இந்தியா என்கிற யானை

ஐரோப்பிய மாணவி ஒருவர் என்னிடம் “இந்தியா ஏன் இப்படி அழுக்காக, ஏழ்மையாக இருக்கிறது? என்றார். என்ன பதில் தருவதென்று எனக்குத் தெரியவில்லை.

அமெரிக்கா சென்றிருக்கும் மகனின் பாஸ்போர்ட்டைப் பறிமுதல் செய்யச் சொல்லி 75 வயதான பெற்றோர் என்னிடம் கெஞ்சினார்கள். “என் மகன் இந்தியாவில் எதுவும் சரியில்லை என்று குறை சொல்லிக்கொண்டே இங்கே வருவதே இல்லை. அமெரிக்காவில்அவனுடைய குழந்தைகளை வீட்டில் பார்த்துக்கொள்வதற்காக இப்போது அவன் எங்களையும் அங்கே இழுக்கிறான். இந்த மண்ணுல சாகணும்னுதான் நான் விரும்பறேன், உதவ முடியுமா?” என்றார்கள்.

இதுபோல நிறைய பாஸ்போர்ட் சோகக் கதைகளை நான் கேட்பதுண்டு.

இந்தியனே வெளியேறு

எங்கள் அலுவலகத்துக்கு தத்கல் பாஸ்போர்ட் விண்ணப்பித்து ‘இந்தியனே வெளியேறு’ இயக்கத்தை ஆயிரம் ஆயிரம் பொறியாளர்கள் நடத்துகிறார்கள். நான் வெளிநாட்டு வேலைக்கு எதிரி அல்ல, ஆனால், இந்தியாவில் எதுவும் சரியில்லை என்று பேசுவதுதான் என்னை வருத்தப்படுத்துகிறது.

4,000 வருடங்கள் முன்பாக, உலகில் பெரும்பான்மையோர் குகைகளில் வாழ்ந்தபோது இங்கேதான் மக்கள் நகரங்களை அமைத்து நாகரிகத்தின் உச்சம்தொட்டார்கள்.

இன்றைய நிலைமையை மட்டும் வைத்து இந்தியாவைக் கணிப்பது கண்தெரியாத ஒருவர் யானையின் வாலை மட்டும் தொட்டுப்பார்த்துவிட்டு அதையே முழு யானை என்று நினைப்பதைப் போல.

சுதந்திரத்திற்கு முன்னால்இருந்த 150 ஆண்டுகளில்தான் இந்தியா ஒரு மோசமான நோயாளியைப்போல் ஆகிவிட்டது.

முதல் துறைமுகமும் அணையும்

உலகின் முதல் கடற்துறைமுகம் 4,500 ஆண்டுகளுக்கு முன்னால் நம்மால் உருவாக்கப்பட்டது. உலகின் முதல் அணை தென் தமிழகத்தில்தான் கட்டப்பட்டது. கி.பி. 2 ஆம்நூற்றாண்டில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட கல்லணைதான் அது.

66 மீட்டர் உயரம் கொண்ட தஞ்சாவூர் பெரியகோயில், கி.பி. 1010 - ல்கட்டப்பட்டது. அது இன்றளவும் கம்பீரமாய் நிற்கிறது.

இன்றைய நிலையின் காரணங்கள்

எந்த ஒரு போர்த் தொடுப்பும் இல்லாமல் உலகின் கிழக்குப் பகுதியை நாம் ஜெயித்தோம். நமது கருத்துக்கள், நம்பிக்கைகள், கலைகள் மூலமாக.

கி.பி 1 லிருந்து கி.பி.1000 ஆண்டுவரை இந்தியா மிகப் பெரிய பொருளாதார வல்லரசாக விளங்கியது. ஆங்கிலேயர்கள் வெளியேறியபோது இந்தியப் பொருளாதாரம் வறுமைக்கோட்டுக்குக் கீழே வந்துவிட்டது. பசியும் பஞ்சமும் தலைவிரித்தாடின. உலக நிகழ்வுகளின் தாக்கமும் ஆங்கிலேயர் ஆட்சியும்தான் இந்த நிலைமைக்கு இந்தியாவைத் தள்ளியவை.

இந்திய வரலாறு அறிதல் இயக்கம்

நம் குழந்தைகளுக்கும் சந்ததியினருக்கும் தெரியப்படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இது ஆங்கிலம் பேசும் அறிவுஜீவிகளையும் கல்லூரி முடித்து, இரவோடு இரவாக வெளிநாடு பறக்கும் கணினி மேதைகளையும் உருவாக்குவதைவிட முக்கியமானது. ‘இந்திய வரலாறு அறிதல் இயக்கம்’ நமது உடனடித் தேவை.

நம் நாட்டின் வறுமை மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்த நமக்குத் தேவை தேசப்பற்றும் மனிதத்தன்மையும் நிறைந்த மக்கள்தானே தவிர வெறும் அறிவாளிகள் இல்லை. நமது ஏழ்மை மற்றும் குப்பைகளோடு நம்மை ஏற்றுக்கொள்ளத் துணிவோம். அங்கேதான் நமது வளர்ச்சிக்கான அடிக்கல் நாட்டப்படும்.

மாறுதல் வரும்

இந்தியாஉலகிலேயே 11-வது பெரிய பொருளாதாரமாகும், இரண்டாவது வேகமாய் வளரும் பொருளாதாரம். வாங்கும் சக்திகொண்ட பொருளாதாரத்தில் நான்காவது இடத்திலும் இருக்கிறது.

இந்த இளைய தலைமுறை உலகங்கிலும் மிகுந்த வரவேற்பைப் பெறுகிறது. அமெரிக்கர்களையும் ஐரோப்பியர்களையும் பொருளாதாரப் போட்டியில் இந்தியா தொட முடியாமல் இன்றைய நிலை இருக்கலாம். ஆனால்,தனது நிலையை வெகு விரைவிலேயே அது மாற்றிக்கொள்ளும்.

இந்தியா காயம்பட்டு அதிலிருந்து மீண்டுவந்துகொண்டிருக்கிறது.

கட்டுரையாளர் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE