போட்டியைச் சந்திக்கத் தயாராகுங்கள்!

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

பிளஸ்-2 முடித்துவிட்டு என்ன படிக்கலாம், எங்கே படிக்கலாம், என்பது குறித்து ‘தி இந்து எஜுகேஷனல் பிளஸ்’ சார்பில் ஆண்டுதோறும் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, கருத்தரங்கம், கண்காட்சி என முப்பெரும் நிகழ்வாகச் சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டர் அரங்கில் அண்மையில் நடந்தது.

மாணவ-மாணவிகளும் பெற்றோரும் உற்சாகமாகக் கலந்து கொண்டார்கள். தொடக்க விழாவில் மணிபால் குளோபல் எஜுகேஷன் சர்வீசஸ் நிறுவனத் தலைவர் டி.வி. மோகன்தாஸ் பையின் பேச்சு மாணவ-மாணவியரைப் பெரிதும் கவர்ந்தது.

“இன்றைய தினம் நடுத்தர வகை வேலைகள் அனைத்தும் கணினியமாக்கப்பட்டு வருகின்றன. வேலைவாய்ப்புகள் குறைந்துவரும் சூழலில் படைப்பாற்றல், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறன் உள்ளிட்ட திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஆங்கிலத் தகவல் தொடர்புத்திறன் மிக மிக முக்கியமானது. ஒருசில வினாடிகளில் நமது திறமைகளை வெளிப்படுத்தியாக வேண்டும்.

எதையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் (Curiosity) பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறன் (Problem solving skill), பரந்த புத்தக வாசிப்பு, விசால அறிவு, பி.ஜி. அல்லது பி.எச்டி. பட்டம், ஆங்கிலப் பேச்சாற்றல், தொழில்நுட்ப அறிவு- இத்தகைய திறமைகளையும் பண்புகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள். சர்வதேச வேலைவாய்ப்பு சவால்களைத் தைரியமாகச் சந்திக்க முடியும்” என்று மாணவர்களுக்கு உறுதி அளித்தார்.

உயர்கல்வி தொடர்பாக மாணவ-மாணவியர், பெற்றோரின் கேள்விகளுக்குச் சளைக்காமல் பதிலளித்தார் பை. சந்தேகங்களுக்குத் தெளிவு பெற்ற மாணவ-மாணவிகளின் முகத்தில் மகிழ்ச்சி மிளிர்ந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE