வங்காள விரிகுடா வரை திவிப்ரா (திரிபுரா) ராஜ்ஜியம் நீண்டிருந்தது. அதனால் ‘நீருக்கு அருகில்’என்ற பொருள் தரும் வகையிலும், மாணிக்கிய வம்ச அரசன் திர்புரியின் பெயரும்தான் திரிபுரா என்ற பெயர் வரக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. இந்தியாவின் 51 சக்தி பீடங்களின் ஒன்றான திரிபுரச் சுந்தரி கோயில் இருப்பதும்கூட ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
திரிபுராவின் பண்டைய பெயர் கிராத் தேஷ் (கிராத் நாடு). ஹவுரா மற்றும் கொவாய் பள்ளத்தாக்குகளில் கண்டெடுக்கப்பட்ட ஆதி கற்கால மரக் கருவிகளின் படிமங்களிலும் 3-ம் நூற்றாண்டின் மகா அசோகர் கல்தூண்களிலும் திரிபுரா குறித்த சான்றுகள் கிடைக்கின்றன.
ராஜமலா
கி.பி.1430-ல் வங்க மொழியில் எழுதப்பட்டது ராஜமலா என்ற வரலாற்று நூல். இது 8-ம் நூற்றாண்டில் சந்திர வம்சம் (லுனார் வம்சம்) தொடங்கி 149 மன்னர்களின் பெயர்களைப் பட்டியலிடுகிறது. அதன் 145-வது அரசராகப் பதவியேற்ற ரத்னா ஃபா தொடங்கிய மாணிக்ய வம்சம் கிஃபி1280 முதல் 179 மன்னர்களால் ஆளப்பட்டு 1949 வரை நீடித்தது.
கி.பி.1279-ல் இஸ்லாம் மன்னன் துக்ரில் வருகை, கி.பி.1733-க்குப்பிறகு முகலாயர் ஆதிக்கம், 18-ம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் என மாறி மாறி இடையூறுகள் வந்தாலும் மாணிக்கியர்களின் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படவில்லை.
மாநில அந்தஸ்து
1947-ல் இந்தியா விடுதலையடைந்து, கிழக்குப் பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) பிரிக்கப்பட்டது. 1949 செப். 9-ம் தேதி மகாராணி காஞ்சன் பிரபா தேவி கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி, திரிபுரா இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. முடியாட்சி முடிவுக்கு வந்தது. 1956-ல் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் 1963-ல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமும் அமைந்தது. பின்னர் 1972 ஜனவரி 21-ம் தேதிதான் முழு மாநில அந்தஸ்தை அடைந்தது.
எல்லைகள்
839 கி.மீ. நீள சர்வதேச எல்லைக்கோடு வகுக்கப்பட்டு மேற்கு, வடக்கு மற்றும் தெற்கில் வங்கதேசம் அமைந்தது. வடகிழக்கில் அஸ்ஸாம், கிழக்கே மிசோரம் அமைந்துள்ளன. ஐந்து மிகப்பெரிய மடிப்பு மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் உள்ளடக்கியதால் இது மலையும் மலை சார்ந்த நிலமும் கொண்ட குறிஞ்சி தேசம்.
பழங்குடிகளின் தேசம்
இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மாநிலங்கள் ஏழு சகோதரிகள் எனப்படுகின்றன. அதில் கடைசி சகோதரி திரிபுரா. இந்தியாவின் 2-வது சிறிய மாநிலம். மக்கள் தொகை 36.74 லட்சம். கோக்பொரோக், ரியாங், ஜாமதியா, சக்மா, ஹாலம், மோக், முண்டா, குக்கி, காரோ பழங்குடிகள் வசிக்கின்றனர்.
நான்கு பேரின் மொழி
வங்க மொழியும், கோக்பொரோக்கும் அதிகளவில் பேசப்படும் மொழிகள். இவை தவிர ஹிந்தி, மோக், ஒரியா, பிஸ்னுப்ரியா மணிப்பூரி, மணிப்பூரி, ஹாலம், காரோ மொழிகளும் பேசப்படுகின்றன. அழிவின் விளிம்பில் உள்ள மொழி சாய்மர். 2012-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஒரு கிராமத்தில் 4 பேர் மட்டுமே இந்த மொழியை பேசுவது தெரியவந்துள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 960 பெண்கள். எழுத்தறிவு 87.22 சதவீதம். இந்திய அளவில் 4-வது இடம்.
விவசாயம்
2.55 லட்சம் ஹெக்டேர் பரப்பில் விவசாயம் நடக்கிறது. 45 சதவீதம் பேர் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள். நெல் முக்கியப் பயிர். உருளைக்கிழங்கு, தேயிலை, கரும்பு, பயறு வகைகளும் பயிரிடப்படுகின்றன. ரப்பர் உற்பத்தியில் இரண்டாவது இடம். கும்டி, கொவாய் மற்றும் மானு ஆறுகள் பாய்கின்றன. அகர்தலாவில் இருந்து வங்கதேசத்துக்கு ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து வசதி உள்ளது.
மின் மிகை மாநிலம்
மின் உற்பத்தியில் மிகை மாநிலமாகத் திகழ்கிறது. அருகில் உள்ள 6 மாநிலங்களுக்கு வழங்கியதுபோக வங்கதேசத்துக்கும் மின்சாரம் ஏற்றுமதியாகிறது. 85.60 சதவீதம் பேர் இந்து மதத்தையும், 7.90 சதவீதம் பேர் இஸ்லாம், 3.20 சதவீதம் பேர் கிறிஸ்தவம், 3.10 சதவீதம் பேர் புத்த மதம், 0.5 சதவீதம் பேர் சீக்கிய மற்றும் சமண மதத்தையும் பின்பற்றுகின்றனர்.
வளமான கலாச்சாரம்
இங்கு பழங்குடிகளே கலைகளின் முதுகெலும்பாகத் திகழ்கின்றனர். வங்காளிகளின் ஆதிக்கத்தால் பழங்குடிகளிடையே வங்கக் கலாச்சாரமும் மொழியும் கலப்புக்குள்ளாகின. அனைத்து விழாக்களையும் பண்டிகைகளையும் இசை, நடனங்களால் மெருகேற்றுகின்றனர். கோரியா, லெபங், மமிதா, மொசாக் சுல்மானி, ஹோஜா கிரி, பிஜூ, வாங்கலா, சங்காரி, ஓவா ஆகிய நடனங்கள் குறிப்பிடத்தகுந்தவை.
திரிபுரா மன்னர்களுடன் ஆழமான நட்பு கொண்டிருந்த ரவீந்திரநாத் தாகூர், மாணிக்யர் வம்சப் புனைவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதிய ‘ராஜர்ஷி’ நாவல், ‘விஜர்சன்’ மற்றும் ‘முக்குத்’ நாடகம் புகழ்பெற்றது. தாகூர் நோபல் பரிசு வென்றதற்காக மன்னர் பிக்ராம் கிஷோர் பெரிய விழாவையே நடத்தினார். இந்தி திரையிசை உலகின் ஜாம்பவனான சச்சின் தேவ் பர்மன் திரிபுரா அரச வம்சாவளியைச் சேர்ந்தவரே.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago