சில நாட்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள முக்கியமான பள்ளிக்குச் சென்றிருந்தேன். ஒரு காலத்தில் அப்பள்ளியில் மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. சமச்சீர்க் கல்வி நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தைக் கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட நூற்றுக்கணக்கான பள்ளிகளில் அதுவும் ஒன்று. சமச்சீர்க் கல்வி தரமாக இல்லை என்ற தோற்றம் உருவாக்கப்பட்டதும் பல பெற்றோர்கள் சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளில் சேர்ப்பதற்கான பிரயத்தனத்தைத் தொடர்ந்ததால், பல மெட்ரிகுலேசன் பள்ளிகளும் சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யத் தலைப்பட்டன. மனப்பாடம் செய்யும் முறையைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் சமச்சீர்க் கல்வியை விட, சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டம் சிறந்தது என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமிருக்க வாய்ப்பில்லை.
ஆனால் மாநில அரசின் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டிய நிர்ப்பந்தத்தின் காரணமாக, சமச்சீர்க் கல்வியைப் பயிற்றுவிப்பதுடன், பள்ளி வளாகத்திலேயே சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டத்தைப் பயிற்றுவிக்கும் வகுப்புகளைத் தனியாகத் தொடங்கின. நான் மேலே கூறும் பள்ளியும் இந்த நடைமுறையைப் பின்பற்றிவருகிறது.
இதற்காக அப்பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்பில் மாபெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எல்லா வகுப்புகளுமே குளிர்சாதன வசதி கொண்டவையாக மாற்றப்பட்டுள்ளன. அதன் வெளித்தோற்றத்தைக் காணும் யாருமே அதை ஒரு பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அலுவலகமாகத்தான் கருத நேரிடும். அந்த அளவுக்கு நேர்த்தியான வடிவமைப்பு. அதற்காக அப்பள்ளி கொடுத்திருக்கும் முதல் விலை விளையாட்டு. இத்தனைக்கும் எல்லா விளையாட்டிலும் சிறந்த அணிகளை உருவாக்கி வைத்திருக்கும் பள்ளிகளில் அதுவும் ஒன்று.
குளிர்சாதன வசதி எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றும் காலம் தூரத்தில் இல்லை. மாணவர்களை விளையாட அனுமதித்தால், பந்து தெரியாமல் கண்ணாடி கதவுகளிலும் ஜன்னலிலும் பட்டு உடைந்து விடும் என்பதால் மாணவர்கள் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை.
இன்று சென்னையில் மாணவர்களை அதிக அளவில் மதிப்பெண் பெறுவதற்குத் தயார் செய்யும் பள்ளிகள் எதுவிலும் பெயரளவுக்குத்தான் விளையாட்டு உள்ளது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். சில பள்ளிகள் அருகில் இருக்கும் மாநகராட்சி மைதானத்தைப் பயன்படுத்துகின்றன. பள்ளியில் உள்ளே இடம் இருந்தால் இன்னும் பல வகுப்புகளைக் கட்டி பல மாணவர்களைச் சேர்க்கலாம் அல்லவா!
நான் குறிப்பிடும் பள்ளியில் சி.பி.எஸ்.இ. கல்வி பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் குளிர்சாதன வசதியுள்ள மகிழுந்துகளில் வந்து இறங்குகிறார்கள். பள்ளியின் சார்பாக மாணவர்களை அழைத்து வர இயக்கப்படும் பேருந்துகளும் குளிர்சாதன வசதி கொண்டவையே. மழலையில் பள்ளி இரண்டு ஆண்டுகள், அதன்பிறகு முழுமையான பள்ளிக் கல்வி 12 ஆண்டுகள் என இந்த மாணவர்களின் பெரும்பாலான நேரம் குளிர்சாதன அறையிலேயே கழியும். ஏற்கெனவே பல பள்ளிகள் தங்கள் நிறுவனத்தைக் குறித்து விளம்பரம் செய்யும்போது, வகுப்பறைகள் குளிர்சாதன வசதிகொண்டவை என்றுதான் தெரிவிக்கின்றன.
நமக்குள்ளே எழும் கேள்வி என்னவென்றால், இந்தியா போன்ற வெப்பப் பிரதேசங்களில், குளிர்சாதன அறையிலேயே தயாரிக்கப்படும் மாணவர்கள் உடல்ரீதியாக எத்தகையை வலுவுடையவர்களாக இருப்பார்கள் என்பதுதான். வாழ்க்கை முழுவதும் குளிர்சாதன வசதியில் புழங்குவதற்கான செல்வச் செழிப்பில் வாழ்பவர்களாக அவர்கள் இருக்கலாம். ஆனால் இந்தியச் சமூகத்துக்கும் இந்த மாணவர்களுக்கு இடையே பெரும் சுவற்றை இந்தக் குளிர்சாதன வகுப்பறைகள் எழுப்பிவிடும் என்பதில் சற்றும் ஐயமில்லை. களத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டியிருக்கும் எந்த வேலைக்கும் இவர்கள் லாயக்கற்றவர்களாகவே தயாராவார்கள்.
இங்கு ஒரு முக்கிய நிகழ்வைச் சொல்லியாக வேண்டும். சென்னையில் உள்ள கிறித்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முதல்வராகப் பணியாற்றிய குருவில்லா ஜேக்கப், ஆசிரியர்களுக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். சில ஆண்டுகளுக்கு முன்னால் அவருடைய நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அதற்கு முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவருடைய மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் துறையில் பெரும் செல்வாக்குப் படைத்தவர்கள். குருவில்லா ஜேக்கப்பின் ஆளுமையைப் பல கோணங்களில் விளக்கிய அவர்கள், விளையாட்டுத் துறையில் அவருக்கு இருந்த ஆர்வத்தை முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். மாணவர்கள் கால்பந்து ஆடும்போது களத்துக்கு வெளியே நின்று ஊக்குவிக்கும் குருவில்லா ஜேக்கப், மழை பெய்துவிட்டால் எல்லோரையும் ரக்பி ஆடுமாறு சொல்வாராம். மழையில் நனைந்து கொண்டு, சகதியிலும் சேற்றிலும் புரண்டு விளையாட வேண்டும். இந்த வயதில் விளையாடாமல் எந்த வயதில் விளையாடுவது என்பாராம்.
வெயில் படக் கூடாது என்பதற்காகக் குளிர்சாதன வகுப்பறைக்கு அனுப்பும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மழையில் நனைய அனுமதிப்பார்கள் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை. குருவில்லா ஜேக்கப் போன்ற பள்ளி முதல்வர்கள் மேல் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் முனையலாம்.
நாள்தோறும் வெளியாகும் ஆராய்ச்சி முடிவுகள் அதிகப்படியான சுத்தம் நிறைந்த பகுதியில் வாழும் குழந்தைகளின் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பதாக மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன. அதற்காக அழுக்கில் தினமும் புரண்டு எழுந்திருக்க வேண்டும் என்று யாரும் வாதம் செய்யப்போவதில்லை. சுத்தம் தேவைதான். அதற்காகச் சிறிய வயதிலேயே தூசு படாமல், அழுக்குப் படாமல், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே குடித்து, துரித உணவகங்களின் தயாரிப்புகளை உண்டு, உப்பும் காரமும் அதிகமாக சேர்த்து பொரிக்கப்பட்ட உணவுகளைக் கொரித்துக் கொண்டு, உடற்பயிற்சி எதுவும் இல்லாத குழந்தையில் உடல் நலன் எப்படி இருக்கும் என்பதை விளக்கப் பொதுமருத்துவத்தில் பட்டம் பெற்ற மருத்துவர் தேவையில்லை. போதுமான அளவு சூரிய ஒளி படாதவர்களின் உடல் விட்டமின் டி தேவையை எப்படிப் பூர்த்தி செய்துகொள்ளும்? அதற்கும் மாத்திரைகளை விழுங்கச் செய்யப் பெற்றோர்கள் தயாராக இருக்கலாம்.
ஏற்கெனவே குழந்தைகள் தங்களின் குழந்தைப் பருவத்தை இழந்துகொண்டிருக்கிறார்கள். படிப்பு, படிப்பு, படிப்பு. பெற்றோர்களின் எண்ணத்தை முற்றிலுமாக இந்த வார்த்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது.
காலையில் எட்டு மணிக்குக் குளத்துக்கு குளிக்கச் சென்றால், சதையைக் கையால் பிய்த்து எறிந்துவிடும் அளவுக்குத் தண்ணீரில் ஊறிக் கிடக்கும் உடலில், அப்பா அம்மா, தாத்தாக்களின் வசவுகள்தான் எங்களைப் போன்றவர்களைக் கரையேற்றும். வகுப்பில் நுழையும்போது நேரம் கடந்துவிட்டதற்காக வாத்தியாரிடம் வசவும் அடியும் உண்டு.
இன்று இரவெல்லாம் தொலைக்காட்சி பார்ப்பதும், கணினியில் விளையாடுவதுமாய் பொழுதைப் போக்கிவிட்டு, காலையில் வேறு வழியின்றி எழுந்து, அவசர அவசரமாய்க் குளித்துவிட்டு, பாதி நாட்கள் குளிக்காமலும், எதையும் சாப்பிடாமல் பேருக்கு இரண்டு சப்பாத்தியையோ, ரொட்டியையோ எடுத்துக்கொண்டு ஓடும் பிள்ளைகளிடம் நம்முடைய குழந்தைப் பருவத்தைச் சொன்னால் பொறாமைப்படுகிறார்கள்.
எல்லாத் துறைகளிலும் கணினி புகுந்துவிட்ட நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதல் சென்னையில் உள்ள லயோலா கல்லூரிவரை மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆனால் சென்னையில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் மழலையர் பள்ளியில் சேருவதற்கு முந்தைய நாள் இரவே வரிசையில் காத்துக் கிடக்க வேண்டும். தூக்கத்தை இழந்து ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்தபடி நிற்கும் பெற்றோரை விட மிகப் பெரிய விளம்பரத்தை யாரும் தங்களுக்குத் தந்து விட முடியாது என்று அப்பள்ளி நிர்வாகம் நினைத்திருக்கலாம்.
இப்படிப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். மாதந்தோறும் கைநிறைய சம்பளம் வாங்கலாம். உலகமெங்கும் பரந்து நிறைந்திருக்கலாம். அவ்வளவு சிறப்பான கல்வி. ஆண்டு தோறும் நோபல் விருதுகள் வழங்கும் போதும், வேறு துறைக்கான விருதுகள் வழங்கும் போதும் ஆர்வத்துடன் விருதாளர்களின் பின்புலத்தை ஆராய்கிறேன். என் கண்ணில் இப்பள்ளிகளின் முன்னால் மாணவர்கள் யாரும் தென்படவில்லை. வெறும் படிப்பை மட்டுமே முன்னிறுத்தும் பள்ளிகள், பல்துறை சார்ந்த அறிவுடன் கூடிய ஆளுமைகளை உருவாக்கத் தவறிவிடுகின்றன.
முந்தைய தலைமுறையைக் காட்டிலும் புத்திசாலிகளாக இருந்தாலும், இன்றைய தலைமுறைக்குத் தன்னைச் சுற்றி நடக்கும் எல்லாமே எல்லாமே அந்நியப்பட்டு நிற்கிறது.
கல்வியின் பயனே பொருளீட்டுவது என்ற பாதையில் பயணித்திருக்கும் சமூகம் வேறு எப்படி இருக்க முடியும்? அறிவின் எல்லையைத் தொடர்ந்து விரிவாக்கும் கருவி என்ற தகுதியைக் கல்வி இழந்துவிட்டது. தங்கள் பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பில் பெற்றிருக்கும் மதிப்பெண்களை விளம்பரம் செய்து பெருமைப்பட்டுக்கொள்கின்றன பல கல்வி நிலையங்கள். அண்மையில் சென்னையில் உள்ள புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றிபெற்று, தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புக் கிடைத்தும், அவற்றை உதறி விட்டு, இந்திய ஆட்சிப் பணிக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் மாணவரைச் சந்தித்தேன். தன்னுடைய அறிவு எல்லாமே புத்தகம் சாரந்ததுதான் என்றும், தன்னால் ஒரு ஒலி பெருக்கியைக்கூடச் சரி செய்ய முடியாது என்றும் ஒப்புக்கொண்டார். இந்தியத் தொழிற்கல்வி பெரும்பாலும் இப்படிப்பட்ட மாணவர்களைத்தான் உருவாக்குகிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago