தமிழ்ப் படிப்புக்கு மதிப்பில்லாத காலகட்டம் இது. தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் விளிப்பதைக் கேட்டு இந்தக் காலப் பெற்றோர்கள் பூரிப்படைகிறார்கள். ஆங்கிலக் கல்வி என்பது தங்கத்தையும், ஆற்று மணலையும்விட சிறந்த விற்பனைப் பொருளாக்கிவிட்டது. அடிப்படை வசதிகள் இல்லாத சின்னச் சின்ன ஊர்களிலும் ஆங்கிலப் பள்ளிக்கூடங்கள் கடை விரித்துவிட்டன. தன் அன்றாட வருமானத்திற்கு மேல் கடன் வாங்கியாவது குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிகளில் சேர்ப்பது கெளரவமான அடையாளமாகிவிட்டது. ஆனால் நம் நாட்டிற்குப் பெருமை தேடித் தந்த அறிஞர்களில் பெரும்பான்மையானோர் தமிழ் வழிக் கல்வியைக் கற்றவர்கள்தாம்.
அது எல்லாம் அந்தக் காலப் படிப்பு எனச் சொல்கிறீர்களா? சரி அதற்கு இந்தக் கால உதாரணம்தான் ஜெயசீலன். இந்த வருடம் தமிழ் வழியில் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.
கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள கெங்குவார்பட்டி கல்லுப்பட்டி என்னும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசீலன். விவசாயத்தை நம்பி உள்ள அந்தக் கிராமத்தில் எளிய குடும்பப் பின்னணி கொண்டவர். பத்தாம் வகுப்பு வரை உள்ளூரில் தமிழிலேயே படித்துள்ளார். மேல்நிலைக் கல்வியை அருகில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் படித்தார். பள்ளிப் பருவத்திலேயே இவர் ஐ.ஏ.எஸ். கனவையும் வளர்த்துள்ளார். அதற்குக் காரணம் இவருடைய பெற்றோர். எல்லோரையும்போல் பிறந்தோம் வாழ்ந்தோம் என இல்லாமல் தங்கள் மகனை ஒரு சாதனையாளராகப் பார்க்கப் பேராவல் கொண்டிருந்தார்கள். அதுபோல விவசாயத்தின் மீதான பிரியத்தையும் அவருக்குப் புகட்டினார்கள். அதனால் ஜெயசீலன் இளங்கலைப் படிப்பிற்கு விவசாயத்தைத் தேர்ந்தெடுத்தார்.
மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தில் விவசாயத்தில் பி.எஸ்சி. முடித்தார். இந்தப் படிப்பின்போதே தமிழ் ஆர்வமும் பெருகியது. ஆங்கிலத்தில் வெளிவந்த சிறந்த விவசாய அறிவியல் கட்டுரைகளைத் தமிழுக்குத் தர வேண்டும் என்ற முனைப்பில் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டார். அந்தக் காலகட்டத்தில் ஆங்கிலத்திற்கு நிகராகத் தமிழிலும் கலைச் சொற்களை உருவாக்கும் விருப்பமும் அவருக்கு இருந்தது. இவை எல்லாம் பின்னால் எழுதிய ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பயன்பட்டன.
விவசாயப் படிப்பை முடித்ததும் தன் தமிழ் ஆர்வத்திற்குத் தடை போட அவருக்கு மனமில்லை. முதுநிலைப் படிப்புக்குத் தமிழைத் தேர்வுசெய்து படித்து முடித்தார். பிறகு முனைவர் ஆய்வுக்கும் தமிழையே தேர்வுசெய்து படித்துவருகிறார். இதற்கிடையில் நான்கு வருடங்களாக ஐ.ஏ.எஸ். தேர்வும் எழுதிவந்தார். ஆங்கிலப் புலமை இருந்தும் ஐ.ஏ.எஸ். தேர்வைத் தமிழிலேயே எழுதினார். அதனால் தமிழ்வழிக் கல்வியின் சிறப்புக்கு ஓர் எடுத்துக்காட்டானார். இதுவரை மூன்று முறை ஐஏ.எஸ். தேர்வு எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்விலும் வெற்றிபெற்றுள்ளார்.
“தமிழில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவது எல்லோரும் நினைப்பதுபோல் சுலபமான காரியம் இல்லை” என்கிறார் ஜெயசீலன். “தமிழ் மொழிப் படிப்புக்குத் தனியான ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள் இல்லாதது ஒரு பெரிய பலவீனம். மேலும் தமிழில் விடைகளை எழுதும் வாய்ப்பு இருந்தும் சில கலைச்சொற்களுக்கு ஆங்கிலப் பெயரை அடைப்புக் குறிக்குள் கொடுக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஆகத் தமிழில் படிப்பது என்பது கூடுதல் உழைப்பைக் கோருவது” என்கிறார் அவர்.
தமிழிலேயே முழுக்கப் படித்தோர் இந்திய ஆட்சிப் பணித் துறைத் தேர்வில் தேர்வாவது இங்கு உள்ளவர்களுக்கு உற்சாகம் தரக்கூடியதாக இருக்கும். இந்த ஆண்டு ஜெயசீலனைத் தவிர்த்துத் தமிழில் படித்த மூவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். ராமநாதபுரம் ஆட்சியர் நந்தகுமார் முழுக்கத் தமிழிலேயே படித்துத் தேர்வானவர். தமிழில் படித்து ஐ.ஏ.எஸ். படிக்க விரும்புவோருக்கு வழிகாட்ட யாருமில்லாததை ஜெயசீலன் வருத்தத்துடன் பகிர்ந்துகொள்கிறார். ஏற்கனவே இந்திய நிர்வாகத் துறைக்கான தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐ.ஆர்.எஸ். அதிகாரியாக இப்போது நாக்பூரில் பணியாற்றிவருகிறார்.
‘மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்று’ இனி எந்தப் பேதையும் உரைக்க முடியாது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago