திடக் கழிவு, திரவக் கழிவு மேலாண்மைகள் கேள்விப்பட்டிருக்கிறோம். பள்ளிக் கழிவு மேலாண்மை கேட்டதுண்டா? “குப்பை என நினைத்து மாணவர்கள் பள்ளிக்கூட வளாகத்தில் தூக்கி எறியும் பொருட்களைச் சேகரித்து அவற்றை உபயோகமான பொருளாக மாற்றச் சொல்லிக்கொடுக்குறதுதான் நம்ம பாடம்” இப்படிப் பள்ளிக் கல்வி மேலாண்மைக்கு எளிய விளக்கம் தருகிறார் முனைவர் இளங்கோ. இவர் திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் விலங்கியல் முதுகலை ஆசிரியர்.
குப்பைக்கு மதிப்பு கூட்டலாம்
இன்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த பெரும்பாலான பள்ளி மாணவிகள் கண்ணாடி, ரப்பர் வளையல்களைத்தான் அணிகிறார்கள். பள்ளியில் எதேச்சையாக உடைந்து போகும் வளையல்களை மாணவிகள் எங்காவது வீசிவிடுவதுண்டு. இளங்கோவின் பள்ளிக் கழிவு மேலாண்மையின் முதன்மை மூலதனமே இந்த வளையல் துண்டுகள்தான்.
“பள்ளி வளாகத்தில் சிதறிக் கிடக்கும் வளையல் துண்டுகளைச் சேகரித்து அழகான மாலைகள் செய்யப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பேன். அதைக் கற்றுக் கொண்டு அவர்களே வளையல் துண்டுகளைத் தேடிக் கண்டுபிடித்து விதவிதமான அலங்காரப் பொருட்களைச் செய்துகாட்டுவார்கள். அவர்களுக்குத் தேவையான யோசனைகளை மட்டும் நான் சொல்லுவேன்” என்கிறார் இளங்கோ.
வளையல் துண்டில் தொடங்கிய இவரது பள்ளிக் கழிவு மேலாண்மையானது உடைந்த பேனாக்கள், மை தீர்ந்து போன ரீஃபில்கள், அட்டைப் பெட்டிகள், கிஃப்ட் பேப்பர்கள், சத்துணவுக் கூடத்துக்கு வரும் கொட்டாங்குச்சி இவைகளையும் நோக்கித் திரும்பியது. இப்போது அவையும் அலங்காரப் பொருட்கள், தோடுகள், சாவிக்கொத்து, பேப்பர் வெயிட், பென் ஸ்டாண்ட் என விதவிதமான பொருட்களாக மாணவர்களின் கையில் மாறிவருகின்றன.
குப்பைகள் இல்லாத உலகத்தை உருவாக்குவது சாத்தியமில்லை. ஆனால், மறு சுழற்சி செய்து மாற்றுப் பொருட்களை உருவாக்கினால் குப்பைகளைக் குறைக்க முடியும். மதிப்புக் கூட்டப்படாத பொருட்களே கழிவாகக் கொட்டப்படுகின்றன. இதையெல்லாம் தனது மாணவர்களுக்கு மிகச் சரியாகப் புரியவைத்த இளங்கோ, அப்படிக் கழிவாகக் கொட்டப்படும் பொருட்களுக்கு எப்படி மதிப்புக் கூட்டுவது என்பதையும் சொல்லிக் கொடுத்தார்.
மறுசுழற்சி செய்யலாமே!
பள்ளி வளாகத்தில் சேரும் கழிவுகளைக் கலைப் பொருட்களாக மாற்றும் வித்தையை மாத்திரமல்லாமல், புகைதான் பகை என்பதைத் தனது மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லுகிறார். அதனால் பள்ளி வளாகத்தில் குவியும் குப்பைகளை எரிக்காமல் இயற்கை உரமாக்கும் மந்திரத்தைச் சொல்லிக் கொடுக்கிறார். அந்த உரத்தைக் கொண்டு கருவேப்பிலை, ஓமவல்லி, வல்லாரை, முருங்கைக் கீரை எனச் சிறு மூலிகைத் தாவரங்களை உருவாக்கும் அளவுக்குத் தயாராகி இருக்கிறார்கள் இவருடைய மாணவர்கள்.
நாம் பயன்படுத்தும் பொருட்களில் 70 சதவீதத்துக்கு மறுசுழற்சி உண்டு என்பதே இளங்கோ கற்றுத் தரும் பாடம். பூமிக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியவை பாலத்தின் பைகள். அதே நேரத்தில் ஒரு கிலோ பாலித்தீன் பைகளை உருக்கினால் பலவிதமான பொருட்களைச் செய்யலாம். சாக்லேட், பிஸ்கட் பேப்பர்களைக் கொண்டு டிஸ்க்கோ மாலைகள் செய்யலாம்.
பழைய சிடிக்களில் குடும்பப் போட்டோக்களை ஒட்டி ஆல்பம் பண்ணலாம். இவை அனைத்தும் இளங்கோ தனது மாணவர்களுக்குச் சொல்லித் தந்திருக்கும் உத்திகள். தன்னம்பிக்கை இல்லாத காரணத்தினால்தான் பெரும்பாலான இளைஞர்கள் தவறான பாதைக்குத் திரும்புகிறார்கள்.
இதை நன்றாகவே புரிந்து வைத்திருக்கும் இளங்கோ, பள்ளியில் படிக்கும்போதே தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கும் அளவுக்குத் தனது மாணவர்களைத் தயார்படுத்துகிறார். இதன் மூலம் அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டிப் பொருளாதாரத்தில் சுயசார்புடையவர்களாகவும் மாற்றுகிறார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago