அறிவியல் அறிவோம்- 9: நிலத்தைக் கடித்த நீரின் பல்தடம்

By த.வி.வெங்கடேஸ்வரன்

நாய் மனிதனைக் கடித்தால் அது செய்தி அல்ல. மனிதன் நாயைக் கடித்தால் அது தான் செய்தி என்பார்கள். அதுபோலத்தான் சமீபத்தில் பைடோசார் (Phytosaur) எனும் ஊர்வன வகையைச் சேர்ந்த விலங்கு ரவுஸிஸட் (rauisuchid) எனும் ராட்சச விலங்கைக் கடித்துக் குதறியது என்று உலகம் முழுவதும் பரபரப்பான அறிவியல் செய்தியானது. இவ்வாறு பைடோசார் கடித்துக் குதறியதன் விளைவாக ஏற்பட்ட காயம் ஆறாமல்தான் அந்த ரவுஸிஸட் இறுதியில் மடிந்து போனது எனவும் அதன் உயிரின படிவ தொல்லெச்ச எலும்புகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பழங்கால கொலை

இன்றோ நேற்றோ நடந்ததல்ல இந்தக் கொலை. சுமார் 21 கோடி வருடங்களுக்கு முன்பு நடந்தது. அந்தக் காலத்தில் மனிதன் இருக்கவில்லை என்பது மட்டுமல்ல. இன்று உள்ள உயிரிகள் எதுவும் இருக்கவில்லை. அவ்வளவு பழைய காலம். அந்தக் காலத்தில் இன்று உலகில் உள்ள எல்லாக் கண்டங்களும் , தரைப்பகுதிகளும் ஒன்றாக ஒரே பெரு நிலமாக இருந்தது.

பூமியின் தென் துருவப்பகுதி உள்ள இடத்தில் ஆங்கில எழுத்து ‘C’ போல வளைந்த நிலப்பகுதியாக இருந்த அந்த நிலப்பரப்பை பாஞ்சியா என புவியியலாளர்கள் அழைக்கின்றனர். இந்தக் காலகட்டம் பொதுவாக, டிராசிக் (Triassic) யுகம் என அழைக்கப்படுகிறது. சுமார் 19.9 கோடி வருடங்களுக்கு முன்பாக, முடிந்து போன இந்த யுகத்துக்குப் பிறகுதான் பூ பூக்கும் தாவரங்கள் மற்றும் டைனோசார்கள் கோலோச்சிய ஜுராசிக் காலம் தோன்றியது.

பாஞ்சியாவின் ராஜா

இன்றைய முதலைகளின் முன்னோர் வம்சம்தான் அன்றைய டிராசிக் யுகத்தில் கோலோச்சின. சுமார் 21 கோடி வருடம் முன்பு இருந்த பாஞ்சியா பெருநிலத்தில் விரிசல் காணும் காலகட்டத்தில் பைடோசார்கள் நீர்நிலைகளான குளங்கள், ஏரிகளிலும் ரவுஸிஸட் நிலப்பகுதிகளிலும் ராஜாக்களைப்போல ஆதிக்கநிலையில் இருந்தன.

20 அடி உயரமும் சுமார் 25 அடி நீளமும் கொண்ட ராட்சச விலங்கு ரவுஸிஸட். இன்றைய முதலைகளை நினைவுபடுத்தும் விதத்தில் செதிள் நிறைந்த தடிமனான தோல் போர்த்திய விலங்கு பைடோசார். பொதுவாக, நீரிலும் அவ்வப்போது நிலத்திலும் வாழும் இந்த விலங்கு சுமார் 40 அடி நீளம் வரையிலும் வளர முடியும்.

சி.டி. ஸ்கேன் ஆய்வு

அரிதாகக் கிடைத்த ரவுஸிஸட் உயிரின புதைபடிமம் கலிபோர்னியப் பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்தில் இருந்தது. இரண்டு விலா எலும்புகளும் வேறு சில துண்டுகளும் இருந்தன. அவற்றில் வேறு விலங்கு கடித்துக் குதறிய பல் வடுக்கள் காணக் கிடைத்தன. இந்தப் புதைபடிம எச்சங்களைத்தான் கடன்வாங்கி ஆராய்ச்சி செய்தனர் ஸ்டேப்பணி டிரும்ளரும் (Stephanie Drumheller) அவரது ஆய்வுக் கூட்டாளிகளான மிசெல்லே ஸ்டாக்கர் (Michelle Stocker) மற்றும் நெஸ்பிட் (Nesbitt) ஆகியோர். அந்த ஆய்வில் 21 கோடி வருடங்களுக்கு முன்பாக இருந்த உணவுச் சங்கிலி மற்றும் உயிரியல் சூழல் குறித்து புதிய வெளிச்சம் பாய்ச்சியுள்ளனர்.

மிகவும் தொன்மை வாய்ந்த அந்த உயிரினப் படிமம் ஆய்வில் சிதைந்து விடக்கூடாது. அதேசமயம், அந்த எலும்புகளில் உள்ள தரவுகளையும் மிகச்சரியாக ஆராயவேண்டும். அங்குதான் அவர்களுக்கு சி.டி. ஸ்கேன் எனும் நவீனத் தொழில்நுட்பம் கைகொடுத்தது.

ராஜாவுக்கும் கடி

அந்தக்கால புதைபடிமத்தை வெட்டி அறுக்காமல் ஆய்வு செய்தனர். ரவுஸிஸட் எலும்பில் வேறு விலங்கு பல்லால் கடித்து ஏற்படுத்திய வடுக்களை ஸ்கேன் வெளிப்படுத்தியது. அந்த வடுவில் கடித்த விலங்கின் பல்லும் சிக்கியிருப்பதைக் காட்டியது. ரவுஸிஸட்டை கடித்த விலங்கு திணறித் தன்னை விடுதலை செய்து கொண்டபோது அதன் பல் உடைந்து விலா எலும்பில் பதிந்தது. சுமார் இரண்டு அங்குலம் நீளமுள்ள பல் எலும்பில் சிக்கிக் கிடந்தது. அந்த கடிக்குப் பிறகு காயம் ஆறிக் குணமாகியது என்பதை எலும்பில் ஏற்பட்ட வடு தெளிவாக்கியது. அதாவது முதல் தாக்குதலில் ரவுஸிஸட் உயிர் பிழைத்தது என இது காட்டுகிறது. ஆனால் நிலத்தில் ராஜாவாக இருந்த ரவுஸிஸட்டைக் கடித்த விலங்கு எது? இதுதான் புதிராக இருந்தது.

காட்டில் புலி கடித்த தடயம் இருக்கலாம்; ஆனால், புலியைக் கடித்துப் புசிக்கும் விலங்குகள் இல்லை அல்லவா? ரவுஸிஸட்தான் அந்தக் காலத்தில் நிலப்பரப்பில் உணவுச் சங்கிலியில் மேலே இருந்த வேட்டையாடும் விலங்கினம். எனவே, ரவுஸிஸட்டை கடித்தது யார்?

3D- யில் செய்த பல்

அந்தப் புதிரை விடுவிக்க, அந்தப் பல்லை வெளியே எடுத்துச் சோதனை செய்யவேண்டும். அவ்வாறு எடுத்தால் பல கோடி ஆண்டுகள் பழமையான தொல்லெச்சம் சிதைந்து போகும். ரவுஸிஸட் எலும்பைச் சிதைக்காமல் பல்லை வெளியே எடுக்க முடியுமா? இங்கும் கை கொடுத்தது நவீன தொழில்நுட்பம். 3D பிரிண்டர்.

சாதாரணமாக கணிணியில் நாம் பயன்படுத்துவது 2D பிரிண்டர். கணிணியில் நாம் வடிக்கும் எந்த வடிவத்தையும் அது அச்சிடும். அதே போலக் கணினியில் வடிவமைத்த முப்பரிமாண வடிவை அச்சு செய்யும் கருவிதான் 3D பிரிண்டர்.

இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஆய்வாளர்கள் ஸ்கேன் கருவி காட்டும் வடிவில் எலும்பில் பதிந்த பல் மாதிரியைத் தயார் செய்தனர். இந்தப் பல்லைச் சோதனை செய்தபோது அது பைடோசார் பல் என்பது தெளிவாகியது.

ராஜாவைத் தின்னும் வெறி

பைடோசார் பல் மாதிரி மற்றும் கடிக்கப்பட்ட வடுக்களை ஆராய்ந்தபோது அந்த ரவுஸிஸட் விலங்கு பைடோசாரால் பல முறை கடித்துக் குதறப்பட்டிருப்பது புலனானது. எலும்பில் பதிந்த பைடோசார் பல்லின் வடுவைக் கூர்மையாக ஆராய்ந்த விஞ்ஞானிகள் உயிருக்குப் போராடும்நிலையில்தான் ரவுஸிஸட் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது எனக் கண்டனர். அதன் எலும்பு மற்றும் திசுவில் உள்ள பல் காயம் உயிருக்காக ரவுஸிஸட் போராடியதைக் காட்டியுள்ளது. பலமுறை பல இடங்களில் ரவுஸிஸட்டைப் பைடோசார் கடித்துக் குதறியது தெளிவாகத் தெரிந்தது.

மேலும் குறைந்தபட்சம் அந்த ரவுஸிஸட் விலங்கு இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் பைடோசாரிடம் கடிபட்டிருக்கிறது எனவும் தெரிய வந்தது. அதாவது, ரவுஸிஸட்டைத் தற்செயலாகப் பைடோசார் தாக்கவில்லை; உள்ளபடியே உணவுக்காக வேட்டையாடியிருக்கிறது என்பது விளங்கியது.

கேள்விக்குள்ளாகும் கருதுகோள்

ஒருமுறை அல்ல, குறைந்தபட்சம் இருமுறை நீர்வாழ் பைடோசார் நிலம் வாழ் ரவுஸிஸட்டைத் தாக்கியுள்ளது. அதுவும் தாக்குதல் வெறும் தற்காப்புக்கு அல்லது மிரட்டலுக்கு என்பதாக இல்லாமல் கொலைவெறி தாக்குதல் என்பதைத்தான் தடயங்கள் சுட்டுகின்றன. எனவேதான், உணவுக்காக ரவுஸிஸட்டை பைடோசார் வேட்டையாடியுள்ளது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இது புதுமையான தகவல். இதுவரை, நிலத்தில் வாழ்ந்த விலங்கில் ரவுஸிஸட்டும் நீரில் வாழ்ந்த விலங்கில் பைடோசாரும் உணவுச் சங்கிலியில் உயரத்தின் முனையில் இருந்தன என்னும் கருத்து நிலவிவருகிறது. இந்தச் சான்று அந்தக் கால உணவுச் சங்கிலி குறித்த கருதுகோளைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. கூர்ந்து நோக்குவதன் மூலம் கடந்தகாலம் குறித்துச் சில புரிதல்களையேனும் பெறமுடியும் என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது.

தொடர்புக்கு: tvv123@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்