மனதில் நிற்கும் மாணவர்கள்-15: ஜான்சி குல்லா

By பெருமாள் முருகன்

மாணவர்களில் ஆண்களை நினைவு வைத்திருப்பது போலப் பெண்களை நான் நினைவு வைத்திருப்பதில்லை. அது முக்கியமான குறைதான். வழியில் ஒரு மாணவியிடம் இரண்டு நிமிடம் பேசிவிட்டாலே அதற்குப் பாலியல் காரணம் கற்பிக்கத் தயாராக இருக்கும் சமூகத்திடம் தொடக்கம் முதலே எனக்கு மிகுந்த எச்சரிக்கை உண்டு.

தொடக்கத்தில் வகுப்புக்குள் போனால் ஆண்கள் பக்கம்தான் நின்று பாடம் நடத்துவேன். ஆண்களைப் பார்த்துத்தான் கேள்வி கேட்பேன். பெண்கள் இருப்பது வருகைப்பதிவு எடுக்கும்போது மட்டுமே நினைவுவரும். கொஞ்ச நாளில் இது செயற்கையாக இருப்பதை உணர்ந்து முறையை மாற்றிக்கொண்டேன். வகுப்பறையின் நடுவில் நின்றும் உள்ளே நடந்தும் பாடம் நடத்தத் தொடங்கினேன்.

வகுப்பறை போதாது

வகுப்பறைக்குள் மாணவிகளிடம் பேசுவேன். பொதுவாக ஆசிரியருக்கும் மாணவருக்குமான உறவு வகுப்பறையோடு முடிந்து போய்விடுகிறது. வெளியுலகிலும் அவ்வுறவு தொடர்வது நம் சமூகத்தைப் பொறுத்தவரை மிகவும் அவசியம். முதல் தலைமுறையில் படிக்க வருபவர்களாகவும் கல்வி தொடர்பாக எந்தப் புரிதலும் அற்றவர்களாகவும் இருக்கும் மாணவர்களுக்கு ஆசிரியரின் வழிகாட்டுதல் முக்கியமானது. அதற்கு வகுப்பறை போதாது.

மாணவர்கள் வெளியிலும் என்னை அணுகவும் உரையாடவும் எந்தத் தடையும் இருந்ததில்லை. மாணவர் பலரின் வீடுகளுக்கே சென்றிருக்கிறேன். ஒரு மாணவரை மேற்படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக அவருடைய வீட்டுக்கே சென்று பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுண்டு. இப்போது திருமணம் செய்யாதீர்கள் என்று கேட்டுக் கொண்டதுண்டு. அவர்கள் வீட்டு விசேஷங்களிலும் திருவிழாக்களிலும் பங்கேற்றதுண்டு. அப்படியான ஒரு வெளியை மாணவியருக்கு வழங்க முடிந்ததில்லை.

அணுகும் சுதந்திரத்தைப் பெற்றார்

வகுப்பறை, கல்லூரி என்னும் எல்லைக்குள் பெண்கள் தங்கள் வாழ்வெல்லையை விரிவாக்கிக்கொள்ள என்னாலான முயற்சிகளைச் செய்ததுண்டு. கல்வியில் ஆர்வமும் இயல்பான சுபாவமும் கொண்ட பெண் ஜான்சி. நல்ல குரல் வளம். அழகாகப் பாடுவார். எஸ்.ஜானகியின் பாடல்கள் ஜான்சிக்கு நன்றாக வரும். அக்கல்லூரியில் மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்த ‘இலக்கிய மன்றம்’ என்னும் அமைப்பில் வாராவாரம் நிகழ்ச்சிகள் நடத்தி ஒரு பெரிய வெளியை மாணவர்களுக்கு உருவாக்கிக் கொடுத்தோம்.

ஜான்சி பயின்ற மூன்று ஆண்டுகளும் அந்த வெளியில் முதன்மைப் பாடகியாக உலாவந்தார். தனியாகப் பாடுவார். மாணவர்களுடன் இணைந்தும் பாடுவார். என் மகள் சிறுபெண்ணாக இருந்தபோது ஒரு காலாண்டு விடுமுறையில் கல்லூரிக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அப்போது ஜான்சிதான் என் மகளுக்கு நல்ல துணை. உடன் அழைத்து வைத்துக்கொள்வார். அவளைச் சந்தோஷப்படுத்தும் விளையாட்டுகளும் மொழியும் ஜான்சியிடம் இருந்தன. என் மகள் வழியாக வகுப்பறை வெளியை உடைத்துக்கொண்டுவந்து என்னை அணுகும் சுதந்திரத்தை ஜான்சி பெற்றார்.

கல்விக்கும் கல்லூரியில் நேரும் சிறு பிரச்சினைகளுக்கும் என்னாலான வழிகாட்டுதல்களைக் கொடுத்திருக்கிறேன். என் மகளுக்காக அப்போது தன் கையால் பின்னிக் குல்லா ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்தார். இன்று வரைக்கும் ‘ஜான்சி குல்லா’ என்னும் பெயரோடு எங்கள் வீட்டில் அது புழங்குகிறது. வெகுகாலம் ஆயிற்று. குளிர்காலத்தில் அலமாரிக்குள் இருந்து ஸ்வெட்டர்களையும் குல்லாக்களையும் எடுப்போம். அப்போது ‘ஜான்சி குல்லா’ கைக்கு வரும். ஜான்சி நினைவுக்கு வருவார். என்ன செய்கிறார், எப்படி இருக்கிறார் என்பது ஒன்றும் தெரியவில்லையே என்று எண்ணுவேன்.

பாட்டுக் குரல் எப்படி மறக்கும்?

அவர் வகுப்பு மாணவர்களுக்கும் என்னைப் போலத்தான். கல்லூரியை விட்டு வெளியேறிய பின் வகுப்புத் தோழர்களாக இருப்பினும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதில்லை. ஏன், பெண்களுக்கும் பெண்களுக்குமே எந்தத் தொடர்பும் இருப்பதில்லை. ஒருநாள் செல்பேசியில் அழைப்பு. “நான் ஜான்சி பேசறங்கய்யா” என்றது குரல். அந்தப் பாட்டுக்குரல் எப்படி மறக்கும்? விசாரித்தேன். முதுகலையும் கல்வியியல் பட்டமும் முடித்துப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக உள்ளார். திருமணமாகிவிட்டது. எதேச்சையாக அவரது வகுப்புத் தோழர் ஒருவரைப் பார்த்தபோது என்னைப் பற்றிக் கேட்டுச் செல்பேசி எண்ணைப் பெற்றிருக்கிறார். பரவாயில்லையே, இத்தனை காலம் ஆசிரியரை நினைவு வைத்திருக்கிறீர்களே என்று சந்தோஷம் தெரிவித்தேன்.

“உங்கள எப்படீங்கய்யா மறப்பேன்” என்று சொல்லிவிட்டு “என்னோட வீட்டுக்காரருதான் உங்ககிட்டப் பேசணும்னு ரொம்ப விரும்புனாரு, இருங்கய்யா அவருகிட்ட கொடுக்கறேன்” என்று கொடுத்தார். ஜான்சியின் கணவரும் எங்கள் கல்லூரி மாணவர்தான். வேறொரு துறையைச் சார்ந்தவர். இப்போது உடற்கல்வி ஆசிரியராக அவர் பணியாற்றுகின்றார்.

அவர் என்னிடம் பேச விரும்பியமைக் குக் காரணத்தைச் சொன்னார், “எங்க ஐயா எங்க ஐயான்னு உங்களப் பத்தித் தெனமும் ஒருமுறையாவது ஜான்சி பேசிருங்கய்யா. உங்க மேல அப்படி மரியாத வெச்சிருக்குது. உங்கள நான் தெரிஞ்சுக்காம போயிட்டனேன்னு வருத்தமா இருந்துச்சுங்கய்யா. அதான் எனக்கும் உங்ககிட்டப் பேசணும்னு தோனிக்கிட்டே இருந்துச்சு. இப்ப பேசுனது ரொம்ப சந்தோசங்கய்யா” என்றார் அவர்.

“ஜான்சி ரொம்ப நல்ல பொண்ணுப்பா. நல்லா பாத்துக்கோங்க” என்றேன். “பாத்துக்கறங்கய்யா” என்று மகிழ்ச்சியோடு சிரித்தார். ஜான்சியின் சொற்கள் வழியாக அவர் கணவரின் மனதுக்குள் உருவான சித்திரம் என் குரல் வழியாக நிறைவு பெற்றிருக்கக் கூடும்.



பெருமாள் முருகன்,எழுத்தாளர், தமிழ்ப் பேராசிரியர் தொடர்புக்கு: murugutcd@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்