கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு அமைந்தாலும் பெரும்பான்மையான வெளியைச் சுதந்திரமாகப் பெண்கள் பயன்படுத்துவதில்லை. கல்லூரிக்குள் செயல்படும் உணவகத்துக்குப் பெண்கள் செல்லும் சந்தர்ப்பங்கள் அரிது. விளையாட்டுத் திடலிலோ அரிதினும் அரிது. முதல்வரைச் சந்திக்கவோ துறைத்தலைவர், ஆசிரியர்களைப் பார்த்துப் பேசவோ அவர்கள் செல்வதேயில்லை. செல்ல நேர்ந்தாலும் தயக்கமும் அச்சமும் பின்னிழுக்கின்றன.
சில முறைகள்
வகுப்புக்குரிய பொதுச்செயல்கள் ஆண்கள் தலைமையிலேயே நடக்கின்றன. பெண்கள் முன்வருவதில்லை என்பதோடு அவ்விதம் முன்வரும் பெண்களுக்கு நேரும் பிரச்சினைகளும் பல. இயல்பாக இருக்கும் எதிர்பால் ஈர்ப்புக் காரணமாக மாணவிகளுக்குரிய வேலைகளைச் செய்துதர மாணவர்கள் தயாராக இருப்பார்கள். அதைப் பயன்படுத்திக்கொள்ளும் பெண்கள் தங்கள் வெளியை இழப்பதை உணர்வதில்லை.
நான் துறைத் தலைவராக இருந்தபோது, மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சி வேண்டும் என்பதற்காகச் சில முறைகளைக் கையாண்டேன். எந்தத் தேவைக்கு எனது கையொப்பம் தேவைப்பட்டாலும் விண்ணப்பம் எழுதி வர வேண்டும். எழுதக் கற்பதோடு பிழையில்லாமல் எழுதவும் பயிற்சி கிடைக்கும். பிழையிருந்தால் திருத்தம் செய்து தருவேன். மீண்டும் எழுதி வர வேண்டும். இது பெரும் பயன் தந்தது.
பெண்களுக்கான விண்ணப்பத்தை ஆண்களே எழுதித் தருவதுண்டு. சம்பந்தப்பட்ட பெண்ணை அழைத்து “உங்களுக்குரிய வேலையை நீங்களே செய்தால்தானே கற்றுக்கொள்ள முடியும், சுயமாகச் செயல்பட வேண்டாமா!” என்று திருப்பித் தந்துவிடுவேன். சம்பந்தப்பட்டவரின் கையெழுத்தில் வந்தால்தான் ஏற்றுக்கொள்வேன். பெண்கள் தங்கள் வேலைகளைச் சுயமாகத் தாமே செய்துகொள்ள வேண்டும் என்பதை இம்முறையில் கற்றனர்.
மாணவர் பேரவைத் தேர்தல்
பெண்களின் நடமாட்ட வெளியைக் கல்வி விரிவாக்க வேண்டும். அந்த எண்ணத்தில் அவர்களை இலக்கிய மன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கவைப்பதுடன் வரவேற்புரை, நன்றியுரை சொல்வது, ஒருங்கிணைப்பது போன்றவற்றிலும் ஈடுபட வலியுறுத்துவேன். ஒரு நிகழ்வு நடக்கிறது என்றால் அங்கு வரவேற்பு பொம்மைகளாக மட்டும் பெண்கள் இருக்கக் கூடாது. பாடுதல், பேசுதல், கட்டுரை எழுதுதல் எனப் பெண்கள் ஓரளவு வெளியே வர இந்த அணுகுமுறை உதவியது. எனினும், அது போதவில்லை.
அப்போதெல்லாம் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல் முக்கியமானது. தம்மை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்குச் செயல்திறன் மிக்க களமாகத் தேர்தல் இருந்தது. ஏன் தேர்தல் களத்தில் பெண்கள் இறங்கக் கூடாது என்னும் கேள்வி வந்தது. தமிழ்த்துறை மாணவர்கள் மட்டும் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் இலக்கிய மன்றச் செயலர் பதவிக்கு உமாமகேஸ்வரி என்பவரை ஓராண்டு நிற்க ஊக்கப்படுத்தினோம். அவர் வெற்றியும் பெற்றார். அந்தத் தாக்கத்தில் இன்னும் பெரிதாக யோசித்து அடுத்த ஆண்டு கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் செயலர் பதவிக்கு ஒரு பெண்ணை நிற்க வைக்கலாம் என்று தமிழ்த்துறை மாணவர்களிடம் பேசி ஊக்கம் கொடுத்தோம்.
நம்பிக்கையோடு களம் இறங்கினர்
முதலில் தயங்கியவர்கள் பின்னர் தங்கள் வகுப்பு மாணவி ஒருவரை நிற்க வைக்க முடிவெடுத்தனர். அவர் மான்விழி. உள்ளூர்ப் பகுதியைச் சேர்ந்தவர். கல்வியில் ஆர்வம் உள்ள குடும்பத்திலிருந்து வந்தவர். இலக்கிய மன்ற நிகழ்வுகளில் ஆர்வமாகப் பங்கேற்றவர். தயங்கினாலும் அனைவரும் கொடுத்த ஊக்கத்தால் சரி என்று சொன்னார். பெண்கள் வாக்குக் கணிசமாக இருப்பதாலும் கல்லூரி வரலாற்றில் முதன்முதலாக மாணவர் பேரவைச் செயலர் பதவிக்குப் பெண் நிற்பதாலும் ஆதரித்துப் பெண்கள் வாக்களிப்பார்கள் என்றும் பிரச்சாரத்தின் மூலம் ஆண்களையும் ஓரளவு வாக்களிக்கச் செய்யலாம் என்றும் வியூகம் வகுத்து நம்பிக்கையோடு களமிறங்கினர்.
பெண்களும் ஆண்களுமாக நூறு பேர் சேர்ந்து சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். கல்லூரி முழுமையும் பரபரப்பான செய்தியாயிற்று. கட்சிப் பின்னணி கொண்ட மாணவர் ஒருவர் செயலர் பதவிக்கு நின்றார். அவரை வெற்றிபெறச் செய்யக் கட்சியினர் முதல் முயற்சி எடுத்தனர். முதல் முயற்சி என்பது களத்தில் இருக்கும் எதிர் வேட்பாளர்களைத் திரும்பப் பெறச் செய்வதுதான். மான்விழியின் வேட்பு மனுவைத் திரும்பப் பெற வைக்கப் பெரிதும் முயன்றனர். வகுப்பறைக்குச் சென்று அவரிடம் பேச முயன்றனர். வகுப்பு முடிந்த பிறகே வெளியில் வருவேன் என்று அவர் சொல்லிவிட்டார். வகுப்பறையைச் சுற்றி மாணவர்களும் கட்சியினரும் பெருவட்டமாகச் சூழ்ந்திருந்தனர்.
வென்றிருந்தால்...
வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் சூழ மான்விழி தமிழ்த்துறைக்கு வந்துவிட்டார். ஆசிரியர் அறைக்கு வெளியில் பெருங்கூட்டம். திரும்பப் பெறும் நேரம் முடியும்வரை மான்விழி துறை நூலக அறையில் இருந்தார். அந்நேரம் முடிந்து வெளியில் சென்றார். அவரைத் தொடர்ந்து பேசப் பெருங்கூட்டம் சென்றது. அன்றைக்கு வீடு வரைக்கும் மான்விழியைக் கொண்டு விட்டு வந்தனர் மாணவர்கள். சாலையில் இருந்து கிராமத்துக்குச் சென்று அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் தனியாக இருந்த தங்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும் அவர். ஆகையால், அவரும் அவர் குடும்பத்தினரும் மிகவும் அஞ்சினர்.
குடும்பத்தினரின் வற்புறுத்தலால் மான்விழி தேர்தலில் இருந்து விலகிக்கொள்வதாக அடுத்த நாள் தெரிவித்தார். அவர் வகுப்பு மாணவர்களுக்கு அதில் உடன்பாடில்லை. என்ன வந்தாலும் நின்று காட்ட வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால், மான்விழியின் பாதுகாப்பைக் கருதி “விலகிவிடுவது நல்லது” என்று என் கருத்தைச் சொன்னேன். எல்லாரும் ஒத்துக்கொண்டார்கள்.
மான்விழி பிரச்சாரம் செய்யவில்லை. எனினும், வேட்பாளர் பட்டியலில் மான்விழியும் இருந்தார். அத்தேர்தலில் வென்றிருந்தால் அது வரலாற்றின் முக்கிய பக்கமாக இருந்திருக்கும். ஆனாலும் பெண் ஒருவர் வேட்பாளராக நின்றார் என்பதே கல்லூரி வரலாற்றில் முக்கியமான செய்திதான்.
பெருமாள் முருகன்,எழுத்தாளர், தமிழ்ப் பேராசிரியர் தொடர்புக்கு: murugutcd@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago