மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அரசாணையை ரத்துசெய்து தீர்ப்பளித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். சி.பி.எஸ்.இ. மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், ஜூலை 14 அன்று இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.
மருத்துவ மாணவர் சேர்க்கையில், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீதமும் உள் இட ஒதுக்கீடும் வழங்கப்படும் என்று ஜூன் 22 அன்று, தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இந்த உள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து தஞ்சையைச் சேர்ந்த மாணவர் தர்னீஷ்குமார், சென்னையைச் சேர்ந்த சாய் சச்சின் உள்ளிட்ட சி.பி.எஸ்.இ. மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே. ரவிச்சந்திர பாபு இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.
அத்துடன், மருத்துவ மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வுக்குப் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட வேண்டும் எனவும், நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கினார். இதனால் தமிழக அரசின் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
‘சரஸ்வதி’ விண்மீன் கூட்டம் இந்திய வானியலாளர்கள் கண்டுபிடிப்பு
400 கோடி ஒளியாண்டுகள் தொலைவில், 60 கோடி ஒளியாண்டுகள் அளவில் பரவியிருக்கும் பிரம்மாண்டமான விண்மீன் பெருங்கூட்டங்களை (Super cluster of galaxies) இந்திய வானியலாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த விண்மீன் பெருங்கூட்டத்துக்கு ‘சரஸ்வதி’ என்று அவர்கள் பெயரிட்டிருக்கின்றனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட விண்மீன் பெருங்கூட்டங்களில் இவை பெரியதும், தொலைவானதும் ஆகும்.
இவற்றைக் கண்டுபிடித்த வானியலாளர்கள், வானியல், வானியற்பியலுக்கான இடை-பல்கலைக்கழக மையம் (IUCAA), புனேவில் இருக்கும் அறிவியல் கல்வி ஆராய்ச்சிக்கான இந்திய நிறுவனங்கள் (IISER), ஜாம்ஷெட்பூர் என்.ஐ.டி., தொடுபுழா நியுமேன் கல்லூரியைச் சேர்ந்தவர்கள். “இவ்வளவு தொலைவில் ஒரு விண்மீன் பெருங்கூட்டத்தை நாங்கள் பார்ப்பது இதுதான் முதல்தடவை. பொதுவாக, விண்மீன் பெருங்கூட்டங்களுக்கு நதிகளின் பெயர்களை வைப்பது வழக்கம். பால்வழியை, ஆகாய கங்கை என்று குறிப்பிடுவோம். அப்படித்தான், இந்த விண்மீன் பெருங்கூட்டங்களுக்குப் பழம்பெரும் நதியான ‘சரஸ்வதி’ பெயரை வைத்திருக்கிறோம்” என்கிறார் வானியல், வானியற்பியலுக்கான இடை-பல்கலைக்கழக மையத்தின் இயக்குநர் சோமக் ராய்சவுத்ரி.
மித்தாலி ராஜ் மகளிர் கிரிக்கெட்டில் புதிய சாதனை
இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டன் மித்தாலி ராஜ், ஜூலை 12 அன்று, மகளிருக்கான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்திருக்கிறார். பிரிஸ்டல் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடி, 69 ரன்களைக் கடந்தபோது மித்தாலி இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். 183 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 6,028 ரன்கள் குவித்திருக்கிறார் இவர்.
இதன்மூலம் 5,992 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து கிரிக்கெட் கேப்டன் சார்லட் எட்வர்ட்டைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறார். தற்போது, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில், இரண்டு உலக சாதனை நிகழ்த்திய வீராங்கனைகள் இடம்பெற்றிருக்கிறார்கள். இந்திய அணியின் ஜூலன் கோஸ்வாமி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் உலகளவில் அதிக விக்கெட்களை வீழ்த்திச் சாதனை படைத்திருக்கிறார்.
சோம்பேறிகள் அதிகம் வாழும் நாடு
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் உலகின் சோம்பேறி நாடுகள் பற்றிய ஆய்வு ஒன்றைச் சமீபத்தில் நடத்தியது. 46 நாடுகள் கலந்துகொண்ட இந்த ஆய்வில், இந்தியர்கள் ஒரு நாளில் 4,297 அடிகள் மட்டுமே நடப்பதால் 39-வது இடத்தைப் பிடித்திருக்கின்றனர். 46 நாடுகளில் 7 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வில் சீனர்கள், ஹாங்காங்வாசிகள், ஒரு நாளில் உலகிலேயே அதிகபட்சமாக 6,880 அடிகள் நடப்பது தெரியவந்திருக்கிறது. இந்தோனேஷியர்கள் ஒருநாளில் வெறும் 3,513 அடிகள் மட்டுமே நடப்பதால் கடைசியில் இருக்கின்றனர். இதில் உலகின் சராசரியாக 4,961 அடிகள் கணக்கிடப்பட்டிருக்கின்றன. ஹாங்காங், சீனா, உக்ரைன், ஜப்பான் நாட்டு மக்கள் 6,000 அடிகள் தினமும் நடப்பதால் முதலிடத்தில் இருக்கின்றனர். மலேசியா, சவூதி அரேபியா, இந்திய ஆண்களைவிட இந்தியப் பெண்கள் குறைவாக நடப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இந்திய ஆண்கள் ஒரு நாளில் 4,606 அடிகளும், இந்தியப் பெண்கள் 3,684 அடிகளும் நடக்கின்றனர்.
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் மரணம்
சீனாவின் பிரபல எழுத்தாளரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான லியூ ஜியாபோ (61), ஜூலை 14 அன்று மறைந்தார். 2009-ல், ‘சார்ட்டர் 08’ என்ற புத்தகத்தை வெளியிட்டதற்காக சீன அரசு, ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. 2010-ல், அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரை விடுதலை செய்யக்கோரி, அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சீன அரசை வலியுறுத்தின. ஆனால், இந்தக் கோரிக்கைகள் எதையும் சீன அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில் சிறைத் தண்டனை அனுபவித்துவந்த அவர், கடந்த ஒரு மாதமாக, சீன மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் புற்றுநோய்க்காகச் சிகிச்சை பெற்றுவந்திருக்கிறார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருப்பதாகச் சீன அரசு தெரிவித்திருக்கிறது.
பருவநிலை மாற்றத்தால் ஆசியாவில் கடும் பாதிப்பு
பருவநிலை மாற்றத்தால் பசிபிக், ஆசிய நாடுகள் கடும் பாதிப்பைச் சந்திக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது. இந்த ஆய்வில், 2030-களில் தென்னிந்தியாவின் அரிசி விளைச்சலில் ஐந்து சதவீதமும், 2050-களில் 14.5 சதவீதமும், 2080-களில் 17 சதவீதமும் குறையக் கூடும் என்று தெரியவந்திருக்கிறது.
ஆசிய வளர்ச்சி வங்கியும் (ADB) போஸ்ட்டேம் பருவநிலை பாதிப்பு ஆராய்ச்சி மையமும் (PIK) இணைந்து இந்த ஆய்வை நடத்தியிருக்கின்றன. சீனா, இந்தியா, வங்கதேசம், இந்தோனேஷியா போன்ற ஆசிய நாடுகளில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் வெள்ளம், புயல் போன்ற பேரிடர்களில் சிக்கிக்கொள்ளும் அபாயகரமான இடங்களில் வசிப்பதாகத் தெரிவிக்கிறது இந்த ஆய்வு.
வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தாழ்வான கடற்கரைப் பகுதிகளில் 13 கோடிப் பேர் வசிக்கின்றனர். அவர்கள் அனைவரும் இந்நூற்றாண்டின் இறுதிக்குள் மிகமோசமான இடப்பெயர்வைச் சந்திப்பதற்கு வாய்ப்பிருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்திருக்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago