‘‘என் பணியைச் செய்ய என் குழுவிலுள்ள பிறரது உதவியும் தேவைப்படுகிறது என்றால், நான் அந்தச் சூழலை விரும்பவே மாட்டேன்’’. இந்த வாக்கியம் உங்களுக்குப் பொருந்துகிறதா?
சைக்கோமெட்ரிக் தேர்வில் இப்படிப்பட்ட கேள்விகளும் கேட்கப்படலாம்.
மேற்படி கேள்விக்கு ‘‘ஆமாம்’’ என்று விடையளித்துவிட்டு, அப்படி ஒரு விடையை அளித்ததற்காகச் சிலர் மிகவும் ஆனந்தப்பட்டுக்கொண்டும் இருப்பார்கள்.
ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் பணியைச் செய்ய உங்கள் குழுவில் உள்ள பிறரது உதவி தேவைப்படுகிறது எனும் நிலை மிகவும் இயல்பானதுதான். குழு என்பது பலர் இணைந்தது. தனித்துவம் கொண்டது. இணைந்து பணிபுரிய வேண்டும் என்பதற்காகத்தான் குழுக்கள் அமைக்கப் படுகின்றன. எனவே, ஒருவருக்கொருவர் உதவி செய்வது என்பது குழுவாகப் பணி செய்வதில் இன்றியமையாத ஒன்று.
நீங்கள் ``ஆமாம்’’ என்று பதில் அளித்திருந்தால், அதில் உங்களையும் அறியாமல் உங்களைப் பற்றிய பல தன்மைகளை வெளிப்படுத்திவிடுகிறீர்கள். (இப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதுதானே சைக்கோமெட்ரிக் தேர்வுகளின் நோக்கம்?)
ஒருவருக்கொருவர் இருக்க வேண்டிய நல்லுறவை நிர்வாகத் துறையில் ‘இன்டர் பர்சனல் ரிலேஷன்ஸ்’ என்பார்கள். அந்த நல்லுறவு உங்களிடம் கொஞ்சம் மிஸ்ஸாகிறது. அதனால்தான் ஒருவரிடம் உதவி கேட்பது என்றாலே, உங்களுக்கு அது ஏற்புடையதாக இல்லை.
மாறாகப் பிறரிடம் உதவி கேட்பதில் உங்களுக்குத் தாங்க முடியாத தயக்கம் அல்லது பயம் இருக்கிறது என்றால், அது உங்கள் தாழ்வு மனப்பான்மையைக் காட்டுகிறது.
உங்களைப் பற்றியே நீங்கள் அதிகமாக நினைத்துக்கொண்டிருந்தாலும், பிறரிடம் உதவி கேட்க மாட்டீர்கள். உங்கள் ஈகோ அதை ஏற்றுக்கொள்ளாது. இத்தகைய மனநிலை வரவேற்கத்தக்கது அல்ல.
ஆக ‘ஆமாம். நான் அப்படிப்பட்டவன் தான்’ என்று விடை அளிப்பதன் மூலம் உங்களுக்கு உயர்வு அல்லது தாழ்வு மனப்பான்மை உண்டு என்பதை மறைமுகமாக ஒத்துக் கொள்கிறீர்கள்.
கேள்விக்கான காரணம் என்ன?
சைக்கோமெட்ரிக் தேர்வுகளில் எந்தவொரு கேள்விக்கும் பதிலளிப்பதற்கு முன்னால், அதை எதற்காகக் கேட்கிறார்கள் என்பதில் தெளிவு வேண்டும்.
அந்தத் தெளிவைப் பெறுவதற்கு இதோ இன்னொரு கேள்வி.
‘இந்த மூன்றில் குழு மனப்பான்மைக்கு உதாரணமாக எதைக் குறிப்பிடலாம்?’ என்று ஒரு கேள்வி சைக்கோமெட்ரிக் தேர்வுகளில் கேட்கப்படலாம். இந்தக் கேள்விக்கு மூன்று பதில்கள் அளிக்கப்பட்டுள்ளன என்று வைத்துக் கொள்வோம்.
(அ). காக்கை (ஆ). ராஜநாகம் (இ). எறும்பு
இவற்றில் ராஜநாகத்தை நாம் விட்டு விடலாம். ராஜநாகம் என்பது மிகவும் அரிதானது. அது குழுவாகச் செயல்படுவது கிடையாது என்பதால் அதைக் குழு மனப்பான்மைக்கு ஓர் உதாரணமாகக் கருத முடியாது. போதாக்குறைக்கு ராஜநாகத்தின் முக்கிய உணவு சிறு பாம்புகள்தான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
மீதமுள்ள இரண்டு விடைகள் காக்கை மற்றும் எறும்பு. காக்கையை நினைக்கிறீர்கள். இரண்டு காட்சிகள் உங்கள் நினைவுக்கு வருகின்றன. உணவுப் பொருளை அளித்தால், அதைக் சத்தமின்றித் தின்றுவிடாமல், காக்கை சக காக்கைகளைக் கூவி அழைக்கும். பிறகு எல்லாக் காக்கைகளுமாக அந்த உணவைச் சாப்பிடும்.
திடீரென்று பல காக்கைகள் உரத்துக் குரல் கொடுப்பதை, நீங்கள் கவனித்திருந்தால் அங்கு ஏதாவது ஒரு காக்கை இறந்திருப்பதைக் காணலாம். அதற்குத் தங்கள் வருத்தத்தை (அஞ்சலியை?) வெளிப்படுத்தும் வகையில்தான் காக்கைகள் தங்கள் உறவினர்களோடு கூடி அழுகின்றன.
ஆஹா, காக்கையைவிடக் குழு மனப்பான்மைக்குச் சிறந்த உயிரினம் இந்த உலகில் இருக்க முடியுமா என்று நெக்குருகிப் போய்க் காக்கை என்ற விடையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் கேள்வியை இப்படி யோசித்துப் பாருங்கள்.
‘காக்கைகளிடம் உள்ள எந்தச் சிறப்பு எறும்புகளிடம் இல்லை? எறும்புகளிடம் உள்ள எந்தச் சிறப்பு காக்கைகளிடம் இல்லை?’.
எறும்புகளின் வரிசை நினைவுக்கு வருகிறதா? ஏதோ ஸ்கேலில் வரைந்தது போல நேர்கோட்டில் அவை வரிசையாகச் செல்லும். ஆக, டிசிப்ளின் எனப்படும் கட்டுப்பாடு அவற்றிடையே சிறப்பாக உள்ளது. ஒரு குழுவில் இருப்பவர்கள் ஒட்டுதலோடு இருந்தால் போதாது. பணியைச் செய்து முடிக்கையில் ஒருவித சுயக் கட்டுப்பாடும் அவசியம். எனவே, எறும்பு என்பதுதான் மேலும் துல்லியமான விடையாக இருக்கும்.
இது போன்ற சில கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கொஞ்சம் பொது அறிவு தேவை. அதை நீங்கள்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்குச் சில கதைகளை அறிந்து கொண்டால்தான் சைக்கோமெட்ரிக் கேள்விகளுக்கான சரியான விடையை அளிக்க முடியும்.
கதைகள் தெரியுமா உங்களுக்கு?
கீழே உள்ள குழுக்களில் மிகவும் மோசமான குழு என்று எதைக் கூறலாம்?
அ) பார்வை இழந்தவர்கள் யானையைப் பார்த்த கதை
ஆ) ஆற்றைக் கடந்ததும் அழுத பரமார்த்த குருவும் அவரது சிஷ்யர்களும்
இ) வேடன் நெருங்கியதும் வலையோடு பறந்த புறாக்கள்
மேற்படி கேள்விக்குப் பதிலளிக்க வேண்டுமென்றால் அதற்கான முதல் தகுதி மூன்று கதைகளும் தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான். தெரியாதவர்களுக்காக இதோ ரத்தினச் சுருக்கமாக அந்தக் கதைகள்.
யானையின் அருகே பார்வை இழந்தவர்கள் சிலர் சென்றனர். யானையின் காதை தொட்டுப் பார்த்தவர் யானை முறத்தைப் போல உள்ளது என்றார். காலைத் தொட்டுப் பார்த்தவர் யானை தூணைப் போல உள்ளது என்றார். யானையின் உடலைத் தொட்டுப் பார்த்தவர் யானை சுவர் போல இருக்கிறது என்றார். தான் சொன்னதே சரி என்று அவர்கள் கடுமையாகச் சண்டை போட்டுக் கொண்டனர்.
நதியைக் கடந்த பரமார்த்த குருவுக்கும் அவரது முட்டாள் சிஷ்யர்களுக்கும் ஒரு சந்தேகம். ‘தங்களில் யாரும் நதியில் மூழ்கிவிட வில்லையே?’. ஒவ்வொருவரும் அனைவரையும் எண்ணிப் பார்த்துவிட்டு ‘`ஐயோ எண்ணிக்கையில் ஒன்று குறைகிறது. நதியில் நம்மில் யாரோ ஒருவர் மூழ்கி இறந்துவிட்டார்’’ என்று கதறினர். உண்மை என்னவென்றால் ஒவ்வொருவரும் எண்ணும்போது, தங்களை அந்த எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளவில்லை.
வேடன் ஒருவன் புறாக்களைப் பிடிப்பதற்காகத் தானியங்களைப் போட்டிருந்தான். அவன் திட்டப்படி தானியங்களைத் தின்ன வந்த புறாக்கள் வலையில் சிக்கிக்கொண்டன. அவற்றை வேடன் நெருங்கிய கடைசி நிமிடத்தில் அத்தனை புறாக்களும் ஒற்றுமையாக, முழு சக்தியைப் பயன்படுத்தி, ஒரே சமயத்தில் வலையோடு சேர்ந்து மேலே பறந்து தப்பித்தன.
மூன்றாவது கதை மோசமான குழுவுக்கு உதாரணம் அல்ல. தொடக்கத்தில் வேடன் விரித்த வலையில் புறாக்கள் மாட்டிக் கொண்டாலும், பின்னர் ஒற்றுமையான நடவடிக்கையின் காரணமாக, அவை தப்பித்து விட்டன.
அப்படியானால் எது மிக மோசமான குழு? பரமார்த்தக் குரு மற்றும் சீடர்களா?, யானையைப் பரிசோதித்த பார்வை இழந்தவர்களா? என்றால் பரமார்த்தக் குரு மற்றும் சீடர்கள்தான். உடல் குறைபாடு இல்லையென்றாலும் மனக் குறைபாடு கொண்டவர்கள். அவர்களில் ஒருவருக்குக்கூடப் புத்திசாலித்தனம் இல்லை. மாறாகப் பார்வை இழந்தவர்கள் கூறியது முழுத் தவறு அல்ல. ஒவ்வொரு வரும் கூறியது ஓரளவு உண்மை.
இப்படிப் பல விதங்களிலும் யோசித்துப் பார்க்க வேண்டும். இந்தத் தர்க்க ரீதியான சிந்தனைகள் மின்னல் வேகத்திலும் நடைபெற வேண்டும். அதுதான் சைக்கோமெட்ரிக் தேர்வுகளின் தனித்தன்மை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago