தார்மிகக் கோபமும் அறிவுதான்!

By ம.சுசித்ரா

வகுப்பறைக்குள் உட்காராமல் காடு, மலை எனச் சுற்றித்திரிந்து இளைப்பாற ஆப்பிள் மரத்தடியில் உட்கார்ந்தபோதுதான்பிறந்தான் நியூட்டன்.

இப்படித் தொடங்கத் தோன்றுகிறது. வகுப்பறைக்கு உள்ளேதான் முறையான கல்வியைக் கற்பிக்கவும் கற்கவும் முடியும் என நம்பிவந்த கல்வி உலகை உலுக்கியது உளவியல் நிபுணர் கார்டனரின் பன்முக அறிவுத்திறன் கோட்பாடு. இயற்கை ரீதியான அறிவுத்திறன் கொண்டவரின் மூளை அமைப்பே இயற்கையைக் கொண்டாடும் விதத்தில்தான் அமைந்திருக்கும் என அறிவியல் ரீதியாக விளக்கினார் கார்டனர்.

மூளை செய்யும் வேலை

இயற்கை ரீதியான அறிவுத்திறனாளிகளின் வலது பக்க மூளையின் பண்புகள் இவை

1.திறந்த வெளியில் இருக்கும்போது உற்சாகமான உணர்வை ஏற்படுத்தும்.

2.இயற்கை, மனம், உடல் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்க முயலும்.

3.பிராணிகளிடத்தில் அன்பு செலுத்தச் சொல்லும்.

4.சாகசங்களில் ஈடுபடத் தூண்டும்.

5.சுற்றுச்சூழல் மீது அக்கறை காட்டச் சொல்லும்.

6.மிருக வதை அல்லது சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் கண்டால் துடித்தெழச் செய்யும்.

இயற்கை ரீதியான திறனாளிகளின் இடது பக்க மூளையின் பண்புகள் இவை :

1.தகவல்களை அலசி ஆராயும்.

2.புள்ளி விவரங்களைத் துல்லியமாக நினைவில் கொள்ளும்.

3.தகவல்களை வகைப்படுத்த விரும்பும்.

4.சூழலியல், உயிரியல், வேதியியல் போன்ற பாடப்பிரிவுகள் மிகவும் பிடிக்கும்.

கணித அறிவும், இசை ஞானமும்தான் பிறப்பிலேயே வரும் என நம்பிவந்த அறிவுலகை அதிரவைத்த ஆய்வு இது. இந்த ஆய்வை உற்று நோக்கும்போது இன்னும் சில அற்புதமான உண்மைகள் புலப்படுகின்றன. ஆராய்ச்சி கூடத்திலும், ஆய்வுப் புத்தகங்களிலும் மட்டும் மூழ்கிக்கிடந்தால் இயற்கை ரீதியான அறிவுத்திறனை அடைந்துவிட முடியாது. சூழலியலை விரும்பச் சொல்லி ஒருவருடைய மூளையே அவருக்குச் சொல்லும். கணிதம் மற்றும் மொழித் திறனில் சிறந்து விளங்குபவர்களை மட்டுமே மூளைக்காரன், புத்திசாலி, அறிவாளி எனக் கொண்டாடுவது அறிவிலித்தனம்.

மரத்தைக் கட்டிப்பிடி

ஆனால் யதார்த்த உலகில் இதை நிரூபிக்க முடியுமா என நீங்கள் கேட்கலாம். மலைக் காடுகளில் வாழ்ந்து வந்த சித்தர்கள் இயற்கை மருத்துவமான சித்த மருத்துவத்தை எப்படி அருளினார்கள்? நீரோட்டம் பார்க்கும் வழக்கம் நம் சமூகத்தில் காலங்காலமாக இருந்துவந்த ஒன்றில்லையா? தோட்டக் காரர்களுக்கும், விவசாயிகளுக்கும் இருப்பது இயற்கை ரீதியான அறிவுத்திறன்தானே! இப்படி எழுதும்போது அடர்ந்த வனத்தில் நிகழ்ந்த அந்தச் சம்பவம்தான் மனதில் ஒரு படம்போல ஓடுகிறது.

சுற்றுச்சூழல் மாசுக்கு எதிராக முதல் முறையாக உலகில் ஒரு போராட்டம் நிகழ்ந்தது என்றால் அதுதான். ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் மன்னர் அஜய்சிங் புதிதாக ஒரு அரண்மனையைக் கேஜர்லி வனப்பகுதியில் கட்டி எழுப்ப முடிவெடுத்தார். அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த ‘பிஷ்ணோய்’ என்ற பூர்வகுடிகள் மன்னரின் ஆணையைக் கேட்டு திடுக்கிட்டனர். தங்கள் உயிரினும் மேலான காட்டு மரங்களைப் படை பலத்தோடு வெட்ட வந்த வீரர்களை வழி மறித்தனர். ஆனால் அவர்களை மீறி மரத்தருகில் வீரர்கள் சென்றனர். அப்போது பழங்குடிகளில் ஒருவரான அம்ரிதா தேவி தன் மூன்று பெண் குழந்தைகளோடு முதலில் இருந்த மரத்தைக் கட்டி அணைத்துக் கொண்டார். மன்னரின் உத்தரவை நிறைவேற்ற நான்கு பேரையும் வெட்டிக் கொன்றுவிட்டு அந்த மரத்தையும் வெட்டித் தள்ளினர் வீரர்கள். ஆனால் உடனிருந்த ஆதிவாசிகள் பின் வாங்கவில்லை.

அத்தனை பேரும் அவர்களால் முடிந்தவரை மரங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். இப்படியே 363 மரங்களையும் அதனைக் கட்டிப் பிடித்த மனிதர்களையும் வெட்டித் தள்ளினர். ஒரு கட்டத்தில் “போதும் நிறுத்துங்கள் இந்த இடம் வேண்டாம்” என்று போர் வீரர்களைத் திரும்பி வரச்சொல்லி உத்தரவிட்டார் மன்னர். 1730-ல் நிகழ்ந்த இந்தத் தியாகச் சம்பவம்தான் சுற்றுச்சூழலை பாதுகாக்க நடத்தப்பட்ட முதல் போராட்டம். மரங்களைக் கட்டித் தழுவிய இந்த நிகழ்வு ‘சிப்கோ இயக்கம்’ என்றழைக்கப்படுகிறது. இதன் தாக்கம் உலகெங்கும் பரவியது. அதன்பின் இயற்கையைக் காக்க மேலும் பல சிப்கோ இயக்கங்கள் உயிர்த்தெழுந்தன.

கோபமும் அறிவுதான்

தங்கள் வனம் அழிக்கப்படுவதைத் தடுக்க அகிம்சை வழியில் போராடி தங்கள் உயிரை நீத்த அந்தப் பூர்வகுடிகள் இயற்கை மீது கொண்டிருந்த அளவு கடந்த பற்றையும், சுற்றுச் சூழலைக் காக்கும் பொறுப்பையும் இயற்கை ரீதியான அறிவுத்திறன் இல்லை என்ன சொல்லிவிட முடியுமா? காலங்காலமாக உணர்வும், அறிவும் எதிர் எதிரானவை எனச் சொல்லப்படுகிறது. ஒருவர் உணர்ச்சிவசப்படும்போது அறிவை இழக்கிறார் என்று நினைக்கிறோம்.

ஆனால் அத்தகைய வேறுபாட்டைக் களைந்து எறிகிறது இயற்கை ரீதியான அறிவுத்திறன். அறிவின் பிறப்பிடமான மூளையின் ஒரு பகுதி சுற்றுச்சூழல் அழிவைக் கண்டால் துடித்தெழச் சொல்லும்போது அது அறிவு இன்றி வேறென்ன? கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்டாட்டில் கூறியதைப் போல, “கோபம் கொள்ளுவது சுலபம்தான். ஆனால் சரியான காரணத்துக்காக, நியாயமான வழியில், சரியான நேரத்தில், சரியான அளவில், சரியான நபரிடம் கோபம் கொள்வது எளிதல்ல”. தார்மிகக் கோபம் என்பதும் அறிவுதான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்