டாக்டர் ஆர். கார்த்திகேயன்
எண்ணங்களை மாற்றினால் எல்லாமே மாறிவிடும் என்று தெரிகிறது. ஆனால், அதை அன்றாட வாழ்க்கையில் முக்கியமான தருணங்களில் மறந்துவிடுகிறோம். எல்லா எண்ணங்களும் நல்லவை என்று நம்பிவிடுகிறோம். மோசமான எண்ணத்துக்கான மோசமான பலன்கள் வரும்போது, “இது எப்படி நிகழ்ந்தது?” என்று ஆச்சரியமாகக் கேட்கிறோம். நம் எண்ணங்கள்தாம் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கும் பெரும் காரணிகள் என்றால் அதை ஏன் கவனித்துச் சீராக்கத் தவறுகிறோம்?
“நடக்கக் கூடாது என்று நினைப்பதுதான் நடக்கிறது!” என்பது எவ்வளவு செறிவான தன்னிலை விளக்கம் பாருங்கள். இதை ஆராயுங்கள். கவுண்டமணி-செந்தில் வாழைப்பழ காமெடிபோல இதை வசனமாக ஓட்டிப் பார்க்கலாமா?
“அண்ணே, நான் நடக்கக்கூடாதுன்னு நினைச்சா மட்டும் அதுவே நடந்துடுதுண்ணே...எப்படி?”
“அடேய்.. நீ என்ன நினைச்சே சொல்லு!”
“வண்டி ஓட்டும்போது விழாம ஓட்டணும்னு நினைச்சேன். ஆனா விழுந்துட்டேன்!”
“நீ ‘விழுந்துடக் கூடாது’ன்னு தானே நினைச்சே, அதான் நீ நினைச்ச மாதிரி விழுந்துட்டே!”
“அண்ணே, நான் விழாம ஓட்டணும்னு தானே நினைச்சேன். ஆனா விழுந்துட்டேன். எப்படிண்ணே!”
“அது தாண்டா. நீ விழுறத பத்தி நினைச்சே. அதுவே நடந்துடுச்சு!”
நிஜமான மாயை
எதை வேண்டாம் என்று யோசிக்கிறோமோ அதுதான் கரு. ஆகக் கூடாது என்பது உள் நோக்கம். ஆனால், மனத்தின் கற்பனை ஓட்டத்தில் நிகழ்வது எதை வேண்டாம் என்று நினைக்கிறோமோ அதுதான். அது உள் மன ஆற்றலிலும் உடலின் ஒவ்வொரு அணுவுக்கும் இந்தச் செய்தியைப் பலமாகக் கொண்டுசெல்கிறது.
அது நடப்பதற்கான சூழலை உங்கள் மனம், உடல், உங்களைச் சுற்றிய பிரபஞ்ச சக்தியும் ஏற்படுத்தும். இது ஒன்றும் மாந்திரீகம் அல்ல. மிக எளிய அறிவியல் உண்மை.
உங்கள் எண்ணம் ஒரு படமாகத்தான் உள்மனத்தில் பதிவுசெய்யப்படுகிறது. அச்சு எழுத்துகளால் அல்ல. அதனால் காட்சி வடிவத்துக்கு உண்மையா பொய்யா, நன்மையா தீமையா என்ற பாகுபாடு கிடையாது. எண்ணங்களைக் கற்பனையில் சம்பவங்கள்போல ஓட்டிப் பார்ப்பது மனத்தின் வேலை. திரைப்படம் பார்க்கும்போதுகூட உணர்ச்சிவசப்படுவது இதனால்தான். கண் முன்னால் நடப்பது மாயை என்றாலும் உடலும் மனமும் அதை நிஜம்போலத்தான் பாவிக்கின்றன.
எதிர்மறையான நேர்மறை தேவையா?
ஒரு படத்தைவிட ஆயிரம் மடங்கு வீரியம்கொண்டவை எண்ணங்களால் தயாராகும் உள்மனப்படங்கள். காரணம் அவை ஒரே காட்சியைப் பலமுறை ஓட்டிப் பார்க்கும். ஏன்? ஒரே எண்ணத்தைத்தானே நாம் பலமுறை நினைத்து நினைத்துப் பார்க்கிறோம்.
“பையன் ஃபெயிலாகக் கூடாது. அது ஒண்ணுதாங்க என் எண்ணம்.” “யார் கையையும் எதிர்பார்க்காமல் கடைசிவரைக்கும் இருக்கணும்.” “சொதப்பாம மேடையில பேசணும்”. “பாஸ் இல்லைன்னு சொல்லிட்டா அடுத்த பிளான் என்ன செய்ய?” இவை அனைத்தும் நேர்மறையான எண்ணங்கள்தாம். ஆனால், வார்த்தைகளில் எதிர்மறையாக வெளிப்படுபவை. மனமும் இதற்குத் திரை வடிவம் கொடுத்தால் “வரக் கூடாது” என்கிற அந்தக் காட்சியை ஓட்டிப் பார்க்கும். உடலும் மனமும் அந்த எதிர்விளைவுக்குப் பழக்கப்படும். பிறகு அவை வாழ்க்கைத் தத்துவங்களாய் உருவெடுக்கும். “நம்ம நினைச்சது எது நடக்குது சொல்லுங்க...!” “பயந்த மாதிரியே ஆகிப் போச்சு பாரு!”
நான் பலமுறை சொல்லும் உதாரணம் இது. கண்ணாடி டம்ளரில் தண்ணீரை வழிய வழிய எடுத்துக்கொண்டு மெல்ல நடந்து வருகிறது ஒரு குழந்தை. உடனே, “கீழே விழுந்து கண்ணாடி டம்ளர் உடைந்து அடிபடுமோ” என்ற எண்ணமும் ஒரு சித்திரமும் உங்கள் மனத்தில் ஓடுகின்றன. “கீழ போட்டுறப் போற… பாத்து!!” என்று அலறுகிறீர்கள். உங்கள் நோக்கம் குழந்தையின் பாதுகாப்புதான். ஆனால், நீங்கள் “கீழ போட்டுறப் போற... பாத்து!!” என்றவுடன், அதுவரை நம்பிக்கையோடு சென்ற குழந்தை, “கீழே போட்டால் அடி உறுதி” என்ற எண்ணத்தின், உள்மனத் திரையாக்கத்தின் விளைவால் கூடுதல் பிடியுடன் டம்ளரை இறுக்க, அது நழுவிக் கீழே விழுந்து உடைகிறது.
உடனே நீங்கள் சொல்வீர்கள்: “நான் சொன்ன மாதிரியே நடந்துச்சு பாத்தியா?” (உண்மையில் நீங்கள் உங்கள் எண்ணத்தால் புரிந்த சாதனைதான் அது! அதோடு நிற்குமா நம் எண்ணம்? குழந்தைக்குப் புத்திமதி சொல்லும்; “உனக்கு ஏன் இந்த வேலை. உன்னால இது முடியுமா? அதிகப்பிரசிங்கித்தனம் கூடாது!”
குழந்தைக்கு இந்தப் புத்திமதி சொன்னவர்கள் சில வருடங்கள் கழித்துப் புகார் சொல்வார்கள்:
“சொல்லாம எந்த வேலையையும் செய்ய மாட்டான்!”
சரி, இந்த கேசில் அந்தப் பயமும் பதற்றமும் நியாயம் தானே, என்ன சொல்லியிருந்திருக்கலாம்? “ஒரு கையைக் கீழே கொடுத்து டம்ளரைப் பத்திரமா எடுத்துட்டுப் போ..ஆ... அப்படிதான் சூப்பர்!” இப்போது நாம் அந்தக் குழந்தைக்கு அளிக்கும் எண்ணமும் கற்பனை சித்திரமும் முற்றிலும் நம்பிக்கை அளிப்பவை.
காதல் முதல் வேலைவரை பல கல்லூரிகளில் பேசும்போது இளைஞர்கள் என்னிடம் அதிகம் கேட்கும் கேள்வி இதுதான்: “பயம், தாழ்வு மனப்பான்மையைப் போக்குவது எப்படி?” காதல் முதல் வேலைக்கான நேர்காணல்வரை மனத்தில் உள்ளதைச் சரியாகச் சொல்ல இயலாமல் தடுப்பவை அவர்களின் எண்ணங்களே. இதைப் பல கூட்டத்திலும் தனிநபர் ஆலோசனையிலும் தொடர்ந்து சொல்லிவருகிறேன். “ஏன் தாழ்வு மனப்பான்மை?” என்று கேட்டால் பெரும்பாலான காரணங்கள் என்னென்ன?
“எனக்கு இங்கிலீஷ் பேச வராது.” “கிராமத்தில படிச்சதாலே முன்னேற முடியலை” என்பது போன்ற மிக வலிமையான எதிர்மறை எண்ணங்கள். இவை எத்தனை காலம் எத்தனை படங்களை உள் மனத்திரையில் ஓட்டியிருக்கும், இவ்வளவு வலிமைபடைத்த எண்ணங்களை மாற்ற முடியுமா, என்ன?
முடியும். முள்ளை முள்ளால் எடுப்பதுபோல, எண்ணத்தை எண்ணத்தால் சரி செய்யலாம்!
கேள்வி: எனக்கு வயது 20. வாழ்க்கையில் எதிலும் கமிட் ஆகவும் பயமாக உள்ளது. இதனால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. படிப்பு மட்டுமல்ல வாழ்க்கையில் எதிலுமே பிடிப்பு இல்லை. அதேநேரம் வருங்காலத்தில் என்ன செய்யப் போகிறோம், நேர விரயம் ஆகிறதே என்ற பயமும் உள்ளது. நிறைய யோசித்து எதையும் செய்யாமல் இருப்பதுபோல உணர்கிறேன்.
பதில்: இது இந்தத் தலைமுறையின் குணம் என்றுகூடச் சொல்லலாம். தனக்கு எது வேண்டும் என்று தெரியாதவரை எதையும் செய்யாமல் இருப்பது, தவறாக முடிவு எடுத்துவிடக் கூடாது என்று முடிவெடுப்பதைத் தள்ளிப்போடுவது, தனியாக யோசித்துக் குழம்புதல் போன்றவை. இதனால்தான் எதிலும் ஒத்துப்போகச் சிரமப்படுகிறீர்கள். குடும்பம், கல்லூரி, ஊர், நட்புவட்டம் என எதிலும் சமரசம் செய்யாமல் தானாக ஒரு முடிவு எடுக்க வேண்டும். அது சரியாகவும் இருக்க வேண்டும் என்ற பதற்றம்.
இவையே இதற்குக் காரணிகள். வாழ்க்கை ஒரு இலக்கை நோக்கி ஓடுவதல்ல. போகும் பாதையை ரசிப்பது. தன் வாழ்க்கைக்குக் குறிக்கோள் கிடைக்காவிட்டால் பரவாயில்லை எனப் பிறர் வாழ்க்கைக்கு உதவலாமே. இன்று சேவைதான் சிறந்த சுய உதவி. உங்களை மறந்து பிறரைக் கவனத்தில் கொள்ளுங்கள். உங்களுக்கென ஆயிரம் கதவுகள் திறக்கும்.
(தொடரும்)
கட்டுரையாளர் மனிதவள பயிற்றுநர்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago