அமெரிக்க அதிபர்கள் எப்போது இந்தியா வந்தாலும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு வரும் அதிபர், குடியரசுத் தின விழாவில் பங்கேற்கும் முதல் அமெரிக்க அதிபர் எனச் சில சிறப்புகளும் தொற்றிக்கொண்டதால் பராக் ஒபாமாவின் இந்திய விஜயம் மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்தியப் பயணத்தின் முக்கியத்துவம் என்ன? முக்கியமாக அணுசக்தி ஒப்பந்தத்தின் முடிவு என்ன சொல்கிறது?
இந்திய அமெரிக்க உறவு
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு என்பது ஜனநாயக அடிப்படையில் அமைந்தது. இரண்டும் உலகின் இரு பெரும் ஜனநாயக நாடுகள் என்பதால் ஏற்பட்ட உறவு. இந்திய அமெரிக்க உறவில் ஏற்ற இறக்கங்கள் இருந்ததுண்டு.
குறிப்பாக, சோவியத் யூனியன் பக்கம் இந்தியா இருந்ததுபோதும் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியபோதும் சிக்கல்கள் இருந்தன. ஆனால் அப்போதுகூட இரு நாடுகளிடையேயான நல்லுறவுக்குப் பங்கம் வந்ததில்லை.
அதிபர்கள் வருகை
உலகில் மிகப் பெரிய சக்தியுள்ள நாடாக இருக்கும் அமெரிக்காவின் அதிபர்கள் இந்தியா வருவது மிகவும் அபூர்வமானதுதான். இந்தியா சுதந்திரம் அடைந்து இந்த 67 ஆண்டுகால வரலாற்றில் ஆறு அமெரிக்க அதிபர்கள் மட்டுமே இந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள்.
முதன் முறையாக 1959-ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் டவைட் டி.ஐசனோவர் இந்தியாவுக்கு ஐந்து நாள் பயணமாக வந்து சென்றார். அதன் பின்னர் அமெரிக்க அதிபர்கள் ரிச்சர்ட் பி. நிக்ஸன் (1969), ஜிம்மி கார்டர் (1978), பில் கிளிண்டன் (2000), ஜார்ஜ் புஷ் (2006) ஆகியோர் இந்தியாவுக்கு வந்துள்ளனர்.
பராக் ஒபாமா முதன்முறை பதவியேற்றபோது 2010-ம் ஆண்டில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பிறகு இப்போது மீண்டும் வந்திருக்கிறார்.
முதல் அதிபர்
முதன்முதலில் அமெரிக்க அதிபரை இந்தியக் குடியரசு தின விழாவுக்கு அழைக்கும் பழக்கத்தை முன்னாள் பிரதமர் நரசிம்மராவ்தான் தொடங்கிவைத்தார். அதன் பிறகு பல கட்டங்களில் அழைப்பு விடுக்கப்பட்டும் அமெரிக்க அதிபர்கள் யாரும் குடியரசு தின விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வந்ததில்லை.
இந்த முறைதான் அது நடந்திருக்கிறது. இதன் மூலம் குடியரசுத் தின விழாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் என்ற சிறப்போடு இரண்டாவது முறையாக வந்த அதிபர் என்ற பெருமையையும் ஒபாமா பெற்றார்.
மாறிய மரபுகள்
இந்தியாவுக்கு வரும் எந்த வெளிநாட்டுத் தலைவருக்கும், பெண் ராணுவ அதிகாரி தலைமையில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுவதேயில்லை. பராக் ஒபாமாவுக்கு முதன்முறையாக பெண் அதிகாரி தலைமையில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. வழக்கமான மரபை மீறி பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்துக்குச் சென்று ஒபாமாவை வரவேற்றார்.
கடந்த 2010-ம் ஆண்டில் ஒபாமா இந்தியா வந்தபோதும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் விமான நிலையம் சென்று வரவேற்றது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர்களுக்கு மட்டுமே இப்படி மரபுகளுக்கு மாறாக வரவேற்பு அளிக்கப்படுவதும் கவனிக்கத் தக்க விஷயமே.
பாகிஸ்தான் இல்லை
ஒபாமா வருகையில் குறிப்பிடும்படியான இன்னொரு விஷயம் ஒன்றும் இருக்கிறது. இந்தியா வந்த அமெரிக்க அதிபர்கள் அனைவருமே தங்கள் பயணத் திட்டத்தில் பாகிஸ்தானையும் இணைத்துக்கொண்டே வருவார்கள். பாகிஸ்தானுக்கும் நல்ல பிள்ளை, இந்தியாவுக்கும் நல்ல பிள்ளை மாதிரி நடந்துகொண்டார்கள்.
ஆனால், ஒபாமாவின் இந்தப் பயணத் திட்டத்தில் பாகிஸ்தானுக்கு இடமில்லை. அதிபர் ஒபாமா இந்தியாவுக்கு மட்டுமே வந்திருக்கிறார். இந்தியப் பயணத்தை முடித்துக்கொண்டு சவுதி அரேபியாவுக்குச் சென்றுவிட்டார்.
சர்ச்சை
பிரதமர் நரேந்திர மோடியின் உடை சர்ச்சை, குடியரசுத் தின விழாவுக்கு மரபுக்கு மாறாகத் தனி வாகனத்தில் வந்த ஒபாமா எனச் சில சர்ச்சைகள் எழவும் செய்தன. அதேசமயம் அமெரிக்க அதிபர்களின் வழக்கத்துக்கு மாறாகக் குடியரசுத் தின விழாவில் இரண்டு மணி நேரம் ஒபாமா பங்கேற்றதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
இப்படிப்பட்ட சிறப்புகளையும் பெருமைகளையும் சர்ச்சைகளையும் தாண்டி, அமெரிக்க அதிபர் பயணத்தில் ஏதேனும் பலன் விளைந்திருக்கிறதா?
பேச்சுவார்த்தை
அமெரிக்காவுடனான ராணுவத் தொழில்நுட்பப் பரிமாற்ற ஒப்பந்தம், வர்த்தகம், பொருளாதாரம், திறன்மிகு நகரங்கள் பற்றியெல்லாம் இந்தப் பயணத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. பாகிஸ்தான் மண்ணில் இருந்து செயல்படும் தீவிரவாதம் பற்றிப் பேசப்பட்டாலும் அது ரகசியமாகவே கையாளப்பட்டது. இந்த விஷயங்களைத் தாண்டி முக்கியமாக மோடியும் ஒபாமாவும் விவாதித்தது அணு சக்தி ஒப்பந்தத்தைப் பற்றித்தான்.
ஒப்பந்தப் பின்னணி
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் 2008-ம் ஆண்டில் ஏற்பட்டது. அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் இதில் கையெழுத்திட்டார்கள். இரு காரணங்களால் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வராமல் தடையில் இருந்தது.
அணு உலைகளை சப்ளைசெய்யும் அமெரிக்கா போன்ற வெளிநாட்டு அணு உலைகளால் விபத்து ஏற்பட்டால் பொதுமக்களுக்கு அதனால் ஏற்படும் நஷ்ட ஈட்டை அளிக்கும் விவகாரமும், இந்திய அணு உலைகளை இந்திய-அமெரிக்க ஒப்பந்தப்படி சோதனை செய்ய அமெரிக்காவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்ட விவகாரமும் தடையாக இருந்தன.
இதன் ஒரு பகுதியாக கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நாடாளுமன்றத்தில் அணு உலை விபத்து இழப்பீட்டுச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தையும் அமெரிக்காவில் அணு உலை சப்ளை செய்யும் நிறுவனங்கள் எதிர்த்தன. இப்போது அந்தச் சிக்கல்களுக்கு நரேந்திர மோடியும் பராக் ஒபாமாவும் தீர்வு கண்டுள்ளார்கள்.
ஒப்பந்தத்தில் மாற்றம்
இதன்படி இந்திய அணு உலைகளை அமெரிக்கா சோதனை செய்ய வேண்டியது இல்லை. அணு உலை விபத்துகளுக்கு இழப்பீடு கொடுக்க 1,500 கோடி முதலீட்டில் அபாய மேம்பாட்டு காப்பீட்டுப் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்படும். இதுபோன்ற காப்பீட்டுப் பிரிவுகள் ஏற்கெனவே பல்வேறு நாடுகளில் செயல்படுகின்றன. இதன்மூலம் சர்வதேச அணுசக்தி முகமையின் வழிகாட்டுதலின் பேரில் நஷ்ட ஈடு வழங்கப்படும்.
அதிபரின் அதிகாரம்
இந்திய அணு உலைகளைச் சோதனை செய்வதில் விதிவிலக்கு கொடுப்பதை அமெரிக்க பாராளுமன்றம் ஏற்றுக்கொள்ளாது. எனவே இதில் அதிபரின் தனிப்பட்ட அதிகாரமும் பயன் படுத்தப்பட்டுள்ளது.
ஒரு அதிபரின் உத்தரவை மற்றொரு அதிபரால் மாற்ற முடியாது என்கிறது அமெரிக்கச் சட்டம். எனவே அமெரிக்காவில் வேறு யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தச் சட்டத்தை மாற்ற முடியாது என்கிறார்கள் வல்லுநர்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago