அந்த நாள் 39: வந்தார்கள் பாளையக்காரர்கள்

By ஆதி வள்ளியப்பன்

“குழலி, 1363-ல் குமாரகம்பணர் காலத்திலேயே மதுரையில் நாயக்கர் ஆட்சி தொடங்கிடுச்சுன்னு முதல்ல சொன்ன. பின்னாடி நீயேதான் கிருஷ்ணதேவராயர் காலத்துலதான் நாயக்கர் ஆட்சி வலுப்பெற்றுச்சுன்னு சொல்லிருக்க. ரெண்டுக்கும் இடையில 165 வருசத்துக்கு யாரோட ஆட்சி நடந்துச்சு?”

“ம். போன வாரம் திருப்பம், திருப்பம்னு அவசரப்படுத்திட்டு, இப்போ விளக்கமா கேள்வி கேட்கிற. சரி பரவாயில்ல, கேள்விகள் நல்லவைதான். இடைப்பட்ட காலத்துல விஜயநகரத் தளபதிகளும் சிற்றசர்களும் தமிழகத்தை ஆண்டுவந்தாங்க. அவங்க விஜயநகர மன்னர்களுக்கு முழுமையாக கட்டுப்பட்டவங்களா இருந்தாங்க.”

“ஓ! அப்படீன்னா அவங்கள்ல குறிப்பிடத்தக்கவங்க யாரும் இல்லையா?”

“இல்லேண்ணுதான் சொல்லணும். கிருஷ்ணதேவராயர் மாதிரி வலுவான ஒரு பேரரசர் தென்னிந்தியாவுல வந்த பின்னாடி, அவரோட வழிகாட்டுதல்ல விஸ்வநாத நாயக்கர் இங்கே ஆட்சிப் பொறுப்பேற்றார். அப்போததான் மதுரைக்குக் கீழே உள்ள தமிழகப் பகுதி நிரந்தரமாக ஒரு வம்சத்தோட ஆட்சியின் கீழ திரும்பவும் வந்துச்சு.”

“ஆமா, அந்த வம்சத்தோட பேரே நாயக்க வம்சம்தானா?”

“விஜயநகர அரசரோட கட்டுப்பாட்டுல இருந்த அரசுப் பிரதிநிதிகளை ‘நாயக்கர்’னு பொதுவா கூப்பிட்டாங்க. பின்னாடி அதுவே ஒரு சமூகம், சாதியைக் குறிக்கும் பெயரா மாறிடுச்சு.

இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேனே. விஜயநகர மன்னர்களோட ஆட்சிக் காலத்துல மதுரையைத் தவிர தஞ்சை, செஞ்சி ஆகிய நகரங்கள்லயும் நாயக்கர் ஆட்சிதான் நடைபெற்றுச்சு. தமிழகத்தை ஆண்ட நாயக்க வம்சங்கள்ல மதுரை நாயக்கர்களே நீண்ட காலத்துக்கு ஆட்சி புரிஞ்சாங்க. அவங்களோட ஆட்சி 200 வருசத்துக்கு நீடிச்சது.”

“இந்த விஷயம் புதுசா இருக்கு. தமிழகம் முழுக்க ஆட்சி செலுத்தியிருந்தாலும், மதுரை நாயக்கர்கள் பிரபலமானதற்கு இதுதான் காரணமா?”

“ஆமா, மதுரை நாயக்கர் வம்சத்துல பதிமூணு பேர் ஆட்சி செஞ்சாங்க. அவங்கள்ல ரெண்டு பெண் ஆட்சியாளர்களும் உண்டு. முதல் ஆறு பேர் விஜயநகரப் பேரரசருக்குக் கட்டுப்பட்டவங்களா இருந்தாங்க. பின்னாடி வந்தவங்க விஜயநகர அரசர்களுக்குக் கட்டுப்படல. முழு அதிகாரம் பெற்ற அரசா பிரகடனம் செஞ்சுக்கிட்டாங்க.”

“நல்ல விஷயம்தான். நாயக்கர் ஆட்சில இதுபோல வேற என்ன மாற்றங்கள் நடந்தன?”

“ஆட்சி நிர்வாக முறை மாறுபட்டு இருந்துச்சு. அரசருக்கு அடுத்தபடியா ‘தளவாய்’ங்கிற பொறுப்புல இருந்தவரே அதிக அதிகாரத்தோட இருந்தார். முதன்மை அமைச்சர், படைத்தலைவர் உள்ளிட்ட அதிகாரமெல்லாம் அவர்கிட்ட இருந்துச்சு. ‘பிரதானி’ங்கிறவர் நிதியமைச்சர். ராயசம் பதவியில இருந்தவர் தலைமைச் செயலாளர். இவங்க மூவருமே அரசருக்குக்கீழே ஆட்சியோட முக்கிய பொறுப்பை வகிச்சாங்க.”

“அவங்களுக்கும் கீழ யாரு இருந்தா?”

“விஸ்வநாத நாயக்கர் காலத்துல ஆட்சிப்பகுதிகளை பாளையப்பட்டுக்களா பிரிச்சு நிர்வகிக்கும் முறை உருவாச்சு. இதுபோல 72 பாளையப்பட்டுகள் இருந்துச்சு. பாளையக்காரர்கள் பொதுவா தெலுங்கு, கன்னடம் பேசினவங்களாவே இருந்தாங்க. பாளையக்காரங்களுக்குச் சுயாட்சி உரிமையும் வழங்கப்பட்டிருந்துச்சு.”

“அப்புறம் எப்படி அவங்க நாயக்கர்களுக்குக் கட்டுப்பட்டவங்களா இருந்தாங்க?”

“பாளையக்காரங்க நாயக்கர்களோட ரெண்டு கட்டுப்பாடுகளை முதல்ல ஏத்துக்கிட்டாதான் ஆட்சியே நடத்த முடியும். முதலாவது, தங்கள் பகுதில கிடைக்கும் வருவாய்ல மூணுல ஒரு பகுதியை தங்கள் செலவுக்கும், இரண்டாவது பகுதியை படைக்கும், மூன்றாவது பகுதியை மதுரை நாயக்கருக்கும் செலுத்தியாகணும். அதோட மதுரை அரசுக்குத் தேவைப்படுற நேரத்துல படையையும் பாளையக்காரங்க கொடுத்து உதவணும்.

சோழர் ஆட்சி முறைல கிராமங்களை கிராம சபையால நிர்வகிச்சாங்க. நாயக்கர் ஆட்சிக் காலத்துல கிராம சபைகள் மறைஞ்சுபோச்சு. மணியக்காரர், கணக்கர், தலையாரியைக் கொண்ட ஆயக்கார (வரிவசூல்) நிர்வாக முறை உருவாக்கப்பட்டுச்சு. மணியக்காரர் வரி வசூல் செஞ்சு பாளையப்பட்டு அதிகாரிகள்ட்ட வரிப்பணத்தைக் கொடுப்பார், அந்த அதிகாரிங்க அரசரின் மந்திரிப் பிரதானிகள்ட்ட (நிதியமைச்சர்) கொடுப்பாங்க. இப்படித்தான் பாளையப்பட்டுகள் இயங்குச்சு”

“இது ஓரளவுக்கு இன்னைய மத்திய அரசு – மாநில அரசு அமைப்பு மாதிரி இருக்கே குழலி.”

“ஆமா, செழியன். நீ சொல்றது சரிதான்.”

யாருக்கு உதவும்?

போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி,

பள்ளி வரலாற்றுப் பாடம்

 

பரவலாக அறியப்பட்ட பாளையப்பட்டுகள்.

பாஞ்சாலங்குறிச்சி, எட்டையபுரம், மணியாச்சி, சிங்கம்பட்டி, நிலக்கோட்டை, பெரியகுளம்

கட்டுரையாளர்

தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்