சென்னைக்கு பிறந்தநாள்: பல்லாவரத்தின் ‘கல்’ மனிதன்!

By ந.வினோத் குமார்

ரிணாம வளர்ச்சியின் தந்தை என்று போற்றப்படும் சார்லஸ் டார்வின், 1859-ம் ஆண்டு ‘ஆரிஜின் ஆஃப் ஸ்பீசீஸ்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். மனிதர்கள் குரங்கிலிருந்து வந்தவர்கள் என்று அதில் டார்வின் நிரூபித்திருந்ததால் அந்தப் புத்தகம் சில காலத்துக்குப் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது. மனிதர்களைக் கடவுள்தான் படைத்தார் என்று மதகுருமார்கள் மக்களை நம்பவைத்த காலத்தில், இப்படி ஒரு புதிய சிந்தனை வெளிப்பட்டால், அதற்கு எதிர்ப்பு வரத்தானே செய்யும்?

ஆனால், அப்போது டார்வினுக்கு, இந்தியாவிலிருந்து, அதுவும் சென்னையிலிருந்து ஒரு ஆதரவுக் குரல் வந்தது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் ராபர்ட் புரூஸ் ஃபூட்.

மரணம் தந்த வாய்ப்பு

1834 செப்டம்பர் 22 அன்று, இங்கிலாந்தில் பிறந்தார் ராபர்ட் புரூஸ் ஃபூட். 1858-ல், தனது 24-ம் வயதில், ‘ஜியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா’வில் நிலவியலாளராகப் பணியில் சேர மதராஸ் ராஜதானிக்கு வந்தார்.

அவர் வருவதற்கு முந்தைய ஆண்டு, ஜியாலஜிக்கல் சர்வேயின் தலைமை நிலவியலாளராக இருந்த தாமஸ் ஓல்ட்ஹாம், சென்னை ராஜதானியை வரைபடமாக ஆவணப்படுத்த நினைத்தார். அந்தப் பணிக்காக ஹென்றி ப்ளான்ஃபோர்ட், வில்லியம் கிங் ஜூனியர், சார்லஸ் ஓல்ட்ஹாம், ஹென்றி ஜியோகேகன் ஆகிய நால்வரைத் தேர்வுசெய்தார்.

1858-ம் ஆண்டு அவர்கள் திருச்சியில் ஆய்வுசெய்துகொண்டிருந்தபோது, ஜியோகேகன் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். அவரின் இடத்தை நிரப்பவே புரூஸ் ஃபூட் பணியமர்த்தப்பட்டார். அந்தச் சமயத்தில், வில்லியம் கிங் ஜூனியரும் ராபர்ட் புரூஸும் நெருங்கிய நண்பர்களாயினர்.

வரலாற்றின் முதல் கல்

திருச்சியில் ஆய்வுப் பணிகள் முடிந்த பிறகு, சென்னை திரும்பினார் ராபர்ட் புரூஸ். 1861-ம் ஆண்டிலிருந்து கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் நிலவியல் குறித்து வகுப்பு எடுத்தார். இந்நிலையில் 1863-ம் ஆண்டு சென்னை பல்லாவரத்தில் கல்கோடாரி ஒன்றை அவர் கண்டெடுத்தார்.

19CH_R.B.Foote ராபர்ட் புரூஸ் ஃபூட் right

அந்தக் கல்லைத் தன் நண்பர் வில்லியத்திடம் காட்டினார். அதை ஆய்வு செய்தபோது, அது பழங்கற்காலத்தைச் சேர்ந்த மனிதர்கள் பயன்படுத்திய ஒரு கருவி என்பது தெரியவந்தது. அது தந்த ஆர்வம் காரணமாக, அவர்கள் சென்னையின் இதர பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்கள். அதன் பலனாக, சென்னைக்கு வட மேற்காக உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில், அதிரம்பாக்கம் எனும் இடத்தில் பழங்கால மனிதர்களின் கருவிகளும் பொருட்களும் கிடைத்தன.

அதைத் தொடர்ந்து, 1864-ம் ஆண்டு மீண்டும் பல்லாவரத்துக்கு வந்த அவர்கள், அங்கு மேலும் நிறையப் பழங்காலக் கருவிகளையும் பொருட்களையும் கண்டெடுத்தனர். இந்தக் காரணங்களால், பல்லாவரத்தை ‘மெட்ராஸ் ஸ்டோன் ஏக்ஸ் ஃபேக்டரி’ (சென்னையின் கல் கோடாரித் தொழிற்சாலை) என்று அன்புடன் அழைத்தனர்.

இந்தக் கண்டுபிடிப்புகள், இந்தியாவில் மனிதர்களின் தோற்றம் மிகவும் முந்தையது என்பதை நிரூபித்ததுடன், சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கருத்துக்கும் ஆதரவாக இருந்தன.

‘முந்து’ வரலாற்றின் தந்தை

பல்லாவரத்தில் பழங்கற்காலக் கருவியைக் கண்டுபிடித்த முதல் மனிதர் என்ற சாதனை மட்டுமே ராபர்ட் புரூஸுக்கு உரித்தானது அல்ல. கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் ஆகிய மூன்று காலங்களை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்யும் ‘மூன்று கால முறை’யை முதன்முதலில் பயன்படுத்தியவர் இவரே.

தென்னிந்தியாவில் புதிய கற்காலக் கலாச்சாரத்தைப் பொருளாதார ரீதியிலிருந்து பார்த்த முதல் ஆய்வாளர் இவரே. தென்னிந்தியாவில் தங்கம் உள்ள இடங்களை முதன்முதலில் ஆவணப்படுத்தியவரும் இவரே.

கற்காலம் தொடங்கிய காலத்துக்கும் மனிதர்கள் எழுதும் பழக்கம் தோன்றிய காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தை ‘முந்து வரலாறு’ (ப்ரீஹிஸ்டரி) அல்லது தொல்பழங்காலம் என்று அழைக்கிறார்கள். இந்த முந்து வரலாற்றை இந்தியாவில் முதன்முதலில் ஆய்வுசெய்தவர் ராபர்ட் புரூஸ் ஃபூட். எனவே அவர், ‘இந்திய முந்து வரலாற்றின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார். தனது 78-ம் வயதில் 1912 டிசம்பர் 29 அன்று ராபர்ட் புரூஸ், கல்கத்தாவில் மறைந்தார். அதற்குமுன் அவரது குடும்பம் ஏற்காட்டில் வாழ்ந்து வந்தது.

நிலவியலாளரை ஆவணப்படுத்திய படம்

இத்தகைய பெருமைகளுக்குரிய ராபர்ட் புரூஸ் குறித்து ‘ராபர்ட் புரூஸ் ஃபூட் – தி ஃபாதர் ஆஃப் இந்தியன் ப்ரீஹிஸ்டரி’ எனும் தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை இயக்கியிருக்கிறார், ஆவணப்பட இயக்குநர் ரமேஷ் யந்த்ரா. இது சமீபத்தில் சென்னையில் திரையிடப்பட்டது.

“இதற்கு முன்பு திருவள்ளூரில் உள்ள குடியம் குகைகளைப் பற்றி ஆவணப்படம் ஒன்றை எடுத்தேன். அந்தக் குகையைக் கண்டுபிடித்தவரும் ராபர்ட் புரூஸ்தான். அப்போது அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள முயன்றபோது, அவர் செய்த சாதனைகள் எல்லாம் என்னை மலைக்கவைத்தன.

19CH_RameshYanthra ரமேஷ் யந்த்ரா

அவரைப் பற்றி நிலவியலாளர்கள், தொல்லியலாளர்கள் எனக் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. இந்தியாவில் இப்படி மகத்தான பணியாற்றிய ஆங்கிலேயரைப் பற்றி, பொதுமக்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். எனவே, மூன்றாண்டுகள் முயற்சியில் இந்தப் படத்தை இயக்கினேன்” என்றார்.

சுமார் 25 நிமிடங்கள் கொண்ட இந்த ஆவணப்படத்தில், ராபர்ட் புரூஸின் வாழ்க்கையும் பணியும் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஜியாலஜிக்கல் சர்வேயில் 33 ஆண்டுகள் பணியாற்றிய இவர், அவரது பணிக்காலத்தில் அவருடைய நண்பர் வில்லியம் கிங் உடன் இணைந்து சுமார் 53 ஆயிரம் சதுர கிலோமீட்டர் அலைந்து திரிந்து, 452 தொல்பழங்கால இடங்களையும், 4,135 தொல்பழங்காலப் பொருட்களையும் கண்டுபிடித்தார்.

“அவர் கண்டுபிடித்த பழங்காலப் பொருட்களை எல்லாம் மேலை நாடுகளில் நடந்த மாநாடுகளில் அறிமுகப்படுத்திப் பேசினார் ராபர்ட் புரூஸ். அப்போது அந்தப் பொருட்களை வாங்க நிறையப் பேர் போட்டிபோட்டார்கள். ராபர்ட் புரூஸ் நினைத்திருந்தால், அவற்றை எல்லாம் விற்று பெரும் செல்வந்தராகி இருக்கலாம். ஆனால், அவற்றை எல்லாம் சென்னை அருங்காட்சியகத்துக்கே வழங்கிவிட்டார். மேலும் அவர் தனது இறுதிக் காலத்தில் இந்தியாவை விட்டுச் செல்லவும் விரும்பவில்லை” என்கிறார் ரமேஷ் யந்த்ரா.

வணங்குகிறோம், ராபர்ட் புரூஸ் ஃபூட்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்