பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெற்றி பெற்றவர்களின் கொண்டாட்டங்களும் ஓரளவு ஓய்ந்திருக்கும். அடுத்து என்ன படிக்கலாம் என்பதைப் பலர் முன்கூட்டியே முடிவுசெய்து அதற்கேற்ற பாடப்பிரிவை பதினோராம் வகுப்பில் தேர்ந்தெடுத்திருப்பார்கள். பெரும்பாலான மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளைத்தான் தங்கள் கனவாக நினைத்திருப்பார்கள்.
அதிகரித்திருக்கும் பொறியியல் கல்லூரிகளால் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாலே போதும், பொறியியல் கல்லூரியில் சேர்ந்துவிடலாம் என்ற நினைப்பும் பலருக்கு உண்டு. இப்படிப் படித்து வெளியேறுகிற அனைவருக்கும் வேலைகிடைத்துவிடுகிறதா என்றால், இல்லை என்ற கசப்பான பதிலைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஒரு மாணவன் அல்லது மாணவிக்கு உண்மையிலேயே பொறியியல் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அதற்கேற்ற திறமையும் இருந்தால் அதைப் படிப்பதில் தவறில்லை. ஆனால் பெற்றோர்கள் சொல்கிறார்கள், அடுத்தவர்கள் படிக்கிறார்கள் என்பதற்காகத் தொழில்முறை கல்வியில் சேர்வது வெற்றிக்கான வழியல்ல.
பெரும்பாலான மாணவர்கள் தொழில்முறை கல்வியைத் தேர்ந்தெடுக்கக் காரணம் மற்றும் கலை அறிவியல் பாடப்பிரிவுகளைப் படித்தால் வளமான எதிர்காலம் இருக்காது என்ற நினைப்புதான். இன்னும் சிலருக்கு இளங்கலை பயிலும் ஆர்வம் இருந்தாலும், அவற்றில் இருக்கிற பிரத்யேக பாடப்பிரிவுகள் குறித்தும் அவற்றுக்கு இருக்கும் தொழில் வாய்ப்புகள் குறித்தும் அறியாமல் இருப்பார்கள்.
“மாணவர்கள் அடுத்தவர் களுக்காக ஒரு பாடப் பிரிவைத் தேர்ந்தெடுப்பது தவறு. எதைப் படித்தாலும் அதில் சாதிக்கக்கூடிய ஆளுமையை வளர்த்துக்கொண்டால் லட்சியத்தை அடைவது எளிது” என்கிறார் சென்னை சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மா. கண்ணன். கலை மற்றும் அறிவியலில் கொட்டிக் கிடக்கும் படிப்புகள் குறித்தும் அவற்றுக்குக் காத்திருக்கும் தொழில் வாய்ப்புகள் குறித்தும் அவர் விளக்குகிறார்:
வளமான வரலாறு
பலரால் புறக்கணிக்கப்படுகிற பாடப் பிரிவுகளில் வரலாறும் ஒன்று. பி.ஏ. வரலாறு படித்துவிட்டு அதிலேயே பட்ட மேற்படிப்பு முடிக்கிற பொறுமையும் திறமையும் இருந்தால் நிச்சயம் ஒருவரால் வரலாற்று ஆராய்ச்சியாளராகத் தடம்பதிக்க முடியும். வரலாறு முடித்தவர்கள் ஆவணக் காப்பகம், நூலகம், அருங்காட்சியகம் ஆகியவற்றில் பணியாற்றலாம்.
அரசின் ஆவணங்களைப் பாதுகாக்கும் ஆவணப் பாதுகாவலர் வேலைக்கும் இந்தப் படிப்பு உதவும். அரசியல்வாதிகளில் பலர் வரலாறு படித்தவர்களைத் தங்களின் மக்கள்தொடர்பு அலுவலராகவும் அந்தரங்கக் காரியதரிசியாகவும் நியமிக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல். இவை அனைத்தையும் தவிர ஆசிரியர் பணியையும் தேர்ந்தெடுக்கலாம்!
பொருள் தரும் பொருளாதாரம்
பலரும் பி.ஏ பொருளாதாரம் மட்டுமே இந்தப் பிரிவில் இருப்பதாக நினைப்பார்கள். ஆனால் Business Economics, Development Economics போன்ற பிரிவுகளும் பல கல்லூரிகளில் உண்டு. வணிகவியல் பிரிவில் Company Secretary, Chartered Accountancy போன்றவை தவிர E Banking, E Commerce, ICW போன்ற படிப்புகளையும் தேர்ந்தெடுக்கலாம். இவற்றைப் படிப்பதால் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் வேலை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தவிர முதலீடு சம்பந்தமான ஆலோசனைகள் சொல்லும் Financial Analyst பதவியும் வகிக்கலாம். பெருகிவரும் ஆன்லைன் வர்த்தகம் இந்தப் படிப்புகளை முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரித்திருக்கிறது. BBM எனப்படும் Bachelor of Business Management படித்தால் வங்கிகள் நடத்தும் போட்டித் தேர்வுகளைப் பயமின்றி எதிர்கொள்ளலாம்.
Actuarial science எனப்படும் படிப்பு அவ்வளவாக அறியப்படாதது. கணிதமும் புள்ளியியலும் இணைந்த இந்தப் படிப்பு, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் நிதிநிலை ஏற்ற இறக்கங்களைக் கணிக்கப் பெரிதும் உதவும். அதிகபட்ச சம்பளத்தைப் பெற்றுத் தரும் படிப்புகளில் இதுவும் ஒன்று.
சமூகவியலில் சாதிக்கலாம்
சமூகம் சார்ந்து இயங்க நினைக்கிறவர்கள் Socialogy அல்லது Social work படிக்கலாம். தனியார் நிறுவனங்களுக்கு நிகராக அதிகரித்திருக்கும் என்.ஜி.ஓ.க்களில் இவர்கள் பணியாற்றலாம். கார்ப்பரேட் நிறுவனங்களின் நிகர லாபம் ஒரு அளவுக்கு மேல் இருந்தால், அதில் ஒரு பகுதியை சமூகநலத் திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று விதி இருக்கிறது. அந்த வகையில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் அந்த நடைமுறையை அமலாக்க உதவும் அதிகாரியாகப் பணியாற்றலாம்.
உளவியலில் உயர்வுண்டு
மன நலம் சார்ந்து படிக்க நினைக்கிறவர்கள் உளவியலைத் தேர்ந்தெடுக்கலாம். உளவியலில் பட்ட மேற்படிப்பு படித்துவிட்டு உளவியல் ஆலோசகராகப் பணியாற்றலாம். மாறிவரும் வாழ்க்கை முறை பலருக்கும் மன நல சிக்கல்களைப் பரிசளித்திருக்கிறது.
குழந்தைகள்கூட இன்று மன உளைச்சலுக்கும் மன அழுத்தத்துக்கும் ஆளாகிறார்கள். இதுபோன்ற நிலையில் பல பள்ளிகளும் மன நல ஆலோசகர்களைப் பணியில் அமர்த்துவதால் பணி வாய்ப்புக்குக் குறைவில்லை. அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மறுவாழ்வு மையங்களிலும் பணியில் சேரலாம்.
வாசல் திறக்கும் ஊடகம்
காட்சி மற்றும் செய்தி ஊடகங்கள் அதிகரித்திருக்கும் இந்தச் சூழலில் அவை சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுத்தாலும் வளமான எதிர்காலம் சாத்தியம். B.Sc. Visual communication, B.A. Journalism and Mass communication போன்றவற்றைப் படித்தால் செய்தி ஊடகம் தவிர குறும்படங்கள், திரைத் துறை ஆகியவற்றிலும் சாதிக்கலாம்.
வெற்றி தரும் வடிவமைப்பு
Designing எனப்படும் வடிவமைப்பு பாடப் பிரிவில் பல படிப்புகள் உண்டு. Fashion Designing, Graphic Designing, Textile and Retail Designing, Interior Designing என்று பல படிப்புகள் உள்ளன. நாம் தேர்ந்தெடுக்கிற படிப்புக்கு ஏற்ற துறையில் சாதிக்கலாம். இவை பட்டப் படிப்புகளாகவும் பட்டயப் படிப்புகளாகவும் இருக்கின்றன. விருப்பமானதைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஃபேஷன் டிசைனிங் படித்தால் புதிய ஆடை கலாச்சாரத்தையே உருவாக்கிவிடலாம். படிப்பறிவுடன் கற்பனை வளமும் திறமையும் கைகோத்தால் போதும். தேசிய அளவில் நடக்கும் நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்றால் NIFT-ல் சேரலாம். தனியார் கல்லூரிகளும் ஃபேஷன் டிசைனிங் படிப்பை வழங்குகின்றன.
கணினிகளின் ஆதிக்கம் ஓங்கியிருக்கும் இந்தச் சூழலில் கிராஃபிக் டிசைனிங் படித்தவர்களுக்குத் தொழில் வாய்ப்புகள் ஏராளம். அதேபோல ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி, இண்டீரியர் டிசைனிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது.
மருத்துவம் சார்ந்த படிப்புகள்
எம்.பி.பி.எஸ். படித்தால் மட்டுமே மருத்துவப் பணியில் சேரமுடியும் என்பதில்லை. மருத்துவத் துறையுடன் தொடர்புடைய ஏராளமான படிப்புகள் இருக்கின்றன. B.Sc. Prothetics and Orthotics படித்தால் எலும்பு சிகிச்சை நிபுணரிடம் உதவியாளராகப் பணியாற்றலாம். B.Sc. Accident and Emergency care, Critical care Technology போன்ற படிப்புகளைப் படித்தால் அவசர சிகிச்சை மையங்களில் பணிபுரியலாம்.
B. Sc. Nuclear Medicine, Radio therapy படித்தால் MRI/CT ஸ்கேன், கீமோதெரபி ஆகியவற்றில் பணியாற்றலாம். Radiologist ஆகவும் பணியாற்றலாம். இவை தவிர Cardiac Technology, Clinical Psychology போன்ற படிப்புகளையும் தேர்ந்தெடுக்கலாம்.
வேலை தரும் வேளாண்மை
உலகமயமாக்கலும் வணிகமயமாக்கலும் விவசாய நிலங்களை ஒடுக்கிவிட்டன. மிகத் தாமதமாக என்றாலும் வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த மக்களின் தற்போதைய விழிப்புணர்வு வரவேற்கத்தக்கது. அதனால் வேளாண் துறையில் சாதிக்க வழிகாட்டும் B.Sc. Agri படிப்பைப் படிக்கலாம்.
Sericulture, Horticulture, Forestry, Agro Business போன்ற படிப்புகளையும் படிக்கலாம். செரிகல்சர் எனப்படும் பட்டுப்புழு வளர்ப்பு, லாபம் தரக்கூடிய தொழில். வனத்துறை தொடர்புடைய படிப்புகளைப் படித்தால் வனச்சரகர் உள்ளிட்ட வனத்துறை சார்ந்த பணிகளில் அமரலாம். தனியார் பண்ணைகள், எஸ்டேட்களில் மேலாளராகப் பணியாற்றலாம். வேளாண் பொருட்களின் விற்பனை சார்ந்த துறைகளில் பணிபுரிய அக்ரோ பிசினஸ் வழிகாட்டும்.
ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியால் பெரும்பாலான விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டுவிட்டன. இதனால் விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. எஞ்சியிருக்கும் விவசாய நிலங்களில் பயிரிடுகிறவர்களின் எண்ணிக்கையும் குறைவு. இப்படியொரு சூழலில் வேளாண் துறையில் துணிச்சலோடு இறங்கி வெற்றிபெறலாம்.
உணவே உயர்வு
இந்த அவசர யுகத்தில் பலரும் உடனடி உணவுகள் அல்லது பாதி சமைக்கப்பட்ட உணவுகளையே பயன்படுத்துகின்றனர். இப்படி பதப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வரும் உணவுப் பொருட்களுக்கு சந்தையில் எப்போதும் வரவேற்பு உண்டு. அதனுடன் தொடர்புடைய Food processing பட்டயப் படிப்பை தொலைக் கல்வியிலும் படிக்கலாம்.
இந்தப் படிப்பை முடித்துவிட்டு சுயதொழில் தொடங்க விரும்புகிறவர்களுக்கு இயந்திரங்கள் வாங்க அரசு நிதியுதவி தருகிறது. அதனால் பயமின்றி களத்தில் இறங்கலாம்.
“இன்ஜினீயரிங் படிப்பைவிட பட்டப்படிப்பில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு ஆகும் செலவு குறைவு. ஆனால், தொழில்முறை கல்வி படித்தவர்களுக்கு இணையாக இவர்களும் சம்பளம் வாங்கலாம். விருப்பப் பாடத்தைத் தேர்ந்தெடுத்து படிக்கும் வசதியும் இந்தப் படிப்புகளில் உண்டு” என்கிறார் கண்ணன்.
இப்படி வளம் சேர்க்கும் படிப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago