சில வாக்கியங்கள் படிக்கும்போதே வியக்க வைக்கும். அவற்றில் உள்ள தகவல்களால் அல்ல, அவை எழுதப்பட்ட விதத்தால். எழுதியவரின் மொழி ஆளுமையும், புத்திசாலித்தனமும் அவற்றில் தெரியவரும்.
கீழே சில வாக்கியங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துபாருங்கள். மற்றவை பிறகு.
1. ஊக்கு உடைந்த பென்சிலைக் கொண்டு எழுதுவது அர்த்தமற்றது.
2. இங்கு பாட்டரிகள் இலவசமாக வழங்கப்படும்.
3. அவனுக்கு எதையும் மிகத் துல்லியமாக கிரகித்துக் கொள்ளும் தன்மை உண்டு. ஆனால், அந்தத் திறமையை அவன் வளர்த்துக் கொள்ளவே இல்லை.
4. காலண்டரைத் திருடியவனுக்கு ஒரு வருட சிறைத் தண்டனை கிடைத்தது.
WILL - WOULD
எப்போது Will? எப்போது Would? இந்தக் கேள்விகளைப் பலரும் கேட்கிறார்கள்.
பொதுவாக will என்பதை வருங்காலத்தைக் குறிக்கப் பயன்படுத்துகிறோம். (வருங்காலத்தைக் குறிக்கும் இதே வார்த்தைதான் உயில் என்பதைக் குறிக்கவும் உதவுகிறது என்பது ஒரு சுவாரஸ்யம்). Would என்பதைக் கடந்த காலத்தைக் குறிக்க பயன்படுத்துவோம். I will come tomorrow. The baby would not go to sleep yesterday. (I would not come tomorrow என்றோ The baby will not go to sleep yesterday என்றோ வராது).
ஆனால், வேறு பல கோணங்களிலும் கூட இந்த இரண்டு வார்த்தைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
முதலில் will என்பதை எடுத்துக் கொள்வோம். அது ஒரு நிபந்தனையாகவும் பயன்படுத்தப்படுகிறது. I will not allow you to see television unless you finish your home work.
‘நடந்திருக்கவே முடியாது என்பதில்லை, ஆனால் நடக்கவில்லை’ என்பதைப் போன்ற விஷயங்களைக் குறிக்க would பயன்படுத்தப்படுகிறது என்று சொன்னால் உங்களுக்கு ஒரு சின்ன குழப்பம் ஏற்படலாம். ஆனால், அடுத்து வரும் வாக்கியங்களில் would பயன்படுத்தப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தால் அந்தக் குழப்பம் மறைந்துவிடும். It would be very expensive to join that tour. If I had enough money I would buy the flat.
Would you mind telling this to him? Would you mind carrying this luggage for me? இந்தக் கேள்விகளில் would ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறது.
நாம் விரும்புவதைக் குறிக்கவும் would பயன்படும். I would like to have an ice cream. I would love to be with you. I would rather see the film.
LEXOPHILE
இந்தப் பகுதியின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட நான்கு வாக்கியங்களையும் நீங்கள் எப்படி ஆங்கிலமாக்கினீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், கீழே உள்ள அவற்றின் மொழி பெயர்ப்புகளைப் படியுங்கள்.
1. To write with a broken pencil is pointless.
2. Here batteries are given free of charge.
3. He had a photographic memory, which was never developed.
4. The thief who stole a calendar... got twelve months.
இந்த வாக்கியங்களைப் படிக்கும்போது ஒரு சின்னப் புன்னகையும், பாராட்டுதலும் தோன்றுகின்றன இல்லையா? மொழியை ஆழமாக நேசிப்பவர்கள் இருப்பார்கள். அவர்கள் வார்த்தைகளைக் கொண்டு அழகாக விளையாடுவார்கள். இப்படிப்பட்ட புத்திசாலித்தனமான உருவாக்கங்களை ஆங்கிலத்தில் lexophile என்பார்கள். உங்கள் பங்களிப்பையும் எழுதி அனுப்பலாமே.
OPEN
டென்னிஸில் ஆர்வமுள்ள ஒரு நண்பர் ‘திறந்த மனதுடன்’ ஒரு கேள்வியைக் கேட்டார். Open Tournament என்கிறார்களே அதற்கு என்ன அர்த்தம். Grand slam பந்தயங்களில்கூட பிரெஞ்ச் ஓபன், யு.எஸ்.ஓபன், ஆஸ்திரேலியன் ஓபன் என்றெல்லாம் உள்ளனவே, எதற்காக அந்த Open?
முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்துகிறேன். திறந்த வெளியில் ஆடுவதற்கும், இந்த ஓபனுக்கும் தொடர்பில்லை.
யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளக்கூடிய போட்டிகளை ஓபன் என்று அறிவித்துக் கொள்வதுண்டு. அதாவது அந்த விளையாட்டையே தொழிலாகக் கொண்டவர்கள் (Professionals), அந்த விளையாட்டை தங்களின் முக்கியமான தொழிலாகக் கொள்ளாதவர்கள் (Amateurs) ஆகிய யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
எந்த நாட்டவரும் கலந்து கொள்ளலாம். ஆனால், வயது போன்ற தகுதிகளை இதில் முன் வைக்கலாம். அதே போல எவ்வளவு பேரை அனுமதிப்பது என்பதிலும் கட்டுப்பாடு இருக்கலாம். (கிராண்ட் ஸ்லாம் நிகழ்ச்சியில் அதிகபட்சம் 128 டென்னிஸ் வீரர்கள்/வீராங்கனைகள்தான் கலந்து கொள்ள முடியும்)
CHRONIC
உங்கள் நண்பரைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு “This is a chronic disease” என்கிறார் டாக்டர்.
நீங்கள் பதறுகிறீர்கள். (போதாக்குறைக்கு அந்த வாக்கியத்தைச் சொல்லும்போது டாக்டர் தன் மூக்குக் கண்ணாடியை வேறு கழற்றித் தொலைக்கிறார்).
“ஐயகோ, என் சகாவை ஐ.சி.யூ.வில் உடனடியாக அட்மிட் செய்து அவன் உயிரைக் காப்பாற்றுங்கள் டாக்டர்” என்று கதறி உங்கள் ‘முழுகாத ஷிப்பின்’ வலிமையை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
Chronic என்றால் தீவிரமான என்ற அர்த்தமில்லை. எனவே, தீவிர சிகிச்சை என்பதும் கட்டாயமில்லை.
Chronic என்றால் ரொம்ப நாட்களாக என்று அர்த்தம். (பெரும்பாலும் பிறந்ததிலிருந்தே).
“I have a chronic neck pain” என்றால் பல வருடங்களாகவே எனக்குக் கழுத்து வலி என்று பொருள். அது மிதமான கழுத்து வலியாகவும் இருக்கலாம். அதிகமான கழுத்து வலியாகவும் இருக்கலாம்.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
ஓவியம்: வெங்கி
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago