தொழில் தொடங்கலாம் வாங்க! - 22: தானாக வியாபாரம் நடக்குமா?

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

ஒரு தொழிலைச் சிறப்பாக நடத்துவது என்பது வேறு. அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வது என்பது வேறு. உற்பத்தி அல்லது சேவையில் செலுத்தும் கவனத்தைப் பெரும்பாலான தொழில் அதிபர்கள் சந்தைப்படுத்துதலில் செலுத்துவதில்லை.

சந்தையின் திடீர் தக்குதல்

ஒரு பொருள் சிறப்பாக இருந்தால்போதும்; அல்லது நம் சேவை சிறப்பாக இருந்தால்போதும். தானாக வியாபாரம் நடக்கும் என்ற எண்ணம்தான் பலருக்கு. நன்கு தொழில் நடத்தும் பலர் ஒரு கட்டத்துக்கு மேல் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறார்கள். காரணம் அவர்களுடைய பார்வை அன்றாட நடப்புகளிலேயே தங்கிப்போனதுதான். குறிப்பாகச் சிறுவியாபாரிகள் தங்கள் முழு கவனத்தையும் பணம் போட்டுப் பணம் எடுப்பதிலேயே செலவு செய்துவிடுவது இயற்கை.

போட்டி அதிகமாகும்போதோ அல்லது புதிய தொழில்நுட்பம் வந்தால் மட்டும்தான் சந்தை பக்கம் பார்வையைத் திருப்புகிறார்கள். கேட்டால், “அன்றாடம் வேலையே சரியாக இருக்கிறது” என்பார்கள். பலருக்குத் தான் ஒரு நாள் இல்லையென்றால் வியாபாரமே ஸ்தம்பித்துப் போய்விடும். இதனால், வைத்த கண் வாங்காமல் தினசரி செயல்பாடுகளிலேயே கரைந்து போய்விடுகிறார்கள். தொழிலுக்கு வெளியே பார்க்காமல் உள்ளேயே பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான் சந்தையின் திடீர் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.

அடுத்தக் கட்டத்துக்குச் செல்ல...

ஒரு கட்டத்துக்கு மேல் முதலாளிகள் வெளிப்புறப் பார்வையை வளர்க்க வேண்டும். குறிப்பாகச் சிறு முதலாளிகள் சிரமம் பார்க்காமல் இதைச் செய்யவேண்டும். தொழில் சார்ந்தவை பற்றிப் படிக்க வேண்டும். பயிற்சி வகுப்புகளுக்குப் போகவேண்டும். தொழில் அமைப்புகளில் உறுப்பினர் ஆக வேண்டும். மற்றத் தொழிலதிபர்களுடன் நல்லுறவு வைத்துக்கொள்ளவேண்டும்.

பிற நாடுகள் அல்லது மாநிலங்களுக்குச் சென்று அங்கு நம் தொழில் எப்படி நடக்கிறது என்று பார்க்கவேண்டும். தொழில் வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் உங்கள் தொழில் என்ன ஆகும் என்று யோசிக்க வேண்டும். இவைதான் உங்கள் தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவும்.

நமக்கு இன்னொரு சிக்கல் உண்டு. ஒரு முதலீடு செய்து கண்டிப்பாக அதனால் லாபத்தை நேரடியாக கணக்கிடும் அளவுக்கு வரும் என்றால் அதைச் செய்யத் தயங்க மாட்டோம். ஆனால் அது மறைமுகமாகத் திரும்ப வருகிறது என்றால் முதலீடு செய்ய யோசிப்போம். உதாரணத்துக்கு, ஒரு இயந்திரம் வாங்கினால் அதன் மூலம் 20 சதவிகிதக் கூடுதல் லாபம் என்றால் தயங்காமல் அதை வாங்குவோம். ஆனால் ஒரு புதிய தொழில்நுட்பம் பற்றி படிக்கச் செலவு செய்யவேண்டும் என்றால் யோசிப்போம். வல்லுநர் ஆலோசனை என்றால் இலவசமாய்க் கிடைக்காதா என்று ஏங்குவோம். ஒரு புத்தகம் ஆயிரம் ரூபாய் என்றால், இதைப் படித்து என்ன லாபம் வரப்போகிறது என்று கணக்கு போடுவோம். எவ்வளவு போட்டால் எவ்வளவு திரும்ப வரும் என்று கணக்கு இல்லாத இடத்தில் பணம் போட யோசிப்போம்.

ஆனால் சந்தைப்படுத்துவதில், தொழிலில் புது வியூகம் அமைப்பதில், விளம்பரம் செய்வதிலெல்லாம் சரியாகக் கணக்கு போட்டு இவ்வளவு திரும்ப வரும் என்று சொல்ல முடியாது. அதற்காக இவற்றைச் செய்யாமல் இருக்க முடியாது.

சரியாகவும், வித்தியாசமாகவும்

நாளிதழில் ஒரு முழு பக்க விளம்பரம் செய்கிறார்கள். இதைப் பார்த்து இத்தனை புது வாடிக்கையாளர்கள் வந்தார்கள் எனத் தீர்மானமாகச் சொல்ல முடியுமா? ஒரு போட்டி நிறுவனத்தை விலைக்கு வாங்கச் செல்லும்போது, வாங்கியபின் நம் சந்தை அளவு இவ்வளவு இருக்கும் என யாராவது தீர்மானமாகச் சொல்ல முடியுமா? உங்கள் துறைத் தலைவர்கள் அனைவரும் ஒரு பெரிய நிர்வாகப் பள்ளியில் தலைமைப் பண்புகளுக்கான சிறப்பு பயிற்சிக்குச் செல்கிறார்கள்.

திரும்பி வந்தவுடன் அனைவரும் மிகச் சிறந்த தலைவர்களாக மாறி நிறுவன லாபத்தை அதிகரிப்பார்கள் என அடித்துச் சொல்ல முடியுமா? இவை எதையுமே துல்லியமாய்க் கணக்கிட்டு யாராலும் சொல்ல முடியாது. ஆனாலும் இந்த முதலீடுகள் தேவை.

எதையும் கணக்கிடுவது நல்லதுதான். சிக்கனமாகத் தொழில் நடத்துவது சிறந்ததுதான், சந்தேகமே இல்லை. ஆனால் தொழிலுக்குத் தேவையான நெடுங்கால வளர்ச்சிக்கு இது போன்ற முதலீடுகள் அவசியமாகின்றன. சில கணக்குகள் புரிய கால அனுபவம் தேவை. இதைத் தங்கள் அனுமானத்தால் உணர்ந்தவர்கள் நல்ல தொழிலதிபர்கள் ஆகிறார்கள்.

தொழிலை இயக்கும் மனிதரின் மனதின் வேகத்தைச் சார்ந்ததுதான் அவருடைய தொழிலின் வளர்ச்சியும் வேகமும் உள்ளது. ஒரு விஷயத்தைச் சரியாகச் செய்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதை எப்படி வித்தியாசமாகவும் செய்ய முடியும் என்று யோசிப்பது.

சொல்றதுக்குத் தானே விளம்பரம்!

ஒரு காலத்தில் தமிழகத்தில் “அர்ஜுன் அம்மா யாரு?” என்று ஒரு பிரபல விளம்பரம் வந்தது. நாலரைப் பால் என்றும் வெண்ணெய்ச் சத்து (கொழுப்பு என்றால் பயந்து ஒதுக்கி விடுவோமாம்!) கொண்டது என்றும் ஒரு தனியார் பால் நிறுவனம் வாடிக்கையாளர்களின் மொத்தக் கவனத்தையும் கவர்ந்தது. பாலில் நாலரைப் பால் கொழுப்பு சத்து இருந்ததால்தான் அர்ஜுன் புத்திசாலி என்றெல்லாம் விளம்பரம் கதை சொன்னது. விளம்பரம் பெரும் வெற்றி. அந்த நிறுவனத்தின் பால் விற்பனை அதிகரித்துக்கொண்டே சென்றது.

அந்த நேரத்தில் அரசாங்கத்தில் பணியாற்றும் கால்நடை மருத்துவர் ஒருவர் என்னிடம் சொன்னார்: “சார், ஆவின் பாலில் 3%, 4.5%, 6% என எல்லாக் கொழுப்பு விகிதத்திலும் பால் கிடைக்கிறது. ஆனால் அவங்க விசேஷமா விளம்பரப்படுத்தலை.”

சொன்னா தானே விளம்பரம். சொல்றதுக்குத் தானே விளம்பரம்! இதைச் செஞ்சா எவ்வளவு விற்பனை அதிகமாகும் என்று தெரிந்தா இதை ஆரம்பித்திருப்பார்கள்? அல்லது இந்த விளம்பரம் எத்தனை பேரை அடையும் என்று தான் சரியாகக் கணக்கிட முடியுமா?

வெளியே பார்க்க ஆரம்பித்தால் நிறைய கற்றுக்கொள்ளலாம். நம் தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வழி கிடைக்கலாம்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்