யாஹு காலம்!

‘நெட்ஸ்கேப்’ பெற்ற வரவேற்பின் உற்சாகத்தால், பலரும் இந்த பிரவுசரில் பார்க்ககூடிய வலைமனைகளை (இணையதளம்) உருவாக்கத் தொடங்கினர். வர்த்தக நிறுவனங்களும் தனிநபர்களும் தங்களுக்கென இணையதளத்தை அமைத்துக்கொள்ளத் தொடங்கினர்.

‘நெட்ஸ்கேப்’ பெரும் வரவேற்பைப் பெற்று பங்குச்சந்தையிலும் நுழைந்து அசத்தியது. வலை மூலம் உருவான முதல் வர்த்தக நிறுவனமாக ‘நெட்ஸ்கேப்’ அறியப்படுகிறது.

‘நெட்ஸ்கேப்’பின் வெற்றி வலையின் வீச்சையும் வாய்ப்புகளையும் கச்சிதமாக உணர்த்த, டெஸ்க்டாப்பில் கோலோச்சிக்கொண்டிருந்த மைக்ரோசாப்ட் இதைத் தாமதமாக உணர்ந்து, தன் பங்குக்கு ‘இண்டர்நெட் எக்ஸ்புளோரர்’ பிரவுசரை அறிமுகம் செய்தது.

விண்டோஸுடன் இலவசமாக அளிக்கப்பட்ட எக்ஸ்புளோரர், மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருந்த ‘நெட்ஸ்கேப்’புடன் மல்லுக்கட்டியது. இந்த மோதல் வலை வரலாற்றில் ‘பிரவுசர் யுத்தம்’ எனப் பிரபலமாகக் குறிப்பிடப்படுகிறது.

வலைமனைகள்

‘நெட்ஸ்கேப்’ எழுச்சிபோலவே அதன் வீழ்ச்சியும் வேகமாக அமைந்தது. மைக்ரோசாப்டின் போட்டிக்கு மத்தியில் ஏ.ஒ.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் கைக்கு மாறிய ‘நெட்ஸ்கேப்’, அதன் சோர்ஸ் கோட் பொதுவெளியில் வைக்கப்பட்டதால், மொசில்லா அறக்கட்டளை மூலம் பயர்பாக்சாக மறு அவதாரம் எடுத்தது தனிக்கதை.

புதிய வலைமனைகள் உருவாகி, வலை வேகமாக வளரத் தொடங்கிய நிலையில், பொதுமக்களும் வலையை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். அங்கும் இங்குமாக வலைமனைகள் முளைத்துக்கொண்டிருந்த நிலையில் இணையத்துக்கு வருகை தந்தவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய தேவை இருந்தது.

யாஹு அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. ஸ்டேண்ட்போர்டு பல்கலைக்கழக மாணவர்கள் ஜெரி யங், டேவிட் பைலோ இருவரும் 1994-ம் ஆண்டின் தொடக்கத்தில், வைய விரிவு வலைக்கான ‘ஜெரி மற்றும் டேவிட்டின் வழிகாட்டி’ எனும் பெயரில் ஒரு வலைமனையை அமைத்தனர். இந்தத் தளத்தின் நோக்கம் மிகவும் எளிமையானதாக இருந்தது. வலையில் தினந்தோறும் அறிமுகமாகிக்கொண்டிருந்த இணையதளங்களை அடையாளம் காட்டி, பட்டியலிட்டு வகைப்படுத்தும் சேவையாக இது அமைந்தது.

புதிய சேவைகள்

அடிப்படையில் இணையதளங்களின் கையேடாகவே இந்தத் தளம் அமைந்தது. ஆனால், அந்தக் காலகட்டத்தில் இப்படி ஒரு தளம்தான் இணையவாசிகளின் தேவையாக இருந்தது. விரைவில் ‘யாஹு’ எனப் பெயர் மாற்றம் செய்துகொண்ட இந்தத் தளமே, இணையவாசிகள் முதலில் நாடும் தளமாக மாறியது.

இணையதளங்கள் பட்டியல் தவிர செய்திகள், இமெயில், செய்திக்குழுக்கள், தேடல் சேவை உள்ளிட்ட அம்சங்களோடு யாஹு முழுவீச்சிலான வலைவாசலாகவும் உருவெடுத்தது. பின்னர் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் எல்லாம் யாஹுவைப் பார்த்தே வலைவாசல்களை அமைத்தன.

அடுத்து வந்த ஆண்டுகளில் வலை இன்னும் வேகமாகப் பரந்து விரியத் தொடங்கினாலும், யாஹுவே இணையவாசிகள் முதலில் நுழையும் இடமாக அமைந்தது. பெரும்பாலானோரின் இணைய பயணம் யாஹுவில் இருந்தே தொடங்கியது. இன்று யாஹு இணையப் பயணத்தில் பின்னுக்குத்தள்ளப் பட்டுவிட்டாலும், 1990-களில் இணையத்தை வெகுஜனமயமாக்கியதில் அதன் பங்கு மகத்தானது என்பதை யாரும் மறுக்க முடியாது.

(வலை வீசுவோம்)

கட்டுரையாளர் தொடர்புக்கு: enarasimhan@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE