சந்திர சேகருக்கு எட்டு வயது. இந்த வயதிலேயே அவன் ‘சொத்து’ சேர்த்துவைத்திருக்கிறான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அவன் ஓர் அட்டைப் பெட்டியைப் பத்திரமாகப் பாதுகாத்துவருகிறான். அதில் இருக்கும் பொருள்களைப் பார்த்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
தீர்ந்துபோன பேஸ்ட் டியூப், எண்ணெய் டப்பா, சோப்புப் பெட்டி, பழைய மொபைல் போன், துணி காயப்போட உதவும் க்ளிப், பழைய பர்ஸ், சின்னச் சின்னப் பாத்திரங்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் என்று பல விதமான பொருள்கள் அந்த டப்பாவில் இருக்கும்.
இதை வைத்துக்கொண்டு அவன் என்ன செய்கிறான்?
எப்போது பார்த்தாலும் சேர்த்துவைத்த பொருள்களை வைத்து ஏதாவது செய்துகொண்டே இருப்பான். வெவ்வேறு பொருள்களை இணைத்தும் ஒரு பொருளைப் பிய்த்தும் உடைத்தும் பல புதிய பொருள்களை உருவாக்குவான். என்னடா இதெல்லாம் எனக் கேட்டால் ‘பொம்மை’ என்று உற்சாகமாகச் சொல்வான்.
என்ன பொம்மை என்று கேட்டுப் பாருங்களேன். உடனே அங்கே ஒரு கண்காட்சியே வைத்துவிடுவான். “இது யானை, இது திருடன், இது கம்ப்யூட்டர், இது கார்…” என்று அவன் விளக்கும்போது உங்களுக்கும் அந்தப் பொருள்கள் அப்படித்தான் தெரியும்.
சந்திரசேகருக்கு, பயன் படாதது என்று எதுவுமே இல்லை. பிறர் தூக்கி எறிந்த பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டு அவற்றைப் பலவிதமாகத் துருவி ஆராய்ந்து ஏதாவது ஒன்றை உருவாக்கிவிடுவான். காற்றாடி, படகு, விமானம் என்று அவன் உருவாக்கிய பொருள்களுக்குக் கணக்கே இல்லை.
சில சமயம் பல விதமான பொம்மைகளைவைத்து வித்தியாசமான அமைப்புகளைச் செய்வான். அதாவது, பொருள்களை ஒரு விதமாக அடுக்கி அதை பார்க் என்பான். அல்லது ஸ்கூல் என்பான். இது எப்படிடா ஸ்கூல் என்று கேட்டால் ஆர்வத்தோடு விளக்குவான்.
சந்துரு கொஞ்சம் பெரியவன் ஆனதும் அவனுடைய சேமிப்பில் மேலும் பல பொருள்கள் சேர்ந்துகொண்டன. புத்தகங்களிலும் பத்திரிகைகளிலும் கிடைக்கும் படங்களை எடுத்துவைத்துக்கொள்வான். படத்தை அப்படியும் இப்படியும் திருப்பித் திருப்பிப் பார்ப்பான். அதேபோல ஒரு பொருளை உருவாக்க முயல்வான்.
தான் அமைக்கும் பார்க், ஸ்கூல் போன்ற இடங்களுக்கு மத்தியில் சில படங்களை ஒட்டிவைத்து அவற்றை மேலும் அழகுபடுத்துவான். சாக்பீஸால் ஒரு கட்டம் போட்டு அதற்குள் பச்சை நிறத்தில் புற்களை வரைந்து வைப்பான். பக்கத்தில் பழுப்பு நிறத்தில் இரண்டு மரங்கள் நிற்கும்.
இப்போதெல்லாம் அவற்றைப் பார்ப்பவர்கள் இது என்ன என்று கேட்பதில்லை. ஏனென்றால் அவர்களுக்கே அது பள்ளிக்கூடமாகவும் பூங்காவாகவும் தெரிகிறது. கிட்டே போய்விடாதீர்கள், “புல்லை மிதிக்காதீங்க அங்கிள்” என்று மிரட்டுவான்.
சந்திர சேகர் இன்னும் கொஞ்சம் பெரியவனானதும் தானே சில பொருள்களின் படங்களை வரைய ஆரம்பித்தான். அந்தப் படங்களை வைத்துப் பெரிய ‘கண்காட்சி’யை உருவாக்கினான்.
அந்தப் படங்களில் உள்ளபடி பொம்மைகள் செய்ய முடியுமா என்றும் பார்க்க ஆரம்பித்தான்.
பதினைந்து வயதிற்குள் அவன் திருகாணி, திருப்புளி, சுத்தி, ஆணி, கட்டை, பிளாஸ்டிக், துணி, நூல் இதையெல்லாம் வைத்துப் பொம்மை செய்ய ஆரம்பித்துவிட்டான். அவன் பொம்மை செய்யும் இடத்தைப் பார்த்தால் ஏதோ குட்டித் தொழிற்சாலைக்கு வந்துவிட்டதுபோல இருக்கும்.
ஒரு படத்தை எடுத்துக்கொள்வான். அதில் உள்ள பொருள் எப்படி இருக்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனிப்பான். அந்தப் பொருளின் பாகங்கள் எப்படி எங்கே சேர்ந்திருக்கின்றன என்பதை ஆராய்வான். அதன் பிறகு அதேபோன்ற பொருள்களை க்ளே, மணல், டிராயிங் பொருள்கள் முதலானவற்றை வைத்து உருவாக்கும் முயற்சியில் இறங்குவான்.
அவன் அம்மா அவனுக்கு லெகோ போன்ற பில்டிங் செட்களும் வித விதமான பொம்மைகளும் வாங்கிக்கொடுக்கிறார். அவன் கட்டும் பூங்காக்களுக்கு உதவுகிறார்.
ஒளிந்திருக்கும் புதிய பொருள்
சந்திர சேகர், ஒரு பொருளைப் பார்த்ததும் அதற்குள் ‘ஒளிந்திருக்கும்’ வேறொரு பொருளைக் காண்கிறான். அந்தப் பொருளை அதிலிருந்து உருவாக்க முயல்கிறான், தேவைப்பட்டால் வேறு பொருள்களைச் சேர்த்துக்கொள்கிறான்.
அடுத்த நிலையில், தான் பார்த்த ஒரு பொருளைப் போலவே இன்னொரு பொருளை உருவாக்க முனைகிறான்.
அதோடு நில்லாமல், தன் கற்பனையில் உதித்த ஒரு பொருளுக்கு வடிவம் கொடுக்க முயல்கிறான்.
வடிவமைப்பு என்று சொல்லப்படும் விஷயத்திற்குத் தேவைப்படும் அடிப்படையான திறமைகள் இவை.
புதிய வடிவங்களை, புதிய பொருள்களை உருவாக்கும் இந்தத் திறமையின் மற்றொரு பரிமாணம் ‘வெளி’யை கையாளும் திறமை (Spatial skill).
அதாவது, வெட்ட வெளியில், ஒரு பொருளைப் பொருத்திப் பார்ப்பது. அந்த இடத்தில் இந்தப் பொருள் எப்படி அமையும் என்று கற்பனை செய்து பார்ப்பது. பிறகு அந்தக் கற்பனையைச் செயல்படுத்திப் பார்ப்பது. இதுதான் வடிவமைப்பின் அடிப்படை.
வெளி என்றால் என்ன என்ற உணர்வு ஒரு வடிவமைப்பாளருக்கு அவசியம். அந்த வெளியில் பொருள்களைக் கற்பனை செய்து பார்க்க வேண்டும். ஒரு அறையில் பொருள்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கற்பனை செய்தால்தான் அறைக்கலன்களை அழகாக அடுக்க முடியும். புத்தகங்களை நேர்த்தியாக வைக்க முடியும். ஒரு அறையில் நாற்காலி எங்கே இருக்க வேண்டும்? தொலைபேசி எங்கே இருக்க வேண்டும்? புத்தகங்களை அங்கே வைக்க முடியுமா? விளக்குகளை எங்கே பொருத்த வேண்டும்?
இதையெல்லாம் தீர்மானிக்க வெளி பற்றிய கற்பனை அவசியம்.
ஒரு காலி மனையின் மீது ஒரு கட்டடத்தைக் கற்பனையில் எழுப்பிப் பார்ப்பதும் இப்படித்தான்.
சந்திர சேகர் இப்படிப்பட்ட திறமைகள் கொண்டவன்தான். அவன் திறமையைக் கூர்தீட்டிக்கொள்வதற்கு இன்று பல வழிகள் இருக்கின்றன. பாடங்கள் இருக்கின்றன. வடிவமைப்புத் துறையில் பெரிய அளவில் அவனால் சாதிக்க முடியும்.
வடிவமைப்புத் துறையில் வேலைவாய்ப்பு பெருகிவருகிறது. உங்களுக்குள் ஒரு வடிவமைப்பாளர் இருக்கிறாரா? அவரைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதி அளியுங்கள். அது வெறும் பொழுதுபோக்காக இருக்க வேண்டிய அவசியமில்லை. கை நிறையப் பணமும் மனத்திருப்தியும் தரும் தொழிலாகவும் அது மாறலாம்.
வடிவமைப்பாளர்களுக்கான துறைகள்
கிராஃபிக் டிசைனர்கள்: காட்சியின் மூலம் ஒரு விஷயத்தை உணர்த்துவது அல்லது சொல்வது இவர்களுடைய வேலை. சித்திரங்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், நிறங்கள் அச்சாக்கம் ஆகியவை இவர்களது கருவிகள். இவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பது இவர்கள் கற்பனைத் திறனைப் பொறுத்தது.
ஆடை வடிவமைப்பு: புதிய வடிவங்களிலும் வண்ணங்களிலும் துணிகள், புதிய தோற்றங்களில் ஆடைகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றை உருவாக்குபவர்கள் ஆடை வடிவமைப்பாளர்கள். சாதாரண ஆடையிலிருந்து ஃபேஷன் டிசைனிங்வரை இவர்களது படைப்புத் திறன் மூலம்தான் உருவாகின்றன.
கட்டுமானம்: கட்டடங்கள் கட்டும் துறையில் வடிவமைப்பாளர்களுக்கு எண்ணற்ற வேலைகள் இருக்கின்றன.
வடிவங்கள், ஆடைகள் வீடுகள் மட்டுமல்ல. கட்டடங்களைச் சுற்றியுள்ள இடங்கள் கண்ணுக்கும் மனதிற்கும் இதம் தருபவையாக இருப்பதற்காகத் திட்டமிடுவதும் வடிவமைப்புப் பணிதான். ஒரு அலுவலகம் அல்லது வீட்டின் உட்புறம் எப்படி இருக்க வேண்டும் என்பதிலும் இவர்களின் பங்கு அதிகம்.
புறநகர்கள், நகரியங்கள் ஆகியவற்றை உருவாக்குவதற்கும் இவர்கள் தேவைப்படுகிறார்கள்.
அரங்க அமைப்பு: கண்காட்சிகள், சினிமாவுக்கு செட் போடுதல், நாடக / பொதுக்கூட்ட அரங்கம் அமைத்தல், நகைகளை வடிவமைத்தல், மரச் சாமான்கள், புகைப்படங்கள் ஆகிய துறைகளிலும் வடிவமைப்பாளர்களுக்கு வேலை இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago