படித்தவர்கள் ஒரு படி மேலே இருக்கிறார்கள்! - கிராபிக்ஸ் தொழில்நுட்ப வல்லுநர் கமலக்கண்ணன் நேர்காணல்

By கா.இசக்கி முத்து

ஹாலிவுட் திரைப்படங்கள் பலவற்றில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணி இந்தியாவில்தான் நடைபெறுகிறது. இதிலிருந்தே இந்தியாவில் கிராபிக்ஸ் துறை எந்த அளவுக்கு வளர்ந்துவருகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம் எனச் சந்தோஷமாகப் பேசத் தொடங்கினார் கிராபிக்ஸ் தொழில்நுட்ப வல்லுநர் கமலக் கண்ணன். ‘மகதீரா’, ‘நான் ஈ’, ‘புலி’, ‘பாகுபலி 2’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது ‘சங்கமித்ரா’ படத்துக்கான முதற்கட்டப் பணிகளில் மூழ்கியிருந்தவரிடம் கிராபிக்ஸ் துறை படிப்பு சார்ந்து பேசியதிலிருந்து.

கிராபிக்ஸ் படித்தாலே கிராபிக்ஸ் துறைக்குள் வந்துவிட முடியுமா?

கிராபிக்ஸ் துறையில் 2டி, பெயிண்டிங், ட்ராக்கிங், மாடலிங், டெக்சரிங், அனிமேஷன் எனப் பல பிரிவுகள் இருப்பதால், நமக்கு எது நன்றாக வரும் என்பது பாடத்திட்டத்தில் இணைந்து படித்தால் மட்டுமே தெரியும். அதேபோல் கற்பிக்கும் ஆசிரியர்கள், “நீங்கள் இந்த விஷயத்தில் நன்றாக இருக்கிறீர்கள்” என்று கண்டறிந்து ஊக்குவிப்பார்கள்

ஆனால், அது மட்டும் போதாது. அதன் பிறகு அந்த மென்பொருளை வீட்டில் உள்ள கணினியில் பதிவேற்றம் செய்து தொடர்ந்து பயிற்சி எடுப்பது பயன் தரும். திரையுலகப் பணியைப் பொறுத்தவரை 60 சதவீதம் பேர் தனிப்பட்ட முறையில் படித்தவர்கள்தான் இங்குப் பணிபுரிந்துவருகிறார்கள். 40 சதவீதம் பேர் தான் பாடத்திட்டத்தின் மூலம் பயின்று திரையுலகுக்குள் வந்தவர்கள்.

கிராபிக்ஸ் செய்யப்படுவதற்கு முன்...

கிராபிக்ஸுக்குப் பின்...



இந்தியாவில் தற்போதிருக்கும் அனிமேஷன் பாடத்திட்டம் குறித்து உங்களுடைய கருத்து?

அனிமேஷன் அடிப்படையான 2டி-யில் தொடங்கிப் படம் வரைந்து அதை கேப்ச்சர் செய்து ஓட விடுவார்கள். அதற்குப் பிறகு 3டி-க்குள் செல்வார்கள். அனிமேஷன் பாடத்திட்டம் என்பது இப்படித்தான் இருக்கும். அனிமேஷன் பாடத்திட்டம் படிக்கும்போதே, அதோடு ஒரு மென்பொருளைப் படித்துக்கொண்டார்கள் என்றால் நன்றாக இருக்கும். அதற்கான வாய்ப்பு தற்போது நம்மூரில் கிடையாது. ஆகையால், தனிப்பட்ட முறையில் படிப்பது நல்லது. இணையம் மட்டும் வேகமாக இருந்தால், www.lynda.com இணையதளத்தில் 25 டாலர்கள் செலுத்துங்கள். அதில் பல மென்பொருளுக்கான செய்முறை PDF-கள் கிடைக்கின்றன.

கிராபிக்ஸ் துறைக்குள் எத்தனை பிரிவுகள் இருக்கின்றன. ஒரு சிறு அறிமுகம்

கேம்ஸ், அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், வெப் கிராபிக்ஸ் ஆகியவை உள்ளன. ஒவ்வொரு துறைக்குள்ளும் பல்வேறு கிளைத் துறைகள் இருக்கின்றன. நானோ விஷுவல் எஃபெக்ட்ஸ் துறையில் இருக்கிறேன்.

மாடலிங், டெக்சரிங், ராங்கிங், கேரக்டர் அனிமேஷன், மேட்ச் மூவிங், காம்போசிட்டிங், மே பெயிண்டிங் உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கியதுதான் விஷுவல் எஃபெக்ட்ஸ். அனைத்து விஷயங்களுமே அறிந்தவரை ஜெனரலிஸ்ட் என்பார்கள். ஏதாவது ஒன்றில் மட்டுமே முழுமையாகக் கவனம் செலுத்தி நிபுணத்துவம் பெற்றவர்களை ஸ்பெஷலிஸ்ட் என்பார்கள். தற்போதைக்கு ஸ்பெஷலிஸ்ட் தேவைதான் அதிகம். நான் அவர்களிடம்தான் பணிகளைக் கொடுப்பேன். ஆனால் பெரும்பாலானோர் இங்கு ஜெனரலிஸ்ட்டாகவே இருக்க விருப்பப்படுகிறார்கள்

கிராபிக்ஸ் சம்பந்தமான படிப்பு முடித்துவிட்டுத் திரையுலகுக்குள் நுழைய முதலில் என்ன செய்ய வேண்டும்?

படித்து முடித்தவுடன் ஷோ-ரீல் செய்ய வேண்டும். ஷோ- ரீல் தயாரிப்பதற்கு முன்னதாக வெளிநாட்டினர் எப்படி ஷோ-ரீல் செய்கிறார்கள் என்பதைக் காண வேண்டும். வெளிநாட்டுப் பள்ளியில் படித்தவர்களின் ஷோ-ரீலைப் பார்த்தீர்கள் என்றால் தொழில்முறை நேர்த்தியுடன் இருக்கும். நமது ஊரில் அனிமேஷன் ஷோ - ரீல் பார்த்தீர்கள் என்றால் நல்ல லைட்டிங்கோடு தயாரிக்கிறார்கள். ஆனால், நல்ல மாடலைத் தேர்வுசெய்யத் தவறிவிடுகிறார்கள். இதனால் தேர்வாளர்களைக் கவரும் வகையிலான ஷோ-ரீல்கள் நமது ஊரில் மிகவும் குறைவு. திறமைசாலிகளாக இருந்தாலும் தேர்வாளர்களைக் கவரும் விதத்தைச் சரியாக அறிந்திருப்பதில்லை. இதனால், தேர்வாளர்கள் அதைப் பார்த்துத் தேர்வு செய்வதில்லை. நல்ல மாடலோடு, லைட்டிங் செய்து சிறப்பான முறையில் ஷோ-ரீல் செய்வது மிகவும் முக்கியம்.

கிராபிக்ஸ் துறை வளர்ந்துள்ளது என்பதை எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள்?

தங்களுடைய குழந்தைகள் பொறியியல் படிப்புகள் படிக்க வைக்க வேண்டும் என்கிற நினைப்பு பெற்றோர் மத்தியில் குறைந்துள்ளது. அதேநேரத்தில் அதில் கிராபிக்ஸ் பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படித்தால் வேலை கிடைக்கும் என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதுவே முதல் வெற்றி.

3 வருடங்களுக்கு முன்பு விஷுவஸ் எஃபெக்ட்ஸ் ஸ்டுடியோ தொடங்கிச் சம்பாதிப்பது என்பது மிகவும் கடினமான காரியம். ஏனென்றால், ஒரிஜினல் மென்பொருள் வாங்குவதற்கே பெரும் தொகை செலவாகும். ஆனால், இப்போது அத்துறையில் பல மாற்றங்கள் வந்துள்ளன. திரைத்துறையில் பார்த்தீர்களானால் 2015-ல் ‘புலி’ படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு என்ன பொருட்செலவோ, அதை இப்போது ஒரு காட்சிக்கு மட்டுமே செலவு செய்யத் தயாரிப்பாளர்கள் துணிந்துள்ளார்கள். இந்தத் துணிச்சல் நிச்சயமாக கிராபிக்ஸ் துறையில் கடைநிலையில் பணிபுரிபவர்கள் வரைக்கும் நன்மை பயக்கும்.

கிராபிக்ஸ் துறைக்குள் வர நினைக்கும் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

கண்டிப்பாக வரவேற்கிறேன். ஆனால் +2 முடித்துவிட்டு இந்தத் துறைக்குள் வருவது எனக்குச் சரியாகப் படவில்லை. +2 முடித்துவிட்டு வருபவர்களுக்கும், இளங்கலைப் பட்டம் முடித்து உள்ளே வருபவர்களுக்கும் நிறைய வித்தியாசத்தைப் பார்க்கிறேன். இளங்கலைப் பட்டம் முடித்து கிராபிக்ஸ் துறையில் பணிபுரிபவர்கள் ஒருபடி மேலே இருக்கிறார்கள். அப்படி வந்தவர்கள் கூட மூன்றாண்டுகள் கல்லூரிப் படிப்பில் வீணாகிவிட்டதாக நினைக்கிறார்கள். அப்படிக் கிடையாது.

இண்டஸ்ட்ரியல் டிசைன் (Industrial Design), ரோபாட்டிக்ஸ் (Robotics), தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட படிப்பைப் படித்துவிட்டு இந்தத் துறைக்குள் வந்தவர்களின் பணி நன்றாக இருக்கிறது. ஏனென்றால் ஒரு விஷயத்தைச் சொன்னால் உடனே செய்து முடிக்கிறார்கள். ரோபாட்டிக்ஸ் படிப்பவர்கள் அதனோடு கிராபிக்ஸும் படித்தால் கூடுதல் நன்மை பயக்கும்.


பாகுபலி 2 திரைப்படக் குழுவினர் மற்றும் சக கிராபிக்ஸ் கலைஞர்களுடன்

கிராபிக்ஸ் துறையில் தற்போதைய வேலைவாய்ப்பு எப்படியுள்ளது?

கிராபிக்ஸ் ஸ்டூடியோக்களில் பல்வேறு வேலைவாய்ப்புகள் இருப்பதாக விளம்பரங்களைப் பார்க்கிறேன். முன்பு போல கிராபிக்ஸ் படித்துவிட்டு வெளிநாட்டில் போய் வேலை செய்வது குறைந்துவருகிறது. இந்தியாவிலே பணியாற்றலாம் என்ற எண்ணம் வந்துள்ளது. சம்பளம் பொறுத்தவரை இந்தியாவிலும் கொஞ்சம் உயர்ந்துள்ளது. 5 வருடங்கள் அனுபவங்கள் இருந்தாலே தென்னிந்தியாவில் ரூபாய் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை மாதச் சம்பளம் தரப்படுகிறது. வட இந்தியாவில் 1 லட்சம் வரை சம்பாதிக்கலாம். இதனால், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிவதைவிடத் தற்போது பலரும் இந்தியாவிலேயே பணிபுரியத்தான் விரும்புகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்