தொழில் தொடங்கலாம் வாங்க 28: எது உற்பத்தித் துறையை வாழ வைக்கும்?

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

தொழில்நுட்பம் சார்ந்த புதிய தொழில்களைக் குறிக்கும் சொல் மட்டுமல்ல ஸ்டார்ட் அப். ஆனால், புதிய ஸ்டார்ட் அப் என்றாலே டெக் ஸ்டார்ட் அப் என்று ஆகிவிட்டது. ‘ஒரு ஆப், ஒரு பிளாட்ஃபார்ம்’ என்றுதான் பிசினஸ் மாடலை ஆரம்பிக்கிறார்கள். ஆனால், விவசாயத்துக்கு அடுத்தபடியாகப் பாரம்பரியமும் பழமையும் கொண்ட உற்பத்தித் துறையை நாம் அதிகம் கொண்டாடுவதில்லை.

ஈர்க்கவில்லையே ஏன்?

காசில்லாவிட்டாலும் ஒரு சின்ன தொழில்நுட்பத்தைக் கொண்டு பெரிசாகப் பணம் பண்ணலாம் என்கிற எண்ணத்தைப் பல சாமானியர்களுக்கு இந்தப் புதிய போக்கு கொடுத்திருப்பது உண்மைதான். அதுவே உற்பத்தித் துறை என்றால் கண்டிப்பாக முதலீடு தேவைப்படும். இயந்திரங்கள் வேண்டும். கடைநிலைத் தொழிலாளர்கள் முதல் நிறைய மனிதர்களின் உழைப்பு வேண்டும். வியர்வை பிசுபிசுப்புடன் உடல் உழைப்பு அதிகம் இருக்கலாம். எல்லாம் செய்த பின்னும் லாப விகிதம் குறைவுதான். இதனால்தான் பல இளைஞர்களை உற்பத்தித்துறை பெரிதாக ஈர்ப்பதில்லை.

எப்படிச் சாத்தியமானது உற்பத்திப் புரட்சி?

ஆனால், இந்தியா போன்ற நாட்டுக்கு உற்பத்தித் துறை இன்றியமையாதது. சீனாவின் வெற்றியில் உற்பத்தித் துறைக்குத்தான் பெரும் பங்கு உண்டு. எந்தப் பொருளைக் கொடுத்தாலும் அதை மலிவாக உற்பத்தி செய்யும் திறமை எங்கிருந்து வந்தது? எவ்வளவு பெரிய வால்யூமாக இருந்தாலும் சளைக்காமல் செய்து தள்ளுவது எப்படிச் சாத்தியம்? எதைக் கொடுத்தாலும் அதை அப்படியே நகலெடுத்துச் செய்யும் ‘படைப்பாற்றல்’ அறிவை வியக்காமல் இருக்க முடியுமா? தரத்தில் ஜப்பானும் ஜெர்மனியும் முன்னிலையில் இருக்கலாம்.

ஆனால், விலையில் சீனாவை வெல்ல முடியுமா? இன்று சின்ன ஊர்களில் இருந்துகூட பங்களாவோ வியாபாரக்கூடமோ கட்டினால் சீனா சென்று பொருள் வாங்கும் பழக்கம் பெருகிவருகிறது. “இது சீனாவில் கிடைக்காது” என்று சொல்லும் ஒரு பொருளைக் காட்ட முடியாது. எப்படிச் சாத்தியமானது இந்த உற்பத்திப் புரட்சி?

பல காரணங்களைச் சொல்லலாம். அரசாங்கத்தின் இரும்புக் கரத்தால்தான் எல்லாம் சாத்தியம் ஆகிறது. தொழிலாளிகளின் உற்பத்தித் திறன் மிக அதிகம். பொறியியல் கல்லூரிகளைவிட நூறு மடங்கு தொழில் பட்டறைக் கூடங்கள் உண்டு. இயல்பிலேயே கையால் செய்யும் வேலைகளுக்கு மதிப்பு அதிகம். வேலை வாய்ப்பும் உண்டு. வயோதிகர்கள் கூட வீட்டில் இருந்தபடியே உதிரி பாகங்கள் செய்து அனுப்பும் வண்ணம் இயங்குகின்றன உற்பத்திக் கூடங்கள்.

அதிகமாக உற்பத்திசெய்தால்தான் லாபம் பார்க்க முடியும். அதனால் ஸ்கேல் முக்கியம். வேகமாகச் செய்தலும் மலிவாகச் செய்தலும்தான் தாரக மந்திரம். அதிகமாக விற்கும் அளவுக்கு உள்நாட்டுச் சந்தையே பலமாக உள்ளது. உலக நாடுகளும் மதிப்பு குறைந்த பொருட்கள் என ஆரம்பித்து இன்று கிட்டத்தட்ட எல்லாப் பொருட்களுக்கும் சீனாவை நம்ப ஆரம்பித்தாயிற்று. ஒரு நாள் சீனர்கள் டாய்லெட் பேப்பர் உற்பத்தியை நிறுத்தினால் அமெரிக்கக் கழிப்பிடங்கள் நாறிவிடும் என்று நகைச்சுவையாகச் சொல்கிறார்கள். இன்று அங்கு அலிபாபா என்ற தொழில்நுட்ப நிறுவனம் ஜெயிப்பதற்குக்கூட அந்த நாட்டின் உற்பத்திக் கட்டமைப்பும் வசதி மிக்க நுகர்வு கலாச்சாரமும் முக்கியக் காரணங்கள்.

உற்பத்தி என்றால் சீனா

சாலையில் ஒரு விளக்கு உடைந்தால்கூட ஒரு மணி நேரத்தில் மாற்ற முடிகிறது. அரசாங்கம், தொழில் உலகம், மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதால்தான் இது சாத்தியப்படுகிறது. கடினமாக உழைக்கத் தயாராக உள்ள மக்களும் உழைக்கத் தயாராக இருந்தால் சம்பளம் குறைவாக இருந்தாலும் செய்ய ஒரு வேலையைத் தரும் தொழிற்சாலையும் தொழில் பயிற்சியைத் தரும் கல்வித்திட்டமும் இந்தச் சுழற்சியைத் தன் வலிமையான கரம் கொண்டு நிர்வாகிக்கும் அரசாங்கமும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தும் உலக நாடுகளும் ஒன்றை இன்று இயக்குகின்றன.

மற்றத் துறைகளைவிட உற்பத்தித் துறையை மலைபோல நம்பினார்கள் சீனர்கள். ஒரு காலத்தில் மக்கள்தொகைப் பெருக்கம் வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருந்தது. இன்று கணினி பாகங்களின் தயாரிப்போ கப்பல் கட்டுமானமோ எதுவாக இருந்தாலும் உற்பத்தி என்றால் சீன கம்பெனிகள்தான் என்று ஆகிவிட்டது.

வளர்ச்சியைத் தடுக்கிறது குறுக்கு வழி

நாம் ‘மேக் இன் இந்தியா’ என்று வித்தை காட்டினாலும், இங்கு வளர்ந்த உற்பத்தி நிறுவனமே விழிபிதுங்கி நிற்கின்றன. தொழில் திறன்கள் உள்ள ஆட்கள் குறைவு. அயல் நாட்டு நிறுவனங்கள் குறைவான கூலிக்கு ஆட்கள் கிடைக்கிறார்கள் என்று இங்கு கடை விரித்துவிட்டன. போட்டி பெருக லாப விகிதம் குறைகிறது. இன்னமும் ஒப்பந்தத் தொழிலாளிகள், குறைந்தபட்ச ஊதியம், வெளி மாநிலத் தொழிலாளிகள், பயிற்சி மாணவர்களை வைத்து வேலை வாங்கிக்கொள்ளுதல் என எல்லாக் குறுக்கு வழிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

தரமான தொழில் கல்விக்கு வழிசெய்தலும் வாழத் தகுந்த சம்பளம் அளித்தலும் கண்ணியமாகத் தொழிலாளிகளை நடத்துதலும் உற்பத்தித் துறையை வாழவைக்கும். இல்லாவிட்டால் தீவிரச் சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளியைக் காப்பது போலதான் தினசரி நடவடிக்கைகள் இருக்கும். இந்தச் சூழலில், பாரம்பரிய அறிவும் தொழில் பின்னணியும் முதலீட்டு பலமும் இருப்பவர்கள் மட்டும்தான் உற்பத்தித் தொழில் செய்ய முன் வருகின்றனர்.

புதியவர்கள் உற்பத்தித் துறைக்கு வர முடியாதா, ஏன் முடியாது? சந்தையில் தேவைப்படும் பொருட்கள் இருக்கும்வரை உற்பத்தித் துறைக்கு மிகப் பெரிய எதிர்காலம் உண்டு. ஆனால், அவர்கள் பழையவர்கள் செய்த தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். சில புதிய செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

அவை என்ன? அடுத்த வாரம் சொல்கிறேன்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்