ஆங்கிலத்தைவிட முக்கியம், கருத்து!

By ஆசை

யூபி.எஸ்.சி. தேர்வெழுதி, அதில் வென்று இந்திய வருவாய்த் துறைக்காகத் தேர்ந்தெடுக்கப்ட்ட இளைஞர் பூ.கொ. சரவணன் நேர்காணல்.

நீங்கள் மாணவப் பருவத்திலேயே பத்திரிகை ஆர்வம் காட்டியவர். அங்கிருந்து, சிவில் சர்வீஸ் தேர்வுகளை நோக்கி நீங்கள் நகர்ந்ததற்குக் காரணம்?

பொன்பத்தி என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் நான். என் அப்பா கேஸ் ஸ்டவ் மெக்கானிக், அம்மா தமிழாசிரியை. கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன் நான்.

எங்களுக்கு 72 சென்ட் நிலம் இருந்தது. அதை வைத்துக்கொண்டு பெரிதாக விவசாயம் செய்ய முடியாதென்றாலும் விவசாயம் தொடர்பான என் உந்துதலை அது தக்கவைத்துக்கொண்டிருந்தது. பள்ளிப் படிப்பு முடித்ததும் ஐ.டி. போகக் கூடாது என்று நான் தீர்மானமாக இருந்து, விவசாயம் மற்றும் நீர்ப்பாசனப் பொறியியல் துறையைத் தேர்ந்தெடுத்தேன். கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்தேன்.

அங்கே பேராசிரியர் சக்தி வடிவேலு எனக்கு உந்துசக்தியாக இருந்தார். ‘இன்றைக்கு நமக்கு நிறைய தொழில்நுட்ப வசதிகள் கூடிவந்திருக்கின்றன. ஆனால், அவற்றின் பலன்கள் அடித்தட்டு மக்களைப் போய்ச்சேர்வதில்லை. நீர்மேலாண்மையில் நீங்களெல்லாம் அவர்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்.

அதற்கு நீங்கள் ஆட்சியாளர்களாக அவர்கள் மத்தியில் செல்ல வேண்டும்’ என்று என்னிடம் சொல்லிவந்தார். அதற்கு முன்பு எங்கள் வீட்டிலும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும்படிச் சொல்லிவந்தாலும் பேராசிரியர் சொன்ன பிறகே எனக்கு முழுதாய் நம்பிக்கை பிறந்தது.

இதெல்லாமே பகுதிநேரப் பத்திரிகையாளராக ஆன பிறகுதான் நடந்தது. அப்போது சமூகத்தை எப்படி விமர்சனப்பூர்வமாகப் பார்ப்பது என்பதை நன்கு கற்றுக்கொண்டேன். அப்புறம் என் வாழ்க்கையில் நேரு எனக்கு மிகவும் ஆதர்சமான மனிதர். ஒரு அமைப்புக்குள் இருந்துகொண்டு நாம் என்னென்னவெல்லாம் செய்யலாம் என்பதை நேருவிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன்.

உங்கள் குடும்பம், நண்பர்கள், ஆசிரியர் களிடமிருந்து உங்களுக்குக் கிடைத்த ஊக்கத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்.

எவ்வளவு வேண்டுமானாலும் புத்தகங்கள் வாங்கிக்கொள் என்று சொல்லித் தனது வருமானத்தில் 20 சதவீதத்தை நான் புத்தகங்கள் வாங்குவதற்காகத் தருபவர் என் அப்பா. அடுத்ததாக அம்மா. மேடைப் பேச்சில் மிகவும் திறமையானவர். ஒரு பேச்சாளனாக எனக்கு விதை போட்டவர் அம்மாதான். மிக முக்கியமாகச் சொல்ல வேண்டியவர்கள் என்னுடைய நண்பர்கள்.

எனக்குத் தேவைப்பட்ட புத்தகங்களையெல்லாம் தொடர்ந்து வாங்கிக்கொடுத்து எனக்கு ஊக்கம் தந்துகொண்டிருப்பவர்கள் அவர்கள். யூ.பி.எஸ்.சி. தேர்வுக்காக சென்னையில் தனியாகத் தங்கிப் படித்தபோது தருண் என்ற நண்பன் எனக்கு மிகப் பெரிய தார்மிக ஆதரவாக இருந்தான். ‘உன்னால் முடியும், இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை’ என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருப்பான்.

கூடவே, ‘தேர்வு உனக்கல்ல. உன்னைப் போன்ற ஒரு திறமையாளரைத் தேர்ந்தெடுப்பதென்றால் அந்தத் தேர்வு யூ.பி.எஸ்.சி.-க்குத்தான்’ என்றெல்லாம் சொல்லி ஊக்கப்படுத்தினான். இப்படிப் பல நண்பர்கள்.

நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை முன்வைத்து, சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்பும் கிராமப்புற மாணவர்களுக்கு நீங்கள் சொல்லிக்கொள்ள விரும்புவது என்ன?

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதப் போகும் பெரும்பாலான கிராமப்புற மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல் ஆங்கிலம்தான். உங்கள் விருப்பப் பாடம் தமிழாக இல்லாத பட்சத்தில் எல்லாத் தாள்களையும் ஆங்கிலத்தில் எழுத வேண்டியுள்ளது. தமிழில் எழுத வேண்டுமானால் அதற்குப் போதுமான புத்தகங்கள் தமிழில் கிடையாது. ஆங்கிலத்தில்தான் ஏராளமான புத்தகங்கள் கிடைக்கின்றன. இந்த இடத்தில் சங்கர் ஐ.ஏ.எஸ்.

அகாடமியின் சங்கர் என்னிடம் சொன்னதை நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். “உங்களுக்கு மொழி ஆளுமை நன்றாக இல்லை யென்றாலும் உங்களால் யூ.பி.எஸ்.சி. நன்றாகச் செய்ய முடியும். பிழையான ஆங்கிலத்தில் எழுதினாலும்கூட உங்களின் உள்ளடக் கத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்” என்றார். நாம் உள்வாங்கிய கருத்தை பாய்ண்ட் பாய்ண்டாக எழுதலாம். அட்டவணை போட்டு எழுதலாம். படங்கள் போட்டுச் சித்தரிக்கலாம். நல்ல மதிப்பெண் கிடைக்கும். நான் எழுத வந்தபோது உணர்ந்த விஷயம் இதுதான். அடுத்ததாக, பழைய கேள்வித்தாள்களை யெல்லாம் எடுத்துப் பார்க்க வேண்டும்.

யூ.பி.எஸ்.சி.-யின் சிலபஸ் மிகவும் பரந்தது. கேட்ட கேள்வியையே திரும்பவும் கேட்க மாட்டார்கள் என்றாலும் பழைய கேள்வித் தாள்களில் இடம்பெற்ற தலைப்புகளில் வேறுவிதமாகக் கேள்வி கேட்பார்கள். பிரதான தாள்களைப் பொறுத்தவரை ஆங்கிலச் செய்தித்தாள்களைப் படிப்பது அவசியம். நாம் அப்படிப் படிக்கிறோமா என்று யூ.பி.எஸ்.சி.-யில் சோதித்துப் பார்க்கிறார்கள். குறைந்தபட்சம் மூன்று செய்தித்தாள்களையாவது தினசரி படிக்க வேண்டும். தலையங்கங்களைப் படிப்பது மிகவும் முக்கியம். அப்படிப் படித்தாலே 60% கேள்விகளுக்குச் சிறப்பாக விடை எழுதிவிடலாம்.

இன்று இணையத்திலேயே எல்லா செய்தித்தாள்களும் கிடைக்கின்றன. யூ.பி.எஸ்.சி. தொடர்பான கேள்விகள் ‘லைவ்மிண்ட்’(livemint) இணைய இதழில் நிறைய வருகின்றன. ‘ஜி.கே. டுடே’ (GK Today), ‘இன்ஸைட்ஸ் ஆன் இண்டியா’(Insights on India), மிருணாள் (Mrunal) போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட ஐ.ஏ.எஸ். இணையதளங்களைப் பார்க்க வேண்டும். விருப்பத் தாளை வேண்டுமானால் மனப்பாடம் செய்து ஒப்பேற்றிவிடலாம். பிரதான தாள்களில் அப்படி முடியாது. அன்றாட நிகழ்வுகள் பற்றி ஒரு பார்வை இருந்தால்தான் பிரதான தாள்களை எழுத முடியும்.

யூ.பி.எஸ்.சி.யில் கேட்கப்படும் கேள்விகளெல்லாம் மிகவும் சவாலாக இருக்கும். ‘காந்தியும் அம்பேத்கரும் ஒரே இலக்கு கொண்ட எதிரிகள். அவர்கள் பாதைகள் வேறாக இருக்கலாம். இலக்கு ஒன்றே’ என்பது போன்று ஒருமுறை கேள்வி கேட்டார்கள். இதில் சவால் என்னவென்றால் இருபது கேள்வி கேட்பார்கள். ஒரு கேள்விக்கு 200 வார்த்தைகள் எழுத வேண்டும். அதற்கு 7 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நேரத்துக்குள் நீங்கள் வித்தியாசமாக யோசித்து உங்கள் பார்வையைக் கேள்விக்குள் கொண்டுவர வேண்டும்.

இன்னொரு முக்கியமான விஷயத்தைப் பதிவுசெய்ய விரும்புகிறேன். உண்மையில் விருப்பத் தாளுக்கு அதிக அளவில் மதிப்பெண்கள் போடப்படுவதில்லை. ‘ஜெனரல் ஸ்டடீஸ்’ என்று சொல்லப்படுவதில் நான்கு தாள்கள் இருக்கின்றன. அதில் நன்றாகவே மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

கிராமப்புறங்களிலிருந்து வருபவர்களும், அடித்தட்டு நிலையிலி ருந்து வருபவர்களும் யூ.பி.எஸ்.சி.யைப் பொறுத்தவரை பயப்படவே வேண்டாம். தங்கள் மனதைத் திறந்து தைரியமாகப் பேசினாலே அவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கொடுக்க யூ.பி.எஸ்.சி தயாராக இருக்கிறது. அப்படிப்பட்ட மாணவர்கள் மீது பரிவும் கொண்டிருக்கிறது.

ஆனால், பெரும்பாலானோர் நேர்முகத் தேர்வில் பயத்திலேயே உளறிவிடுகின்றனர். என்னைக் கேட்டால் ஒருவர் தமிழில் நேர்முகத் தேர்வு கொடுப்பதைவிடத் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்திலேயே, அதில் பிழைகள் இருந்தால்கூட, பயமில்லாமல் பேசுவது சிறந்தது. ஆக, மொழியை விட கருத்துக்குத்தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார் என்று சித்தாந்த நூல்களைத் தொடர்ந்து படிப்பதாகச் சொல்கிறீர்கள். உங்களைப் போன்ற ஒருவர் நிர்வாக அமைப்புக்குள் சென்று என்ன மாற்றத்தைச் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?

பெரும் புரட்சியெல்லாம் பண்ணிவிட முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஆனாலும், என்னால் முடிந்ததை அடித்தட்டு மக்களுக்காகச் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். மாவட்ட ஆட்சியர் பதவி என்பது பெரும் பொறுப்புகளையும் அதிகாரங்களையும் கொண்டது. அந்தப் பதவியைப் பயன்படுத்தி அதிகாரப் பரவலாக்கம் செய்ய முடியும் என்று நிரூபித்த மாநிலங்கள் கேரளமும் கர்நாடகமும்.

நானும் அதைத்தான் செய்ய விரும்புகிறேன். நான் படித்த அகாடமியில் 150 பேரின் தொடர்பு கிடைத்தது. இதுபோன்று ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் தேர்வு எழுதுகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உரையாடல்களை நிகழ்த்தினாலே பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

அடுத்தது என்ன?

இரண்டாவது முயற்சியில் ‘இந்திய வருவாய்த் துறை’ பணிவரை வந்திருக்கிறேன். கூடவே, ஐ.ஏ.எஸ்.-ஸை நோக்கி இன்னொரு முயற்சியும் செய்யவிருக்கிறேன். அதுதவிர, அரசியல் சித்தாந்தங்கள் சார்ந்த மொழிபெயர்ப்புகள் நிறைய செய்ய வேண்டும் என்று இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை ஒரு அற்புதமான பயணம் இனிதான் தொடங்கவிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 mins ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்