பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவித்தொகை பெற்று முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட காலத்தில் முதுகலை மாணவர்களுக்கு வகுப்பும் எடுத்தேன். ஆகவே மாணவராகவும் ஆசிரியராகவும் ஒரே நேரத்தில் இருக்க நேர்ந்தது. அங்கு பயின்ற மாணவர்கள் பலர் என்னுடன் அன்பானவர்களாகவும் இலக்கியக் கூட்டங்களுக்கெல்லாம் உடன் வருபவர்களாகவும் சிலர் என்னுடனே உறைபவர்களாகவும் இருந்தனர்.
அதை ஒருவகையில் குருகுல வாழ்க்கை என்றும் சொல்லலாம். குருவாக இருக்க எனக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ, எப்படியோ குருகுல வாழ்வின் சில சாயல்கள் என் வாழ்வில் படிந்துவிட்டதை மாற்ற முடியவில்லை. அது என் இயல்புக்குப் பொருந்துவதாகவும் வசதியாகவும் இருப்பதால் சந்தோஷமாக அனுபவிக்க ஆரம்பித்துவிட்டேன்.
எல்லாருக்கும் தங்குமடம் அது!
செல்லும் இடங்களுக்கெல்லாம் பெரும்பாலும் மாணவர்களையும் அழைத்துச் செல்வது வழக்கமாகிவிட்டது. இலக்கியக் கூட்டம், சுற்றுலாத் தலங்கள், மாணவர் வீடுகள் என்றெல்லாம் குழுவாகச் செல்வோம். ஐந்தாண்டுகள் பெரிய வீட்டில் ஐந்தாறு ஆசிரியர்கள் தங்கியிருந்தோம். அதை ஒரு சத்திரம் என்று சொல்லலாம். எந்நேரமும் மாணவர்கள் இருப்பார்கள்.
பேச வருவோர், படிக்க இடம் வேண்டுவோர், தங்க இடம் தேவைப்படுவோர், வெளியூர் சென்று நேரங்காலம் பார்க்காமல் திரும்புவோர் என எல்லாருக்கும் தங்குமடம் அது. பல அறைகளும் மொட்டை மாடியும் இருந்ததால் சிரமம் ஏதுமில்லை. வீட்டு வேலைகள் அது பாட்டுக்கு நடக்கும். யார் யாரோ வேலை செய்துகொண்டிருப்பார்கள்.
எந்த வேலையும் இழிவில்லை
அங்கு ஆசிரியர், மாணவர் என்னும் பேதமில்லை. வரவேற்பறையில் பெரிய வட்டமாக உட்கார்ந்து உண்போம். சாப்பிடும் வேளையில் குறைந்தது பத்துப் பேராவது இருப்போம். இவற்றை ஏதோ ஒருவகையில் மேற்பார்க்கும் பொறுப்பு என்னிடம் இருந்தது. அது அப்படியே என் வாழ்க்கை முழுவதும் தொடர்கிறது. எங்கள் வீட்டில் விருந்தினர் யாருமில்லை. விருந்தினரை உபசரிப்பது போல வாழ்ந்தால் இத்தகைய வாழ்க்கையைத் தொடர இயலாது. எல்லாரின் பங்கேற்பும் இருந்தால்தான் இது சாத்தியம்.
எல்லாரும் எங்கள் வீட்டைச் சேர்ந்தவர்கள்தான். ஆகவே இருப்போர் ஆளுக்கொரு வேலையைச் செய்வார்கள். தொடக்கத்தில் தயங்குவோர் சில நாள் பார்த்து, அவர்களாகவே வீட்டின் இயல்புக்குப் பழகிவிடுவார்கள். எந்த வேலையையும் இழிவாகக் கருதும் மனம் எனக்கில்லை. எதையும் செய்வேன். நானே செய்வதால் என்னுடன் இருப்போரும் அவ்விதம் பழகுவர்.
அபரிமிதமான ஆற்றல்
வகுப்பறையில் இருந்து கற்றுக்கொண்டதைவிட என்னுடன் இருந்து பார்த்தும் பழகியும் பலர் மிகுதியாகக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று நம்புகிறேன். ஏதோ ஒரு விதத்தில் என்னுடன் இருத்தல் மாணவர்களுக்கு விருப்பமானதாகவும் பாதுகாப்பானதாகவும் உணரச்செய்கிறது. ஆகவே அந்த வெளியை விரிவாக்குகிறேனே தவிரக் குறுக்குவதில்லை.
என் மனைவி ஓராண்டு வெளியூரில் வேலை பார்த்தார். வீட்டில் நான் மட்டுமே இருந்தேன். என்னுடன் பலராமனும் தங்கியிருந்தார். என் இளங்கலை மாணவர் சுதாகர் ஒருமுறை வீட்டுக்கு வந்தார். அப்போதுதான் அவருடைய அபரிமிதமான ஆற்றலை உணர்ந்தேன். அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. மாடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அக்கம்பக்க வீடுகளிலிருந்து சமையல் மணம் வந்தது. மணத்தை ஆழ்ந்து அனுபவித்து நுகர்ந்தார்.
கட்டுப்படுத்த முடியாமல் ஒருபுறம் போய் நின்று மணத்தை இழுத்தபடியே ‘இந்தக் கொழம்புல இஞ்சியும் பூண்டும் தூக்கலா போட்டிருக்கறாங்க’ என்றார். நாங்கள் சிரித்தோம். அவருக்கு அது கவனத்தில் பதியவே இல்லை. மேலும் சொன்னார் “ஆனா இது ஆட்டுக்கறி.” எதிர்பக்கம் வந்து நின்றவர் “இதுல எல்லாம் அளவா இருக்குது, இது கோழிக்கறி” என்றார். “எல்லா வாசத்தையும் நீயே புடிச்சிட்டா அப்பறம் அவுங்க வெறும் சக்கையத்தாம்பா திங்கோணும்” என்றேன்.
சம்பாதித்துக்கொண்டே படிப்பவர்
“எங்கூர்ல எல்லாம் வாசம் வந்தா போதும் அந்த வீட்டுக்குள்ள நொழஞ்சிருவோம். இல்ல, என்ன கறியான்னு கேட்டா போதும், அவுங்களே கொஞ்சம் போட்டுக் குடுத்துருவாங்கய்யா. இங்கல்லாம் அதுக்கு ஒண்ணும் வாய்ப்பில்லைங்களா” என்று ஏக்கத்தோடு கேட்டார். “சாப்பாட்டுல பெரிய கில்லாடிதான்” என்றதும் “சாப்பிடறது மட்டும் இல்லீங்கய்யா. நல்லா சமைப்பங்கய்யா. ஒருநாளைக்கி சமச்சுத் தர்றங்கய்யா” என்றார். “வாப்பா. உன்னோட சமையலையும் சாப்பிட்டுப் பாக்கறோம்” என்று அழைப்பு விடுத்தேன்.
சுதாகருக்குத் தந்தை இல்லை. தாய் மட்டும்தான். அவராகவே வேலை செய்து சம்பாதித்துக்கொண்டு படிக்கவும் செய்தார். எடை மேடை நிலையம் ஒன்றில் இரவு வேலை பார்த்துக்கொண்டு இப்போதும் பல தேர்வுகளுக்குப் படித்துக்கொண்டிருக்கிறார். அரசு வேலை கிடைத்த பிறகே திருமணம் என்கிறார்.
தக்காளிக் குழம்பு
உடல் உழைப்பில் ஈடுபடும் மாணவர்கள் நன்றாகச் சாப்பிடுவார்கள். அவர்களுக்குச் சோறு நிறைய வேண்டும். பதார்த்தங்களைப் பற்றிப் பிரச்சினை இல்லை. ஒருநாள் இரவு வீட்டுக்கு வந்த சுதாகர் சோறாக்கித் தக்காளிக் குழம்பு வைப்பதாகச் சொன்னார். ஒரு கிலோ தக்காளி வாங்கி வந்து முழுவதையும் அரிந்தார். ஒரு கிலோ அரிசியைச் சோற்றுக்கு வைத்தார். ‘அவ்வளவு எதுக்குப்பா’ என்றேன். ‘நல்லா வெப்பங்கய்யா. மிச்சம் இருந்தா காலையில சாப்பிடுங்க’ என்றார். அதுவும் நல்லதுதான் என்று நினைத்தேன்.
செய்து முடித்தார். சாப்பிட்டோம். உண்மையில் நல்ல திறன்மிக்க சமையல்காரர்தான். நானும் பலராமனும் சாப்பிட்டு முடித்துப் பேசிக்கொண்டிருந்தோம். சுதாகர் சாப்பிட்டார், சாப்பிட்டார், சாப்பிட்டுக் கொண்டேயிருந்தார். கடைசியாகச் சட்டியைத் துடைத்துச் சாப்பிட்டார். “எங்கப்பா காலைக்கு மிச்சம் இருக்குதா?” என்றேன். “காலையிலயும் வந்து சமச்சுக் குடுத்தர்றங்கய்யா” என்றாரே பார்க்கலாம். “அப்பவும் ஒரு கிலோ அரிசியும் ஒரு கிலோ தக்காளியுமா?” என்றேன். அதற்கப்புறம் சுதாகர் “ஐயா, இன்னைக்கு வர்றன், சமைக்கலாமாங்கய்யா” என்று கேட்பதும் “சமையல் உனக்கா எங்களுக்கா?” என்று நாங்கள் கேட்பதும் வாடிக்கை ஆயிற்று.
- பெருமாள்முருகன்,
எழுத்தாளர், தமிழ்ப் பேராசிரியர்
தொடர்புக்கு: murugutcd@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago