ஒரு அன்பர் என்னிடம் கேட்டார். “ நல்லது நினைச்சா நல்லது நடக்கும்னு எங்களுக்கும் தெரியும். ஆனா எதைப் பாத்தாலும் நல்லதே தோண மாட்டேங்குதே? டி.வியைப் போட்டா டென்ஷன், பேப்பரை விரிச்சா பகீர்னு செய்தி, ஆபீஸ் போனா டார்ச்சர், ரோடுல போனாகூட நல்லதா என்ன நடக்குது? எப்படி நேர்மறையா யோசிக்கறது? சொல்லுங்க!” என்று கொந்தளித்தார். “உலகம் இப்படி இருக்கையில் நான் மட்டும் வேறெப்படி இருக்க முடியும்” என்பதுதான் சாரம்.
வெளிச்சூழலும் அனுபவமும்
உண்மைதான். தொலைக்காட்சித் தொடரில் வன்மம். பத்திரிகைகள் வன்முறைகள் அனைத்தையும் படம் பிடித்து நம் கைக்குக் கொடுக்கின்றன. வீடு, அலுவலகம் என்று எங்கு சென்றாலும் மனிதர்கள் பற்றிய சுவாரஸ்யக் கதைகள் அனைத்தும் எதிர்மறை எண்ணங்களில்தான் முடிகின்றன. சாலை, அரசியல், நாடு, பூமி என்று எதை யோசித்தாலும் நம்பிக்கையைத் தரும் எண்ணங்கள் மிகக்குறைவுதான் மறுப்பதற்கில்லை.
வெளிச்சூழல் நம் எண்ணங்களைப் பாதிக்கும் என்பது உண்மை. நம் அனுபவங்கள் நம் எண்ணங்களைக் கூர்மைப்படுத்தும் என்பதும் உண்மைதான். ஆனால் வெளிச்சூழல்களையும் அது தரும் அனுபவங்களையும் நம் மனதுக்கேற்ப திரித்துக்கொள்பவை நம் எண்ணங்கள். அதனால்தான் ஒரே சூழலில் வளரும் இருவர் வெவ்வேறு விதமாக வாழ்கிறார்கள். காரணம், அவர்கள் வாழ்க்கையைத் தங்கள் எண்ணத்துக்கேற்ப புரிந்து கொள்கிறார்கள். அதற்கேற்ப வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை எடுக்கிறார்கள்.
தள்ளி இருத்தல்
எண்ணங்கள்தான் அனுபவங்களை நினைவுகளாக்கி, அபிப்பிராயங்களாய் மாற்றி காலம் முழுவதும் கூட்டிச் செல்கின்றன. சாதி, மதம், மொழி, இனம், தொழில், ஊர் என எல்லாவற்றைப் பற்றியும் நாம் அபிப்பிராயம் வைக்கக் காரணம் நம் முதல் அனுபவத்துக்குப் பிறகு நமக்குத் தோன்றும் எண்ணங்கள்தான்.
ஒரு அனுபவத்திலிருந்து வரும் கற்றலை மட்டும் எடுத்துக்கொண்டு, அந்த அனுபவத்தை விருப்பு - வெறுப்பு இல்லாமல் நோக்கும் பக்குவம்தான் வாழ்க்கையை மேல் நிலைக்கு இட்டுச்செல்லும். இதற்கு அனுபவம் தரும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் எதிர்மறை உணர்வுகளிலிருந்து விடுதலை பெற வேண்டும்.
இதற்கு முதல் வழி எதிர்மறை எண்ணங்களைத் தோற்றுவிக்கக்கூடிய விஷயங்களிலிருந்து தள்ளி இருத்தல். இது முழுத் தீர்வு அல்ல. வெளிக் காரணங்களை முழுமையாகத் தள்ளிவிட முடியாது. ஆனால், நம் சூழலைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் எதிர்மறை எண்ணங்களிலிருந்து தள்ளியிருக்க முடியும்.
யார் ரிமோட்?
தொலைக்காட்சி ரிமோட்டை நீங்கள் இயக்குவதாக நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ரிமோட்தான் உங்களை இயக்கிக்கொண்டிருக்கிறது. நீங்கள் எப்போது சாப்பிட வேண்டும், எங்கு உட்கார வேண்டும், எப்போது பேச வேண்டும். என்னென்ன பார்க்க வேண்டும் என்பதைத் தொலைக்காட்சி தான் முடிவு செய்கிறது. இந்தப் போதையைக் கையாள மிதமிஞ்சிய சுயக் கட்டுப்பாடு தேவை.
ஒரு தட்டு நிறைய முந்திரிப் பருப்பை எதிரில் வைத்துக்கொண்டு இரண்டே இரண்டு பருப்பைச் சாப்பிட்டுவிட்டு நிறுத்த முடியுமா? அது போலத்தான் அளவாக டி.வி பார்ப்பது. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களாலும் முடியாது. அதனால் டி.வியை விட்டுப் போவதும் டி.வியைப் போடாததும்தான் தீர்வுகள். “டி.வியில் சில நல்ல நிகழ்ச்சிகளை மட்டும் பார்ப்பேன்!” என்று யாராவது உத்தரவாதம் தர முடியுமா?
எதிர்மறை எண்ணங்களைத் துறந்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்கள் கட்டுப்படுத்த முடியாத அந்தப் போதையைக் கைவிடுவதுதான் புத்திசாலித்தனம். டி.வியைத் துறந்தால் எதிர்மறை எண்ணங்களின் ஒரு மிகப்பெரிய ஊற்றிலிருந்து தப்பிக்கிறீர்கள். உங்கள் உறவுகளுடனான நேரத்தை அதிகரித்துக் கொள்கிறீர்கள்.
குறை மனிதர்கள்
அடுத்த வழி, எல்லாவற்றையும் குறைகூறும் மனிதர்களின் தாக்கத்திலிருந்து தள்ளி இருங்கள். பல நேரங்களில் குறைகூறும் மனிதர்களின் கூற்றுகளில் நியாயம் இருக்கும். மறுப்பதற்கில்லை. ஆனால் தீர்வைப் பேசாமல், அதற்கு ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாமல் உலகத்தைக் குறை கூறிக்கொண்டிருப்பது ஒரு வகை மனோ விகாரம்.
அந்த மனிதர்களிடம் தள்ளியிருங்கள். அவர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் பஞ்சு போல உறிஞ்சிக்கொள்ளாதீர்கள். காந்தியும் காரல் மார்க்ஸும் பார்க்காத குறைகளையா நாம் உலகத்தில் பார்த்துவிடப் போகிறோம்? அதற்குப் பதிலாக ஏதாவது சிறிய அளவிலாவது ஏதாவது உருப்படியான செயலைச் செய்து பார்க்கலாம். அதுதான் வழி.
வெறும் குறைகூறுதல் வாழ்வின் நம்பிக்கையைப் போக்கடித்துவிடும். உங்கள் நண்பர் “எதுவுமே சரியில்லை....” என்று ஆரம்பித்தால் , “நாம் என்ன செய்யலாம்” என்று பேச ஆரம்பியுங்கள். “எதுவும் முடியாது...” என்று பதில் வந்தால் அந்த உரையாடலை அங்கேயே ரத்து செய்துவிட்டு அடுத்த வேலையைப் பாருங்கள்.
நல்ல செயல்கள்
கண்ணைத் திறந்து உற்றுப் பார்த்தால் சுற்றியுள்ள எல்லாவற்றிலும் குறை தெரியும். அதில், நம்பிக்கை இழந்து தவறான எண்ணங்களை வளர்த்துக்கொள்வதைவிட மிகச் சிறிய நல்ல செயல்கள் புரியுங்கள். அது உங்கள் நம்பிக்கையையும் சுய மதிப்பையும் கூட்டும்.
“பூமிக்கு ஆபத்து. பூகம்பமும் சுனாமியும் சகஜமாகப் போய்க் கொண்டிருக்கிறது.” “சரி, சுற்றுப்புறப் பாதுகாப்புக்கு நீங்கள் உங்கள் அளவில் என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்!”
“திரைப்படங்களில் வன்முறை பெருகிவிட்டது” “நல்ல படங்களை தியேட்டரில் பார்த்து ஆதரவளிக்கலாமே நாம்!”
“அரசியல்வாதிகள் எல்லாவற்றையும் சுரண்டுகிறார்கள்.” “அடுத்த தேர்தலில் மாற்று அரசியல்வாதிகளுக்கு ஓட்டுப்போட்டு ஊழல்வாதிகளைத் தோற்கடியுங்கள்! அல்லது நீங்களே ஒரு மாற்றாக மாறுங்கள்!”
“இந்த ஆபீஸ் வேலைக்கே ஆகாது. நாம தெரியாம வந்து மாட்டிக்கிட்டோம்!” “வேறு வேலை கிடைக்கும்வரை, இங்கு சிறப்பாக எப்படிப் பணியாற்றுவது என்று யோசியுங்கள்.”
உங்களை நச்சுப்படுத்தும் பிற மனிதர்களின் எண்ணங்களிலிருந்து தள்ளி இருங்கள். ஒரு பிரச்சினை வந்தால் என்ன செய்யலாம் என்று மட்டும் யோசியுங்கள்.
மூன்று வழிகள்
பிரபல தத்துவ எழுத்தாளர் எக்கார்ட் டாலே பிரச்சினைகளைச் சந்திக்க மூன்று வழிகள் சொல்கிறார்:
1. பிரச்சினையிலிருந்து தப்பி ஓடு
2. பிரச்சினையை மாற்றப் பார்.
3. பிரச்சினையை ஏற்றுக்கொள்!
வருத்தப்படுவதோ, கோபப்படுவதோ நிச்சயமாக உதவாது. மூன்றில் ஏதாவது ஒன்றைச் செயல்படுத்திப் பாருங்கள்.
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago
சிறப்புப் பக்கம்
9 days ago