வேலை நேரம் போக மிச்ச நேரத்தில் என்ன செய்வீங்க? என்ற கேள்வியைக் கேட்டால் பெரும்பாலும் எங்கே சார் நேரம்? என்ற பதிலைத்தான் கேட்க முடிகிறது.
ஒரு கைப்பேசி நிறுவனத்திற்குப் பயிற்சி எடுக்கச் சென்றிருந்தேன். அனைவரும் ஒரு வருடத்திற்கும் குறைவான அனுபவமே உள்ளவர்கள். இளைஞர் பட்டாளம். வேலைப் பளுவால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்கள். அவர்களிடம் சொன்னேன். “முதல் ஒரு மணி நேரம் எந்தப் பயிற்சியும் இல்லை. என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். ஆனால் வேலை, வேலை சம்பந்தமான மனிதர்கள் பற்றி மட்டும் பேசக் கூடாது!”
வேலை தவிர..
“அப்பா, நல்லா தூங்கலாம் சார்!” என்றார்கள். “எனக்கு ஆட்சேபமில்லை” என்றேன். “வேலையைப் பற்றிப் பேசுவதைத் தவிர என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்!”
ஒரு சில நிமிட ஆரவாரத்திற்கு பின் யாரும் எதுவும் பேசவில்லை. தூங்கவும் இல்லை. கனத்த மவுனம் நீடித்தது.
“வேலை, அலுவலகம் தவிர பேசறதுக்கு என்ன இருக்குன்னு யோசிச்சுப் பாத்தா ஒண்ணுமே இல்லை டாக்டர்!”
வேதனையாக இருந்தது.
ஒர்க்கஹாலிக்கா?
வேலை மற்றும் வேலைக்கான பயணம் என்பது 10 முதல் 12 மணி நேரத்தைச் சாப்பிட்டுவிடுகிறது. இன்று அதுவே இயல்பு வாழ்க்கையாகி விட்டது. பலர் வீட்டுக்கு வந்தும் அலுவலகத்தைப் பற்றிய கதைதான் பேசுவார்கள். அல்லது அலுவலக ஆட்களுடன் பேசுவார்கள்.
“தூங்கத்தான் வீட்டுக்கே வர்றோம்” என்பார்கள். “வேலை செஞ்சுட்டே இருந்துட்டு லீவு விட்டா என்ன செய்யறதுன்னே தெரியலை!” என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். விழித்திருக்கும் நேரம் அலுவலகத்திலேயே கழிகிறது. அதிலும் பாஸ் ஒர்க்கஹாலிக் என்றால் உங்களை அவ்வளவு சீக்கிரம் விட மாட்டார். அது என்ன Workaholic? Alcoholic போலவா?
கிட்டத்தட்ட அப்படித்தான். வேலை ஒரு போதை போலவும், அது தவிர எதையும் மனம் சிந்திக்காமல் இருக்கும். வேலை முடிந்தாலும் அலுவலகம் விட்டு வர மனம் இருக்காது. நிறைய வேலை இருந்தால்தான் திருப்தியாக இருக்கும்.
வேலையே போதையாக..
இப்படிப் பல ஒர்க்கஹாலிக்குகள் விடிய விடிய அலுவலகத்தில் கிடப்பதை பல நிறுவனங்கள் ஆரம்பத்தில் கொண்டாடும். ஆனால் அவர்கள் வேலை அப்படி ஒன்றும் சிலாகிப்பது போல சிறப்பாக இல்லை என்று தெரிந்ததும் பாராட்டுகள் நிறுத்தப்படும். இது ஒரு அடிமைத்தனம். இதனால் பெரிய விளைவுகள் இல்லை என்பது புரிந்துவிடும்.
அதிக வேலைப் பளு, வேலையைத் தவிர எதுவும் செய்வதில்லை என்பதில் பெருமை, சொந்த வாழ்க்கையை வேலைக்காகத் தியாகம் செய்தல் இவை வேலையைப் போதையைப் போல மாற்றிவிடும்.
“அவருக்கு வீட்டில தொந்தரவு சார். அதான் அலுவலகமே கதின்னு கிடக்கிறார்!” என்று எத்தனை பேரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்!
இதுபோன்ற முன்மாதிரிகளால் வேலையைத் தவிர எதுவுமில்லை என்கிற கற்பிதத்தைப் புதியவர்கள் எளிதில் உள்வாங்கிக்கொள்வார்கள். வாழ்க்கையை வெறுமையாக உணரும்போதுதான், வேலை அடையாளத்தையும் வேலையையும் ஒரு போதையைப் போலப் பிடித்துக்கொள்கிறார்கள்.
வாழ்வின் பருவங்கள்
மூன்று பருவங்களில் வாழ்க்கை நகர்கிறது. வேலைக்காகத் தயாராகுதல் முதல் இருபது, இருபத்தைந்து வருடங்கள், பின் முப்பது முப்பதைந்து வருடங்கள் வேலையைப் பற்றிக் கொள்ளுதல், பின் செய்த வேலையை நினைத்துப் பார்த்தல் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.
உண்மையில் வேலையைக் கடந்து ஒரு வாழ்க்கை தனியாகவும் உள்ளது. இருட்டு வெளிச்சத்தின் அழகை உணர்த்த உதவுவது போல, சொந்த வாழ்க்கையின் அழகை நாம் செய்யும் வேலை உணர்த்தும். பாரம்பரியமாக எட்டு மணி நேர உழைப்பு, எட்டு மணி நேர குடும்ப வாழ்க்கை, எட்டு மணி நேர தூக்கம் என்று அர்த்தத்தோடு பிரித்து வைத்திருந்தனர்.
இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் அப்படிப் பிரிக்க முடியாது என்றாலும் வேலையைத் தாண்டி ஒரு வாழ்க்கை உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.
சம வாழ்க்கை
நேர்காணலில் விளையாட்டுகளுக்கும் சமூக சேவை காரியங்களிலும் ஈடுபடுபவருக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. ஏன்? அவர் ஒரு சமமான வாழ்க்கை வாழ்கிறார் என்று உணர்த்துகிறது.
“இந்த வேலைக்கு வந்த பிறகு எதையும் செய்ய முடியவில்லை” என்போர் சாக்கு போக்கு சொல்பவர். வேலையை ஸ்திரமாக வைத்துக் கொண்டு இசை, நாடகம், எழுத்து, விளையாட்டு, ஆன்மிகம், அரசியல், சமூகப் பணி என எத்தனை பேர் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்? இது தவிர பல சபைகளில் சிறப்பாகச் செயல்படுபவர்கள் ஒரு முழு நேர வேலையை வைத்துக் கொண்டிருப்பவர்கள்தான்.
உண்மையைச் சொன்னால் வேலையைவிட்டு மனம் வேறு இடத்திற்குச் சென்று பின் வேலைக்குத் திரும்புகையில் மனம் புத்துணர்ச்சி அடைகிறது. வேலை நேரத்தில் தேநீர் அருந்துவது மாதிரிதான் இதுவும்.
வாழ்வைக் காதலி!
ஐரோப்பியர்கள் விடுமுறையை எப்படிக் கழிப்பது என்ற வித்தையில் தேர்ந்தவர்கள். வேலையின் கூர்மையை அதிகரிக்க, மன உளைச்சலைக் குறைக்க, வேலையை மகிழ்வோடு செய்ய, வேலையைத் தவிர மற்ற வேலைகளையும் பாருங்கள்.
வாழ்க்கை ரம்மியமானது. குழந்தைகளைக் கொஞ்ச, புத்தகங்கள் படிக்க, தோட்டம் வளர்க்க, செல்லப் பிராணி வளர்க்க, நிலா பார்த்துக் கவிதை யோசிக்க, மலை ஏற, உறவினர் வீடு செல்ல, நட்பு வட்டத்துடன் உறவு கொள்ள, எளியோருக்கு உதவ, இசையை ரசிக்க, வாழ்க்கையை பற்றி யோசிக்க நேரம் செலவிடுங்கள்.
வாழ்க்கையைக் காதலியுங்கள். அதன் பகுதியான வேலையை அதிகமாகக் காதலிப்பீர்கள்!
தொடர்புக்கு:gemba.karthikeyan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago