பிளஸ் டூவில் முதல் ரேங்க், இரண்டாவது ரேங்க் எடுத்தவர்கள் பற்றி கடந்த ஆண்டுவரை எல்லா மீடியாவும் போட்டி போட்டுக்கொண்டு பேசும். நல்லவேளையாக, இந்த ஆண்டு முதல் அதற்கு வாய்ப்பில்லை. இருந்தாலும், ஒருவருடைய அறிவைச் சோதிக்கச் சிறந்த அளவுகோலாக தேர்வைத்தான் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.
தேர்வுக்கும் திறமைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என நிரூபித்திருக்கிறார் ஒரு மாணவர். 3டி பிரிண்ட் தொழில்நுட்பத்தில் கார்பன் ஃபைபரால் தயாரிக்கப்பட்ட ‘கலாம் சாட்’(‘Kalam Sat’) என்ற குட்டியூண்டு செயற்கைக்கோளின் எடை வெறும் 64 கிராம். இந்த கையடக்கச் செயற்கைக்கோள் நாசாவின் எஸ்.ஆர். ராக்கெட்டில் ஜூன் மாதம் விண்வெளிக்கு பயணிக்க உள்ளது. இதை உருவாக்கிய மாணவர் முகமது ரிஃபாக் ஷாரூக் நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் எடுத்திருக்கும் மதிப்பெண் சராசரி 62.5 சதவீதம்.
ஏன் ஓட வேண்டும்?
நாசா வருடந்தோறும் மாணவர்களுக்காக நடத்தும் சர்வதேசச் செயற்கைக்கோள் வடிவமைப்புக்கான போட்டி ‘கப்ஸ் இன் ஸ்பேஸ்’ (’Cubs in Space’). இதில் கலந்துகொண்ட 57 நாடுகளைச் சேர்ந்த எட்டாயிரம் போட்டியாளர்களில் இறுதி செய்யப்பட்டவர்கள் 80 பேர். அவர்களில் தான் உருவாக்கிய சற்றே பெரிய தீப்பெட்டி அளவிலான செயற்கைக்கோளை ஏந்தியபடி நிமிர்ந்து நிற்கும் ஒரே இந்தியர் முகமது ரிஃபாக் ஷாரூக்.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த இவர் தற்போது சென்னையில் வசிக்கிறார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ (‘Space Kidz India’) அமைப்பு நடத்திய அறிவியல் போட்டியில் முதன்முறையாகக் கலந்துகொண்டார். இப்போது அந்த அமைப்பின் தலைமை விஞ்ஞானி என்கிற நிலைக்கு உயர்ந்திருக்கிறார்.
இந்த இளம் விஞ்ஞானி அடுத்துப் படிக்கப்போவது என்ன தெரியுமா? “எனக்குச் சிறு வயதிலிருந்தே பிடித்தப் பாடம் இயற்பியல். ஸ்பேஸ் கிட்ஸ் செயல் அதிகாரி ஸ்ரீமதி கேசனின் வழிகாட்டுதலால் இயற்பியல், எலெக்ட்ரானிக்ஸ் பாடங்களில் மேலும் ஆர்வம் அதிகரித்தது. பத்தாம் வகுப்பில் 500-க்கு 432 மதிப்பெண் பெற்றேன். ஆனால் அப்போதே மருத்துவம், பொறியியலுக்கு பின்னால் ஓடக்கூடாது, என்னுடைய தனித்திறமையை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என உறுதியாக முடிவெடுத்தேன். என்னுடைய அம்மா, சித்தி, மாமா, பள்ளி ஆசிரியர்கள் என பலரும் அதை ஊக்குவித்தார்கள்.
எதிர்பாராதவிதமாக கடந்த ஆண்டு நவம்பரில்தான் பிளஸ் டூ படிப்பில் சேர முடிந்தது. அதனால் அரையாண்டுத் தேர்வு, ஒரு மாதிரித் தேர்வு மட்டுமே எழுதிவிட்டு நேரடியாகப் பொதுத் தேர்வை எழுதினேன். அதனால் கணிதத்தில் 200-க்கு 92, வேதியியலில் 200-க்கு 89, கணினி அறிவியலில் 200-க்கு 145 மதிப்பெண் மட்டுமே பெற்றேன். ஆனால் மதிப்பெண்கள் என்னுடைய இலக்கு இல்லையே! அதனால், எனக்குப் பிடித்த பி.எஸ்சி. இயற்பியல் படிக்கப்போகிறேன்” என உற்சாகமாகப் பேசுகிறார் ரிஃபாக்.
விண்வெளியில் விவசாயம் சாத்தியமா?
டெக்னாலஜி டெமான்ஸ்டிரேட்டர் வகையைச் சேர்ந்த இவருடைய செயற்கைக்கோள் செம்டோ தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. மிக நுண்ணிய அலகு நானோ என்றால், அதை விடவும் சிறியது செம் (Scanning Electron Microscopy - SEM) ஆகும். அதனால்தான் வெறும் 64 கிராம் கொண்ட அதில் எட்டு சென்சார்கள், ஆன்போர்டு கணினி, மூன்று கிராம் எடையில் அத்திப் பழ விதைகள் உள்ளிட்ட பலவற்றைப் பொருத்தி உள்ளார்.
இந்தச் செயற்கைக்கோள் மூலமாக விண்வெளியில் நிலவும் கதிர்வீச்சு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல தகவல்களை அறிய முடியும். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக ரிஃபாகின் குறிக்கோள், விண்வெளியில் விவசாயம் சாத்தியமா என்பதைக் கண்டுபிடிப்பதே. “வெறும் 240 நிமிடங்கள் மட்டுமே இந்தச் செயற்கைக்கோள் விண்ணில் ஆய்வு செய்யும். அப்போது அதில் உள்ள அத்தி விதை அங்குள்ள கதிர்வீச்சை கிரகிக்கும். பிறகு அந்தச் செயற்கைக்கோள் கடலில் விழுந்துவிடும். அதை மீட்டு எடுத்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தி விண்வெளியில் எப்படி வேளாண்மை செய்யலாம் எனக் கண்டறிவேன்” என்கிறார்.
மீம்ஸ் போடும் விஞ்ஞானி
பூமியிலேயே விவசாயத்தை மேற்கொள்ள முடியாதபடி பல சிக்கல்கள் இருக்கும்போது விண்வெளியில் வேளாண்மை குறித்த ஆய்வு அவசியமா எனக் கேட்டால், “மக்களின் அன்றாட வாழ்வுக்குத் தேவையான அறிவியல் கண்டுபிடிப்புகளைச் செய்வது அத்தியாவசியம். சொல்லப்போனால், விஞ்ஞானி ஆவதைவிடவும் ‘விஞ்ஞான தொழிலதிபர்’ ஆவதே என்னுடைய இலக்கு. அதன்மூலம் மக்களுக்கான கண்டுபிடிப்புகளைப் பரவலாக உருவாக்கி அவற்றை மக்களிடம் நேரடியாகக்கொண்டு சேர்க்கும் சந்தையை உருவாக்கலாம்.
அதேநேரத்தில், அடுத்த நூறு ஆண்டுகளுக்குள் மனிதர்கள் பூமியை விட்டு வெளியேறி வேறொரு கோளில் குடியேறும் நிலை வந்துவிடும் என ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற இயற்பியலாளர்களே சுட்டிக்காட்டியுள்ளனர். அதனால், ஒரு விஞ்ஞானியாகத் தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்துச் செயல்படவே நான் முனைகிறேன். ஆகவேதான் விண்வெளியில் வேளாண்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்” என்கிற ஆழமான சிந்தனையை முன்வைக்கிறார்.
இத்தனை தீவிரமான அறிவியல் செயல்பாடுகளைக் கடந்து ரிஃபாக்குக்குள் பதின்பருவத்துக்கே உரிய துறுதுறுப்பும் விளையாட்டுத்தனமும் கொப்பளிக்கின்றன. அறிவியல் மீதான தன்னுடைய பேரார்வத்தைக் குறும்புத்தனமாக மீம்ஸ் மூலமாகவும் அவர் வெளிப்படுத்துகிறார். அவருடைய நண்பர்களுக்காகவே பிரத்யேகமாக மீம்ஸ் வடிவமைப்பது இவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. இது மட்டுமல்லாமல், கிராஃபிக்ஸ் அண்ட் அனிமேஷன், எலக்டிரானிக்ஸ் அண்ட் ரோபோட்டிக்ஸ், அட்வான்ஸ்டு டிப்ளமா இன் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் அண்ட் நெட்வர்க்கிங் உள்ளிட்ட பட்டயப் படிப்புகளையும் படித்திருக்கிறார்.
இந்திய விண்வெளி மையமான இஸ்ரோவுக்குத் தன்னுடைய கண்டுபிடிப்பை அனுப்பாமல் நாசாவுக்கு அனுப்பியது ஏன் எனக் கேட்டால், “உலக விண்வெளி வாரம் போன்ற நிகழ்ச்சிகளைக் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தும் இஸ்ரோ, நாசாவைப் போல எல்லா மாணவர் களுக்குமான போட்டிகளை இதுவரை முன்னெடுக்கவில்லை. அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் என்னுடைய கண்டுபிடிப்பை மேலும் பெருமிதத்தோடு இஸ்ரோவுக்கு அனுப்பியிருப்பேன்” என பெருமிதத்தோடு சொல்கிறார் இந்த இளம் அறிவியல் அறிஞர்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago