வால் நட்சத்திரமும் வசப்படும்!

By த.நீதிராஜன்

வானம் மட்டுமல்ல. வால் நட்சத்திரங்களும் நமக்கு வசப்பட்டு வருகின்றன. 67பி/சுரியூமொவ்- கெராசிமென்கோ எனும் பெயருடைய வால் நட்சத்திரத்தின் மீது ரொசெட்டா எனும் விண்கலத்தின் பகுதியான பீலே நவம்பர் 12 அன்று தரையிறங்கி விட்டது. மனிதரின் விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு மைல்கல்லாகக் கொண்டாடப்படுகிறது.

இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட 20 நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் இந்தச் சாதனையைச் செய்துள்ளனர்.

தூரத்து உறவினர்

வால் நட்சத்திரங்கள் என்று நாம் பேசிப் பழகிவிட்டாலும் அவை நட்சத்திரங்களே அல்ல. அவற்றுக்குச் சுய ஒளி கிடையாது. அதேபோல நிரந்தர வாலும் கிடையாது. நமது சூரியக் குடும்பத்தின் பகுதிகள்தான் அவை. கிரகங்கள் சூரியனைப் பொதுவாக வட்டப் பாதையில் சுற்றுகின்றன. ஆனால் வால் நட்சத்திரங்கள் நீள் வட்டப் பாதையில் சுற்றுகின்றன.

நமது சூரியக் குடும்பம் உருவான பிறகு மீதியான துண்டு துணுக்குகள் என்றும் அவற்றைக் கூறலாம். சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களைத் தாண்டியும் சூரியனின் செல்வாக்கு செயல்படுகிற வான்பகுதி ஊர்ட் முகில் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி கோடி கிலோமீட்டர்களுக்கு விரிந்துகிடக்கிறது. அந்தப் பகுதி யிலிருந்து வந்து சூரியனைச் சுற்றிவிட்டு வால் நட்சத்திரங்கள் திரும்புகின்றன. சில நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றும் வால் நட்சத்திரங்களும் இருக்கின்றன. லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை வரக்கூடியவையும் உள்ளன.

கற்றது கையளவு

சூரியனை நெருங்க, நெருங்க அவை சூடேறி ஆவியாகித் தங்களிடமுள்ள பொருள்களை வெளிப்படுத்தும்போது அவற்றுக்கு வால்கள் ஏற்படுகின்றன. சூரியனைச் சுற்றிவிட்டு அவை விலகிச் செல்லும்போது, அவை தனது பொருள்களை இழந்து சிறுத்துச் செல்கின்றன.

சூரிய மண்டலத்தின் வெளிப்புறத்தில் இத்தகைய வால் நட்சத்திரங்கள் ஏறத்தாழ ஒரு லட்சம் கோடி இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த வருடம் வரை 5,186 வால் நட்சத்திரங்கள் அறியப்பட்டுள்ளன என்கிறது நாசா.

உறவினர் வீட்டில்

பூமியிலிருந்து நாம் நெருங்கக்கூடிய தூரத்தில் வருகிற ஒரு தூரத்து உறவினர்தான் 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ எனும் வால்நட்சத்திரம். விநாடிக்கு 38 கி.மீ வேகத்தில் இது வந்துகொண்டிருக்கிறது.

“அதை நோக்கி 10 ஆண்டுகளாக ரொசாட்டா விண்கலம் பயணம் செய்தது. தற்போது அதனைச் சுற்றி வருகிறது. அதன் பகுதியான பீலே நட்சத்திரத்தின் மீது தரையிறங்கி உள்ளது. புகைப்படங்களை அனுப்பிவருகிறது. அது அங்கே துளைகளிட்டு வால் நட்சத்திரத்தின் உள்ளே இருக்கிற பொருள்களின் மாதிரியை எடுத்து ஆராயவும் உள்ளது. பூமியில் அகழ்வாராய்ச்சி நடத்துவது போல நட்சத்திரத்தில் அகழ்வாராய்ச்சி செய்ய உள்ளோம்” என்று கூறியுள்ளார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறு வனத்தின் விஞ்ஞானி பவுலோ பெர்ரி.

இதன் மூலம் மனிதன் தயாரித்த விண்கலங்களிலேயே ஒரு வால் நட்சத்திரத்தைச் சுற்றிவந்தும் அதன் தரையில் இறங்கியும் ஆய்வு செய்த விண்கலம் என்ற பெருமையை ரொசாட்டா விண்கலம் பெற்றுவிட்டது.

ஆகாயத்தில் கங்கையா?

இவ்வளவு சிரமப்பட்டு என்னதான் தெரிந்து கொள்ளப்போகிறார்கள்? இந்தப் பயணத்தின் மூலம் என்னென்ன நமக்குக் கிடைக்கும்?

“ பகீரதன் தவம் செய்து ஆகாயத்தில் இருந்த கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தான் என்று நமது புராணத்தில் ஒரு கதை உண்டு. அதை போல பூமியில் உயிர்களும், தண்ணீரும் உருவாவதற்கு அடிப்படையான பொருள்கள் பூமிக்கு வெளியிலிருந்து வால்நட்சத்திரங்கள் மூலம் பூமிக்கு வந்திருக்கலாம் என ஒரு விவாதம் விஞ்ஞானிகளிடையே உள்ளது. அதனை மேலும் ஆராய்ச்சி செய்வதற்கு வால் நட்சத்திரத்தைத் தோண்டி எடுக்கப்படும் பொருள்கள் பற்றிய விவரங்கள் உதவலாம்” என்கிறார் மத்திய அரசு நிறுவனமான விஞ்ஞான் பிரசாரில் பணியாற்றும் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.

சூரியக் குடும்பம் என்ற வீடு கட்டப்பட்ட பிறகு மீதமாகிப்போன செங்கல், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்கள் போன்றவையே வால் நட்சத்திரங்களும் மற்ற விண்வெளிப் பொருள்களும். அவற்றை ஆராய்வது என்பது சூரிய மண்டலம் என்ற பழங்கால வீடு எப்படிக் கட்டப்பட்டிருக்கிறது என்று அறிய உதவும் என்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன்.

பூமியும் சூரிய மண்டலத்தின் பகுதிதானே ? அதை ஆராய்ந்து தெரிந்து கொள்ளலாமே என நீங்கள் நினைக்கலாம். அதற்குப் பதிலாக “சூரியனைச் சுற்றும் கிரகங்கள் பல மாற்றங்களுக்கு உட்பட்டுவிட்டன. ஆனால் வால் நட்சத்திரங்கள் ஆரம்பகாலச் சூரிய மண்டலத்தின் பொருள்களைக் கொண்டிருக்கின்றன” என்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள்.

நெருக்கத்தின் சூடு

வால் நட்சத்திரங்களின் தலைப் பகுதி பொதுவில் பாறைகள், கற்கள், உறைந்த வாயுக்கள், உறைந்த பனிக்கட்டி, தூசு முதலியவற்றால் ஆனது. 20 கிலோமீட்டர் முதல் 300 கிலோ மீட்டர் வரைகூட வால் நட்சத்திரங்களின் குறுக்களவு இருப்பதும் உண்டு.

சூரியனை நெருங்கும்போது அதன் பல்வேறு வகையான தாக்கங்களால் வால் நட்சத்திரத்திலிருந்து வெளியே தூசும், வாயுக்களும் தள்ளப்படும். அதுதான் நீண்ட வால் போல அமையும். அவற்றின் மீது சூரிய ஒளிபடும் போதுதான் அது வால் போல் தோற்றம் அளிக்கும்.

வால் நட்சத்திரத்தின் தலையைச் சுற்றிப் புகை மண்டலம் தோன்றும். அது 80 ஆயிரம் கிலோமீட்டர் குறுக்களவு கொண்டதாக இருக்கலாம். வால் நீளம் 10 லட்சம் கிலோ மீட்டர் வரைகூட இருக்கலாம். வால் நட்சத்திரத்தின் வாழ்வில் மிக முக்கியமான பகுதியான அந்த நிகழ்ச்சியை நெருக்கமாக ஆராயும் வாய்ப்பை இந்த முறை நாங்கள் பெற்றுள்ளோம் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கூறுகிறது.

வால் நட்சத்திரத்தின் தரையில் இறங்கியுள்ள பீலேவிடமிருந்தும் அதனைச் சுற்றும் ரொசாட்டா விண்கலத்திலிருந்தும் வருகிற தகவல்களை உலக விஞ்ஞானிகள் ஆய்வு செய்துவருகின்றனர். ஆய்வு முடிவுகள் என்னவாக இருந்தாலும் வால்நட்சத்திரங்களை நாம் வசப்படுத்தி விட்டோம் என்பது மட்டும் உண்மை.

த.வி.வெங்கடேஸ்வரன்



வால் நட்சத்திரம்

பெயர்: 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ

கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு: செப்டம்பர் 20 1969

கண்டுபிடிப்பாளர்கள்: சுரியூமொவ்,கெராசிமென்கோ (சோவியத் யூனியன்)

ரொசாட்டாவின் முதல் சாதனைகள்

# வால்நட்சத்திரத்தை முதலில் சுற்றிய விண்கலம்.

# உறைந்த வால்நட்சத்திரம் சூரியனால் வெப்பமடைவதை ஆராயும்

# சோலார் செல்களை முக்கியமான ஆதாரமாக கொண்டு பயணித்து ஜூபிடர் கிரகத்தின் சுற்றுப்பாதையை நெருங்கியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்