாம்.

முதலில் செய்யக்கூடிய ஸ்கேனில் இரண்டு விஷயங்களை முக்கியமாகப் பார்ப்போம். கரு உருவானதில் இருந்து எத்தனை வாரங்கள் ஆகியிருக்கின்றன என்று பார்ப்போம். இது தோராயமான கணக்குத்தான். இதயத் துடிப்பு தொடங்கிவிட்டதா என்று பார்ப்போம். கரு சினைக்குழல்களில் உள்ளதா அல்லது கருப்பைக்கு வந்துவிட்டதா என்று பார்ப்போம்.

நம் ஊடகங்கள் மூலமாகப் பரவியுள்ள ஒரு கருத்து பற்றிச் சொல்லியாக வேண்டும். பொதுவாக, சீரியல்களிலும் சினிமாக்களிலும் என்ன காட்டுகிறார்கள்? ஒரு பெண் வாந்தியெடுப்பாள். மருத்துவர் வந்து நாடி பிடித்துப் பார்த்துவிட்டுக் கர்ப்பம் என்று சொல்வார். இதனால், கருவுற்றால் நிச்சயமாக வாந்தி வரும் என்று பலரும் நினைத்துக்கொள்கிறார்கள்.

ஆலோசனை அவசியம்

என்னிடம் வந்த ஒரு பெண்ணுக்கு அவள் கர்ப்பம் தரித்ததில் இருந்து வாந்தி வந்ததே இல்லை. “நான் உண்மையாகவே கர்ப்பமாகத்தான் இருக்கிறேனா? எனக்கு ஏன் வாந்தி வரவில்லை? குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்கிறதா?” என்று அந்தப் பெண் என்னைக் கேட்டுக்கொண்டே இருந்தார். கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் ஒரு பெண்ணுக்கு உடலில் நிறைய மாற்றங்கள் வரக்கூடும். சிலருக்குத் தலைசுற்றல், வாந்தி போன்றவை இருக்கும். அதிகப்படியான தூக்கம் வரலாம். காய்ச்சல் வந்ததுபோல் இருக்கலாம். சிலருக்கு இந்த எல்லாவிதமான அவஸ்தைகளும் சேர்ந்தே இருக்கலாம். சிலருக்கு எதுவுமே இல்லாமல்கூட இருக்கலாம்.

இன்னொரு பெண், தான் கருவுற்றிருப்பதை அறிந்த பிறகும் நான்கு மாதங்கள்வரை எந்த ஸ்கேனும் பார்க்கவில்லை. ‘மருமகள் கர்ப்பம்’ என்று ஊரெல்லாம் சொல்லிவிட்டார்கள். பிறகு ஸ்கேன் செய்து பார்த்ததில் கரு தங்கிவிட்டதே தவிர, அதில் உயிர் இல்லை. இதை ‘missed abortion’ என்போம். அதனால்தான் ஒரு பெண் கருவுற்றது தெரிந்ததுமே மகப்பேறு மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்கிறோம். உண்மையை முழுவதும் தெரிந்துகொள்ளாமல் சொல்வதால், எல்லோருக்கும் மனவேதனை; ஊருக்கெல்லாம் காரணம் சொல்ல வேண்டிவரும். ஆளாளுக்கு அவர்கள் அனுபவங்களைக் கண், காது, மூக்கு வைத்து மிகைப்படுத்திப் பயமுறுத்துவார்கள்.

மாதவிடாய் தள்ளிப்போதல், கர்ப்பமா என்று சோதித்தல், மருத்துவரைப் பார்த்தல், கர்ப்பம் சரியாக இருப்பதை உறுதிசெய்தல் போன்றவை கர்ப்ப காலத்தின் முக்கியமான படிநிலைகள்.

என்ன செய்யக் கூடாது?

கர்ப்ப காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளுக்கு மருந்துகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வாந்தி வருவதுபோல் இருந்தால் மாத்திரை சாப்பிடுவதைவிடத் தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு பிழிந்து குடிப்பது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்லது வாயு ஏற்படுவது போன்றவற்றுக்குச் சில்லென்று பால் குடிப்பது, நமக்குப் பிடித்த மாதிரியான உணவு வகைகளை மாற்றியமைத்துக்கொள்வது, தேவைப்படுகிற அளவு ஓய்வெடுத்துக்கொள்வது போன்றவற்றைச் செய்யலாம்.

சிலர் தலைவலி என்றால் வலி நிவாரணிகளைச் சாப்பிடுவார்கள். இதுவும் தவறே. தேவையில்லாத மருந்து, மாத்திரைகளைச் சாப்பிடுவதால் அவை எல்லாமே குழந்தையையும் சென்றடையும் சாத்தியம் உள்ளது. அதுவும் முதல் மூன்று மாதங்களில் குழந்தை வளர்ச்சியடையும் நேரத்தில் எல்லா மருந்து, மாத்திரைகளும் குழந்தைக்கும் போய்ச்சேரும். தேவைப்பட்டால் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே மருந்துகளைச் சாப்பிட வேண்டும்.

கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் சிலருக்குச் செரிமான பிரச்சினைகள் இருக்கலாம். அதிக எண்ணெய், காரம் இல்லாத உணவு வகைகளைச் சிறு சிறு இடைவேளைகளில் சாப்பிட வேண்டும். எண்ணெய்யும் காரமும் நிறைந்த உணவை அதிகமாகச் சாப்பிட்டால் வாந்தி எடுக்க நேரிடும்போது நெஞ்சு எரிச்சல் அதிகமாக இருக்கும். அதேபோல் எக்ஸ்ரே எடுக்கக் கூடாது. வேறு பிரச்சினைகளுக்காக மருத்துவரை அணுக நேர்ந்தால், கர்ப்பம் தரித்திருப்பதைப் பற்றி அவர்களிடம் முதலிலேயே தெரிவித்துவிட வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுவதும் மனதை நிம்மதியாக வைத்துக்கொள்வதும் அவசியம். யார் என்ன சொன்னாலும் (இதைச் சாப்பிடாதே, அதைச் சாப்பிடு, குனியாதே, பளு தூக்காதே) மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு, அதன்படி நடக்க வேண்டும். வீட்டில் நல்ல அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனையைக் கேட்கலாம். உடன் வேலை செய்பவர், சம வயதுடையவர்கள் எனப் பலரும் சொல்வதில் சரியும் இருக்கலாம், தவறும் இருக்கலாம். பலரும் சொல்லக்கூடிய பயமுறுத்தல் கதைகளைக் கேட்டுப் பதறக் கூடாது. குழந்தையைச் சுமப்பதை மனப்பூர்வமாக விரும்பி மன நிம்மதியுடன் எதிர்கொள்ள வேண்டும்.

- அமுதா ஹரி (நலம் நாடுவோம்)
அமுதா ஹரி, மகப்பேறு மருத்துவர்.
தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்