மனம் விட்டுப் பேசுங்கள்

By டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்

பெற்றோர்களுக்கும் வளர்ந்துவிட்ட பிள்ளைகளுக்கும் இடையேயான அன்பான உறவுதான் குடும்பத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை. பல்வேறு விதமாக ஆத்மார்த்தமாக இந்த அன்பு வெளிப்படும். நல்ல பேச்சின் மூலமாக வெளிப்பட்டால் அது உறவுக்கு ஒரு பலம்தான்.

சில குடும்பங்களில் வரும் பல பிரச்சினைகளுக்குக் காரணம் பெற்றோர்களும் பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசாமல் இருப்பதுதான்.

நண்பர்களாக…

நண்பன் திரைப்படத்தில் ஒரு காட்சி. மூன்று மாணவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். அதில் ஒருவர் சிறந்த புகைப்பட நிபுணராக வேண்டும் என்று ஆசைப்படுவார். ஆனால் அவரின் அப்பா அவரை இன்ஜினீயரிங் படிப்பில் சேர்த்திருப்பார். அவரும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு இன்ஜினீயரிங் படிப்பார். ஆனால் அவர் நண்பர்கள் அவரை ஊக்குவித்து அவருக்குப் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்துவார்கள். பெற்றோரிடம் பேசி அனுமதி வாங்கிவர அனுப்புவார்கள். அப்பாவும் மகனும் சந்திக்கும் காட்சியில் மகனுக்கு இன்ஜினீயராக வேலை கிடைத்து விட்டது என்று அப்பா லேப்டாப் வாங்கி வைத்திருப்பார்.

மகன் மெதுவாகத் தன் ஆசையைத் தெளிவுபடுத்துவார். அப்பா முதலில் மறுப்பார். கடைசியில் மாணவர் மண்டியிட்டுச் சொல்வார் ‘’அப்பா, நான் இன்ஜினீயராக ஆகினால் நிறையச் சம்பாதிப்பேன். உங்களுக்கு நிறைய நல்லது செய்வேன். ஆனால் சந்தோஷமாக இருப்பேனா என்பது சந்தேகம். ஆனால் புகைப்பட நிபுணராக இருந்தால் குறைவாகத்தான் சம்பாதிப்பேன். ஆனால் சந்தோஷமாக இருப்பேன் என்று நெகிழ்ந்து கூறுவார். அப்பாவும் மனம் மாறித் தான் வாங்கி வைத்திருந்த லேப்டாப்பை விற்றுவிடுகிறேன். கேமரா என்ன விலை என்று கேட்பார். அப்பாவும் மகனும் கட்டிப்பிடித்துச் சந்தோஷப்படுவார்கள்.

பேசுங்கள்

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தால் உண்மையில் தேவையான முடிவுகளை எடுக்க முடியாது. அப்பா கோபப்படுவார். நம் முடிவை மாற்றிக்கொள்ளலாம் என்று பிள்ளைகள் நினைப்பார்கள். நாம் ஏதாவது சொன்னால் பையன் கஷ்டப்படுவான் என்று நினைத்து அவன் போக்கிலேயே விட்டுவிடலாம் என்று பெற்றோர்கள் நினைப்பார்கள். இவ்வாறு நினைப்பது தவறானது. இருதரப்பினரின் பேச்சுகளிலும் சுயசிந்தனை வெளிப்படவேண்டும்.

“என் அப்பா அவரது நண்பர் சொன்னாத்தான் கேட்பார்’’ என்று பிள்ளைகள் சிந்திக்கக் கூடாது. “நம் பையனிடம் அவனின் ஆசிரியரை வைத்துப் புத்தி சொல்லலாம்’’ என்று பெற்றோர்கள் நினைக்கக் கூடாது. குடும்ப உறவில் மற்றவர் செல்வாக்கு செலுத்துவதை கூடுமானவரையில் தவிர்ப்பது நல்லது. பெற்றோர்கள் தாங்கள் வாழ்ந்த சூழலும் பிள்ளைகள் இப்போது வாழும் சூழலும் வேறுவேறு என்பதைப் புரிந்துகொண்டு பேசவேண்டும்.

குறிப்பாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் எப்படிப் பேசுவது என்று புரிந்துகொள்வதைக் காட்டிலும் இளைஞர்கள் தங்கள் பெற்றோர்களிடம் எப்படிப் பேசவேண்டும் என்று தெரிந்து கொண்டால் தெளிவு பிறந்து விடும்.

# பெற்றோர்களிடம் இளைஞர்கள் நண்பர்களாகப் பழகுங்கள். அப்போதுதான் அவர்கள் உங்களிடம் மனம் விட்டுப் பேசுவார்கள்.

# அன்றாடம் பள்ளியில், கல்லூரியில் என்ன நடந்தது என்பதை அவர்களிடம் சொல்லுங்கள்.

# முடிவுகளை நீங்கள் முன்பே தீர்மானித்துவிட்டு பேசாதீர்கள் .அவர்களின் எண்ணங்களுக்கும் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் தருவதுபோல் உங்கள் பேச்சு அமையட்டும்.

# பேச்சுக்களின் நடுவே சுவாரஸ்யத்தை ஏற்படுத்த சிரிப்புகளைச் சிதறவிடுங்கள்.

# அவர்களின் பேச்சு தவறு என்பதைச் சுட்டிக்காட்டாமல் இதை இப்படிப் பேசினால் நன்றாக இருக்கும் என்று சொல்லுங்கள்

# உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசுங்கள். அவசரப்பட்டுக் கோபமாகப் பேசிவிடாதீர்கள். கோபம் கூட அவர்கள் மேல் உள்ள அக்கறைதான் என்பதைத் தெளிவுபடுத்துங்கள்

# வெறும் வாய்ப்பேச்சாக மட்டும் இருந்து விடாமல் உங்கள் பாடி லேங்குவேஜ் மூலமாகவும் உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்

# உங்கள் பெற்றோரை வேறு யாரோடும் ஒப்பிட்டு விமர்சிக்காதீர்கள்.

# படிக்காத பெற்றோர்களுக்கு நீங்கள் படிக்கும் டெக்னாலஜியோ நண்பர்களின் சூழலோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களின் அறியாமையை அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.

# அவர்கள் உங்களைவிட வயதானவர்கள்.அனுபவம் மிக்கவர்கள். உங்கள் நலனில் அக்கறை உடையவர்கள் என்ற உள்ளுணர்வோடு உங்கள் பேச்சு அமையட்டும்.

மனம் விட்டுப்பேசுங்கள். அன்பு என்பது ஒருவழிப் பாதையல்ல. நல்ல தொடர்புடைய பேச்சு இருந்தால் இரு தரப்புக்கும் வெற்றி தான்.

தொடர்புக்கு: sriramva@goripe.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்